January 19, 2025
அரசியல் கட்டுரைகள்

ஹமாஸ் -இஸ்ரேல் போரும் ஹிஸ்புல்லாவின் நகர்வும்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் மனித அவலத்தை அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சிறுவர்களும் (3600) பெண்களுமே அதிகம் என்ற கணிப்பீடு உள்ளது. காஸாவின் உட்கட்டமைப்பு முழுமையாக அழிவடைந்துள்ளது. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களும் மனித உரிமைகளும் முழுமையாக கலாவதியாகும் போராக விளங்கும் ஹமாஸ் -இஸ்ரேல் போர் புதிய வடிவத்தை எடுத்துவருகிறது. போரும் அதன் உத்திகளும் அதன் நீட்சியை வெளிப்படுத்துவதோடு முடிவற்ற நிலைக்கு இட்டுச் செல்வதாகவே தெரிகிறது. தற்போது புதிதாக ஹிஸ்புல்லா அமைப்பும் முழுமையான போர் பற்றிய எண்ணத்தை அதன் தலைவர் ஹசன் நஸ்ரால்ல (Hassan Nasrallah) லெபனாலின் தலைநகர் பெய்றூட்டிலிருந்து (03.11.2023) வெளியிட்டுள்ளார். இக்கட்டுரையும் ஹமாஸ் -இஸ்ரேல் போரின் பிந்திய நிலையை தேடுவதாக அமையவுள்ளது.

ஹசன் நஸ்ரால்ல ஹமாஸ் -இஸ்ரேல் போர் தொடங்கிய பின்னர் முதல் தடவையாக அமெரிக்க இஸ்ரேல் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எச்சரிக்கை செய்ததுடன் காஸா மீதான ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துமாறும் பிராந்திய போராக மாறுவதற்கான நடவடிக்கைகளை கைவிடுமாறும் கோரியுள்ளார். அமெரிக்கர்களால் காஸா மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தமுடியும். காரணம் இது அமெரிக்கரது போர். லெபனானில் எல்லையில் நிகழ்த்தப்படும் போரை நிறுத்தாதுவிட்டால் இப்போர் விரிவடையும் எனவும் எச்சரித்துள்ளார். இது போரின் விரிவாக்கத்திற்கு வழிவகுக்கக் கூடியதாகவே தெரிகிறது. அனைத்து வல்லரசுகளும் போரை இஸ்ரேல்-காஸா எல்லைக்குள் மட்டுப்படுத்த முயலுகின்ற போது ஹிஸ்புல்லா அமைப்பு பிராந்திய தளத்திற்கு விஸ்தரிக்க முனைவதாகவே தெரிகிறது. ஹிஸ்புல்லாத் தரப்பின் பிரதான இலக்காக அமெரிக்கா என்பதையே கோடிட்டுக்காட்டியுள்ளார். அனைத்து மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா போரில் ஈடுபடுவதை தவிர்க்கவே விரும்புகின்றன. காரணம் ஹிஸ்புல்லாவிடம் உள்ள இராணுவ பலமே. பாரியளவான ஆயுததளபாடங்களையும் போர் உத்திகளையும் கொண்டுள்ள அமைப்பாக உள்ளது. ஏறக்குறைய இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட ஏவுகணைகளை மட்டும் கொண்டுள்ளதாக சில புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது ஹமாஸ்ன் பலத்தை அதிகரித்துவிடும் என்ற எச்சரிக்கை இஸ்ரேல்-அமெரிக்க கூட்டிடம் காணப்படுகிறது. ஹிஸ்புல்லாவின் தலைமையின் உரையும் அமெரிக்கப் போர்க் கப்பல்களும் அமெரிக்கப் படைகள் மீதுமே அதிக கவனம் கொண்டிருப்பதனால் போர் வேறு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஹிஸ்புல்லா தலைமை குறிப்பிடுவது போல் அமெரிக்காவே இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிகழ்த்துவது வெளிப்படையாக தெரிகிறது. தற்போது அமெரிக்கத் தரைப்படையும் இஸ்ரேலில் தரையிறக்கப்பட்டுள்ளன. ஆயுததளபாடங்கள் விமானங்கள் மற்றும் புலனாய்வு செயல்பாடுகள் என ஏற்கனவே அதிகளவான இராணுவ ஒத்துழைப்பினை வழங்கிவரும் அமெரிக்கா படைகளையும் இறக்கியுள்ளமை அமெரிக்க-ஹமாஸ் போராகவே உள்ளதென்பது உணரக்கூடியதாக தெரிகிறது.

ஹமாஸ் -இஸ்ரேல் போர் ஆரம்பித்தபின் இரண்டாவது தடவையாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அன்டனி பிளிங்டன் இஸ்ரேலுக்கு (03.11.2023) விஜயம் செய்துள்ளார். அவரது வருகை போர் நிறுத்தத்தை கொண்டுவருவதற்கான முயற்சியாக தெரியவில்லை. மாறாக பொது மக்களது படுகொலையை குறைக்குமாறு இஸ்ரேலை கோரியதோடு இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமென மீளவும் மேற்குலகம் குறிப்பிடுவது போல் பிளிங்டன் தெரிவித்துள்ளார். தராண்மைவாதத்தின் அசல் முகத்திலுள்ள அராஜகத்தை பிளிங்டன் மீளவும் வெளிப்படுத்தியுள்ளதாக புரிந்து கொள்ளப்படலாம். போரை நிறுத்தி பொது மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக படுகொலையின் அளவை குறைக்குமாறு கோரியுள்ளமை மூலம் மேற்குலகத்தின் ஆக்கிரமிப்பின் பக்கம் தெரியவருகிறது. மனித உரிமைகளையும் மனிதாபிமானச் சட்டங்களையும் காஸா மண்ணில் மட்டும் அமெரிக்கா புதைக்கவில்லை. உலகளாவிய அளவில் அத்தகைய செயலை கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளது. இதுவே மேற்குலகத்தின் நவ தாராண்மைவாத முகமாகும். இது நாகரீகத்தின் வளர்ச்சி கிடையாது. அநாகரிகத்தினதும் ஆக்கிரமிப்பினதும் வடிவமாகவே உள்ளது. இது மேற்குலகத்தினது காட்டுமிராண்டித் தனமாகவே தெரிகிறது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவு கொலைக்கலாசாரத்தை வெளிப்படையாக அங்கீகரிப்பதாகவே உள்ளது. இதில் மேற்குலகம் மட்டுமல்ல இந்தியாவும் பங்கெடுத்துள்ளது என்பதே கவனத்தில் கொள்ள வேண்டியது.

இதே நேரம் பிளிங்டனின் இரண்டாவது இஸ்ரேல் விஜயம் இரசாயன வாயுவை ஹமாஸ் போரிடும் படைகள் மீது பிரயோகிப்பதற்கான முடிபுகளை முன்னெடுக்கவும் அரபு நாடுகளை இப்போரில் ஈடுபடுத்தாது கையாளுவற்காவுமே. பென்டகன் ஏற்கனவே இரசாயன வாயுக்களை ஹமாஸ்ன் பதுங்கு குளிகளுக்குள் செலுத்துவது பற்றி உரையாடியுள்ளது. அதற்கான அனுமதியை இஸ்ரேலுக்கு வழங்குவது பற்றிய இரு நாட்டுத் தலைவர்களும் படைதரப்பும் உரையாடியுள்ளதாக தகவல்கள் உண்டு. ஆனால் இத்தகைய நகர்வுக்கு ஹமாஸால் கைதுசெய்யப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் பெரும் தடையாக உள்ளனர். பணயக்கைதிகளே ஹமாஸ்ன் போரியல் பலத்தை அதிகரிக்க உதவியுள்ளதாக தெரிகிறது. இப் பணயக் கைதிகளில் இஸ்ரேலிய படைத்தரப்பும் உள்ளதாக தெரியவருகிறது. அதனால் இரசாயன வாயுக்களை பிரயோகிப்பதில் அமெரிக்க-இஸ்ரேலியத் தரப்பு குழப்பமடைந்துள்ளதை உணரக்கூடியதாக உள்ளது. ஆனால் போரின் எல்லைக்குள் தமது சொந்த மக்களை பலிகொடுப்பதில் அமெரிக்காவுக்கோ இஸ்ரேலுக்கோ புதியதல்ல. அது மேற்குலக ஆட்சியாளரின் அரசியல் வடிவமேயாகும். இதனால் ஒரு எல்லைக்கு அப்பால் இரசாயன வாயுக்களது பிரயோகம் காஸாவுக்குள் அதிலும் பதுங்கு குளிகளுக்கு மேற்கொள்ள வாய்ப்புக்கள் அதிகமாக உண்டு.

மறுபக்கத்தில் போரின் எல்லை இரு தரப்பினையும் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்க ஆரம்பித்துள்ளது. ஹமாஸ்ன் போர் இஸ்ரேலிய இராணுவத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக இஸ்ரேலிய இராணுவம் கொல்லப்படுவதற்கு அப்பால் இஸ்ரேலிய படைத்தளபாடங்கள் ஹமாஸ் இராணுவத்தால் கைப்பற்றப்படுவதும் டாங்கிகள் அழிக்கப்படுவதும் நிகழ்வதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. அதே நேரம் ஹமாஸ் பதுங்கு குளிகளை தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் காஸா நகரை சுற்றிவளைத்துள்ளதாகவும் இஸ்ரேலிய தரப்பு செய்தி தந்துள்ளது. இதனால் போர் இரு தரப்பிலும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் நிலையைத் தொட்டுள்ளதாகவே தெரிகிறது. இந்திய-இஸ்ரேலிய கூட்டமைப்பின் தலைமை நெத்தன் குரோசஸ் போர் பற்றிய நிலமையை விளக்கும் போது அடுத்த மூன்று மாதகாலத்திற்கு போரின் முதல் கட்டம் நிறைவு பெறும் என்கிறார். அக்காலத்தில் ஹமாஸ்ன் போர் வலிமையை அழித்துவிடும் இஸ்ரேல் என்றும் அடுத்துவரும் காலப்பகுதியில் ஹமாஸ்ன் பதுங்கு குளிகள் அழித்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார். அவரது பார்வையில் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்பட வேண்டும் எனவும் காஸாவை விட்டு ஹமாஸ் முழுமையாக வெளியேற வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார். இஸ்ரேலியப் பிரதமரும் காஸா மக்களை முழுமையாக எகிப்துக்கு நகர்துவதாகவும் அதற்காகவே காஸா-எகிப்த்து எல்லையான ராபாவைத் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. ஆனால் ராபா வழியே வெளிநாட்டவரும், இரட்டைக்குடியுரிமை உடையவரும் காயப்பட்ட பாலஸ்தீனர்களுமே வெளியேறலாம் என எகிப்த்து அறிவித்துள்ளது.

இதே நேரம் காஸாவின் உணவு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்தள்ளது. போருக்கு முன்னர் 500 மேற்பட்ட பாரஊர்திகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சென்றதாகவும் போருக்கு பின்னர் அது 42 பார ஊர்திகளாக குறைந்துள்ளது என ஐ.நா.வின் பாலஸ்தீன பிரதிநிதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மக்கள் உப்புநீரை அருந்துவதாகவும் அது அதிக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துமெனவும் உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் போது எறிகணை மற்றும் விமானத் தாக்குதல் நிகழ்த்தப்படுவதாகவும் செய்திகள் உண்டு. ஏறக்குறைய முள்ளிவாய்க்கால் நிலவரத்தை காஸா தற்போது எதிர்கொண்டுள்ளது. மீளவும் ஒரு முள்ளிவாய்க்காலை உலகம் உருவாக்கியுள்ளது. ஆனால் இதில் அராபிய நாடுகளும் ரஷ்சியா,சீனா மறைமுகமாக ஹமாஸ் அமைப்பை ஆதரிப்பதாகவும் உள்ளது.

குறிப்பாக 26.10.2023 ஹமாஸ் மற்றும் ஈரானிய பிரதி வெளியுறவு அமைச்சர் இணைந்து ரஷ்சியாவுக்கு மேற்கொண்ட விஜயம் அதிக குழப்பத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியிருந்தது. உடனடியாக மொஸ்கோவை விட்டு அவர்களை வெளியேற்றுமாறு இஸ்ரேலிய வெளியுறவுத் துறை ரஷ்சியாவை கோரியிருந்தது. இதில் பயணக்கைதிகள் விடுவிப்பது, மனிதாபிமான உதவிகளை காஸாவுக்குள் அனுப்புவது மற்றும் போர் நிறுத்தத்தை உருவாக்கும் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிப்பது என பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது. ஆனால் ஈரான்-ரஷ்சியா-ஹமாஸ் என்பன இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தின் எதிர்தரப்பு என்ற அடிப்படையில் அதிக முக்கியத்துவம் மிக்க உரையாடல் நடைபெறுவதற்கான சூழலே அதிகமானது. குறிப்பாக ஆயுததளபாடங்கள் மற்றும் போரை இஸ்ரேலுக்கு மட்டுமல்லாது அமெரிக்காவுக்கு எதிரானதாக நகர்த்துவது பற்றிய உரையாடல் நிகழ்ந்திருக்கவே வாய்ப்புண்டு. இது ரஷ்சியாவுக்கு வாய்ப்பான காலப்பகுதியாகவே தெரிகிறது. உக்ரையினுக்கு பதில் கொடுக்க வேண்டுமாயின் ஹமாஸ் -இஸ்ரேல் போரை ரஷ்சியா சர்பாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. அதனையே ஹமாஸ் போர்க்களத்தில் நகர்த்துகிறது.

எனவே, ஹமாஸ் -இஸ்ரேல் போர் முழுநீட்சி பெற்ற போராக மாறுவதற்கான களமாகவே தென்படுகிறது. இஸ்ரேலியர் அதனை மூன்றுமாத காலத்தில் திட்டமிட்டாலும் அதனை தீர்மானிப்பதில் ஹமாஸ் ரஷ்சியா ஈரான் போன்ற நாடுகளுக்கும் உரியதாகவே தெரிகிறது. இதனால் போர் விரைவில் நிறைவு பெறுவதற்கு வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் அழிவையும் துயரத்தையும் பாலஸ்தீன பொதுமக்களே எதிர்கொள்ள போகின்றனர். யூதர்கள் போர்ப் பயிற்சியிலும் துப்பாக்கி வைத்திருப்பதிலும் கவனம் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அனேக யூதர்கள் இஸ்ரேலைவிட்டு வெளியே ஆரம்பித்துள்ளனர். ஆனால் மொஸ்கோ விமான நிலையத்தில் யூதர்களுக்கு எதிராக நிகழ்ந்த சம்பவம் அவர்களை குழப்பத்திற்குள் தள்ளியுள்ளது. இரு தரப்பினரும் நாட்டைவிட்டு வெளியேறுவதில் கவனம் கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்தப் போரில் ஹிஸ்புல்லாவின் வருகை அதிக மாற்றத்தை ஏற்படுத்தமென கணிப்பீடுகள் உண்டு.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)