February 24, 2026
அரசியல் கட்டுரைகள்

வெனுசுவெலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையும் இலங்கை ஆட்சியாளர்களும்?

வெனிசுவலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்கா பெரும் இராணுவ நடவடிக்கை மூலம் கடத்திச் சென்றமை இலங்கையிலும் அதிர்ச்சிகரமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மக்கள் மத்திய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஜே.வி.பி. தனது கண்டன அறிக்கையை அமெரிக்காவுக்கு எதிராக வெளியிட்டடுள்ளது. அவ்வாறே இலங்கையின் வெளிவர அமைச்சர் விஜித ஹெரத் அமெரிக்காவின் நடவடிக்கை அரசுகளின் இறையாண்மை மீது விடுக்கப்பட்ட சவால் எனக் குறிப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒரு சிறிய நாட்டின் ஜனாதிபதி ஒருவரை உலக வல்லரசுகளின் முதன்மை நாடான அமெரிக்கா விமானங்களையும் போர்க் கப்பல்களையும் உளவு தகவல்களையும் ஒன்றிணைத்து நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு மதுரோவை கடத்தியுள்ளது. இது உலகில் உள்ள எல்லா நாடுகளில் அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இக்கட்டுரையும் வெனிசுவெலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கை இலங்கை ஆட்சியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குமா என்ற கேள்விக்கு விடை தேடுவதாக அமையவுள்ளது.

சுதந்திரமான இறைமையுள்ள நாடான வெனுசுவெலாவுக்குள் அத்துமீறி நுழைந்து மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மற்றும் மனைவியைக் கடத்திச் சென்று மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை கண்டிக்கிறோம் என ஜே.வி.பி. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது அவ்வாறே அக்கட்சியின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான விஜித ஹெரத் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் சர்வதேச சட்டங்களின் படி அனைத்து நாடுகளின் இறையாண்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கைகளின் பிரகாரம் இலங்கை ஆட்சியாளர்கள் வெனுசுவெலா மீதான அமெரிக்க நடவடிக்கையை கண்டிப்பதற்கும் அச்சம் கொள்வதற்கும் காரணம் என்ன என்பது புரிந்து கொள்வது அவசியமானது. அதனை ஆழமாக தேடுதல் அவசியமானது.

முதலாவது ஜே.வி.பி. இடதுசாரி கட்சி என்ற வகையில் வெனுசுவெலா நாட்டின் ஜனாதிபதி மீதான அமெரிக்காவில் நடவடிக்கையை கண்டிப்பது நியாயமானதாகவே தெரிகிறது. அதனைக் கூட வெளிப்படுத்தாத இடதுசாரிக் கட்சிகளும் நாடுகளும் உண்டு என்பது வருந்ததக்க விடயமேயாகும். வெனுசுவெலாவும் இடதுசாரி மரபுகளுக்குள்ளால் எழுச்சி பெற்று நாடு என்ற அடிப்படையில் அத்தகைய கண்டனம் பரஸ்பரம் வெளிப்படுத்தப்பட வேண்டிய யதார்த்தமான அம்சமாகும். அத்தகைய கண்டனம் அமெரிக்காவின் நடவடிக்கைகளை அல்லது அமெரிக்க ஜனாதிபதியின் அடாவடித்தனமான நகர்வுகளை உலகளாவிய ரீதியில் ஆட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து எதிர்க்கும் உத்தி அவசியமானது. ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளை முன்னிறுத்தி நாடுகளின் இறைமை தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இது அடிப்படையில் நியாயமான விடயமாகவே தெரிகிறது.

இரண்டாவது அவ்வாறு இலங்கை அதீதமாகவும் ஏனைய நாடுகளை விட தீவிரமாகவும் இவ்வகை கண்டனத்தை முன் வைப்பது கவனம் கொண்டதற்கு ஜே.வி.பி. இன் சோஸலிஸக் கொள்கையில் காணப்படும் சீன சார்பு அணுகுமுறை பிரதான காரணமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமுண்டு. ஏனெனில் வெனுசுவெலா ஜனாதிபதி சீன தூது குழுவை சந்தித்து விட்டு சந்தித்த மாளிகையிலே தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டார். அதனையே ட்ரம்ப் பிராந்திய அச்சுறுத்தல் என குறிப்பிடுகின்றார். ஏறக்குறைய சீனா வெனிசுவெலாவிடமிருந்து சக்தி வளத்தை பெறுவதற்கான உடன்பாடுகளையும் ஒத்துழைப்பையும் கொண்டிருக்கின்ற ஒரு நாடு என்பது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையும் சீனாவுடன் அதிக உடன்படிக்கைகளை கொண்டிருக்கிறது என்பது தெரிந்த விடயமே. அதனால் இலங்கை ஆட்சியாளர்கள் அச்சம் கொள்ளவும் எதிர்காலத்தில் இலங்கை சார்ந்த அமெரிக்காவில் நகர்வுகள் அமையுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கலாம். டீத்வா புயலின் போது அமெரிக்க இராணுவம் அத்தகைய நகர்வுக்கு சமமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தது நினைவு கொள்ளத்தக்கது. அதனாலேயே இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் நகர்வை கண்டனம் செய்வது முனைப்புக் காட்டியுள்ளதாக தெரிகிறது.

மூன்றாவது அவ்வாறு இலங்கை தீவு அல்லது இலங்கை ஆட்சியாளர்கள் கருதும் அளவுக்கு அமெரிக்காவின் இலங்கை நோக்கிய கொள்கை அமையும் என்பது சந்தேகத்திற்குரியதே. காரணம் இலங்கை தீவின் அமைவிடம் இந்து சமுத்திரத்தின் மத்தியிலும் இந்தியாவுக்கு அண்மையிலும் காணப்படுகின்ற அடிப்படையில் அதற்கான வாய்ப்பு மிக குறைவானதாகவே காணப்படுகிறது. வெனுசுவெலா அமெரிக்காவின் கொல்லைப்புறம் (Backyard) நாடு என்ற அடிப்படையிலும் அமெரிக்கா மென்றோ (Monroe Doctrine) வெளியுறவு கொள்கையின் பிரகாரமும் தனது பிராந்தியத்தில் வெளி வல்லரசுகளின் ஆதிக்கத்தை முற்றாக இல்லாமல் செய்வதும் எதிரிகளை அழிப்பதும் அதன் பிரதான கொள்கையாக அமைந்திருந்தது. அதனை 1823 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஜனாதிபதி ஜேம்ஸ் மன்றோ (James Monroe) கொள்கை ஒன்றை வகுத்திருந்தார். அத்தகைய கொள்கையின் நீட்ச்சியாக டொனால்ட் ட்ரம்ப்ன் விளைவுக் கோட்பாட்டு (Trump Corollary) வெளியுறவுக் கொள்கையென அழைக்கப்படுகிறது. இது மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வலியுறுத்துகிறது. வெளிநாட்டுத் தலையீட்டை முற்றாக எதிர்கிறது. மற்றும் தேசியபாதுகாப்பு பொருளாதார நலன்கள் மற்றும் எல்லைக்கட்டுப்பாடு ஆகியவற்றைக் குறிக்கிறது. இதுவே வெனுசுவெலா மீதான நடவடிக்கையின் கொள்கையாக தெரிகிறது. இது காலங்காலமாக அமெரிக்கா பசுபிக் சமுத்திரத்தாலும் அத்திலாத்திக் சமுத்திரத்தாலும் சூழப்பட்டது மட்டுமின்றி தென் அமெரிக்கா நோக்கியா வெளி வல்லரசுகளின் தலையீட்டை தடுப்பணை போட்டு இல்லாமல் செய்கின்ற செய்முறை ஒன்றையும் கொண்டுள்ளது. 1962 ஆம் ஆண்டு கியூபா ஏவுகணை விவகாரமும் அதனையே நினைவுபடுத்தியது. இலங்கை ஆட்சியாளர்கள் கருதுவது போன்ற ஒரு புவிசார் அரசியல் சூழல் இலங்கை தீவுக்கும் அமெரிக்காவுக்கும் வாய்ப்பு இருப்பதாக தென்படவில்லை.

நான்காவது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மையத்திலுள்ள இலங்கை இந்தியாவின் நேரடி புவிசார் நெருக்கத்துக்குள் அகப்பட்டுள்ளது. இலங்கையில் நிகழும் அனைத்து மாற்றங்களுக்கும் இந்தியா ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகும் என்ற கொள்கையின் பிரகாரம் இலங்கை மீதான அமெரிக்க நகர்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் புரிந்து கொள்ளப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. அமெரிக்கா நேரடியாக இலங்கை மீது எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள முயன்றாலும் அது இந்தியாவை பாதிக்கும் என்ற அடிப்படையில் இந்தியாவின் நகர்வுகள் அமைந்திருக்கும். அமெரிக்காவின் இராணுவ வலிமையோடு இந்தியா போட்டிபோட முடியாது என்று விவாதித்தாலும் ஒரு நீண்ட நிலையான இராணுவ நடவடிக்கை இலங்கை தீவில் மேற்கொள்ள அமெரிக்கர்களுக்கு வெளிப்படையான வாய்ப்பு இருக்குமா என்பது கேள்விக்குரியது. ஆட்சி மாற்றங்களை செய்வது அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பது போன்றவற்றை மேற்கொள்வதை கடந்து இலங்கை தீவின் ஆட்சியாளர்களை வெனுசுவெலா போன்று கையாளுமா என்ற கேள்வி பொருத்தமற்றதாகவே தெரிகின்றது.

ஐந்தாவது இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்காவோடு மேற்கொண்டிருக்கும் உடன்படிக்கை அமெரிக்க இலங்கை உறவை பலமானதாக வைத்துள்ளது. ஜே.வி.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு பிரதான உடன்படிக்கை ஒன்றினை அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ளது. அதற்கு முன்னர் இரு உடன்படிக்கைகளும் அதற்கான பூர்வாங்கப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (SPP- State Partnership Program,November 2025,ACSA- Acquisition and Cross-Servicing Agreement,2007, US-Sri Lanka Status of Forces Agreement) அத்தகைய உடன்படிக்கைகள் அமெரிக்காவின் நட்பு சக்தியாக இலங்கை தீவு இருப்பதோடு ஏற்கனவே அமெரிக்காவின் பிடிக்குள் இலங்கையின் ஜே.வி.பி. அரசாங்கம் காணப்படுகிறது என்பது மறுக்க முடியாத செய்தியாகும். அவ்வகை உடன்படிக்கைகள் அநேகமானவை இராணுவ விடயங்களை பரிமாற்றுவதும் பயிற்சி வழங்குவதும் கண்காணிப்பில் ஈடுபடுவதும் என்ற அடிப்படையில் நெருக்கமான பிணைப்பை கொண்டிருக்கின்றது. அதனைக் கடந்து இலங்கை தீவின் மீது அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு அடிப்படையில் இல்லாதுள்ளது. அடிப்படையில் இலங்கை வெனுசுவெலா போன்று எத்தகைய முரண்பாட்டையும் அமெரிக்காவோடு கொண்டிருக்கவில்லை. சீனா இந்தியா அமெரிக்கா என்ற மூன்று சக்திகளையும் புரிதலோடும் இராஜீக ரீதியிலும் இலங்கை அரசாங்கம் கையாண்டு வருகிறது.

எனவே இலங்கை ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா நெருக்கடி ஏற்படுமென்றோ, இலங்கை மீது நடவடிக்கை எடுப்பதனால் இந்தியா பாதிப்புக்கு உள்ளாகும் என்றோ விவாதிப்பது சர்வதேச அரசியல் நியமங்களை அல்லது அதன் எல்லைகளை புரிந்து கொள்ளாததாக அமைந்துவிடும். அதனை வெறும் புனைவதாகவே கொள்ளப்பட வேண்டும். அமெரிக்காவைப் பொறுத்தவரை அமெரிக்க கண்டம் அமெரிக்காவுக்கே உரித்துடையது என்ற எண்ணத்தையே ரொனால்ட் ட்ரம்ப்ன் அமெரிக்கா முதலிடக் கொள்கை கொண்டிருக்கின்றது. மொன்றோ கோட்பாட்டின் நீட்சியே வெனுசுவெலா மீதான ட்ரம்ப்ன் நடவடிக்கை. கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவை 638 தடவை படுகொலை செய்வதற்கு அமெரிக்காவின் உளவு நிறுவனம் முயற்ச்சித்தது. தென்அமெரிக்கா பிராந்தியம் அமைதியாகவும் அமெரிக்க நலனுக்கு விரோதமாக செயல்படாமலும் இருப்பதே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை. அமெரிக்காவின் மென்றோக் கொள்கைக்குள்ளோ, ட்ரம்ப்ன் விளைவுக் கொள்கைக்குள்ளோ இலங்கை தீவு இல்லை என்பதை புரிந்து கொள்வது அவசியமானது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)