June 23, 2024
அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழர் அரசியலில் ஐக்கிய நாடுகள் சபையும் பாங்கீ-மூனும்!

இலங்கைத்தீவின் அரசியலுடன் அதிகம் பரீட்சயமான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் இலங்கை வருகை அதிக கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2009 போர்க்கால அரசியலுடன் நெருக்கமான உறவை தந்துள்ள பாங்கீ-மூன் 06.02.2023 அன்று மீண்டும் இலங்கை வந்துள்ளார். பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தென்கொரியாவின் இயங்கும் அமைப்பொன்றின் (Global Green Growth Institute) பணிப்பாளராக கடமையாற்றும் பாங்கீ-மூன் இலங்கையுடனான உடன்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் வருகை தந்துள்ளார். அவரது விஜயம் பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றத்திற்கானதாக அமைந்திருந்தாலும் 2009 களில் ஐ.நா.செயலாளராக பணிபுரியும் போது அவர் மேற்கொண்ட அரசியல் பற்றிய கேள்விகளை மீள எழுப்பியுள்ளது. இக்கட்டுரையும் ஈழத்தமிழரது அரசியலில் ஐ.நா.சபையின் பங்கினை புரிந்து கொள்வதாக அமையவுள்ளது.

2009 பின்னான இலங்கைத் தீவின் அரசியலில் மேற்கு -சீன இழுபறி தொடர்ச்சியான போக்கினை கொண்டுள்ளது. அதன் தற்போதுள்ள நகர்வு இராஜதந்திரமானதாகவே உள்ளது. வாராவாரம் மேற்கினதும் சீனாவினதும் இராஜதந்திரிகள் படையெடுப்பு இலங்கைத் தீவை நோக்கியதாக அமைந்துள்ளது. அந்த வரிசையில் ஒருவராக மீண்டும் பாங்கீ-மூன் வருகை தந்துள்ளார். அவர் பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலைமாற்றம் தொடர்பில் வருகை தந்தாலும் அதற்கு பின்னால் தெளிவான மேற்கின் அரசியல் பதிந்துள்ளது. இதனையே முன்னாள் நேர்வேயின் விசேட தூதுவரும் அண்மைக்காலத்தி-ல் ஆற்றியிருந்தார் என்பது இதே பகுதியில் முன்னர் குறிப்பிடபட்டிருந்தமை நினைவு கொள்ளத் தக்கது. ஈழத்தமிழர் அரசியலில் எரிக் சொல்ஹெய்ம், அகாசி, மற்றும் பாங்கீ-மூன் போன்ற உலகளாவிய தளத்தில் மேற்குகின் நலனுக்காக இயங்கும் அரசியல் தலைவர்களை மறக்கமுடியாதவர்களாக உள்ளனர். மன்னிக்கவும் முடியாதவர்கள் என்பதையும் சேர்த்துக் கொள்வது பொருத்தமானது. அதிலும் ஐ.நா சபையின் பொதுச் செயலாளராக பணியாற்றும் போது ஈழத்தமிழர்கள் முள்ளிவாக்காலில் வகைதொகையின்றி சிறுவர்கள் முதியவர்கள் ஆண்கள் பெண்கள் மற்றும் ஆயுதம் வைத்திருந்தோர் இல்லாதோர் என்ற வேறுபாடின்றி கொல்லப்பட்ட காலத்தில் எத்தகைய அதிர்வுகளும் இன்றி செயல்பட்ட செயலாளராக விளங்கினார். ஏறக்குறைய ஐ.நா.சபையின் கணிப்பீட்டின் படி 70 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட போது இலங்கை ஆட்சியாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்காது மௌனம் சாதித்த பொதுச் செயலாளர் பாங்கீ-மூன். இறுதி போரில் சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மன்னார் முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப் அவர்கள் குறிப்பிட்டுள்ளமையும் கவனத்திற்குரியது.

ஐ.நா.சபை என்பது உலகளாவிய அமைதிக்கும் சாமாதானத்துக்குமான சபையாகும் என்பது புரிந்து கொள்ளப்பட்ட விடயம். இரண்டாம் உலக போருக்கு பின்னர் மேற்கு நாடுகளதும் உலக நாடுகளதும் நலனுக்காக கட்டப்பட்ட அமைப்பாக அமைந்த போதும் அதனை மேற்கு தனது நலன்களுக்கான சபையாக மாற்றிக் கொண்டது. வீட்டோ எனும் அதிகாரத்தைக் கொண்டும் பாதுகாப்புச் சபை என்ற அலகை வைத்துக்கொண்டும் இயங்கும் ஐ.நா.சபையானது மேற்குலகத்தின் சபையாகவும் அதன் பொதுச் செயலாளர்கள் மேற்குலகத்தின் அடிவருடிகளாக செயல்படுவதும் வழமையான அரசியலாக உள்ளது. உலகத்தை மேற்கின் இராணுவ வலிமைக்குள்ளால் வெளிப்படுத்தும் ஆக்கிரமிப்புக்களையும் அழிவுகளையும் மறைப்பதற்கான ஒரு நிறுவனமாக ஐ.நா. சபை விளங்குகிறது. அதன் ஜனநாயகமும் அமைதி மற்றும் சமானதானமும் மேற்குலகத்தின் நலனுக்கானதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாகப் பார்த்தால் உலகளாவிய தளத்தில் பாரிய கட்டமைப்பைக் கொண்டு இயங்கும் ஒரே நிறுவனமாக காணப்படுகிறது. அது தென் பூகோள நாடுகளது வறுமை ஒழிப்பு,பொருளாதார சுமையிலிருந்து மீட்சி மற்றும் கல்வி மேம்பாடு போன்ற விடயங்களில் பாரிய மாற்றத்தை தருவதாகவே உள்ளது.சுகாதாரம் காநிலை மாற்றத்திற்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்ளும் பணியிலும் அகதிகள் சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் போதைப்பாவனையிலிருந்து மீட்பு போன்ற பலவிடயங்களை மேற்கொள்ளும் அமைப்பாக ஐ.நா. விளங்குகிறது. ஆனால் அதன் அரசியலும் போர் தொடர்பில் அது கொண்டுள்ள பாரபட்சமான நடைமுறையும் ஐ.நா. நாடுகளது சபை என்பதையும் அது மேற்கு நாடுகளது சபை என்பதையும் அதிலும் அது அமெரிக்காவின் சபை என்பதையும் தெளிவாக கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

2009 களில் பாங்கீ-மூன் இறுதிப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த போது வருகைதந்தது மட்டுமன்றி இலங்கை ஆட்சியாளர்களுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியதன் படி இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுவதற்கான 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவதுடன் அதுவிடயத்தில் தமிழ் கட்சிகளுடன் கலந்து ஆராய்வதாகவும் அதனை மேம்படுத்த உடன்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.அதே போல் மனித உரிமை விடயத்தில் சர்வதேச நியமங்களை ஏற்று இலங்கை கடைப்பிடிப்பதாகவும் அதற்கான உறுதியை ஐ.நா பொதுச்செயலாளருக்கு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தகைய உறுதியளிப்புக்கு பதிலளிக்க வேண்டிய ஒரு தரப்பாக ஐ.நா.சபையும் அதன் பொதுச்செயலாளரும் காணப்படுகின்றனர். அதற்கான பொறுப்புக் கூறலைப் பற்றிய எந்த உரையாடலும் ஐ.நா. சபையாலோ பொதுச் செயலாளராலோ மேற்கொள்ளப்படவில்லை. அது மட்டுமன்றி போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை விட காணாமல் போனவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் சரணடைந்தவர்கள் என்பதுடன் போர் முடிந்த பின்னர் கொல்லப்பட்டவர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையை தனித்து இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி ஐ.நா.சபையும் மறைத்துள்ளது. அதன் பொறுப்புக்கூறல் அரசியல் காணாமல் போயுள்ளது.

இது மட்டுமல்லாது இறுதி போர் சாட்டசியமற்றுப் போனதற்கு வன்னியிலிருந்து ஐ.நா.சபையின் அலுவலகங்கள் முற்றாக வெளியேற்றப்பட்டமையும் பிரதான காரணமாகும். அதனை இலங்கை ஆட்சியாளர்களுக்காகவே ஐ.நா. சபை அப்போது மேற்கொண்டிருந்தது. அவ்வாறே தமிழ் மக்கள் அடைக்கப்பட்ட அகதி முகாங்களை பார்வையிடுதல் என்ற போர்வையில் முகாங்களுக்கு விஜயம் செய்த பாங்கீ-மூன் இலங்கை அரசாங்கத்திற்கு நற்சான்றிதள் வழங்கிவிட்டு சென்றிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. எத்தகைய மனித உரிமை மீறல்களையும் மனிதாபிமானச் சட்ட மீறல்களையும் கண்டு கொள்ளாதது மட்டுமல்லாது அதனை எல்லாம் மறைப்பது போன்று அவரது நடத்தை காணப்பட்டது. உலக நிறுவனத்தின் தலைவரான பாங்கீ-மூன் ஐ.நா.வின் வரைபுகளையும் நியதிகளையும் மறைத்துவிட்டு அரசாங்கங்கள் கூறும் பணிகளை ஆற்றுவதென்பது அதன் வரண்முறைக்கே விரோதமானது. அத்தகைய பதவிக்கே அவமானமான செயலாகவே தெரிகிறது. மனித உரிமைகளையும் மனிதாபிமானச் சட்டங்களையும் சுயநிர்யத்தையும் வரைபுகளில் சுமந்து கொண்டு அத்தகைய விதிகளுக்கு விரோதமாக நாடுளது நலனுக்காக பணியாற்றுவதென்பது போலித்தனமானதாகவே தெரிகிறது. இத்தகைய போலித்தனத்திற்கு தலைமை தாங்கியவராகவே பாங்கீ-மூன் செயல்பட்டுள்ளார்.

பாங்கீ-மூன் தலைமையிலான ஐ.நா.சபை ஈழத்தமிழரது அழிவுகளுக்கு துணைபோயுள்ளது என்பது தெளிவாகவே தெரிகிறது. போருக்கு பின்னரான மேற்குலக அரசியலில் ஏற்பட்ட நெருக்கடியே மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழரது விடயம் பேசப்படுகிறது. சீன-இலங்கை நெருக்கமே ஜெனீவா அரங்குக்கான அரசியல் என்பதை ஈழத்தமிழர் நன்கு புரிந்து வைத்துள்ளனர். உலகளாவிய அரசியலின் நலன்களுக்கான ஐ.நா.சபை செயல்படுகிறது. அதன் உண்மையான வடிவம் ஐ.நா.வின் விதிகளாலும் நியமங்களாலும் மறைக்கப்படுகிறது. அல்லது ஏமாற்றப்படுகிறது. உலகில் ஒவ்வொரு தேசியங்களதும் சுயநிர்ணயத்தை அங்கீகரிப்பதாக வரைந்து வைத்துள்ள விதிகள் போலியானவையாகவே காணப்படுகிறது. அது இலங்கைத் தீவில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் காணப்படுகிறது. அதிலும் ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீனமெரிக்க நாடுகளில் அதன் போலி தெளிவாகவே புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. நாடுகளது புவிசார் மற்றும் பூகோள நலனுக்குள்ளால் ஐ.நா.சபை இயங்ககிறது. நாடுகளின் சபை என்பதை மீள உறுதிப்படுத்துவதில் கவனம் கொள்கிறது. அதிலும் ஐ.நா. மேற்கு நாடுகளின் சபையாகவே என்னும் பணியாற்றுகிறது. தேசிய இனப்பிரச்சினைகளுக்கு தீர்வற்ற உலகத்தில் ஈழத்தமிழர் மட்டுமல்ல உலகிலுள்ள தேசியங்கள் அனைத்தும் காணப்படுகின்றனர். கிழக்கு ஐரோப்பிய தேசிய இனங்கள் மீதான தீர்வுகள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களது நலனிலே தங்கியுள்ளது. அதனைப் போன்றதல்ல இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வு. இது இந்து சமுத்திரத்தினது புவிசார் அரசியலிலும் பூகோள அரசியலிலும் தங்கியுள்ளது. அதன் நலன்களே தீர்வுக்கான நகர்வை சரிவர தீர்மானிக்க உதவும்.

எனவே பாங்கீ-மூன் வருகை மீளவும் ஈழத்தமிழரது அரசியலின் கடந்த காலத்தை பற்றிய தேடலை ஏற்படுத்தியுள்ளது. அது தவிர்க்க முடியாததும். ஐ.நா என்பது உலகளாவிய அமைப்பு. அதன் தலைமை என்பது அனைத்து உலகளாவிய தேசியங்களதும் பிரதிநிதி. அந்த அடிப்படையிலேயே ஈழத்தமிழரது பார்வை பாங்கீ-மூன் சார்ந்தும் ஐ.நா.சபை சார்ந்தும் அமைந்திருந்தது. ஆனால் நடைமுறையில் ஏற்பட்ட துயரங்களும் அழிவுகளும் ஐ.நா.வின் பங்களிப்புடனேயே நிகழ்ந்ததென்பது அதன் உண்மையான வலுவை பலவீனப்படுத்தியுள்ளது. சோவியத் யூனியனது வீழ்ச்சியுடன் கலைத்திருக்க வேண்டிய அமைப்பு ஐ.நா. அதனை தொடர்ந்தும் எந்த மறுசீரமைப்பும் இன்றி அமெரிக்கா இயக்குகிறது. அதற்கு உலக நாடுகள் அனைத்தும் துணைபோகின்றன. அதற்கு அமெரிக்கா உட்பட மேற்கின் நலனே அடிப்படையானது. அதற்கு சேவையாற்றும் தரப்பாகவே பாங்கீ-மூன் போன்றவர்ளது இருப்பு அமைந்துள்ளது. அவர்களது தனிப்பட்ட நலன்களும் ஐ.நா.இன் மேற்கு நலன்களும் ஒரு புள்ளியில் சந்திப்பதனால் இருதடவைகள் பொதுச் செயலாளராக பணிபுரிய வாய்ப்புகிடைகிறது. இதனையே ஆளுமைகள் என்று மதிப்பீடு செய்யும் துயரம் புலமைத்தளத்திலும் காணப்படுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)