ஈழத்தமிழரின் சமூகம் பொருளாதார பண்பாட்டு முறைமைகள் சிதைந்து கொண்டு போவது போன்று அரசியலும் காணாமல் போகின்ற நிலையை அடைந்திருக்கின்றது. மிகநீண்டகாலமாக ஈழத்தமிழர்கள் சுயநிர்ணயத்தையும் இறைமையையும் அடைவதற்காக அனைத்து வழிகளிலும் போராடி வந்துள்ளவர்கள். தற்போது அத்தகைய அரசியல் போராட்டம் அனைத்துமே படிப்படியாக பலவீனம் அடைந்து பொருளாதாரத்தையும் பண்பாட்டையும் சமூக இருப்பையும் பலவீனப்படுத்தியுள்ளது. இன்றைய ஈழத்தமிழரின் அரசியல் பலவீனம் அடைந்திருப்பதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை தேடுவதும் அதனை விளங்கிக் கொள்வதும் அவசியமானதாக எழுந்துள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய நிலையை தேடுவதற்கு முனைகின்றது.
இலங்கையின் புதிய ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட பிற்பட்ட காலப்பகுதியில் இந்திய ஊடகங்களிலும் வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பிரதேசங்களிலும் வெளிவரும் ஊடகத் தகவல்களும் உரையாடல்களும் ஈழத்தமிழரின் அரசியல் பலவீனமான நிலைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது என்பதை கோடிட்டு காட்டுகிறன. அத்தகைய பதிவுகள் ஈழத்தமிழர் மீதான அரசியலுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை இல்லாமல் செய்துள்ளது. அதன் விளைவுகள் ஈழத்தமிழருடைய அனைத்து இருப்புகளிலும் பாரியளவான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஊகிக்க முடிகிறது. அதனை ஆழமாகவும் விரிவாகவும் நோக்குவது அவசியமானது.
முதலாவது, இந்திய ஈழத்தமிழர் உறவு ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பின்னர் படிப்படியாக பலவீனமடைய தொடங்கியது. அத்தகைய பலவீனத்தின் நிகழ்ச்சி 2009 க்கு பின்னர் தீவிரம் பெற்றது. அத்தகைய தீவிரத்திலிருந்து ஈழத்தமிழர்கள் தமது அரசியல் இருப்பை கட்டமைக்க முடியாத ஒரு நிலைக்குள் இந்தியாவின் அணுகுமுறைகள் மாறியுள்ளன. குறிப்பாக புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு இந்தியாவுக்கும் தென் இலங்கைக்குமான உறவு பலமான ஒரு நிலையை அடையத் தொடங்கி இருப்பதோடு தென்னிலங்கையின் விருப்புகளுக்கு இசைந்து கொடுக்கும் அல்லது விட்டுக் கொடுக்கும் ஒரு நிலையை புதுடில்லி ஆட்சியாளர்கள் ஆரம்பித்துள்ளனர். புரஸ்பரம் இரு தரப்பும் புரிதலோடு செயல்பட ஆரம்பித்துள்ளனர். ஏறக்குறைய 1991 ஆம் ஆண்டு பின்னான காலப்பகுதி அத்தகைய நிலையைக் கொண்டிருந்தாலும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் இந்தியா சார்ந்தும் இந்தியாவின் நலன் சார்ந்தும் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. ஆனால் 2009 க்கு பின்னர் ஈழத்தமிழர்களுடைய அரசியல் தலைமைகளும் அவற்றின் அசமந்தனமான போக்குகளும் அத்தகைய அரசியல் பலவீனத்தை அதீதமாக்கியது. ஈழத்தமிழர்களை இந்தியாவின் எதிரிகளாக மாற்றுகின்ற எண்ணத்தோடு செயல்பட்ட ஈழத்தமழிழ் அரசியல் கட்சிகளும் 1987 இலங்கை-இந்திய உடன்படிக்கையின் கீழான 13ஆம் திருத்தச் சட்டமூலத்தை நிராகரித்து அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழர்களின் அரசியலில் இந்தியாவின் அரசியல் வகிபாகத்தை அடையாளம் காணதவறி இருந்தனர். அவர்களது எதிர்ப்பு வாதமும் நிராகரிப்பும் இந்திய ஈழத்தமிழர் உறவை மேலும் பலவீனப்படுத்தியது. அத்தகைய பலவீனம் என்பது ஈழத்தமிழருடைய அரசியல் பலவீனமாகவே அவதானிக்கப்படுகிறது. இந்தியாவின் அனுசரணை இன்றி உள்நாட்டில் எழுந்த தேசிய இனப்பிரச்சனையை பிராந்திய பிரச்சனையாகவும் பின்னர் அதனை சர்வதேச பிரச்சனையாகவும் பரிமாணமடுப்பதற்கான வாய்ப்புகளை கொண்டிருந்தது என்பது மறுக்க முடியாதது. இந்தியாவினுடைய பாராளுமன்றத்திலும் இந்திய பிரதமர்களும் ஈழத்தமிழர்களுடைய அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்களை முதன்மைப்படுத்தியது மட்டுமின்றி ஈழத்தமிழருடைய அகிம்சை போராட்டத்திற்கு பக்கபலமாக ஒரு காலப்பகுதியில் இந்தியர்கள் தமது நலன் சார்ந்து கைகோர்த்து இருந்தனர். ஆனால் அத்தகைய நெருக்கமான உறவு நிராகரிக்கப்பட்ட பின்னர் படிப்படியாக ஈழத்தமிழருடைய அரசியல் பலவீனமடைய தொடங்கியது. இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் புதுடில்லி-கொழும்பு அரசியல் உறவில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய சூழல் தமிழர்களின் உரிமை சார்ந்தும் இருப்புச்சான்று புதுடில்லி கவனத்தில் கொள்ளக்கூடிய அல்லது கரிசனை செலுத்தக்கூடிய செயல்பாட்டை கைவிட்டுள்ளதாகவே தெரிகிறது. சர்வதேசத்திடம் தேசியப் பிரச்சனைக்கான தீர்வை எதிர்பார்த்துச் செயல்படும் ஈழத்தமிழர்களுடைய அரசியல் தலைமைகள் இந்தியாவின் உதவி இன்றி சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற முடியுமா என்ற கேள்வி அதிகரித்துள்ளது. தமிழர்களுடைய தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு சர்வதேச அரசியலில் தங்கியுள்ளது என்பதை சரிவரப் புரிந்து கொள்ளாத அரசியல் தலைமைகளது நடவடிக்கையே இன்றைய துயரத்திற்கு அடிப்படையாகும். புதுடில்லி ஈழத்தமிழர்களின் அரசியல் மீது மாற்றுஎண்ணத்தை ஏற்படுத்த தொடங்கி இரு தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. புதுடில்லி ஈழத்தமிழரை பற்றிய உரையாடலை செய்ய தவறுகின்ற சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழருடைய அரசியல் நீத்துப்போகக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனை விளங்கிக் கொள்ள தவறுகின்ற ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அல்லது கடந்த காலத்தில் வாய்ப்புகளை தவறவிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது கூட விழித்துக் கொள்ள தயாராக இல்லாத நிலை காணப்படுகிறது. எதிர்ப்புகளையும் நிராகரிப்புகளையும் வெளிப்படுத்திய அரசியல் கட்சிகள் இந்தியாவுக்கு விண்ணப்பம் செய்வதும் கோரிக்கை முன்வைப்பதும் கடிதம் எழுதுவதும் காலம்பிந்திய நகர்வாகவே தெரிகிறது. இது ஏறக்குறைய அனைத்து முடிந்த பிற்பாடு அது பற்றி புலம்புவது போன்றே காணப்படுகின்றது. காலத்தை கருதி அரசியல் மேற்கொள்ளத் தவறியதன் விளைவே தற்போதைய நிலையாகும். ஈழத்தமிழருடைய அரசியலை ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளே தோற்கடித்தனர்.ஈழத்தமிழருடைய அரசியல் மீள கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றால் ஆரம்ப புள்ளியில் இருந்து தொடக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் அல்லது அரசியல்வாதிள் தமது அரசியல் பண்புகளில் இருந்து மாறாதவர்களாகவே பாராளுமன்றத் தேர்தலின் தோல்விக்கு பின்னரும் காணப்படுகின்றனர். அவர்கள் மீளவும் வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பதும் வெளிநாடுகளுக்குச் செல்வதும் அறிக்கை விடுவதும் கடிதங்கள் எழுதுவதும் மரபார்ந்த அரசியலாக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். சென்னை பட்டினத்தையும் ரொரன்ரோவையும் லண்டனையும் நீயூயோக்கையும் அலங்கரிப்பதன் ஊடாக ஈழத்தமிழர்களின் அரசியலை மாற்ற முடியாது என்பதை அவர்கள் இன்னுமே கண்டுகொள்ளவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக இத்தகைய சந்திப்புக்களையும் உரையாடல்களையும் செய்தார்களே அன்றி அதன் விளைவுகளைப் பற்றி எத்தகைய பரிசீலனைகளையும் அவர்கள் செய்யத் தயாராக இருக்கவில்லை. இதன் விளைவுகளே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்விகளுக்கான அடிப்படை காரணமாக அமைந்தது. மீளவும் அதே மாதிரியான அரசியலை மேற்கொள்ளவே முனைகின்றனர். இதன் விளைவுகள் எதிர்காலத்தில் முற்றாகவே தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும் காணாமல் போகின்ற நிலை ஏற்படும். தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அடிப்படையில் பலவீனமான அரசியல் களத்தையே ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தியவர்களாக உள்ளனர். தேசியம் என்ற வார்த்தையை புரிதல் இன்றியும் செயல்படு இன்றியும் போலி அரசியலாக அணுகியதன் விளைவுகளே அதன் இருப்பு காணாமல் போவதற்கான அடிப்படையாகும். தேசியத்தினுடைய தனித்துவத்தில் பொருளாதார சமூகம் பண்பாடு வாழ்வியல் போன்ற பல்வேறு அம்சங்களினுடைய கூட்டுத் தன்மையைக் கொண்டது. தேசியத்தின் புரிதல் அவசியமானது. அதனை நோக்கி செயல்படுத்த தவறியதன் விளைவுகள் இன்றைய நெருக்கடிக்கு இன்னோர் அடிப்படை காரணமாகும். பிராந்திய சர்வதேச சக்திகளை கையாள முடியாத தலைவர்களின் வழிநடத்தப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகவே ஈழத் தமிழர்கள் காணப்பட்டுள்ளனர்.
எனவே ஈழத் தமிழருடைய இருப்பு என்பது அரசியல் ரீதியில் முழுமையாக பலவீனப்பட ஆரம்பித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் அதற்கான முழுமையான வடிவத்தை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவைப் பொறுத்தவரை அல்லது புதுடில்லியைப் பொறுத்தவரை இலங்கைத்தீவு இந்திய நலனுக்கு உட்பட்டதாக வேண்டுமே அன்றி ஈழத்தமிழர்கள் அல்ல. ஈழத்தமிழர் விடயத்திலிருந்து இந்தியா விலகியுள்ளதாகவே தெரிகிறது. தென் இலங்கையின் ஒத்துழைப்பு பொறுத்து ஈழத்தமிழர்களை கைவிடுவது என்பதை விட இந்தியாவின் நலன் சார்ந்த அரசியலின் பிரதிபலிப்பாகவே அதனை நோக்குதல் வேண்டும். இந்தியாவை ஈழத்தமிழர்கள் அணுகுதல் என்பதும் கையாளுதல் என்பதும் தனித்துவமானது. புதுடில்லி ஈழத்தமிழருடைய நலன்களுக்காக தென் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்ற சூழல் என்பது முற்றாகவே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுடில்லி ஈழத்தமிழருடைய அரசியலில் கவனம் கொள்ளாத சந்தர்ப்பத்தில் சர்வதேச மட்டத்திலோ சர்வதேச சக்திகளாலோ நோக்கப்படக்கூடிய அரசியலாக ஒருபோதும் அமையப்போவதில்லை. அதற்கான அடிப்படை காரணம் இந்தியா வலுவான பொருளாதார கட்டமைப்பை உலகத்தோடு கொண்டிருக்கின்றது. அதனால் அது உலகத்தில் நலன்களுக்கும் உட்பட்டதாக செயல்படுமே அன்றி ஈழத் தமிழரின் நலன்களை முதன்மைப்படுத்த சர்வதேச சக்திகள் முயலாது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
