நூல் தலைப்பு: கொரோனா அரசியல்
தொகுப்பாசிரியர்: கலாநிதி கே. ரீ. கணேசலிங்கம்
முதற் பதிப்பு: ஜீன், 2020
வெளியீடு: சமூகவிஞ்ஞான ஆய்வு மையம். 28, செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
பக்கம்: x+219
அட்டை வடிவமைப்பு: யது FX
பக்க வடிவமைப்பு: குரு பிறிண்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
ISBN: 978-955-42623-3-1
மின்நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க: https://drive.google.com/file/d/1_VPy02kiwGrPXnOGCdWxLuPTyOCySyje/view?usp=sharing
முன்னுரை
கொரோனா அரசியல் எனும் இந்நூலானது கடந்த மூன்று மாதங்களுக்கு மேலான முயற்சியாகும். இந்நூலினை நெருக்கடிமிக்க சூழலில் ஊடகங்களுக்கு எழுதப்பட்ட கட்டுரைகளையும் அதற்குள் உள்ளடங்க முடியாத மேலதிக வாசிப்புக்களையும் மாணவர்களோடு சேர்ந்து வெளியிடுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைய முடிகின்றது. இது தினகரன், தினக்குரல், தீபம், உரிமை போன்ற அச்சு ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது.
கொரோனா அரசியல் என்ற இந்நூல் அதன் அர்த்தத்தை இரண்டு விதத்தில் ஊகிக்க முயலுகின்றது. ஒன்று, கொரோனா எனும் கோவிட்-19 தொற்றானது ஒரு பெரும் தொற்று நோயின் அழிவுகளுக்கான அம்சமாகவே பார்க்கப்படுகின்றது. விஞ்ஞானத்திற்கும் மருத்துவத்திற்கும் இடையில் எழுந்துள்ள ஒரு சவாலாகவும் அடையாளம் காணப்படுகின்றது. அத்தகைய சவால் அரசியல் போட்டியினால் உருவானது என்ற வாதம் அரசியலுக்கு அப்பால் அறிவியல் தளத்திலும் விவாதிக்கப்படுகின்றது. இதன் உருவாக்கம் சீனா சார்ந்தும் அமெரிக்க சார்ந்தும் அதிகார போட்டிக்கான உரையாடலை மேலெழ செய்துள்ளது. அத்தகைய மேலெழுகை அரசியல் போட்டியினை ஏற்படுத்தியதால் இதனை ஒரு அரசியல் பதமாகவோ அல்லது எண்ணக்கருவாகவோ சிந்திக்க தோன்றுகின்றது.
இரண்டாவது கொரோனா தொற்று பரவியதற்கு பிற்பட ஏற்பட்டிருக்கும் சமூக தன்மைகளும் மோதல்களும், முரண்பாடுகளும் அது ஒரு அரசியல் நிர்ணயத்தின் சாரம் என்ற எண்ணத்தையே பலப்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று நெருக்கடியில் தடை செய்யப்பட்ட ரஷ்சிய நிறுவனங்களிடமிருந்து அமெரிக்க மருத்துவ உபகரணங்களையும், மருந்தையும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டது. அதேபோன்று ரஷ்சியா, சீனா என்பன ஐரோப்பிய நாடுகளுக்கு கொரோனா தொற்றை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்கியது. ஐரோப்பியராலும், ஐரோப்பிய யூனியனாலும், அமெரிக்காவினாலும் கைவிடப்பட்ட இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ரஷ்சியாவினதும், சீனாவினதும் மருத்துவ உதவிகளே மீட்டிருக்கின்றன. அவ்வாறே அமெரிக்காவும் கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் போரிட வேண்டிய நிதி உதவிகளை 68 நாடுகளுக்கு வழங்க முன்வந்தது. ஈரானுக்கு கூட தடைகளையும், முரண்பாடுகளையும் தாண்டி மருத்துவ உதவிகளை செய்ய அமெரிக்க, இஸ்ரேல்; போன்ற நாடுகள் முன்வந்திருந்தன. இதுமட்டுமன்றி இந்திய – சீன – ரஷ்சிய நெருக்கத்தை கொரோனா தொற்றை அடிப்படையாய் கொண்டு சீன, இந்திய வெளிவிவகார தரப்புகள் முயன்றமையும் அதனை எதிர்கொள்ளும் விதத்தில் அமெரிக்க இந்தியாவை மிரட்டி குளோறோகுயின் வில்லைகளை பெற்றதும் பதிலீடாக ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் இந்தியாவிற்கு வழங்கியமையும் அவதானிக்க கூடிய முக்கிய விடயங்களாகும். இந்தியாவும் தென்னாசிய நாடுகள் உட்பட 108 நாடுகளுக்கு குளோறோகுயின் வில்லைகளை வழங்கி உதவியதும், சீனா தொடர்ச்சியாக புதிய பட்டுப்பாதை வழியாக மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் தனது நட்பு நாடுகளுக்கு வழங்கி வருகின்றமையை நோக்குகின்ற போது கொரோனா தொற்று என்பது ஒரு அரசியல் வடிவத்தை உலகுக்கு ஏற்படுத்தி உள்ளமை சான்றாகிறது. இது தொடர்பில் அமெரிக்க முன்னாள் ஆலோசகரும், ஜனாதிபதியின் செயலாளருமாகிய கென்ரி கீசிங்கர் குறிப்பிடுவதை போன்று உலக ஒழுங்கினை நிரந்தரமாக மாற்றியமைக்க போகும் கொரோனா வைரஸ் என்கின்ற தலைப்பிலான அவரது பதிவு முக்கியமானது. இதே போன்றே டென்மார்க்கின் கல்வியலாளார் தாபிஷ் கைர் கொரோனா வைரஸினை முதல் புதிய தாராள வைரஸ் என அழைக்கின்றார். அவ்வாறே பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கொரோனா பெருந்தொற்றானது நவதாராளவாதத்தின் தோல்வியும் வரலாற்றின் மறுபிறப்பையும் காட்டுகின்றது என்கின்றார். எனவே உலகம் நகர்ந்து செல்கின்ற இந்த காலப்பகுதி வரலாற்றில் ஓர் அரசியல் பதிவாகவே வெளித்தோன்றுகின்றது. கொரோனா தொற்று உள்நாட்டு அரசியலை மற்றும் சர்வதேச அரசியலை, பூகோள அரசியலை புவிசார் அரசியலை, அரசியல் பொருளாதாரத்தினை, வர்த்தகத்தினை மட்டுமன்றி அரசியல் கோட்பாடுகளையும் அதன் எண்ணக்கருக்களையும் புதிய கோணத்தில் நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்டுத்தியுள்ளது. இதனாலேயே இந்நூல் கொரோனா அரசியல் என அழைக்கப்படுகின்றது.
எனவே இந்நூலின் படைப்புக்கு உதவிய படைப்பாளர்கள், அச்சு ஊடகங்கள், மின்னூலாக வெளிவர உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு இந்நூலை விரைவாக கொண்டு வருவதற்கு ஒத்துழைத்த செல்வி லக்சனா பாலகுமாரன், ஐ.வி.மகாசேனன் ஆகியோருக்கும் நன்றிகள்.
-கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்-