March 19, 2025
அரசியல் கட்டுரைகள்

ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினது சீன விஜயம் வெளிப்படுத்தும் அரசியல்?

உலக ஒழுங்கானது ஒரே பொருளாதாரம் இரு அரசியல் பரிமாணத்திற்குள் இயங்குகிறது. அதாவது பொருளாதாரமாக நவ-தராளவாதத்தைக் கொண்டதாகவே உலகிலுள்ள அனைத்து நாடுகளும் செயல்படுகின்றன. அதில் விதிவிலக்குக்கு வாய்ப்பே கிடையாது. ஆனால் அரசியலாக இரு பரிமாணம் நிலவுகிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்கின் அரசியல் எதிர் சீன-ரஷ்சியா சார்ந்து அதன் அணிநாடுகளது அரசியல் என இரு பாரிய வடிவம் காணப்படுகிறது. அத்தகைய அரசியலுக்கான போரியல் நிபந்தனையாகவே உக்ரையின்-ரஷ்சியப் போரைம் இஸ்ரேல்-ஹமாஸ் போரையும் கண்டுகொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. இத்தகைய உலக ஒழுங்கை பலமாக்குவதிலும் அதனை சீன-ரஷ்சியா பக்கம் சார்ந்ததாக்குவதிலும் நகர்வாகவே சீனாவுக்கான ரஷ்சிய ஜனாதிபதி புட்டினது விஜயம் அமைந்துள்ளது. இரு நாட்டுக்குமான உறவின் முதன்மையானது புவிசார் அரசியலாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். ரஷ்சியாவென்ற இருதய நிலத்தினை வலுவாக பேணுவதில் விளிம்புநிலமான சீனாவின் வகிபாகம் தனித்துவமானது. இக்கட்டுரை புட்டினது சீன விஜயத்தின் அரசியலை தேடுவதாக உள்ளது.

ரஷ்சியாவின் ஜனாதிபதி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 15.05.2024 சீனாவுக்கு சென்றுள்ளார். ஐந்தாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் விஜயமாக புட்டின் சீனாவுக்கு பயணமாகியுள்ளார். இரு நாட்டுக்கும் இடையில் நெருக்கமான உறவு ரஷ்சிய-உக்ரையின் போருக்கு பின்னர் காணப்படுகிறது. ஆனால் இரு தேசங்களும் வரலாற்று ரீதியாகவே ஒன்றில் ஒன்று தங்கியுள்ள சக்திகளாகவே உள்ளன. ஆரம்பத்தில் இரு நாடுகளும் சோஸலிஸம் அல்லது மார்க்சியம் என்ற அடிப்படைக்குள்ளால் நிகழ்த்திய புரட்சியில் ஒன்றாகப் பயணித்த நாடுகள். லெனினைப் பின்பற்றியே மாவோசேதுங் புரட்சியை முன்னெடுத்த வரலாறுகள் உண்டு. பின்னர் இரு தேசங்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதும் தெரிந்தவிடயம். அத்தகைய சுழர்ச்சியானது பெரஸ்ரெய்க்கா என்ற மறுசீரமைப்பு வாதங்களுக்கூடாக இரு நாட்டினதும் அரசியல் பொருளாதாரம் மீளக்கட்டப்பட்டன. அத்தகைய நகர்விலேயே புதிய பொருளாதார அணுகுமுறையை இரு தேசங்களும் வர்த்துக் கொண்டன. அதன் வளர்ச்சியிலேயே சீன-ரஷ்சிய உறவு பலமடைகிறது. மேற்குலகத்தின் மீதான அரசியல் முரண்பாடும் மேற்கின் இரு நாடுகளுக்கும் எதிரான பொருளாதாரத் தடைகளும் தெளிவான புவிசார் பொருளாதாரத்தை கட்டமைக்க வழிவகுத்துள்ளது. இத்தகைய பின்புலத்தோடு புட்டினது சீன விஜயம் அமைந்துள்ளது.

புதிய சகாப்தத்தில் விரிவான மூலோபாய ஒத்துழைப்பின் கூட்டாமையை ஆழப்படுத்தல் என்ற இலக்குடன் இருநாடுத் தலைவர்களும் கூட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதன் பிரகாரம் இரு நாட்டுக்குமான வர்தக மற்று பொருளாதார உடன்படிக்கைகளை மேற்கொள்வதெனவும் அதற்கான நகர்வுகளை அதிகரிப்பதென்னவும் தீர்மானித்துள்ளன. ரஷ்சியாவுடனான பெற்றோலியம் மற்றும் எரிவாயுவை மொங்கோலியாவுக்குள்ளால் பரிமாற்றிக் கொள்ளும் குழாய் மூலமான சக்திவளப் பரிமாற்றுத் தட்டத்தையும் முதன்மைப்படுத்தியுள்ளன. அதே நேரம் 2023 க்காலத்தழிற்கான இரு நாட்டு வர்த்தகம் 240 பில்லியன் டொலராக இருந்ததெனவும் அதனை அதிகரிப்பதற்கான நகர்வுகளை இருதரப்பும் மேற்கொள்வதாகவும் முடிபாகியுள்ளது. இதனை சீன ஊடகங்கள் வர்த்தக கலாசார பரஸ்பர பரிமாற்றமென கருத்துரைத்துள்ளன.

உக்ரையின் விடயம் தொடர்பில் இரு நாட்டுத்தலைவர்களும் உரையாடியதுடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உக்ரையினுடனான போரை முடிபுக்கு கொண்டுவந்து அரசியல் தீர்வுக்கு ரஷ்சியா செல்லவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இரு நாட்டு மக்களுக்கும் பயன்தக்கூடிய விடயங்களில் ஒத்துழைப்பதுடன் உலக சமாதானத்திற்கும் உறுதிப்பாட்டுக்கும் வலுச்சேர்ப்பது அவசியமானதென தெரிவித்தார். இதனை வலுப்படுத்தும் விதத்தில் ஜனரிபதி புட்டின் குறிப்பிடும் போது இரு நாடுகளுக்குமான சக்திவளத்தில் நெருக்கமடைவதுடன் அதற்கான வர்த்தக உறவைப் பலப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். ரஷ்சியா சீனாவின் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியை ஏற்றுக் கொள்வதுடன் சூழலியல்சார் சக்திவளப் பங்கீட்டையும் வர்த்தக நடைமுறைகளையும் ரஷ்சியாவின் நகரங்களில் முதன்மைப்படுத்த தயாராக உள்ளது. உக்ரையினுடனான போரில் கார்கிவ்வை கைப்பற்றுவது ரஷ்சியாவின் நோக்கமல்ல எனவும் ரஷ்சியாவுக்கு பாதுகாப்பு அரணை கட்டமைப்பதே எனவும் ரஷ்சிய ஜனாதிபதி தெரிவித்தார். ரஷ்சிய ஜனாதிபதியின் சீன விஜயத்தின் நோக்கங்களை விளங்கிக் கொள்வது அவசியமானது.

ஒன்று, அரசியல் பொருளாதார ரீதியில் ரஷ்சியாவைப் பலப்படுத்துவது பிரதான நோக்கமாக உள்ளது. மேற்குலக நாடுகள் நூற்றுக்கணக்கான பொருளாதாரத் தடைகளை ரஷ்சியா மீது திணித்துள்ளது. அதனையும் தாண்டி ரஷ்சியா பொருளாதார ரீதியாக வலுவடைகிறதென்பது சீனா இந்தியா மற்றும் அதன் ஆசிய ஆபிரிக்க நட்புநாடுகளின் ஒத்துழைப்பினால் என்பது தெரிந்த விடயம். அத்தகைய அணியின் பிரதான நாடான சீனாவுடன் உறவை வலுப்படுத்துவது ரஷ்சியாவுக்கு அவசியமானதாக உள்ளது. அது மட்டுமன்றி விளாடிமிர் புட்டின் சீனாவில் தரையிறங்கிய ஹபின் (Harbin) நகரம் சீனாவிலேயே ரஷ்சிய மக்கள் தொகையில் அதிகமானவர்கள் குடியேறியுள்ளதாக அமைந்திருப்பது புட்டினது நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது. அதாவது பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியிலான முதலீடுகளையும் வாய்ப்பக்களையும் ஏற்படுத்துவதாகவே தெரிகிறது. அதற்கான அடிப்படையை இரு தரப்பும் இணைந்து வகுத்துள்ளது. இரு நாட்டுக்குமான வர்த்தக பொருளாதார உறவை வலுப்படுத்துவதன் மூலம் மேற்குலகத்தின் பொருளாதாரத் தடைகளை தகர்பதாகவே அமைந்துள்ளது.

இரண்டு, அரசியல் ரீதியில் புட்டினது ஐந்தாவது பதவிக்காலத்தை அங்கீகரிப்பதற்கான விஜயமாகவும் கொள்ளப்படுகிறது. இரு நாடுகளும் தற்கோதைய இரு தலைவர்களும் நீண்ட ஆட்சிக்காலதை தமது நாடுகளில் மேற்கொள்ளும் அரசியலமைப்புக்கு உட்பட்ட சர்வாதிகாரத்தை (Constitutional Monarchy) பின்பற்றுபவர்கள். அந்த வகைக்குள் இரு தலைவர்களும் ஓரேமாதிரியான அணுகுமுறைகளைக் கொண்டுள்ளவர்கள் என்ற வரிசையில் ஒன்றிணைவதன் மூலம் மேற்குலகத்தின் அனைத்து விமர்சனங்களையும் தகர்க்க முடியுமென கருதுகின்றனர். அதனடிப்படையிலும் ரஷ்சிய ஜனாதிபதியின் சீன பயணத்தை புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார அடிப்படையில் ரஷ்சியா வலுவடைய சீனா மட்டுமன்றி இந்தியாவும் பாரிய பங்காற்றியுள்ளது. ஆனால் புட்டின் இந்திய விஜயத்தை 2023 இல் நடைபெற்ற ஜி-20 மகாநாட்டைத் தவிர்திருந்தமை கவனத்திற்குரியது.

மூன்று, உக்ரையினுடனான போரை ரஷ்சியாவால் முடிபுக்கு கொண்டுவர முடியும். ஆனால் உக்ரையினைக் கைப்பற்றுவதல்ல ரஷ்சியாவின் நோக்கம் என்பதை கார்கீவ் நகரத்தை பற்றி புட்டின் குறிப்பிடுவதைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும். அதனால் ஒர் அரசியல் உடன்பாட்டுக்கு போக வெண்டிய தேவை ரஷ்சியாவுக்கு எழுந்துள்ளது. அதனை நோக்கி இந்த விஜயத்தை நகர்த்துவதும் புட்டினது நோக்கமாக அமைந்துள்ளது. போரை ரஷ்சியாவின் பாதுகாப்பு அரண்களைக் கட்டமைக்கவும் பலப்படுத்தவும் பயன்படுத்தவதென்பது புட்டினது நோக்கமாக உள்ளது. அதாவது போரை ரஷ்சியாவின் பிராந்தியத்திற்குள் சவால்விடும் நேட்டோவின் உள்நுழைவை தடுப்பது மட்டுமன்றி முடிபுக்குக் கொண்டுவரும் நகர்வகளையே மேற்கொள்வதாக நியாயப்படுத்தியுள்ளார். இராணுவ மூலோபாயங்களில் ரஷ்சியாவின் இலக்கு அடையப்பட்டுள்ளதாகவே அமைந்தாலும் அதனை வலுவானதாக மாற்றுவதில் கணிசமான எல்லைகளை அரணமைக்க வேண்டிய நிலையில் ரஷ்சியா உள்ளதென்பதையும் புட்டின் கோடிகாட்டியுள்ளார்.

நான்கு, மேற்குலக நாடுகள் கறிப்பிடுவது போல் ரஷ்சிய-சீன உறவானது இராணுவ முக்கியத்துவம் பொருந்தியதென்பதும் புட்டினது சீன விஜயம் உணர்த்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பிளிங்டனது உக்ரையின் விஜயம் மற்றும் அமெரிக்கா உக்ரையினுக்கு பாரிய நிதி உதவிகளும் ஆயுதமும் வழங்கும் நகர்வகளில் ரஷ்சியாவின் நகர்வு நிகழாதுவிடின் இராணுவ அதிகாரச் சமநிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனை முடிபுக்கு கொண்டுவருவதும் ரஷ்சிய ஜனாதிபதியின் நகர்வு நோக்கப்பட வேண்டும். குறிப்பாக இராணுவ வெற்றியை கோடிட்டுக் காட்டும் விதத்தில் சீன ஊடகங்களுடனான சந்திப்பில் புட்டின் வெளிப்படுத்தியிருந்தார். அதாவது தாக்குதல் தொடர்வதாகவும் ரஷ்சியாவின் எல்லைகளை பாதுகாப்பதே அதன் நோக்கம் என்றும் தெரிவித்திருந்தமை கவனத்திற்கு உரியதாகும். இதே நேரம் மேற்கு நாடுகள் குற்றம்சாட்டுவது போல் சீனா ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை ரஷ்சியாவுக்கு வழங்குவதாகவும் ஏவுகணைகள் மற்றும் தாக்குதல் ஆயுதங்களை வழங்குவதாகவும் போரியல் ரீதியில் சீனா ரஷ்சியாவை ஆதரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளன. அத்தகைய நகர்வுகளால் சீனா மீதான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தப் போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐந்து, சீனாவைப் பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சியில் அதிக நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது. பாரிய வீழ்ச்சியை கடந்தகாலப் பகுதியுடன் ஒப்பிடும் போது சீனா எதிர்கொண்டுள்ளது. அதனால் அதன் பொருளாதார நலன்கள் பொறுத்து ரஷ்சியாவுடனான உறவு தேவையானதாக உள்ளது. அது மட்டுமன்றி சீனாவின் பெற்றோலிய மற்றும் எரிவாயுத் தேவையினை மேற்காசிய நாடுகளிடம் அதிகம் தங்கியிருக்கின்றது. அதனால் அத்தகைய தேவையை ரஷ்சியாவுடன் பெற்றுக் கொள்வதனால் பொருளாதார ரீதியில் அதிக வாய்ப்புக்களை அடைய முடியுமெனவும் கருதுகிறது. ரஷ்சியா-சீனா-ஈரான் அணி வலுவான நிலையை இஸ்ரேலிய-ஹமாஸ் போருக்குப் பின்னர் அடைந்துள்ளது. அத்தகைய பொறிமுறைக்குள் சீனா வலுவான பொருளாதாரக் கட்டமைப்பை உலகளாவிய தளத்தில் விஸ்தரிப்பதற்கு ரஷ்சியாவுடனான நெருக்கம் அவசியமாகிறது.

எனவே ரஷ்சிய ஜனாதிபதி புட்டினது சீன விஜயம் அதிகமான நலன்களை ரஷ்சியாவுக்கும் சீனாவுக்கும் ஏற்படுத்தும் அதே வேளை மேற்குலகத்திற்கு பாரிய சவாலானதாக மாறியுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தின் எச்சரிக்கைகளையும் மீறி சீனா –ரஷ்சிய உறவு கட்டமைக்கப்படும் உலக அரசியல் வடிவம் காணப்படுகிறது. அதனாலேயே ஒரே பொருளாதாரம் இரு அரசியல் பரிமாணத்திற்கான வடிவமாக தற்போதைய உலக அரசியல் ஒழுங்கை கண்டு கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது எனலாம்.

-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)