மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம்: ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஒன்றைத் தயாரித்துள்ளன. பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் தயாரான இந்தக் கடிதம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் மூலமாக இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படவுள்ளது. இந்தப் பின்னணியில் இந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் அது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் லண்டன் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்வில் தெரிவித்த கருத்துக்களில் முக்கிய பகுதிகள்
கேள்வி:
தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஒன்றைத் தயாரித்திருக்கின்றன. இந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இன்றைய கால கட்டத்தில் இது குறித்த உங்கள் பார்வை என்ன?
பதில் –
கடிதத்தின் உள்ளடக்கங்களை அவதானிக்கின்ற போது, ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினையின் மையக்கருவைத் தழுவியும் அதே நேரம் முதன்மைப்படுத்தப்பட்ட விடயங்கள் பற்றிய முன்னோக்கிய எண்ணங்களை முன்வைக்காது என்ற குறைபாடும் அந்தக் கடிதம் சார்ந்து எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.
அது முன்வைக்கின்ற மிக முக்கியமான ஒரு விடயமாக இலங்கை இந்திய உடன்பாடு சார்ந்த 13 பற்றிய உரையாடலை அமுல்படுத்துவது தொடர்பான ஒரு உரையாடல் ஒன்று தான் அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக என்னுடைய பார்வை என்னவென்றால், இவ்வாறான ஒரு முயற்சி என்பது 35 வருடங்களின் பின்னர் இதை எடுக்கின்ற போது இந்த 35 வருட இடைவெளியில் தமிழர்களின் பிராந்திய ரீதியான அரசியல், உலகளாவிய அரசியலில் ஏற்பட்ட முன்னோக்கிய நகர்வுகளை திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாம். நீண்டகாலக் கோரிக்கையான சமஷ்டி என்பதையும் கடந்து சில விடயங்களை முன்னிறுத்திக் கொண்டு இந்தியாவிற்கு வெளிப்படுத்துவதற்கு இந்தத் தலைமைகள் முயன்றிருக்கலாம் என்றதொரு எண்ணம் என்னிடம் மேலோங்கியிருக்கின்றது. இதை நான் நிராகரிக்க மாட்டேன். இந்த மாதிரியான முயற்சிகள் புவிசார் ரீதியான அரசியல் ரீதியான எண்ணப்பாங்குகளைக் கொண்டிருக்கின்ற உறவை வைத்திருக்கக் கூடிய ஒரு முனைப்பை நாங்கள் உருவாக்கிக் கொண்டு செயற்படுத்துவது ஆரோக்கியமானது.
இது இப்போதல்ல. 2009 போர் முடிந்த பிற்பாடே தொடங்கியிருக்க வேண்டியது. இருந்தாலும், தமிழ் அரசியல் தலைமைகள் தங்களுக்கிடையே ஒரு ஒருங்கிசைவை ஏற்படுத்துவதற்கு முயற்சித்திருக்கிறார்கள். இந்தக் கடிதத்தை வரைவதற்கு இவ்வளவு காலப்பகுதி இழுபறி என்பது தமிழ் அரசியல் கட்சித் தலைமைகள் மீது இருக்கின்ற குறைபாடு. இப்போதும் பாராளுமன்றில் 2 ஆசனங்களைக் கொண்ட ஒரு கட்சி வெளியில்தான் இருக்கின்றது. இந்த 13 பற்றிய பார்வையை நிராகரிக்கும் தளத்தில் இருக்கின்றது. இந்த ஒரே திட்டத்திற்குள் சமூகத்தைக் கொண்டு செல்வதற்கு ஒருவரும் முயற்சிப்பதாகத் தெரியவில்லை.
கேள்வி:
13 ஆவது திருத்தத்தையும் தாண்டி பல விடயங்கள் அல்லது கோரிக்கைகள் இந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும், இது 13 க்குள் தீர்வை முடக்கிவிடும் ஒரு சதி என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் –
13இற்குள் இந்தத் தீர்வை முடக்குவது என்பதைவிட 13ஐ அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்வை நோக்கி நகர்வதற்குரிய விடயமாகத்தான் இதை பார்க்கிறேன். இது ஒரு தீர்வல்ல. இது தீர்விற்கான ஒரு முயற்சி மட்டுமே. இவ்வாறான முயற்சிகள் பல தமிழ் சமூகப் பரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளில் முழுமையை அடைவதற்குரிய ஒரு உபாயம் நமக்கு வேண்டும். 2009இற்கு முன் இருந்த களம் என்பது வேறு. அந்தக் களத்தோடு இந்தக் களத்தை நாங்கள் ஒப்பீடு செய்து பார்க்க முடியாது. இன்றைய நிலையில் ஒரு நடைமுறை சார்ந்திருக்கக்கூடிய விடயத்தை, அதற்கான உபாயங்களை, அதற்கான செயல் வடிவங்களை புலம்பெயர் தேசத்தில் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களை 2009இற்குப் பின்னர் எண்ணற்ற போராட்டங்கள் இந்தத் தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டது. 13ஓடு முடக்கி விடுவதற்கான சதி நிச்சயமாக நிகழும். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பிராந்திய அடிப்படையிலும் உலக அடிப்படையிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பிராந்தியத்தை நோக்கி மேற்கு நாடுகளின் பார்வை உயர்ந்திருக்கிறது. அதைப் பல இடங்களில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் பிராந்தியத்தை நோக்கி சீனாவிற்கு எதிரான உபாயம் வகுக்கப்பட்டிருக்கின்றது.
1991இல் சோவியத் யூனியனை உடைத்தது. அதேபோன்று மத்திய அரசுக் குடியரசுகள், சோவியத் குடியரசுகள் போன்று அந்தக் களத்திலிருந்த அந்தக் காலப்பகுதி போன்றே இந்தோ – பசுபிக் எல்லையோரங்களில் இருக்கின்ற நாடுகளுக்கும், அரசுகளுக்கும், தேசிய இனங்களுக்கும் ஒரு சூழல் கிடைத்திருக்கின்றது. அதை வாய்ப்பாக்குவது, பலவீனப்படுத்துவது, அல்லது முற்றாகவே அழிப்பது போன்ற ஒரு மாதிரிக்குள் கொண்டு செல்வது என்பது எங்களுடைய உபாயங்களில் தான் இருக்கின்றது.
நான் நினைக்கிறேன். அதற்கான திட்டமிடல் இருக்கும். அதை முறியடியுங்கள். அதற்காக நாங்கள் அச்சமடைகின்றோம் என்பதற்காக அதை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல் தலைமைகள் அதற்கான கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதனை செயற்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு ஒரு போராட்டத்தை, ஒரு அணுகுமுறையை, அதற்கான உபாயத்தை சொல்லுகிறார்கள்.
13இற்குள் ஈழத்தமிழர்களின் பிரச்சினையைச் சுருக்குவதற்கு, முடிவை எட்டுவதற்கான ஒரு நிர்ப்பதந்தம் எல்லாத் தளத்திலும் உள்ளது. அதற்கு இலங்கை அரசாங்கம் நிறைய உபாயங்களை வகுக்கும். அது ஒரு நீண்டகால அனுபவமும், திட்டமிடலும் கொண்டிருக்கின்ற ஒரு நாடு என்ற அடிப்படையில் இயங்குகின்ற போது நிச்சயமாக அது செயற்படும். இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கின்ற சக்திகள் எல்லோருமே அவ்வாறான ஒரு அணுகுமுறைக்குள்ளாகத் தான் அவர்கள் செயற்பட முயற்சிப்பார்கள்.
ஆனால் எதுவானாலும் இந்த செயல் வடிவத்திற்குப் போவதற்கு, எங்களுடைய தரப்பு இந்த இடத்தில் முயலாமல், குற்றச்சாட்டுக்கள், ஒரு சாதாரண பத்தி எழுத்தாளன் போன்று, ஒரு ஊடக எழுத்தாளன் போன்று அல்லது ஊடகம் போன்று கருத்துச் சொல்வது தான் அவர்கள் அரசியல் என்ற நிலைக்குள் அவர்கள் இருக்கின்றார்கள்.
இந்தக் குற்றச்சாட்டை நான் நிராகரிக்கவில்லை. அது யதார்த்தமானது. உலகத்தில் எல்லா தேசிய இனங்களும் எதிர்கொள்ளுகின்ற ஒரு யதார்த்தம். அதை தோற்கடித்து, அதை முறியடித்து அதற்கு மேல் உங்களுடைய உபாயங்களை வெற்றி கொள்வதற்கு ஏன் முடியவில்லை என்பது தான் என்னுடைய வாதம்.
இவ்வாறான செயற்பாடுகளுக்குள் நாங்கள் செல்லாமல் இருக்கவோ, அல்லது அவற்றிற்குரிய நகர்வுகளுக்குள் எங்களை ஈடுபடுத்தாமல் இருப்பது என்பது ஏமாற்றுத் தனமான, மிகப் போலியான, தங்களுடைய இருப்பை மட்டும், கட்சி சார்ந்தும், தங்களுடைய கொள்கை சார்ந்தும், தாங்கள் சாரந்திருக்கின்ற எண்ணங்கள் சார்ந்தும் மட்டும் அவர்கள் மையப்படுத்தப்படுவார்களே அன்றி அவர்கள் இந்த மக்களோடு சேர்ந்து மக்களின் அடிப்படை நியமங்களுக்கு என்ன மாற்றத்தைச் செய்வது அல்லது வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போது இவ்வாறான வாதங்களைத் தானே மீள மீள வைக்கின்றார்கள். அவ்வாறு முன்வைப்பதனால் இது நகர முடியாது ஓரிடத்தில் இருக்கின்றது. 35 வருடங்களில் மாற்றங்கள் நிகழாமல் இருக்கின்ற காரணங்களில் அரசியல் தலைமைகளும், அரசியல் தலைமைகளின் கூட்டு உடன்பாடுகளும் இதில் பங்களித்திருக்கின்றன.