இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரதிசநாயக்க யாழ்ப்பாணத்துக்கு தைப்பொங்கலை முன்னிட்டு மேற்கொண்ட விஜயம் இலங்கை அரசியலில் அதிகம் முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுகிறது. ஜனாதிபதி தனது விஜயத்தை தீவகம், தென்மராச்சி, வலிகாமம் ஆகிய இடங்களுக்கு மேற்கொண்டதுடன் பொங்கல் விழாக்களையும் முக்கியத்துவம் வாய்ந்த உரைகளையும் ஆற்றியிருந்தார். ஜனாதிபதியின் உரைகள் தமிழ் மக்களுக்கு சலுகைகளை அறிவித்ததுடன் இனவாதமற்ற நாட்டுக்கான விதப்புரைகளையும் மீள ஒரு தடவை யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி முன்வைத்திருந்தார். இக்கட்டுரை ஜனாதிபதியின் விஜயத்தின் பிரதான நோக்கத்தை தேடுவதாக முன்மொழியப்படுகிறது.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரைகள் முழுவதிலும் இனவாத எண்ணங்களை முற்றாகவே முடிவுக்கு கொண்டு வரும் அரசாங்கம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பெருமைபடுத்திக் கொண்டார். இலங்கை தீவின் இனவாதம் பற்றிய உரையாடல் என்பதும் இத்தகைய உரைகளோடு முடிபுக்குவருவது வழமையானதாக தெரிகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் உண்மை தன்மைகளையும் கடந்த காலங்களிலும் வேறுபட்ட ஆட்சியாளர்களிடம் தமிழ் மக்கள் கண்டிருந்தனர். அது மட்டுமின்றி ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின் போதும் ஜனாதிபதி அநுர ஆற்றிய உரைகளின் அனுபவங்களையும் ஈழத்தமிழர்கள் கண்டிருக்கின்றனர். அத்தகைய அனுபவத்தை மீட்பது மட்டுமின்றி இதன் விளைவுகளின் அடையாளம் காண்பதும் அவசியமானது.
ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் முக்கியத்துவம் தூரநோக்கு கொண்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமரும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்கள் சார்ந்து பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தமிழர்களுக்கு சார்பாக உரையாடுவது வழமையான விடயமாக அமைந்துள்ளது. இது தந்திரோபாய ரீதியில் நிகழ்த்தப்படும் விஜயங்களாகும். தொடர்ச்சியாக அரசாங்கப் பிரதிநிதிகளின் விஜயங்கள் நிகழும். காரணம் ஏற்கனவே 2024 ஆண்ட பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை கைப்பற்றியது தேசியமக்கள் சக்தி அரசாங்கம். கிழக்கு மாகாணத்திலும் வன்னிப் பிராந்தியத்திலும் தேசிய பட்டியல் மூலம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகப்படுத்திக் கொண்ட ஜே.வி.பி. அரசாங்கம் தமிழ் மக்கள் தமக்கு ஆணை வழங்கியதாக இலங்கையில் மட்டுமல்லாது ஜெனீவாவிலும் உறுதிப்படுத்த முயலுகிறது. தற்போது அதனை தக்கவைப்பதில் ஜனாதிபதி அநுர அதிக கவனம் கொண்டுவராக காணப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய அனைத்து உரைகளிலும் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவை மறக்க முடியாது என்றும் தெரிவித்ததோடு அதற்கான நம்பிக்கை ஒரு போதும் தாம் மீறமாட்டேன் எனவும் உரையாற்றியிருந்தார். இது ஏறக்குறைய கடந்த காலங்களில் நிகழ்ந்த ஆட்சிகளை விடவும் அதீதமாக தமிழ் மக்களின் அடையாளத்தை சிதைப்பதற்கான திட்டமிடலாக தெரிகின்றது. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடையாளத்தை முடிவுக்கு வருவதற்கான சூழலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழர்களின் பூர்வீக நிலமாக விளங்கிய கிழக்கு மாகாணம் ஏறக்குறைய பெரும்பான்மை சிங்கள மக்களாலும் இஸ்லாமிய சகோதரர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு நிலத் தொடர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களது பூர்வீக நிலம் அல்ல என்பதை காட்டுவதுடன் தமிழ் தேசிய இனத்திற்குரித்துடைய தீர்மானம் எடுக்கும் திறன்களை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. அதனை கடந்தகால ஆட்சியிலிருந்த பெரும்பான்மை ஆட்சியாளர்கள் நிகழ்த்தினர். அதனையே வடக்கில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிகழ்த்திவருகிறது. அதுவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கை கவனத்தில் கொள்ளுகின்ற பிரதேசமாக மாற்றி வருகிறது. துற்போது கிழக்கில் எந்த அரசாங்கமும் கவனம் வடக்கைப் போன்று கவனம் செலுத்துவதில்லை. முன்னைய அரசாங்கங்கள் கிழக்கு மாகாணத்தை துண்டாடுவதிலும் தமிழ் மக்களின் வாழ்விடத்தை அழித்தொழிப்பதிலும் அதிக கவனம் கொண்டிருந்தனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கை அத்தகைய நிலையை நோக்கி நகர்த்துவதில் கவனமும் கரிசனையும் கொண்டு செயல்படுகிறது.
அடுத்து வரவிருக்கின்ற உடனடித் தேர்தல்களிலும் அதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இருப்பை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் வடக்கு நோக்கிய விஜயத்தில் ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அவதானமாக நடந்து கொள்கிறது. குறிப்பாக பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரான உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நெருக்கடியை கொடுத்தாலும் கணிசமான வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தது. வெற்றியை முழுமையாகவே மாகாண சபை தேர்தலில் கைப்பற்றி விட வேண்டும் என்பதில் அரசாங்கம் திட்டமிடல் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் யதார்த்தத்தை பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரே தமிழ் மக்கள் கண்டு கொள்ள தவறவில்லை. வடக்கில் சில பிரதேசசபைகள் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ளாக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கும் அவர்களது உரிமைக்கும் நெருக்கடி ஏற்படுகின்ற போது பிரதேச சபைகளாலோ பாராளுமன்ற உறுப்பினர்களாலோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாதுள்ளது.
ஜனாதிபதியின் உரைகளில் இனவாதம் அற்ற நாட்டை கட்டி எழுப்புவது என்ற விடயம் அதிகம் முதன்மைப்படுத்தப்படுகிறது. இனவாதம் தமிழ் மக்களுக்கு மட்டுமே உரியதாக பார்க்கப்படுகிறது. ஆனால் தென் இலங்கையில் இருக்கும் கட்சிகளையோ மகா சங்கங்களையோ இனவாதப் பேச்சுக்களை நிறுத்துமாறோ இனவாத நடவடிக்கைகளை கைவிடுமாறே கோருவதில் கவனம் கொள்ளாது தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமே ஜனாதிபதி இனவாதம் பற்றிய உரைகளை நிகழ்த்தி வருகிறார். தென்னிலங்கை தீவிரவாத சிங்கள அரசியல் தலைமைகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கவனத்தில் கொள்ளாது தமிழ் மக்கள் இனவாதத்தை கொண்டிருப்பதாகவே விளக்கமளிக்க முயலுகின்றார். அடிப்படையில் 1956, 1958, 1977, 1983 ஆகிற ஆண்டுகளில் அனைத்து வன்முறைகளையும் தமிழ் மக்கள் தொடக்கவில்லை. தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிராக ஒரு சந்தர்ப்பத்திலும் வன்முறையாகச் செயல்படவில்லை. மாறாக ஈழத்தமிழர்களையும் மலையகத் தமிழர்களையும் அடித்து விரட்டியவர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆட்சியாளர்களும் அந்த மக்களும் என்பதை தமிழ் மக்கள் மறந்து விட முடியாது. ஆனால் ஜனாதிபதி வடக்கிலே இனவாதம் பற்றி அதிக உரையாடுகின்றார். அப்படியானால் தமிழர்களே இனவாதிகளாக இருக்கின்றார்கள் என்பதே இதன் சாராம்சமாக தெரிகிறது. அத்தகைய புரிதலே அடிப்படையில் தமிழ் மக்களின் அடையாளத்தை இல்லாமல் செய்வதற்கு சமமானது. தென்னிலங்கையில் இருக்கும் ஒரு கட்சியை அரவணைத்துக் கொள்வது இனவாதமற்ற செயல் என்று புரியப்படுகிறது என்றால் இதன் தாற்பரியம் எத்தகையதாக அமையும் என்பது தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது.
தற்போதைய ஜனாதிபதிய அநுர அடுத்தவரும் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருக்க முடியும். அல்லது தேர்தலில் வெற்றி பெற்றால் இன்னும் ஒரு தடவை ஆட்சியில் இருக்க முடியும். ஆனால் இதே நிலமை நீடிக்காது என்பது ஜே.வி.பி. தலைமைகளைப் பார்க்கவே தெரிகிறது. இதுகூட ஏமாற்றுத்தனமானது என்பது பாராளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை தவறவிட்ட போதே தமிழ் மக்கள் கண்டு கொண்டனர். கடந்த காலத்திலும் இலங்கை தீவின் அரசியல் இருப்பு சிங்களத் தலைமைகளினால் தமிழ் மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பது மிக நீண்ட காலமாகவே அனுபவித்து வரும் ஒரு அரசியலாகும். அனைத்து சிங்கள பெரும்பான்மைத் தலைவர்களும் தங்கள் காலப்பகுதியில் தேர்தலை வெல்வதற்கும் ஆட்சி அமைப்பதற்கும் தமிழ் மக்களை சமாதானப்படுத்துகின்ற முயற்சிகள் ஆட்சி துறையினர் காலத்தை நகர்த்திச்செல்வதை கண்டு கொள்ள முடிகிறது. இதன் விளைவு கடந்த காலத்தைப் போன்றே எதிர்காலத்திலும் அமையும் என்பதை கோடிட்டக் காட்ட போதுமானது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மீனவர்களுக்கும் அரசியல் கைதிகளுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை கைவிட்டுள்ளமை கண்டு கொள்ளக் கூடிய விடயமாகவே தெரிகிறது. ஆனால் மீண்டும் உறுதிமொழிகளை வழங்குவதில் ஜனாதிபதியின் உரைகள் காணப்பட்டதோடு அரசியல் கைதிகளையும் மீனவ சமூகத்தையும் முழுமையாக கைவிட்ட நிலை ஒன்றை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கரையோர மீனவ மக்களை இலக்குவைத்து வாக்கு வேட்டையில் ஈடுபட்ட ஜே.வி.பி. தற்போது மத்திய நகரங்களை நோக்கி தனது உரையாடலையும் பிரச்சாரங்களையும் நிகழ்த்தி இருக்கின்றது. காரணம் மீனவமக்கள் ஜனாதிபதியின் உரையை கேட்பதற்கு தயார் இல்லாத ஒரு நிலை ஒன்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது. அவ்வாறே அரசியல் கைதிகள் காணாமல் போனோர் போன்றவர்களுடைய நிலை காணப்படுகிறது. போரின் வடுக்களையும் துயரங்களையும் நினைவு கொள்ளும் ஜனாதிபதி இனவாதத்தை இல்லாமல் செய்கின்ற அரசாங்கம் என்று உரையாடுகின்ற ஜனாதிபதி ஜே.வி.பி இன் கடந்த காலசெயல்பாடுகளை மறந்தாலும் சமகாலத்தில் மேற்கொள்ளுகின்ற இனவாதம் சார்ந்த நடவடிக்கைகளை ஆக்கிரமிப்புகளை விகாரிகள் அமைப்பதை தமிழர்களின் மரபுரிமை சின்னங்களை ஆக்கிரமிப்பதை முடிவுக்கு கொண்டு வராத நிலையில் இனவாதம் மற்ற அரசு பற்றிய உரையாடலை செய்ய முயலுகின்றார்.
எனவே இனவாதம் அற்ற அரசாங்கம் தமிழர்களுக்கு இனவாதத்தின் அம்சங்களை போதிப்பதை விட சிங்கள மக்களிடம் இனவாதத்தை கடைப்பிடிக்காது செயல்படுங்கள் என்று போதிப்பதே அவசியமானது. அதுவே ஒரு ஆரோக்கியமான இலங்கை தீவின் இருப்பை சாத்தியப்படுத்தும். கடந்த காலங்களில் மிக அண்மைய அனுபவங்களில் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் இலங்கை தமிழரின் அடைந்த அரசியல் ஏமாற்றத்தை மீண்டும் ஒரு தடவை சந்திப்பதற்கு தமிழ் மக்கள் தயாராகின்றனர். அநுர குமாரதிசநாயக்கவை விட மைத்திரிபாலசிறிசேன மீது தமிழர்கள் அதிக நம்பிக்கை வைத்ததோடு மகாத்மா காந்திக்கும் நெல்சன் மண்டேலாவுக்கும் சமமானவராக கருதப்பட்டவர் பிற்காலப் பகுதியில் மேற்கொண்ட அரசியல் எப்படியானது என்பது சிறப்பான அனுபவமாக காணப்படுகிறது. எந்த மொழியை பேசினாலும் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்து பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒற்றுமை நிறைந்த வளமானநாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாயின் தமிழ் மக்களது தேசிய அடையாளம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இறைமை பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே எதிர்கால இலங்கையின் ஆரோக்கியமான இருப்பாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
