April 22, 2025
அரசியல் கட்டுரைகள்

தமிழ் பொது வேட்பாளரது வெற்றிக்கான உழைப்பும் மக்கள் சந்திப்புகளும்!

தென் இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புதிய முடிபுகளை நோக்கி நகர்வதாகவே தெரிகிறது. வடக்கு கிழக்கு தமிழ் பொது வேட்பாளர் என்று கருதும் போது தென் இலங்கை தேர்தலை தவிர்ப்பது பற்றிய உரையாடலை மேலெழச் செய்துள்ளது. ஆட்சியிலுள்ள அதிகார சக்திகள் எப்போதும் வெற்றிவாய்ப்பினைக் கணித்தே தேர்தல்களை நடாத்துவது மரபான விடயமாகும். அத்தகைய நெருக்கடிக்குளளேயே தென் இலங்கை ஆட்சியாளர்கள் காணப்படுவதாக தெரிகிறது. அதனால் தேர்தலை ஒத்திப்போடுவது என்ற முடிபை நோக்கி கருத்துக் கொண்டுள்ளது போல் தெரிகிறது. அல்லது இத்தகைய நெருக்கடியான உரையாடல் மூலம் தென் இலங்கையிலும் ஒரு பொது வேட்பாளர் பற்றிய சாத்தியப்பாட்டை உருவாக்குவது போன்றும் நகர்வு காணப்படுகிறது. ஆனால் தமிழ் மக்கள் ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவதென்பது தமிழ் மக்களின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் மட்டுமல்லாது எதிர்காலத் தேர்தல்களை கட்டமைக்கவும் உதவும் ஓரம்சமாக அமையவுள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். இக்கட்டுரையும் தமிழ் பொது வேட்பாளரை ஈழத்தமிழரது அரசியலில் வெல்லவைப்பது எப்படி என்பதை தேடுவதாக உள்ளது.

பொதுவெளியில் சில தரப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளர் அதிக வாக்குகளை எடுக்க முடியாது எனவும் அவ்வாறு வாக்குப் பெறமுடியாதுவிடத்து ஏற்கனவே முன்வைக்கப்பட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனங்கள் சவாலுக்கு உள்ளாக்கும் என்று விவாதிக்கின்றனர். அதனால் இத்தகைய முயற்சியை கைவிடுமாறும் தென் இலங்கை வேட்பாளருக்கு வாக்களிப்பதே பொருத்தமானது எனவும் குறிப்பிடுகின்றனர். வரலாற்றிலிருந்து எதனைக் கற்றுக் கொண்டோம் என்றால் வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக் கெர்ளளவில்லை என்பதை கற்றுக் கொண்டதேயாகும் என்று ஹகல் குறிப்பிட்டுள்ளதே நினைவுக்கு வருகிறது. கடந்தகாலப் பிரகடனங்களை சவாலுக்கு உள்ளாக்க கூடாது என்றால் அதற்காக உழைக்கப வெண்டும். அத்தகைய உழைப்பில் அனைவரும் கலந்து கொண்டால் இலகுவாக வாக்குகளை ஈட்ட முடியும். ஆரேர்ககியமாக ஐக்கியத்திற்கான வெற்றியை தமிழ் பொது வேட்பாளர் அடைய முடியும். வாக்குகளை பெறுவதென்பதும் கடந்தகாலத் தீர்மாங்களை சவாததலுக்குட்படுத்தாத வகையில் தமிழ் பொது வேட்பாளருக்குமான தேர்தல் எதிர்கொள்ளப்பட வேண்டுமாயின் அனைத்து தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அரசியல், மற்றும் மக்கள் அமைப்புக்கள் ஒன்று திரட்டப்படுமாயின் சாத்தியமானதாக மாற்ற முடியும். சாத்தியமற்றதை சாத்தியமடாக்குவதே அரசியல். தமிழ் மக்கள் நீண்டகாலத்திற்கு பின்னர் தமது அரசியல் அபிலாசையை அடைய தமிழ் பொது வேட்பாளர் மூலகாரணமாக அமைய முடியும்
போலித்தனமான விமர்சனங்களை முன்வைப்பதென்பது எதிரியை திருப்திப்படுத்துவதாகும். அல்லது எதிரிக்கு சேவை செய்வதாக அமையும். ஆனால் ஆரோக்கியமான விமர்சனங்கள் தமிழ் பொது வேட்பாளரை பலப்படுத்தவும் அதனை மேலும் உறுதிப்படுத்தவும் உதவும். அத்தகைய விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு பயணிப்பது அவசியமானது. கடந்த 15 வருட ஈழத்தமிழரது அரசியல் சிதைவுக்கு போலியான விமர்சனங்களும் சதிக்கோட்பாடுகளுமே காரணமாக அமைந்தன. அத்தகைய நிலைக்குள்ளேயே தமிழ் பொது வேட்பாளரது நிலைப்படுத்தல் உள்ளது. ஆனால் அதனை எல்லாம் தகர்த்து பொதுத்தளத்தில் மக்கள் அமைப்புக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க ஆரம்பித்துள்ளன. அத்தகைய கலந்துரையாடல்களில் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வது அவசியமானது.

ஒன்று, தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் என்பது அதிகம் முக்கியத்துவம் இல்லாத போக்கே உள்ளது. பகிஸ்கரிப்பு என்ற கொள்கைக்கு அப்பால் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத போக்கே அதிகம் காணப்பட்டது. அதற்கு அடிப்படைக் காரணம் தென் இலங்கை அரசியலில் ஜனாதிபதிகளது அதிகாரம் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை கடந்தகாலம் முழுவதும் தமிழ் மக்கள் அனுபவித்தவர்களாகவே உள்ளனர். அதனால் தமிழ் மக்கள் அத்தகைய நிலையிலிருந்து தமிழ் மக்களது தனித்துவம் காட்டப்பட வேண்டும் என்பதை முதன்மைப்படுத்த முயலுகின்றனர். தென் இலங்கை தமிழ் மக்கள் மீது எந்தவித அக்கறையும் அற்று இருக்கின்ற போது அத்தகைய முடிபை நோக்கி தமிழ் மக்கள் செயல்படுவது மக்களாக தவறிருப்பதாக தெரியவில்லை. காரணம் கடந்த காலம் முழுவது தமிழ் மக்கள் தென் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்தவிதமான அடைவையும் எட்டவில்லை. மாறாக போரையும்,பொருளாதார நெருக்கடியையும், அழிவுகளையும் மற்றும் ஆக்கிரமிப்பையுமே எதிர்கொண்டு வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனாவின் காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் எதுவுமே நியாதிக்கத்திற்கு அமைவானதாக தெரியவில்லை. மாறாக இயல்பான வளர்ச்சியிலும் சர்வதேச நெருக்கடியையும் எதிர்கொள்வதற்கானது மட்டுமே. அது ஒவ்வொன்றும் கையாளப்பட்டதே அன்றி அடிப்படையில் எத்தகைய நியாயத்தின் அடிப்படையிலும் அமையவில்லை. நிலவிடுவிப்பு கைதிகள் விடுவிப்பு என்றெல்லாம் உரையாடப்படுகிறது. ஆனால் அவை எதுவும் தென் இலங்கையின் அரசியல் நலனுக்குட்படதே அன்றி தீர்க்கமான முடிபுகளாக தெரியவில்லை. தமிழ் மக்களது ஆதரவு வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி எத்தகைய விட்டுக் கொடுப்பையும் செய்யவில்லை என்பதை தெளிவாக தமிழ் மக்கள் உணர்ந்துள்ளதை வெளிப்படுத்துகின்றனர். அதனால் தென் இலங்கை வேட்பாளர் மீது எத்தகைய நம்பிக்கையும் கொள்ளமுடியாது என்ற எண்ணத்தை சாதாரண தமிழ் மக்கள் உணர்கின்றனர். அதனை சந்திப்புக்களில் வெளிப்படுத்துகின்றனர். அமைப்புக்களும் அதன் உறுப்பினர்களும் தெளிவாக தென் இலங்கை வேட்பாளரை ஆதரிக்க முடியாது என்பதை கேடிட்டுக் காட்டுகின்றனர். இது தமிழ் பொது வேட்பாளரையும் அவரது பிரகடனத்தையும் பாதுகாப்பதுடன் கடந்தகால பிரகடனங்களை சவாலுக்கு உட்படுத்தாது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

இரண்டு, வடக்கு கிழக்கில் செயல்படும் தமிழ் அரசியல் கட்சிகள் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இழந்துள்ளதைக் கண்டு கொள்ளமுடிந்தது. தென் இலங்கை ஆட்சியாளர் மத்தியில் தமிழ் தரப்புக்கள் கொண்டுள்ள உறவுநிலையை மக்கள் வெறுப்பதையும் தமது சுயநலனுக்குட்பட்டு தமிழ் கட்சிகள் செயல்படுவதாகவும் கருதுகின்றனர். அத்தகைய நிலையை முதன்மைப்படுத்தும் தமிழ் மக்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் ஓரங்கமாகவே தமிழ் பொது வேட்பாளரை கருதுகின்றனர். கட்சிகளின் பலவீனமான செயல்பாட்டின் காரணமாகவே தென் இலங்கை அரசியல் கட்சிகளை நோக்கி தமிழ் மக்கள் நகர்வதாக குற்றம்சாட்ட முற்படுகின்றனர். தெளிவான கொள்கையுடன் தமிழ் தேசியக் கட்சிகள் செயல்படுவதில்லை என்ற வாதத்தை வெளிப்படுத்த தமிழ் மக்கள் முனைகின்றனர். தென் இலங்கையின் நலனுக்கு அமைவாகவே தமிழ் மக்களது அரசியலை தமிழ் தேசியக் கட்சிகள் நகர்துகின்றன என்ற சந்தேகத்தை பலசந்தர்பங்களை உதாரணமாக காட்டி விபரிக்க முயலுகின்றனர். நம்பிக்கை தரக்கூடிய நகர்வுகள் எதனையும் தமிழ் தேசியக் கட்சிகள் தமக்கு ஏற்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்ட முயலுவதுடன் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் மாற்றம் வேண்டும் எனவும் அல்லது மாற்றுத்தலைமைகள் வேண்டும் என்ற விவாதத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். அத்தகைய தலைமைகளும் கட்சிகளும் அமைப்புகளும் தமிழ் மக்கள் சார்ந்து தீர்மானங்களை எடுக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முயலவேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்களால் முன்வைக்கப்படுகிறது. தமிழ் மக்கள் சிறந்த நிர்வாகத் திறனுடையவர்கள் எனவும் தலைமைத்துவ திறன் கொண்டவர்கள் எனவும் குறிப்பிட்ட அமைப்பை சார்ந்த உறுப்பினர்கள் தற்போது எதற்கும் கையாலாகதவர்களாக உள்ளமை வருத்தமளிப்பதாக தெரிவிக்கின்றனர். அதற்கான அடிப்படைக் காரணங்கள் பலவற்றை தெரிவிக்கின்றனர். அதனால் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதுடன் அவரை நோக்கி தமிழ் மக்களது வாக்குகள் குவிக்கப்பட வேண்டும் எனவும் நம்பிக்கையூட்டுபவர்களாக காணப்பட்டனர். இது பெருமளவுக்கு தமிழ் மக்கள் மத்தியிலுள்ள உளரீதியான உணர்வையும் நெருக்கடியையும் தெளிவுபடுத்துகிறது.

மூன்று, தமிழ் மக்கள் மீதான அடிப்படைப் பிரச்சினைக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடந்த போர்க்காலத்தில் ஏற்பட்ட துயரத்திற்கும் உளரீதியான மீட்டெடுப்பாவது நிகழவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் நோக்கி சமூக செயல்பாட்டாளர்களும் சிவில் அமைப்புகளும் கவனம் கொள்ளாத துயரத்தையும் அந்த மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அத்தகைய துயரத்தையும் கடந்து தமிழர்களாக பாதுகாப்பு தேடுவதற்கும் ஐக்கியத்தை வெளிப்படுத்துவதற்குமான விடயத்தில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பவரர்களாக காணப்பட்டனர். எத்தகைய நெருக்கடியான சூழலிலும் தமிழ் வெல்ல வேண்டும் என்பதில் சாதரண மக்கள் கருசனையாக உள்ளனர் என்பதைக் கண்டு கொள்ள முடிகிறது.

எனவே தமிழ் பொது வேட்பாளர் என்ற தரிசனம் சாதமாரண தமிழ் மக்கசளால் அதிகம் ஆதரவான நிலையை எடுக்க முற்படுகிறது. இத்தகைய சூழலானது எதிர்கால அரசியலை கட்டமைக்கவும் ஒட்டுமொத்த ஜனநாயக விரும்பிகளுக்கும் தெளிவான செய்தியைக் கொடுக்க்கூடியதாகும். அது மட்டுமல்லாது தமிழ் மக்களை ஒன்றிணைப்பதென்பது எதிர்கால அரசியல் இருப்புக்கு உத்தரவாதம் தருவதாகவே தெரிகிறது. பிற சக்திகள் மீது குற்றம்சாட்டுவதை விடுத்து தமிழ் மக்களாக ஒன்றிணைவதும் கூட்டாக செயல்படுவதும் ஆரோக்கியமான அரசியல் வெளிகளைத் திறக்க உதவும். அதுவே தமிழ் பொது வேட்பாளரை வெற்றிகரமானதாக்க வழிவகுக்கும். அது தமிழ் மக்களது அரசியலில் கடந்த 15 வருடங்களில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதாக அமையும். அதனை நோக்கி தமிழ் மக்களை ஒன்றிணைப்பது அவசியமான அரசியாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)