March 25, 2026
அரசியல் கட்டுரைகள்

சீனாவின் கம்யூனிஸ சித்தாந்தமும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையும்?

இலங்கை சீன உறவு வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. தந்திரேபாய ரீதியில் அதனைவிடவும் வலிமை வாய்ந்தது. பட்டுப்பாதை வியாபார கால பகுதியில் இருந்து இந்து சமுத்திரத்தின் ஊடாக இலங்கையுடன் சீனா நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. தந்திரோபாய ரீதியல் இலங்கையின் பொருளாதார இராணுவ மற்றும் அரசியல் நட்புறவை கொண்டிருக்கும் சீனா வடக்கு கிழக்கு நோக்கி அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருவதனை கண்டுகொள்ள முடிகிறது. சீனாவின் வடக்கு கிழக்கு நோக்கிய முதலீடுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் சீனா தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு சார்ந்து உதவிகளையும் நன்கொடைகளையும் அபிவிருத்தி திட்டத்துக்கான நிதி ஒதுக்கங்களையும் மேற்கொண்டு வருகிறது. 16.03.2026 அன்று இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் தமிழர்கள் சீனாவுக்கு எதிரானவர்கள் அல்ல என்ற கருத்தினை ஊடகங்கள் மத்தியில் பதிவு செய்துள்ளார். இக் கட்டுரையும் அவரது கருத்தின் உண்மை தன்மையை தேட முயலுகின்றது.

சீன தூதுவரின் அறிக்கையானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீனா அதிக முதலீடுகளையும் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் தமிழ் மக்கள் சீனர்களுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பம் திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ் மக்கள் அன்பானவர்கள் விருந்தோம்பல் பண்பு மிக்கவர்கள் என்று குறிப்பிட்டதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு சீனா 1200 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் இந்தியா சீனா இலங்கை என்பன இணைந்து முத்தரப்பு ஒத்துழைப்புத் தளத்தை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடும் போது முதலீட்டாளர்களை ஈர்க்க ஒற்றைச் சாளர முறையை இலங்கை வினைத்திறனாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
இதில் அவர் குறிப்பிடும் ஒற்றைச்சாளர முறைமை என்பது இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் பரிமாற்றம் தொடர்பான அனைத்து ஒழுங்குமுறைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக, வர்த்தகர்கள் மற்றும் வணிகங்கள் தரப்படுத்தப்பட்ட தகவல்களையும் ஆவணங்களையும் ஒரே நுழைவுப் புள்ளி வழியாகச் சமர்ப்பிக்க உதவுகிறது. இது அரசாங்க அதிகாரிகளுடனான தொடர்புகளை எளிமையாக்கி நெறிப்படுத்துகிறது, அதன் மூலம் செயல்திறனை மேம்படுத்துவதோடு, எல்லை தாண்டிய வர்த்தகத்தில் ஏற்படும் செலவுகளையும் தாமதங்களையும் குறைக்கவும் உதவுகிறது என்பதாகும்.

இவ்வாறு சீனத் தூதர் வடக்கு கிழக்கு பொறுத்து முன்வைத்திருக்கும் உரையாடலானது அதிக விவாதங்களை ஏற்படுத்தக் கூடியது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது சீனா தென்னிலங்கை ஆட்சியோடு மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றது. ஜே.வி.பி. கட்சியானது சீன சார்பு கம்யூனிசக் கட்சியாகவே தம்மை முதன்மைப்படுத்திக் கொள்வதில் கவனம் கொள்கிறது. போர்க் காலத்திலும் போருக்கு பின்னரும் வடகிழக்கை பொருளாதார அபிவிருத்தியோடும் முதலீட்டுத் திட்டங்களுடனும் சுற்றுலா விருத்தியுடனும் முனைப்புகாட்டிவருகிறது. சீனா பாரிய முதலீட்டு திட்டங்களை வடக்கு கிழக்கு நோக்கி முன்வைத்து வருகிறது. பொருளாதார ரீதியில் இது ஒரு ஆரோக்கியமான செயல்பாடாகவே தெரிகின்றது. வீட்டு திட்டங்கள் உலருணவு திட்டங்கள் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் போன்ற பல அன்றாடத் தேவைக்கான திட்டங்களை முன்வைத்து வருகிறது. அதாவது பொருளாதார செழிப்பினால் அல்லது உதவித்திட்டங்களால் தமிழ் மக்களது இனப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமென சீனா கருதுகிறது.

இரண்டாவது வடகிழக்கு தமிழ் மக்கள் எந்த நாட்டுக்கும் எதிரானவர்கள் அல்ல என்பதை தமிழ் மக்கள் பல தடவை வெளிப்படுத்தியுள்ளனர். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளோடும் நட்பு பாராட்டுவதும் ஒத்துழைப்பும் அவசியமானது என கருதுபவர்கள். தமிழ் மக்கள் சீன தூதுவர் குறிப்பிடுவது போல்; சீனாவுக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் எதிரான மனோநிலையோடு செயல்படுபவர்கள் அல்ல. மாறாக அரசியல் ரீதியில் தமது அதிகாரத்தை சுயநிர்ணயத்தின் பால்பட்டு அடைவதற்கான எண்ணத்தோடு செயல்படுபவர்கள். அதற்கான கொள்கைகளையும் எண்ணங்களையும் வெளிப்படையாக முன்வைக்கின்றவர்கள். தமிழ் மக்கள் தமக்கான உரிமையை கோருவதற்கும் அதற்காக போராடுவதற்கும் உரித்துடையவர்கள். அவர்களது கோரிகை தேசிய இனம் என்ற அடிப்படையில் எழுந்ததேயாகும். அதற்கு ஆதரவு தரும் எந்தத் தரப்புடனும் நட்பும் உறவும் கொள்ள தயாராக உள்ளவர்கள்.

மூன்றாவது சீனா ஒரு கம்யூனிச நாடு என்ற அடிப்படையில் அந்த நாட்டின் ஆட்சியையும் அதிகாரத்தையும் நோக்குபவர்கள் தமிழர்கள். சீனா ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடு சேர்ந்து பயணிக்கும் என்ற எதிர்பார்க்கையைக் கொண்டவர்கள் தமிழர்கள். ஆரம்ப காலத்தில் இருந்து சீனா கம்யூனிஸப் புரட்சியை வென்றதற்கான அடிப்படைகளை நன்கு விளங்கிக் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்துவகை ஒடுக்கு முறையையும் சீனா சித்தாந்த அடிப்படையில் எதிர்க்கும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ஆனால் போரிலும் போருக்கு பின்னரும் சீனாவின் அணுகுமுறை தமிழ் மக்களை ஒடுக்கும் ஆட்சியாளர்களோடு பலமான உறவையும் ஒத்துழைப்பையும் கொண்டிருந்தமை தமிழ் மக்களின் அதிருப்தியாக அமைந்தது. நாட்டுக்குள் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் தென்னிலங்கை ஆட்சியாளருக்கு ஆதரவாக அல்லது ஒடுக்குமுறை சக்திகளுக்கு ஆதரவாக சீனா செயல்படுவது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. சீனா ஒருபோதும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தவில்லை. ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான செயல்பாடுகளை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. ஒரு கம்யூனிச நாடு மாவோ-சே-துங் இன் புரட்சிக்கூடாக கட்டமைக்கப்பட்ட தேசம் ஒன்றின் அணுகுமுறை எப்போதுமே தமிழருக்கு எதிரானதாக அமைந்திருக்கின்றது. நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒடுக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதன் ஊடாக தமிழ் மக்களுக்கு எதிராக சீனா செயல்படுவது என்பது சீனா மீதான தமிழ் மக்களின் மனோநிலையாக உள்ளது. இது சீனாவுடன் மட்டும் கிடையாது. ஒடுக்குமுறையாளர்களுடன் இசைந்து பயணிக்கின்ற அனைத்து நாடுகளோடும் தமிழர்கள் கொண்டிருக்கின்ற அதிருப்திக்கான அடிப்படை காரணமாகும். அதற்காக தமிழ் மக்கள் உலகில் உள்ள எல்லா நாடுகள் மீதும் விரோதத்தையும் பகைமையையும் கொண்டவர்கள் அல்ல. தமிழ் மக்கள் நாடுகளையும் தேசங்களையும் அந்த தேசங்களின் தேசிய இருப்புக்களையும் அங்கீகரித்துக் கொண்டு வடக்கு கிழக்கின் தமிழ் மக்களின் இருப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு முனைகின்றனர்.

நான்காவது தமிழ் மக்கள் சீனாவோடு அதிகமான சித்தாந்த அடிப்படையிலான உறவைக் கொண்டிருக்கிறார்களே அன்றி புவிசார் அரசியல் ரீதியில் சீனாவுடன் நட்பை விட இந்தியாவுடன் உறவு பலமானதாகவே கொண்டுள்ளனர். ஆனால் அத்தகைய உறவு புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை கடந்து ஒடுக்குமுறையாளர்களோடு கொண்டிருக்கின்ற உறவே அதிக குழப்பகரமானதாக காணப்படுகிறது. தென்னிலங்கை ஆட்சியோடு இந்தியா வைத்திருக்கின்ற நெருக்கமான உறவு என்பது தமிழ் மக்களின் இருப்புக்கு விரோதமானதாகவே காணப்படுகிறது. அதுவே தமிழ் மக்களின் இந்தியா பொறுத்த அதிருப்தியாகும். ஒரு இனத்தின் இருப்பை அங்கீகரிக்க வேண்டிய புவிசார் அரசியல் நாடும் கம்யூனிச சித்தாந்தத்தைக் கொண்டிருக்கின்ற நாடும் நிராகரிக்கின்ற போது அந்நாடுகள் மீது தமிழ் மக்கள் அதிருப்தி கொள்வது ஒன்றும் நியாயமற்றதாக தெரியவில்லை. மாறாக இந்த நாடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய நலன்கள் மோதுகின்ற போது அதன் விளைவுகளையும் அந்த நாடுகளின்; ஆட்சியாளர்களே எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையின் இந்தியா தொடர்பான கொள்கையும் சீன தொடர்பான கொள்கையும் சம தூரத்தில் நகர்ந்தாலும் எப்போதும் அவை முரண்பட்ட வடிவங்களாகவே காணப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் இருப்பு பலவீனப்படுமாக இருந்தால் அதன் விளைவுகளையும் அந்த நாடுகளும் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வகை நெருக்கடிக்குள்ளேயே இந்தியாவினுடைய போக்கும் சீனாவின் அணுகுமுறையும் காணப்படுகிறது.

ஐந்தாவது சீனா வடகிழக்கு நோக்கி நகர்வது என்பது இந்தியா பொறுத்த அரசியல் கொள்கையா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் உண்டு. சீனாவும் இந்தியாவும் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்க முயன்றாலும் நடைமுறையில் அதன் பிரயோகம் நெருக்கடி மிக்க ஒன்றாகவே மாறுவதற்கான வாய்ப்பை கொண்டிருக்கின்றது. அதற்கான அடிப்படை காரணம் இந்தியாவுக்கும் இலங்கை தீவுக்கும் இடையிலான புவிசார் அரசியலாகும். வடக்கு கிழக்கு பகுதியை அதிக நெருக்கத்தைக் கொண்டிருக்க முனைவது கடல் மற்றும் தரைப் பாதுகாப்பு சார்ந்த முக்கியத்துவமாகும். பாக்குநீரிணையை மையப்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை கையாளுவதில் அதிக அரசியல் நோக்கம் காணப்படுவதாகவே தெரிகின்றது. இத்தகைய அரசியல் நோக்கம் இந்தியாவின் நலன்களுக்கு விரோதமானதாக மாறுகின்ற போது அதன் விளைவுகளை இந்திய எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே சீன தூதுவர் குறிப்பிடுவது போல் வட கிழக்கு தமிழ் மக்கள் ஒரு போதும் சீனாவுக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள எந்த நாட்டுக்கும் எதிரானவர்கள் அல்ல. மாறாக தமிழ் மக்களின் அரசியல் உரிமையை அடைவதற்கான வழிமுறையாக நாடுகளை நோக்குகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் இருப்பை அங்கீகரிக்காதவர் மீதே எதிர்ப்புணர்வுகளையும் நிராகரிப்பையும் கொண்டுள்ளனர். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பொருளாதார அடிப்படையில் தமிழ் மக்களுக்கு வழங்குகின்ற உதவிகளும் நன்கொடைகளும் அன்பளிப்புகளும் அரசியல் ரீதியான அதிகாரமற்ற சூழலில் நிரந்தரமானவையாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளனர். எல்லா வகையான அபிவிருத்திக்கு பின்னாலும் அரசியல் அதிகாரம் அடிப்படையானது. அரசியல் அதிகாரத்தை உத்தரவாதப்படுத்துகின்ற போதே நிலையான பொருளாதார அபிவிருத்தியை சாத்தியப்படுத்த முடியும் என்பது கடந்த காலம் முழுவதும் தமிழ் மக்கள் அனுபவித்துள்ளனர். சீனா அல்லது இந்தியா எத்தகைய உதவிகளை வடக்கு கிழக்குக்கு வழங்கிய போதும் அவை எதுவும் தமிழ் மக்களின் இருப்பில் மாற்றங்களை உருவாக்கவில்லை.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)