April 15, 2026
அரசியல் கட்டுரைகள்

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலிய போர் முடிவுக்கு வருகிறதா?

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேலிய போர் முடிவுக்கு வரும் நிலையை அடைந்துள்ளதாகவே தெரிகிறது. ஆனாலும் ஈரானியர்கள் மத்தியில் அமெரிக்காவின் சமாதான முயற்சிகளை சந்தேகத்தோடு நோக்குகின்ற நிலை காணப்படுகிறது. அமெரிக்க தரப்பின் சமாதான முயற்சியானது ஈரான் மீதான அடுத்த கட்ட போருக்கான தற்காலிகமான இடைவெளி அமையலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. போரில் அமெரிக்காவின் இலக்கு அடையபட்டுவிட்டது என்றும் அமெரிக்காவின் தாக்குதலை ஈரான் போராக மாற்றி இருக்கிறது என்றும் அதனால் இப்போருக்கு ஒரு தற்காலிக ஓய்வு தேவைப்படுகிறது என்றும் விவாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் முன்வைக்கும் நிபந்தனைகள் மறுப்பட்டதாக இருந்தாலும் அமெரிக்காவை விட ஈரான் போரில் முன் வைத்திருக்கும் நிபந்தனை அதீதமானதாகவே உள்ளது. அத்தகைய நிபந்தனைகள் சாத்தியமானவையா என்ற கேள்வியும் உண்டு. இக்கட்டுரையும் மேற்காசியாவில் நிகழ்ந்து வரும் போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளைப் பற்றி தேடுவதாக உள்ளது.

முதலாவது வெளிப்படையான அர்த்தத்தில் அமெரிக்காவின் இலக்கு ஈரான் மீதான தாக்குதலின் போது சாத்தியமாகியுள்ளது. அதனை இஸ்ரேலும் விரும்பியது ஈரானின் உயர்மட்ட மத தலைவர் மட்டுமின்றி இராணுவ தளபதிகளும் போருக்கு தலைமை தாங்குகின்ற முக்கிய தரப்பினரும் கொல்லப்பட்டதோடு தாக்குதலின் இலக்கு நிறைவு பெற்றிருந்தது. அத்தகைய தாக்குதலில் விளைவுகள் அடுத்து வரும் ஒன்றுக்கு மேற்பட்ட தசாப்தங்களுக்கு ஈரானை பின்னுக்குத் தள்ளுவதில் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு வெற்றி கண்டுவிட்டது. இது மேற்குலக நாடுகளின் பிரதான இலக்கு அடையப்பட்டதாகவே உணரப்படுகிறது.

இரண்டாவது அமெரிக்க இஸ்ரேலிய தாக்குதலானது ஈரானின் முக்கிய இராணுவ இலக்குகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்டது என மேற்குலகத் தரப்பு குறிப்பிடுகிறது. இது ஈரானின் இராணுவ ரீதியான இருப்பை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. ஈரானின் இராணுவ தளங்கள் ஆயுத உற்பத்தி செய்யும் மையங்கள் போன்றவற்றை அழித்துள்ளதாக அமெரிக்கா தரப்பு கூறுகின்றது. ஆனால் ஈரானில் வாதம் அத்தகைய இலக்குகளை எட்ட முடியாத நிலைக்குள் இருப்பதாகவும் போலியான தளங்களை இலக்கு வைத்து அமெரிக்க தரப்பு தாக்கியதாகவும் கூறுகின்றது. ஆனாலும் ஈரான் மண்ணில் அமெரிக்கத் தரப்பின் தாக்குதல் பாரிய அளவில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. அது பெரும் அளவுக்கு ஈரானின் இராணுவ ரீதியான பலத்தை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது.

மூன்றாவது ஈரானின் இராணுவ ரீதியான இலக்குகளில் மிகப் பிரதானமான அணுவாயுத தளங்களை நோக்கி அமெரிக்கா இஸ்ரேலிய கூட்டு பாரிய தாக்குதலை நிகழ்த்தியதாக கூறுகின்றது. நீண்ட காலமாக மேற்காசியாவில் அணு ஆயுத உற்பத்தி நிகழ்ந்துவிடக் கூடாது என மேற்குலகத்தின் நீண்ட திட்டமிடல் மீண்டும் ஒரு தடைவ மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத நிலையங்கள் மீதான தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது என அமெரிக்க தரப்பு கூறுகிறது. ஈரான் அதனை மறுத்தாலும் அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உண்டு என்று இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இத்தகைய தாக்குதல் ஈரானின் நீண்ட கால அணு ஆயுத இலக்கை பலவீனப்படுத்தியது என்றே புரிந்து கொள்ளப்படுகிறது.

நான்காவது அமெரிக்க இஸ்ரேலியம் கூட்டின் தாக்குதல் மேற்கு ஆசியா நாடுகள் மீதான அல்லது இஸ்லாமிய நாகரிகத்தின் மீதான தாக்குதலாக அளவீடு செய்யப்படுகின்றது. அதனால் மேற்காசியா பாரியளவில் சிதைந்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் தாக்கப்பட்டது போல் அமெரிக்க மண்ணில் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக இஸ்ரேலும்-ஈரானும்; பாரிய அளவில் அழிவுகளை சந்தித்திருக்கின்றன. இது ஒரு வகையில் இஸ்லாமிய நாகரீகத்தின் மீதான தாக்குதலாகவே கருதப்பட வேண்டும். ஈரான் மீதான தாக்குதல் இஸ்லாமிய நாகரீகத்தை மட்டுமின்றி அதன் பொருளாதாரத்தை பாரிய சிதைவுக்குள் உட்படுத்தியிருக்கின்றது. இதனை ஈரான் வென்றெடுவதற்கு அடுத்து வரும் தசாப்தங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேரடியான விளைவை அமெரிக்காவோ மேற்குலக நாடுகளோ அதிக பாதிப்பபை எதிர்கொள்ளவில்லை.

ஐந்தாவது இப் போரில் ஈரான் அமெரிக்கத் தளங்கள் மீது நிகழ்த்திய தாக்குதல் அராபிய நாடுகள் மீதும் அவற்றின் சொத்துக்கள் மீதும் பொருளாதார இருப்புகள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே காணப்படுகிறது. ஒரு வகையில் கூறுவதானால் அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் நிகழ்த்த வேண்டிய தாக்குதல்களையும் அழிப்புகளையும் ஈரானே நிகழ்த்தி இருக்கின்றது. அமெரிக்கத் தளங்கள் மீதான தாக்குதல் அராபிய நாடுகளில் இருப்பின் மீதான தாக்குதலாகவே விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். அதாவது இஸ்லாமிய நாகரீகத்தின் மீது இஸ்லாமிய நாகரீகமே தாக்கி அழிக்கும் பணியை வெற்றிகரமாக மேற்குலகம் நிகழ்த்தியிருக்கின்றது. நேட்டோ போரில் ஈடுபடாமல் இருந்ததும் அமெரிக்கா நெருக்கடிகளை எதிர் கொண்டிருந்ததும் ஒரு வகையில் போரின் நேரடி விளைவுகளை மேற்கு ஐரோப்பா எதிர்கொள்வதை தவிர்ப்பதற்கானதாகவே தெரிகிறது. இது முழுமையாகவே இஸ்லாமிய நாகரிகத்தின் மீதான தாக்குதலாக விளங்குகிறது.

ஆறாவது போரின் விளைவுகளை மதிப்பிடுகிற போது அமெரிக்காவின் மண்ணில் நிகழாத போராக விளங்குவதோடு முழுமையான பாதிப்பை மேற்காசிய பிராந்தியம் அடைந்திருக்கின்றது. ஆனால் ஈரான் தனது இராணுவத் திறனை மேற்காசியாவில் வெளிப்படுத்தியதோடு பிராந்திய வல்லரசுக்கான சமநிலையை மேல்நிலைப்படுத்துவதில் ஈரான் வெற்றிகரமான பக்கத்தை தோற்றுவித்திருக்கின்றது. அதற்காக இப்போரில் ஈரான் முழுமையான வெற்றி அடைந்திருக்கிறதா என்பதற்கு பதில் கடினமானது. இஸ்ரேலின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. யூதர்கள் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்ற நெருக்கடி என்பது பொருளாதார ரீதியானது மட்டுமல்ல இராணுவ, புலனாய்வு மற்றும் உளவியல் ரீதியானதாக பார்க்கப்பட வேண்டும். ஆனால் யூதர்கள் மிக வேகமாக மீண்டெழக் கூடியவர்கள். அதற்கான ஒத்துழைப்பை மேற்குலகம் யூதர்களுக்கு வழங்க தயாராக உள்ளது. ஆனால் ஈரானைப் பொறுத்தவரை மீண்டெழுவதற்கு பல தசாப்தங்கள் தேவைப்படுகின்ற ஒன்றாக தெரிகிறது.

ஏழாவது இப்போரின் பார்வையாளராக நேரடியான பங்கெடுப்பு நிகழ்த்தாத நாடுகளாக மேற்கைரோப்பா, சீன, இந்திய மற்றும் ரஷ;சியா ஆகிய நாடுகளும் காணப்படுகின்றன. இந்நாடுகள் பெருமளவுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிகின்றன. காரணம் இப்போரின் எல்லையை இருதரப்பும் அடைந்திருப்பதோடு இப்போரின் விளைவுகள் ஒப்பிடுகின்ற விதத்தில் இந்தியா, சீனா, ரஷ;சியா போன்ற நாடுகளுக்கு எந்த தாக்கமும் ஏற்படவில்லை. ஹமோஸ் நீரிணை மீதான ஈரானின் நிபந்தனை மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடிக்கு தள்ளி இருக்கின்றது. பெற்றோலியம் மற்றும் எரிவாயு தொடர்பில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் அதிக பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. இதிலிருந்து மீள்வதற்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சமாதானம் அவசியமானதாக இருக்கின்றது. அமெரிக்கா மீதான இராணுவ இழப்புக்கள் அல்லது ஈரானின் பதில் தாக்குதல்கள் ரஷ;சியா, சீனா போன்ற நாடுகளில் அணுகுமுறைகள் இப்போரை முடிவுக்கு கொண்டு வர முயலுகின்றன. அதற்கான அடிப்படை காரணம் இப்போர் சர்வதேச அரசியலாக உள்ள போக்கு உலகளாவிய அரசியலாக பரிமாணம் எடுத்துவிடக் கூடாது என்பதில் அனைத்து தரப்புக்களும் முகாமை செய்ய முயற்சிக்கின்றனர். அத்தகைய முகாமையின் விளைவுதான் போர் நிறுத்தம் அல்லது சமாதானத்துக்கான வழிமுறையாக காணப்படுகிறது.

எனவே ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர்-சமாதானத்தை நோக்கி நகர்கின்றது. போரின் இலக்குகள் இரு தரப்பினாலும் அடையப்படுவது நிகழ்ந்துள்ளது. போரில் ஏற்பட்ட இழப்புக்கள் உலகளாவிய அரசியல் மீதான நெருக்கடியின் தொடக்க நிலைகள் என்பன இப்போரை முடிவுக்கு கொண்டு வர வழி வகுத்துள்ளது. ஆனால் இதன் விளைவுகள் அனைத்தும் இஸ்லாமிய உலகத்தை மீண்டும் நிபந்தனையற்ற அழிப்புக்களினால் பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கிறது. ஐரோப்பா போரின் நேரடி விளைவுகளை அமெரிக்கா போன்று எதிர் கொள்ளாத நிலையில் ஈரானும் இஸ்ரேலும் பாரிய சிதைவுகளை அடைந்திருக்கின்றன.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)