June 23, 2024
அரசியல் கட்டுரைகள்

இலங்கையின் வெளியுறவுக்கொள்கையில் தேசிய நலனுக்கு சமாந்தரமாகவே பிராந்திய சர்வதேச நலன்களின் ஆதிக்கம்!

இலங்கை அரசின் 76வருட கால இருப்பானது அதன் வெளியுறவுக்கொள்கையின் தனித்துவத்தினாலேயே கட்டமைக்கப்பட்டதாகும். சர்வதேச அரசியலில் வெளியுறவுக்கொள்கையின் உருவாக்கம் குறித்த அரசின் தேசிய நலன் சார்ந்து சுயசார்பாகவே (Self Side) கட்டமைக்கப்படுகின்றது. அதன்வழியே அவ்அரசின் சர்வதேச உறவுகளும் வடிவமைக்கப்படுகின்றது. எனினும் இலங்கை போன்ற புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சிறிய அரசுகளின் வெளியுறவுக்கொள்கை உருவாக்கத்தில் தேசிய நலனை தாண்டி ஆதிக்க அரசுகளின் நலனையும் பொருத்தியே வெளியுறவுக்கொள்கையை வடிவமைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. சுதந்திர இலங்கையின் 76 வருடகால வெளியுறவுக்கொள்கையின் ஏற்ற இறக்கத்தின் பின்னால் இவ்குழப்பகரமான காரணியே செல்வாக்கு செலுத்துகிறது. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய நோக்கு பல பரிமாணாமிக்க சக்திகளின் கொள்கையோடு தொடர்புபட்டது. உலக நாடுகளின் போட்டிக்குள்; அகப்பட்டு தெளிவற்ற போக்கையும் முரண்பாட்டையும் இலங்கை தனது வெளிநாட்டுக் கொள்கையில் அவ்வப்போது பின்பற்ற வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள் உலகப் போக்கினையும், பிராந்திய அரசியலையும் (இந்தியாவை) உள்நாட்டு அரசியல் பரிணாமத்தையும் கருத்தில் கொண்டே வெளியுறவுக் கொள்கைகளை வகுக்கவேண்டியவர்களாகவே உள்ளனர். இக்கட்டுரை சுதந்திர இலங்கையின் வெளியுறவுக்கொள்கையின் போக்கினை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவின் ஆட்சியாளர்கள் உலகப் பரிமாணம், பிராந்தியப் பரிணாமம் மற்றும் உள்நாட்டுப் பரிணாமமென முப்பரிமாணத்தை கருத்தில்கொண்டு வெளிநாட்டுக் கொள்கையை வகுக்கவேண்டிய நிர்ப்பந்தம் நிலவுகின்றது. இதனால் இலங்கை ஆட்சியாளர்களின் ஆளுமையைப் பொறுத்து வெளியுறவுக் கொள்கை வேறுபடுவதோடு அவர்கள் கொடுக்கும் உள்நாட்டுத் தேவையின் முக்கியத்துவத்தைப் பொறுத்தும் இதர உள்நாட்டுப் பிரச்சினைகள் சவால்களைப் பொறுத்தும் வெளியுறவுக் கொள்கை மாறுபடுகின்றது. உள்நாட்டு அரசியலில் மேலோங்கியிருக்கும் பிணக்குகளுக்குத் தீர்வுகாண முடியாத குழப்பம் ஏனைய அம்சங்களில் தெளிவான கொள்கையை பின்பற்றமுடியாமல் போகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

சுதந்திர இலங்கையின் வெளியுறவுக்கொள்கையின் முதல் பத்து வருட வெளியுறவுக்கொள்கையின் இயல்பு அதிக முரணான வாதங்களை உருவாக்கியுள்ளது. டி.எஸ்.சேனநாயாக்காவின் அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கை, முதல் முதலாக அவ்வகைக் கொள்கை வகுப்புக்கான திட்டமிடல் முன்மொழியப்பட்டது. ஆனால் அவ்வகை வெளியுறவுக்கொள்கை ஐக்கிய தேசியக் கட்சியினதும் டி.எஸ். சேனநாயக்காவினதும் வெளியுறவுக் கொள்கை என்பதினைவிட பிரித்தானியாவின் அப்போதைய இலங்கைக்கான ஆளுனரான திகழ்ந்த சோல்பரிபிரபுவினதும் சேர் ஐவன்ஜென்னிங்கினதுமானதென்றே கருத இடமுண்டு. இலங்கைப் பிரதமர் டி.எஸ்.சேனநாக்கா பிரித்தானியா மீது அதிக நம்பிக்கையும் நட்பும் கொண்டிருந்ததுடன் தனிப்பட்டரீதியிலும் அவ்வகை நெருக்கம் காணப்பட்டது. பிரித்தானியரைப் பொறுத்தவரை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவின் விமானத்தளங்கள், இராணுவத்தளங்கள், தமது கட்டுப்பாட்டில் இருப்பது சிறந்ததாக கருதினர். இதனை சாத்தியப்படுத்த பிரிட்டிஷாருக்கு டி.எஸ்.சேனநாயக்காவின் போக்கும் நன்மையளித்தது. இன்னொரு தளத்தில், இந்தியாவின் தலையீட்டின் சாத்தியக்கூறுக்கு எதிரான எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் நாட்டின் வெளியுறவு விவகாரங்களை பிரிட்டனுக்கு மாற்றுவதற்கான முடிவை சட்டப்பூர்வமாக்கியதாக அமைகிறது. ஏனெனில் டி.எஸ்.சேனநாயக்காவின் கூற்றுக்களில் தனக்கென ஒரு நிலையான இராணுவம் இல்லை. வெளிநாட்டில் இருந்து ஆக்கிரமிப்பு மற்றும் தலையீடு பற்றிய அவரது அச்சம் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. டி.எஸ்.சேனநாயக்காவின் தொடர்ச்சியையே டட்லி சேனநாயக்க மற்றும் சேர் ஜோன் கொத்தலாவலவும் தொடர்ந்தனர். மேலும், இந்தோ-இலங்கை இராஜதந்திரம் பற்றிய தனது படைப்பில் ஷெல்டன் கொடிகார, உலகின் பிற நாடுகளுடனான இலங்கையின் உடனடி உறவுகளை பாதித்த மூன்று காரணிகளை அடையாளப்படுத்துகிறார். ஒன்று, 1947இன் பாதுகாப்பு ஒப்பந்தம். இரண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் நுழைவதற்கான இலங்கையின் முயற்சியை வீட்டோ செய்ய சோவியத் ஒன்றியத்தின் முடிவு. மூன்று, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரசியலுக்கு இடையிலான தொடர்பு. கொடிகாரா இடதுசாரிகளுக்கு அப்போதைய ஆட்சியின் விரோதப் போக்கை ஒரு முக்கிய காரணியாகக் குறிப்பிடுகிறார்.

வெளியுறவுக்கொள்கையில் சடுதியான மாற்றத்தை 1956ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் உருவாக்கியது. சுதந்திர இலங்கையின் முதல் தசாப்தத்தில் பின்பற்றிய ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கை நிராகரிக்கும் வகையில் தேசியமயமாக்கும் கொள்கையை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கா முன்வைத்தார். இதற்கு ஏற்ப இலங்கையின் வெளியுறவுக்கொள்கை மாற்றமடைந்தது. அதற்கு ஏற்ப பிரித்தானிய சார்பு வெளியுறவுக்கொள்கை முறிவு ஏற்பட்டு சீனா, சோவியத்யூனியன் போன்ற சோசலிச முகாமுடன் நட்புறவை வளர்க்க அதிகம் முயன்றார். மேலும், தென்கிழக்கு ஆசியாவில் சுவிட்சர்லாந்து போன்ற நாடு ஆக்கிரமித்துள்ள நிலைக்கு ஒப்பான ஒரு நிலையை இலங்கை ஆக்கிரமிக்க வேண்டும் என்று பண்டாரநாயக்கா 1952ஆம் ஆண்டிலேயே நடுநிலைக் கொள்கையை முன்வைத்தார். ‘இன்றைய உலக விவகாரங்களின் சூழலில் ஒரு சிறிய நாடு ஏதோ ஒரு குறிப்பிட்ட அதிகாரக் கூட்டத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒரு தவறான கோட்பாடு’ என்று பண்டாரநாயக்கா 1952 ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றிய உரையில் கூறினார். ஆட்சிக்கு வந்த பின்னர் தனது வெளியுறவுக்கொள்கையில் அதனை உறுதிப்படுத்திக்கொண்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆற்றிய உரையில், பண்டாரநாயக்கா, ‘நாங்கள் இறுதிவரை, நேர்மறையான வடிவத்தில் சமாதானம், அனைத்து தேசங்களுக்கிடையில் நட்புறவு மற்றும் அனைத்து மனிதகுலத்தின் அமைதி மற்றும் செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளோம்’ என்று கூறினார். வெளிப்படையாக நோக்கும்போது பண்டாரநாயக்காவின் வெளியுறவுக்கொள்கையினையே தகநாயக்காவும், சிறிமாவோ பண்டாரநாயக்காவும் பின்பற்றி வந்தனர். பண்டாரநாயக்க கண்ட குடியரசு கனவை சிறிமாவோ நிறைவேற்றியிருந்தார்.

இலங்கையின் வெளியுறவுக்கொள்கையின் மீண்டுமொரு பரிமானத்தை 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சியில் அவதானிக்கலாம். முதன்முதலாக அரசாங்க தலைவரிடமிருந்து வெளிவிவகாரத்தை தனியான அமைச்சரிடம் ஒப்படைத்தார். ஏ.சி.எஸ் ஹமீட்டை வெளிவிவகார அமைச்சராக நியமித்தார். முதலாளித்துவ சார்புடைய ஐ.தே.க. ஆட்சி டி.எஸ்.சேனநாயக்கா மரபிலிருந்து இன்னும் அதிகமானது உலக முதலாளித்துவ சார்புடமைக்குள் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் வெளிவிவகாரம் அமைந்திருந்தது. இது டி.எஸ்.சேனநாயக்க மரபிலிருந்து அதிதீவிரமான செயலாக்கத்திற்கு வழிவகுத்தது. இலங்கை அமைவிடம் சார்ந்து வளர்ந்திருந்த மேற்கு முதலாளித்துவத்தின் ஊடுருவல் திறந்த பொருளாதாரக் கொள்கையால் அதிகரித்ததுடன்; அரசியல் – இராணுவ விடயங்களில் நேரடித் தலையீடுகள் ஏற்பட ஆரம்பித்தது. இதனாலேயே பிராந்திய அரசியலுடனும் சர்வதேச அரசுகளுடனும் புதிய வெளிவிவகாரக் கொள்கையை பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அணிசேராமை கொள்கை பற்றி அதிக அக்கறையை வெளிப்படுத்தியிக்கவில்லை. சான்பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில் பங்குபற்றியதன் மூலம் ஜெயவர்த்தன பதவியேற்றவுடன் ஜப்பானுடனான உறவுகள் புதிய முக்கியத்துவத்தைப் பெற்றன. இந்திரா காந்தி மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோருக்கு இடையே இருந்த நெருங்கிய உறவைப் போலவே, இந்தியாவின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்களுடன் ஜெயவர்த்தனா நெருங்கிய புரிதலை வளர்த்துக் கொண்டார். எனினும், 1980இல் இந்திரா காந்தி பிரதமராகத் திரும்பியது, இரு நாடுகளுக்கும் இடையிலான கடினமான உறவின் தொடக்கமாகும். இது இரு தலைவர்களும் பதவியில் இருந்த காலம் முழுவதும் அப்படியே இருந்தது. அவரது மகன் ராஜீவ் காந்தி பதவியேற்றபோதும் தொடர்ந்தது. 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ராஜீவ் காந்தியின் கரம் வலுத்தது. தொடர்ச்சியாக பிரேமதாசா காலத்தில் அவர் ஜனாதிபதியாக இருந்த காலம் குறுகியதாகவும், சர்வதேச உறவுகளில் கவனம் குறைவாகவே காணப்பட்டுள்ளது.

1990களிற்கு பிறகு ஏற்பட்ட புதிய உலக ஒழுங்கில் சிறிய அரசுகள் தமது வெளியுறவுக்கொள்கையை சீரமைப்பதில் பல இடர்களை எதிர்கொண்டது. அதனை சீர்செய்யும்வகையில் 1994இல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்காவினுடைய அரசாங்கம், பாரம்பரியமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி வகுத்த வெளியுறவுக் கொள்கையிலிருந்து சற்றுவிலகி சில தனித்துவங்களுடன் கொள்கையை அமைத்திருந்தது. காரணம் புதிய உலக ஒழுங்கில் இடதுசாரி ஆட்சி முறை சோவியத் யூனியன் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்ததென்றே கூறக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. முற்றாக முதலாளித்துவச் சக்திகளின் எழுச்சிகரமான மாறுதல்கள், ஒற்றைமைய அரசியல் உலகத்தினை தோற்றுவித்தது. உலகத்தின் போக்க்கிற்கேற்ப சந்திரிகாகுமாரதுங்காவும் இலங்கையின் வெளிவிவகாரத்தை வடிவமைத்துக் கொண்டார். இதில் பிறேமதசா ஆட்சிக் காலத்தில் மேற்குலகுடன் நெருக்கமான உறவிருந்தாலும் குழப்பமும் நெருக்கடியும் அத்தோடு தெளிவான சீரமைக்கப்படாத போக்கும் காணப்பட்டது. சந்திரிகா குமாரதுங்காவின் காலம் மிகத் தெளிவாக பொருளாதாரவர்த்தகப் போட்டிக்குள் உலகப் பொருளாதார அரசியல் ஒழுங்கு அமைந்திருந்தது. சோசலிசம் முதலாளித்துவம் என்ற மறைபோட்டித்தன்மை தகர்ந்து போனதுடன் உலகம் ஒரே வகைக்குள் நேர்க்கணியப் போக்கை கடைப்பிடிக்க அரசுகளும் தலைமைகளும் தயாராயிருந்ததைக் காணலாம். திறந்த பொருளாதாரக் கொள்கைக்குள் மேற்குலக உறவாடலை அதிகம் அளுத்துவதாக அமைந்திருந்தது. அதுமட்டுமன்றி இந்தவகைப் பொருளாதார ஒழுங்குக்குள் சிறிய நாடுகளே அதிகம் பொருளாதார வர்த்தக வாய்ப்புக்களை நாடிச் செல்ல வேண்டிய கட்டாயமும் நிலவியது. இதனை சந்திரிகா குமாரதுங்காவின் வெளியுறவுக் கொள்கையில் பொருளாதாரப் போட்டிக்கான அம்சம் மேற்குடன் இணங்கிப் போதல் தவிர்க்கமுடியாததாகியது. இதனால் இலங்கையில் முதலாளித்துவப் பொருளாதார அடிப்படை வலுவடைய ஆரம்பித்தது. மேலும், சந்திரிக்கா சர்வதேச சிவில் அதிகாரியான லக்ஷ்மன் கதிர்காமரை வெளிவிவகார அமைச்சராக தெரிவு செய்தமை பலராலும் பாராட்டப்பட்டது. அவர்களின் ஒருங்கிணைந்த தனிப்பட்ட கவர்ச்சியுடன், அவரது அரசாங்கம் இந்தியாவுடன் நட்புறவு உறவுகளை மீண்டும் ஏற்படுத்தியது. அவர் நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு புதிய உத்வேகத்தை அளித்து பல முக்கிய உலகத் தலைநகரங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். ஒரு உலகளாவிய வீரராக இருக்க விரும்பினார், ஆனால் நாட்டை எந்த அதிகார கும்பலுடனும் இணைக்க விரும்பவில்லை. கதிர்காமரின் உறுதியான வாதங்கள் சர்வதேச அரங்கில் இலங்கைக்காக ஒரு வாதத்தை முன்வைத்ததன் பலனை நாடு அறுவடை செய்தது.

ராஜபக்ஷாக்களின் வெளியுறவுக்கொள்கை இலங்கையின் இன்றைய தாக்கங்களுக்கான உடனடிக்காரணமாக அமைகின்றது. அதேவேளை மாறுபட்ட காட்சிகளையும் புலப்படுத்துகின்றது. குறிப்பாக மகிந்த ராஜபக்ஷாவின் போர்க்கால வெளியுறவுக்கொள்கையிலிருந்து மாறுபட்ட வடிவத்தை போருக்கு பின்னரான கொள்கை வெளிப்படுத்தியுள்ளது. அதேவேளை 2019களில் கோத்தபாய ராஜபக்ஷாவின் வெளியுறவுக்கொள்கை கடந்த கால அனுபவங்களின் படிப்பினையிலிருந்து கட்டமைக்கப்பட்டிருந்தது. 2005இல் சந்திரிகா குமாரதுங்கவிற்குப் பிறகு பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் அணிசேரா அணுகுமுறையுடன் முன்னேறினார். 2009இல் இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தபோது இந்தியாவின் ஆதரவை ராஜபக்சே நாடியது மற்றும் வென்றது. ஆனால் 2010-2015 வரை தனது இரண்டாவது பதவிக் காலத்தில் சீனாவுடன் அவர் இணக்கமாக இருப்பது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் கோபத்தை ஏற்படுத்தியது. இதனை சீர்செய்யும் வகையில் 2019இல் ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ஷா இந்திய நலனில் அக்கறையுடையவராக வெளிப்படுத்திய போதிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் தென்னிலங்கையின் எதிர்ப்பை காட்டி இந்திய உறவை கையாளவே முயன்றுள்ளார். ராஜபக்ஷாக்களின் வெளியுறவுக்கொள்கை ஆசியவாதத்தை சீனாவை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டது.

இலங்கையின் 2020-2021 அரசியல் பொருளாதார நெருக்கடியின் விளைவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தில் ஜனாதிபதி அதிகாரத்தை பெற்றுள்ள ரணில் விக்கிரமசிங்காவின் வெளியுறவுக்கொள்கை பெருமளவில் சர்வதேச பிராந்திய அரசுகளை கையாள்வதாகவே கட்டமைக்கப்ட்டுள்ளது. இந்திய பிராந்திய அரசின் பொருளாதார ஆதரவை பெற்றுக்கொள்ள இந்திய நலனில் அக்கறையான உரையாடல்களை முன்னிறுத்தும், அதேவேளை சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்திலேயே கையாள்கை வெளியுறவுக்கொள்கையையே வடிவமைத்து, இலங்கையின் அமைவிட முக்கியத்துவத்தால் அதனை சாத்தியப்படுத்தி நகர்வதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இத்தகைய போக்கினையே 2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்க உருவாக்கத்திலும் மைத்திரி-ரணில் அரசாங்கம் சீனா-இந்திய-மேற்குடன் சமமான கையாள்கையை மேற்கொண்டிருந்தனர். ரணில் அரசாங்கம் ஜனநாயகத்தின் வெற்றிக் கதையாகப் போற்றப்பட்டு, மேற்குலகின் கதவுகள் திறக்கப்பட்டு, அதன் பொருளாதார நன்மைகளை நாடு அறுவடை செய்வதற்கான சாதகமான சூழலை கட்டமைக்கிறது. போலி ஜனநாயக விம்பத்தின் இயல்புகளை ரணில் அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கை தெளிவாக கட்டமைத்து சமநிலையை பேணுகிறது.

எனவே, இலங்கையில் வெளிவிவகாரக் கொள்கை வகுக்கப்படுவது எந்த வகையிலும் நேர்கோட்டில் இல்லை என்பதையே அதன் தொடர்ச்சியான வடிவம் காட்டுகிறது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றின் பெரும்பகுதி இவ்வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு ஆரம்பகால விரோதத்தில் இருந்து, பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ளும் போது அரசாங்கம் இறுதியில் இந்த நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை நாடியது. குறிப்பாக, 1952 இல் சீனாவுடன் கையெழுத்திடப்பட்ட ரப்பர்-அரிசி ஒப்பந்தம் முதல் சமகால இந்திய-இலங்கை உறவின் நிலைமைகள் தீவின் வெளியுறவுக் கொள்கையை பொருளாதாரத் தேவைகள் எவ்வாறு ஆணையிட முடியும் என்பதைக் காட்டியது. எவ்வாறாயினும், கொழும்பு தனது பிராந்திய பங்காளிகளுடன் உறவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஒருபோதும் கைவிடவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாதுகாப்புக் கவலைகள் காரணமாகவும், கொழும்பு புறக்கணிக்க முடியாது. 1980களில் மேற்கத்திய சார்பு முன்னணியுடன் கூட்டணி வைத்து அவர்களை புறக்கணிக்க முயற்சித்த போது, உறவுகள் மிகவும் மோசமாகி, இந்தியா தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் மூலம் இலங்கைக்கு பிராந்திய புவிசார் அரசியலில் பாடம் கற்பித்தது. அதன் பின்னர் பெருமளவில் இலங்கையின் வெளியுறவுக்கொள்கை பிராந்தியத்தை அனுசரித்து கையாளும் வகையிலேயே வெளியுறவுக்கொள்கையை கட்டமைத்து வருகின்றது. பிராந்திய உறவு நெருக்கடிக்கு உள்ளாகுகையில் ஆட்சிகளும் நெருக்கடிக்கு உள்ளாவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)