April 20, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தீவின் சமகால அரசியலும் ஆச்சரியமளிக்கும் இந்தியப் புலனாய்வுத்துறையின் தகவல்களும்!

இலங்கையின் அரசியலில் இந்தியாவின் தனித்துவமான தலையீடு என்பது தவிர்க்க முடியாதது. அதனை புரிந்து கொள்ள பல நகர்வுகளை இந்ரதியா இலங்கை மீது ஏற்படு:த்தியுள்ளது. அதனையே புவிசார் அரசியல் என்ற கோட்பாட்டுக்கூடாக விளங்கிக் கொள்ளுதல் அவசியமானதாகும். அவ்வகை புரிதலை இலங்கைத் தீவுக்கும் குறிப்பாக ஈழத்தமிழருக்கு மீள ஒருதடவை இந்தியா உணர்த்த முன்வந்துள்ளது. இந்திய தேசிய நலனுக்குட்பட்டே பிராந்திய அரசுகள் நகர வேண்டும் என்பதில் கவனம் கொண்டுள்ள இந்தியா இலங்கை தீவை நீண்டகாலமாக செல்வாக்குச் செலுத்திவருகிறது. கடந்த சில ஆண்டுகள் சீனாவின் பிரசன்னத்தால் அதிருப்தி அடைந்துள்ள இந்தியா அதனை மீளமைப்பதிஜல் அதிக முனைப்புக் காட்டிவருகிறது. இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டுள்ள இந்தியா அதனைப் பயன்படுத்திக் கொண்டு சீனாவை கடந்து அதிக ஈடுபாட்டை கொண்டுவர முனைகிறது. இக்கட்டுரையும் இந்தியப் புலனாய்வுத் துறையின் த இந்துப் பத்திரிகையூடாக வெளிப்படுத்திய விடுதலைப் புலிகள் தொடர்பான செய்தியைப் பற்றிய தேடலை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படுகிறது.

முதலாவது இந்தியப் புலனாய்வுத் துறையின் புலனாய்வுத் தகவலை அடிப்படையாகக் கொண்டு த இந்துப் பத்திரிகை மே 14 2022 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் ‘இலங்கை ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (டுவுவுநு) முன்னாள் போராளிகள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு மீண்டும் இலங்கையில் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.’ வெளிப்படுத்தியுள்ளது. அதற்கான ஆதாரங்களை அதிகம் முதன்மைப்படுத்திய செய்தியானது புலிகளை மீளமைக்க முன்னாள் புலிகளின் புலனாய்வாளர் சபேசன் என்ற சற்குணம் என்பவரையும் செயலற்ற வங்கிக் கணக்குகளிலுள்ள பெருந்தொகைப் பணத்தை மோசடியான முறையில் எடுக்க மும்பை செல்லவிருந்த பெண்ணொருவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ததையும் ஆதராப்படுத்தியுள்ளது. இதனால் தமிழகக் கடலோர காவல் பணியை தீவிரப்படுத்தியதுடன் கடலைநோக்கிய வீதிகளை அனைத்திலும் சோதனைகளை காவல்துறையினர் துரிதப்படுத்தியுள்ளதையும் செய்தி விபரிக்கின்றது.

இரண்டாவது இலங்கையின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்ஹாவை பிரதமராக்கியதன் பின்னணியில் இந்தியா உள்ளது எனப்பலரும் கூறுகின்றார்கள் நாங்கள் அவ்வாறு எதுவும் மேற்கொள்ளவில்லை என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த இரண்டு விடயங்களையும் அடிப்படையாகக் கொண்டு பிராந்திய அரசான இந்தியாவின் அணுகுமுறைகள் எவ்வாறுள்ளது என்பதை புரிந்து கொள்வது அவசியமானது.

ஒன்று, இலங்கையின் தற்போதைய பிரதம் ரணில் விக்கிரமசிங்ஹாவை இந்தியா கொண்டுவரவில்லை என்பதை தெளிவாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார். மறுபக்கத்தில் அமெரிக்கத் தூதுவருக்கு அடுத்த நிலையில் இந்தியத் தூதுவரே அலரிமாளிகைக்கு சென்று பிதமர் ரணில் விக்கிரமசிங்ஹாவுக்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்ததுடன் இந்தியா அதிக ஒத்துழைப்பினை இலங்கையுடன் கொண்டிருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் இது ஒரு நாட்டின் தூதுவரது சம்பிருதாயபூர்வமான செய்முறையாகவே பார்க்கப்பட வேண்டும். இது ஒன்றும் கட்சி அரசியல் கிடையாது. இந்தியாவின் நலனுக்கானவரே இந்தியத் துர்துவர் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். அவர் எந்தத் தலைவருடனும் செயல்பட வேண்டியவர். ஆனால் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவருக்கு தெரிவித்ததே இந்தியாவின் நிலைபாடாக இருக்க அதிகமான வாய்ப்புக்கள் உண்டு. அது மட்டுமன்றி அச்செய்தி முதலில் வெளியான பத்திரிகையும் அப்பத்திரிகை ஆசிரியருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் பேச்சாளருக்குமான நெரு;ககத்தை வைத்துக் கொண்டு உறுதழிப்படுத்த முடியும். அதே நேரம் அச்செய்தி தொடர்பில் இந்தியத் தூதரகம் என்றுமே மறுப்பு அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்பதையும் கொண்டு அச் செய்தியை முழுமையாக உறுதிப்படுத்த முடிகிறது.

இரண்டு, மேற்குறித்த தகவலுடனேயே விடுதலைப் புலிகளது மீள்எழுச்சி பற்றிய செய்தியை இணைத்துப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதாவது ரணில் விக்கிரமசிங்ஹாவை பதவியில் அமர்த்த இந்தியா எதுவும் மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்ததோடு செயல்படுத்த முடியாதததொன்றான விடுதலைப் புலிகள் பற்றிய செய்தியும் ஒன்றாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதனை 2019 இல் இந்தியப் புலனாய்வுத் துறையால் வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையும் அதற்கு பின்னாலுள்ள காரணங்களையும் ஆதாரமாகக் கொண்டு அச் செய்தி அதிக விளக்கத்தைத் தரக்கூடியதாக அமையும். பேராயர் மல்கம்ரஞ்சித் தெரிவிப்பது போல் உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் ஆட்சியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. அதனையும் இந்தியப் புலனாய்வுத் துறையே இலங்கைக்கு முன்கூட்டியே தெரிவித்தது. அப்படியாயின் நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடித்து புதிய ஆட்சியைக் கொண்டுவருவதில் இந்தியா அதிக முனைப்புக் காட்டியுள்ளது என்பது தெளிவாகிறது. அவ்வாறே தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வெதமுல்ல அரசியலை இந்தியா மீண்டும் கொண்டுவர முயலுகிறதா என்ற கேள்வி நியாயமானதாகவே உள்ளது. இதற்கு வலுவான காரணங்கள் உண்டு. அதாவது விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பிற்பாடு எந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் ஒரு துப்பாக்கி ரவையையேனும் துப்பாக்கி முனையிலிருந்து தாக்குவதற்காக பிறப்பெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். அது மட்டுமல்ல இந்தியாவின் நலனுக்காக தோற்றுவிக்கப்பட்டு இந்திய நலனுக்காக முடிபுக்கு கொண்டுவரப்பட்ட ஆயுதப் போராட்டத்தை மீளவும் ஏற்படுத்தும் உணர்வோடும் எண்ணத்தோடும் புத்திபூர்வமான ஈழத்தமிழனும் முன்வரமாட்டான் என்பது நன்கு தெரிந்தவிடயமே. அப்படியாயின் இந்தியாவினதோ அல்லது வேறு நாடுகளினதோ கூலிப்படைகளை நிறுத்தி ஆயுதப் போராட்டத்தை ஈழத்தமிழரின் பெயரால் மேற்கொள்ள முடியுமே அன்றி வேறு எந்த அடிப்படையிலும் அதற்கான வாய்ப்போ திட்டமிடலோ ஈழத்தமிழனிடம் இல்லை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். சஹரான் குழுவனரது தாக்குதல் போன்று இலங்கை-இந்திய கூட்டுத் தயாரிப்பென்றை பொய்யாக உருவாக்கலாமே அன்றி அசலான தோற்றத்திற்கான வாய்ப்பு ஏற்படுவதற்கான சூழல் இல்லை என்றே தெரிகிறது.

மூன்று, இவ்வகையான புலனாய்வுத் தகவலூடாக மீண்டும் ஒரு இலங்கைத் தீவுக்கான தேசியத்தை கட்டமைப்பதைவிட சிங்களத் தேசியத்தை தூண்டலாம் எனவும் அதற்கூடாக மீளவும் வெதமுல்ல ஆட்சியைக் கொண்டுவர முடியுமெனவும் திட்டமிடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும் இனவாதத்தை தூண்டியதன் மூலமே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளதைக் காணமுடிகிறது. அத்தகைய நடவடிக்கைக்கு த இந்து பத்திரிகையின் செய்தி வழியமைக்கும் என எதிர்பார்க்ப்பட்டது போன்றே தெரிகிறது. இது புலனாய்வுத் துறைகளின் பணிகளையும் அவற்றின் உண்மையான நோக்கங்களையும் பலவீனப்படுத்துவதாகவே தெரிகிறது. இலங்கைக்கான முன்னாள் தூதுவர் டிக்சித் இலங்கையின் வடக்கு கிழக்கு மீது 1987 இல் படையிறக்கும் போது புலனாய்வுத் துறையின் தவறான தகவலாலேயே இந்திய இராணுவம் அதிக நெருக்கடியை எதிர்கொள்ளவாக அப்போது தெரிவித்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கதாகும். இவ்வாறு இந்திய அதிகார வர்க்கமும் புலனாய்வுத் துறையும் இலங்கைத் தீவை கையாளும் விதத்தை புரிந்து கொள்ளுதல் அவசியமானது. எது எவ்வாறானதாக அமைந்தாலும் புலனாய்வுத் துறைக்கு மட்டுமல்ல ஊடகத் துறைக்கும் இவ்வகைச் செய்திகளை வெளிப்படுத்தும் போது பொறுப்புடைமை இருத்தல் வேண்டும். இன்னோர் வகையில் குறிப்பிடுவதானால் அதிகார வர்க்கம் புலனாய்வுத் துறை மற்றும் ஊடகத் துறை அனைத்துமே ஒன்றிணைந்து உண்மைக்கு புறம்பான தகவலை நியாயப்படுத்த முயலுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நான்கு, இந்தியா வெளிப்படுத்திய செய்தியானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது. அதாவது ஈழத்தமிழரது ஒன்றிணைவையும் திரட்சியையும் தடுக்கும் விதத்தில் அத்தகவல் அமைந்துள்ளதாகவே தெரிகிறது. முள்ளிவாய்க்கால் தினத்தில் அத்தாக்குதலை முன்னாள் விடுதலைப் புலிகள் நிகழ்த்தலாம் என்ற எச்சரிக்கை தமிழ் மக்களின் தேசிய ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்துவதற்கான நகர்வாகவும் விளங்கிக் கொள்ள முடியும். ஆனாலும் தமிழ் மக்கள் தமது துயரத்தை தமது பிரதேசத்தில் ஒன்று கூடி நினைவு கொண்டார்கள் என்பது மறுக்க முடியாத செய்தியாகவே தெரிகிறது. சஹரான் தாக்குதல் போன்று ஒரு தாக்குதல் நிகழலாம் என்ற உரையாடல் தமிழ் மக்களிடம் காணப்பட்டது. ஆனால் இலங்கை இராணுவத்தின் அறிவிப்பே அத்தகைய இந்திய புலனாய்வுச் செய்தியின் பலவீனத்தை அதிகம் உணர்தியது. தாக்கதலுக்கான வாய்ப்பு இல்லை என்பதை இலங்கை இராணுவம் தெளிவாக தனது புலனாய்வுத் தகவலைக் கொண்டு வெளிப்படுத்தியிருந்தது.

எனவே இந்தியாவின் புலனாய்வுத் துறையும் அதன் அதிகார மற்றும் ஊடகத்துறையும் இந்தியத் தேசிய நலனுக்குள் பயணிப்பது அடிப்படையானதே. அதுவே வல்லரசு நாடுகளது அத்தகைய துறைகளின் பணியுமாகும். அவை அனைத்தும் அந்தந்த நாடுகளின் தேசிய நலன்சார்ந்த விடயமாகும். ரணில் விக்கிரமசிங்ஹாவை இந்தியா பிரதமராக்கவில்லை என்றால் அமெரிக்காவும் மேற்கும் அவரை பிரதமராக்கியுள்ளது என்பதே அர்த்தமாகும். அதனையே இலங்கைக்கான அமெரிக்க தூதுவரது வாழ்த்தும் அலரிமாளிகை விஜயமும் உணர்த்தியது. இது பிராந்திய சர்வதேச வல்லரசு நாடுகளின் அரசியலின் நியமமாகவே உள்ளது. என்னும் அதிகமாக இலங்கைத் தீவு உலக நாடுகளின் அரசிலின்; களமாகவே மாறவுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)