April 19, 2026
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க-சீனா-இந்திய சக்திகளின் போராட்டக்களமாக இலங்கைத்தீவு மாறுகிறதா?

இந்தியா இலங்கை தொடர்பில் வகுத்திருக்கும் புதிய கொள்கையானது நிதி மற்றும் பொருளாதார உதவிகளால் இலங்கையை சுற்றி வளைப்பதாகும். இலங்கையின் பொருளாதார நெருக்கடி அதற்கான வாய்ப்பை இந்தியாவிற்கு ஏற்படுத்தியதோடு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷாவின் ஆட்சியை பாதுகாப்பதிலும் அதனூடாக இலங்கையை தமது பிடிக்குள் கொண்டு வரலாமென கருதி நகர்ந்து வருகிறது. அதேநேரம் இலங்கையை பௌத்த கலாசாரத்தினூடாக பிணைக்கவும் இலங்கை-இந்திய உறவு நாகரீகத்தின் அடையாளமாக கருதுகின்ற போக்கொன்றை கொண்டிருக்கின்றது. ஆனால் மறுபக்கத்தில் அமெரிக்காவும் சீகனாவும் ஒன்றிணைந்து இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண திட்டமிட்டிருப்பதோடு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சின் இலங்கைக்கான சீன தூதுவர் ஹீ nஷன் ஹொங்-ஐ ஜூன்-13அன்று சந்தித்து உடன்பாடொன்றை எட்டியுள்ளார். இக்கட்டுரையும் இலங்கைத்தீவில் சீன-அமெரிக்க கூட்டையும் இந்தியாவின் போக்கையும் தேடுவதாக அமைய உள்ளது.

உலகளாவிய தளதத்தில் அதிக முரண்பாடுகளை கொண்ட சீனாவும் அமெரிக்காவும் இலங்கையில் கைகோர்த்திருப்பது ஆச்சரியமாக செய்தியாகவே உள்ளது. அரசியல் பொருளாதார இராணுவ மற்றும் புலனாய்வு தளங்களில் இரு தேசங்களும் முரண்பாடு அடைவதும் பரஸ்பரம் எச்சரிக்கைகளை வெளியிடுவதையும் அவதானிக்க முடிகிறது. தென்சீனக்கடல் மற்றும் தைவான் விடயத்தில் பாரிய முறுகல் நிலை இரு தேசங்களுக்கும் காணப்படுகின்றது. வர்த்தகப்போர் இரு நாடுகளுக்குமிடையில் உலகளாவிய போராக மாறிவருகின்றது. ஆனால் இலங்கையில் அமெரிக்க-சீனக்கூட்டு புதிய புரிதலை ஏற்படுத்தி உள்ளது. இது தனித்து தேசங்களின் உறவிலும் அதன் முரண் நிலையிலும் காணப்படும் பாடமாக மட்டுமன்றி அரசறிவியல் பாடப்பரப்புக்கும் அதன் யதார்த்த வாதத்தை உணர்த்தும் செய்முறையாக உள்ளது. இவ்வாறு இரு தூதுவர்களும் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் பொருளாதார நெருக்கடியை தீர்த்துக்கொள்வதில் ஒன்றிணைந்திருப்பது அதிகமான குழப்பங்களையும் சந்தேகங்களையும் விளைவித்துள்ளது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானதாகும்.

முதலாவது, இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி இந்தியாவினது புவிசார் அரசியலோடு பின்னிப்பிணைந்ததாக மாறி உள்ளது. இலங்கைக்கான அனைத்து வகை உதவிகளையும் இந்தியா வழங்க முன்வந்திருப்பதோடு உணவுப்பொருட்களையும் கடன் மற்றும் நன்கொடைகளையும் உதவிகளையும் தனது மத்திய அரசின் கூட்டாட்சி மாநிலத்துக்கு வழங்குவது போல் வழங்கி வருகின்றது. பெற்றோலியத்தை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இந்தியா இலங்கைக்கு விநியோகம் செய்வது என்பது அதன் எல்லைக்குள் இருக்கும் மாநில அரசை குறிப்பதாகவே காணப்படுகிறது. இத்தகைய நிலை வளர்ச்சியடையும் போது, இலங்கை படிப்படியாக இந்தியாவின் செல்வாக்கிற்குள் உட்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு இந்தியா ஆட்சியாளர்களிடம் காணப்படுகிறது. இந்திய நாணயத்தை தனது முதலீட்டு வங்கிகளூடாக இலங்கைக்கு கைமாற்றம் செய்யும் செய்முறை நேரடியாக இந்திய நிர்வாக பரப்புக்குள் இலங்கையை உட்படுத்துகின்ற முயற்சியாகவே தெரிகின்றது. இத்தகைய செய்முறைகள் ஒவ்வொன்றும் இலங்கை தீவு இந்திய மயப்படுத்தலுக்குள் உட்படுத்துவதாகவே காணப்படுகின்றது. இந்திய பொருட்களாலும் இந்திய நாணயத்தினாலும் இலங்கைத்தீவு உள்வாங்கப்படுகின்றதொரு நிலை தவிர்க்க முடியாததாக அமைய வாய்ப்புள்ளதாக காணப்படுகின்றது. இதுவே அமெரிக்க-சீன கூட்டுக்கு எற்பட்ட பிரதான நெருக்கடியாகும்.

இரண்டாவது, அமெரிக்க-சீன கூட்டு இலங்கையை மீட்டெடுப்பதில் தனது பங்கையே முதன்மைப்படுத்தி கொள்பவர்களாக கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைத்தீவை கடன் பொறிக்குள் சீனா சிக்கவைக்கின்றது எனக்குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்கா, சீனாவுடன் கூட்டுச்சேர்ந்து இலங்கையின் அரசியல் பொருளதார நெருக்கடிக்கு தீர்வு காண முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. சீனாவும் அத்தகைய ஒத்துழைப்பை ஏற்றுக்கொண்டிருப்பதுடன் உணவுப்பொருட்களையும், மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகிறது. அவ்வாறே அமெரிக்காவும், 120மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்திருப்பதுடன் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவரை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தொடர்ந்து இலங்கைக்கு உதவி செய்ய அமெரிக்க தயாராக உள்ளதென அறிவித்துள்ளார். இத்தகைய ஒத்துழைப்பானது இந்தியாவின் நகர்வுகளை எதிர்கொண்டு சீனா-அமெரிக்க ஒத்துழைப்பை இலங்கையில் அதிகரிப்பதை முனைகின்றதையே அவதானிக்க முடிகிறது. இத்தகைய அரசியல் ஒத்துழைப்பானது மூலோபாயரீதியில் இருதேசங்களும் இலங்கைத்தீவு இந்தியாவின் முழுமையான கட்டுப்பாட்டில் சென்றுவிடுவதை தடுக்கும் நோக்கில் நிகழ்த்தப்படுவதாகவே தெரிய வருகிறது. அவ்வாறாயின் ஏன் வல்லரசுகளாகிய இரண்டு தேசங்களும் தனித்து இலங்கைக்கு உதவ முடியாது என்ற கேள்வி இயல்பானது.

மூன்றாவது, அத்தகைய கேள்விக்கான விடை பிராந்திய அடிப்படையிலும் பூகோள அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளப்பட வேண்டியது அடிப்படையானதாகும். பூகோள நோக்கில் இந்திய-ரஷ்சிய நட்புறவு பலமானதாக அமைந்திப்பதோடு பாரம்பரியமான நட்பு நாடுகள் என்பதையும் விளங்குவதோடு உக்ரைன் மீதான போரில் இந்தியா ரஷ்சியாவிற்கான ஆதரவினை அதிகம் பிரதிபலிப்பதனையும் காண முடிகின்றது. அதே சூழலுக்குள்ளேயே சீன-ரஷ்சிய நட்புறவு காணப்படுகின்றது. அதாவது, ரஷ்சியா-சீனா-இந்தியா பலமான சக்தியான ஒன்றிணைந்திருப்பதோடு மிக அண்மையில் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறித்தமம மூன்று நாடுகளை கடந்து ஆசிய-ஆபிரிக்க நாடுகளோடு இத்தகைய ஒத்துழைப்பு கட்டியெழுப்பப்பட வேண்டுமென முன்மொழிந்துள்ளார். இத்தகைய சூழலியே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இலங்கை விடயத்தில் சீனாவோடு ஒத்துழைப்பதென்ற முடிவை அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி இந்தியா இந்தோ-பசுபிக் உபாயத்திலும் குவாட் அமைப்பிலும் அங்கத்துவம் பெற்றிருந்தாலும் பிராந்திய ரீதியில் தனது ஆதிக்கத்தை முதன்மைப்படுத்த முனைகிறது. அமெரிக்காவையோ அல்லது சீனாவையோ இலங்கைத்தீவில் மட்டுமன்றி தென்னாசிய பிராந்தியத்திலும் மேலாதிக்கத்தை செயற்படாத விதத்தில் ஓர் ஒத்துழைப்பை இந்தியா விரும்புகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் அத்தகைய புரிதலில் அதீத நெருக்கத்தை கொண்டிருந்தமையை அவதானிக்க முடிகிறது. அதேநேரம் இந்தியா சீனாவுடன் பகைமை கொண்டிருந்தாலும் வர்த்தக மற்றும் பொருளாதார அடிப்படையில் நெருக்கமான புரிதலை ஏற்படுத்தியுள்ளது. இங்கு அரசியலை விட பொருளாதார வர்த்தக உறவு முதன்மையானதாக விளங்குகின்றது. அவ்வாறே இலங்கைத்தீவில் அமெரிக்க-சீனா உறவும், இந்தியாவை எதிர்கொள்வதற்கும், இந்தியாவினால் இலங்கைத்தீவு முழுமையாக கபளீகரம் செய்வதை தடுப்பதற்கும் அவசியமானதாக விளங்குகின்றது. அதுவே அமெரிக்க-சீன ஒத்துழைப்பின் இலங்கை பரிமாணம் ஆகும். இதில் இரட்டை இலாபத்தை அமெரிக்க இராஜதந்திரம் அடைய முயற்சிக்கிறது. ஒன்று, இந்தியாவின் இலங்கைத்தீவின் மீதான செல்வாக்கின் எல்லையை மட்டுப்படுத்துவதனூடாக சீனா-அமெரிக்காவிற்கான கதவினை திறந்து வைத்துள்ளது. இரண்டு, இந்தியாவின் பாரம்பரிய எதிரியான சீனாவுடன் அமெரிக்காவின் கூட்டு சேர்வானது இந்தியாவிற்கான எச்சரிக்கையை வெளிப்படுத்துவதாகும். இவ்இரண்டினையும் அடைவதனூடாக பிராந்திய அரசியலிலும் பூகோள அரசியலிலும் இன்னொரு நெருக்கடியை ஏற்படுத்திவிட முடியுமென கருதுகின்றது.

நான்காவது, அமெரிக்க-சீனா ஒத்துழைப்பானது தற்காலிகமானதாக மாத்திரமே அமையப்போகின்றது என்பது தெளிவாகிறது. ஆனால் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உலகளாவிய ரீதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எவ்வாறு செயற்பட்டதோ அதேபோன்று எதிரி நாட்டுடன் கூட்டுச்சேர்ந்து இலங்கைத்தீவில் தனது நலனை அடைய முயலுவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அமெரிக்க-இலங்கை தொடர்பில் முன்வைத்த மிலேனியம் உடன்பாடு தவறான புரிதலினால் இலங்கைத்தீவு இழந்ததென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய 2000மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை தவறான புரிதலால் இழந்துள்ளதென ஜூலி சுன் குறிப்பிட்டுள்ளார். மேலும் வர்த்தகம் முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி சார்ந்து இலங்கைத்தீவை சீனாவுடன் இணைந்து அரசியல் உறுதிப்பாட்டையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைய அமெரிக்க முயலுகின்றதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாவது, சீன-அமெரிக்க நட்புறவு, இந்தியாவை பலாலி விமான நிலையத்தின் மீள் திறப்பையும் பாண்டிச்சேரியுடனான(காரைக்கால்) கப்பல் போக்குவரத்தையும் துரிதப்படுத்த வழிவகுத்துள்ளது. இவ்வாறு மீளவும் இந்தியா இலங்கையுடனான நட்புறவை பலப்படுத்த முனைகின்ற அதேசந்தர்ப்பத்தில் முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது வடக்கு-கிழக்குடனான ஒத்துழைப்பை அதிகரிக்க முனைவதை காண முடிகின்றது. ஏறக்குறைய இத்தகைய நகர்வு இலங்கை ஆட்சியாளர்களுக்கும் அமெரிக்க-சீனக்கூட்டுடன் பயணிக்க முயலும் தரப்புக்கும் எச்சரிக்கை வழங்குவதாகவே தெரிகின்றது. இதன்மூலம் இந்தியா இலங்கைத்தீவின் மீதான தனது பிடியை இறுக்கமாக வைத்திருப்பதற்கு நிகழக்கூடிய தடைகளை அனைத்தையும் உடைக்க முயலுகிறது.

எனவே, இலங்கை தீவின் அரசியல் பொருளாதார நெருக்கடி சர்வதேச சக்திகளின் விளையாட்டு மைதானமாகவே நகருகின்றது. ஆரம்பத்தில் அமெரிக்க-இந்திய கூட்டு நிலவிய போதும் தற்போது அமெரிக்க-சீனக்கூட்டு பலமடைந்து இருக்கின்றது. இலங்கைத்தீவில் சீன எதிர்ப்புவாதிகளும் அமெரிக்க-இந்திய விசுவாசிகளும் தற்போது தனித்து விடப்பட்டுள்ளார்கள். காரணம் சர்வதேச வல்லரசுகளுக்கிடையில் நிலவும் ஒத்துழைப்புக்களும் ஒத்துழைப்பு மாற்றங்களும் களநிலையை அவ்வப்போது புதிய வடிவத்துக்குள் நகர்த்துகிறது. இதற்கு பின்னால் உலக அரசியல் தெளிவான கருத்தியலை கொண்டிருக்காமையும் வேறுவேறுபட்ட கருத்தியல் இல்லாத சூழலும் அடிப்படை காரணமாகும். அதனால் இலங்கை சர்வதேச நாடுகளுடனான உறவு சார்ந்தும், ஈழத்தமிழர்கள் சர்வதேச நாடுகளுடனான நட்பு சார்ந்தும் நலன்களை முன்னிறுத்தி அனைத்து சக்திகளையும் சமதூரத்தில் கையாண்டு கொள்வதே பொருத்தப்பாடுடைய நகர்வாக விளங்குகின்றது. அதனையே இன்றைய யதார்த்த களம் உணர்த்தி உள்ளது. முரண்பாடும் பகைமையும் நட்பும் அரசியலில் அதிலும் குறிப்பாக சர்வதேச அரசியலில் சமதூரத்தில் கையாளப்பட வேண்டிய அம்சமாக மாறி வருகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

 

(நன்றி: தினக்குரல்)