தென் அமெரிக்கா நாடுகள் மீதான அமெரிக்காவில் ஆதிக்கம் என்பது நீண்ட வரலாற்றை கொண்டது. தென் அமெரிக்கா குடியேற்றங்களிலிருந்து தொடங்கிய அமெரிக்க கண்டத்துக்கான ஐரோப்பியரின் படர்ச்சி வலுவான மோதலை ஏற்படுத்தியிருந்தது. 1959ஆம் ஆண்டு தொடக்கம் கியூபாவுடன் ஏற்பட்ட இடதுசாரி-வலதுசாரி மோதல் தீவிர ஆதிக்கமானது. டொனால்ட் ட்ரம்ப்ன் இரண்டாவது ஆட்சி காலம் தொடர்ச்சியாக இடதுசாரி-வலதுசாரி அரசியல் மோதலை நீடிக்க வழிவகுத்தது. ட்ரம்ப்ன் இரண்டாவது ஆட்சி காலத்தை தொடங்குகிற போது தென்அமெரிக்காவின் சோஷலிச அல்லது இடதுசாரி அரசாங்கங்கள் மீதும் அவ்ஆட்சித் துறையின் வாரிசுகள் மீதும் தொடர்ச்சியான அடக்கு முறையை மேற்கொள்ள திட்டமிட்டது. அதற்குரிய வாய்ப்புக்களை நவதாரண்மை வாத யுகம் உலகளாவிய ரீதியில் சோஷலிஸ சித்தாந்தத்தை முற்றாகவே அழிக்க வழிவகுத்துள்ளது. இக் கட்டுரையும் வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்காவின் போர் உத்திகான விளைவுகளை தேட முயலுகிறது.
முதலாவது தென் அமெரிக்க கண்டத்தின் அமைதி என்பது அமெரிக்காவின் அரசியல் இருப்புக்கான அடிப்படையாகும். தென் அமெரிக்கா கண்டம் மீது தொடர்ச்சியான இடதுசாரிகளின் செல்வாக்கும் அதை முறியடிக்கும் அமெரிக்காவின் முதலாளித்து அணுகுமுறைகளும் முதிர்ச்சி பெற்ற அரசியல் களத்தை பனிப்போர் காலம் முடிந்த பின்னரும் தந்திருக்கின்றது. ஆஜன்டினா,எல்சவடோர், கியூபா, பெரு, போஸ்டரிக்கா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா போன்ற நாடுகள் ஏற்கனவே தமது பொருளாதார ரீதியான கொள்கையில் மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் இந்நாடுகள் தொடர்ச்சியாகவே இடதுசாரி பாரம்பரியத்தேர் இயங்குகின்ற அரசுகளாக காணப்படுகின்றன. இதற்கான அடிப்படை கியூபா, வெனிசுலா போன்ற நாடுகளின் முன்னாள் ஆட்சியாளர் சித்தாந்த ரீதியிலான கட்டுமானமாகவே தெரிகிறது. அதனுடைய பின்பற்றலைக் கொண்டு தற்போதைய ஆட்சியாளரும் செயல்பட முயலுகின்றனர். அதில் வெனுசுவெலாவின் தற்போதைய தலைவர் சாவேஸ் மதுரோவும் பின்பற்றிவருகின்றார். மதுரோவின் அணுகுமுறை சீனா ரஷ;சியா போன்ற நாடுகளில் பிரசன்னத்தை பிராந்தியத்தில் அதிகரித்து வருவது என்பது அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் பிரதான நெருக்கடியாக காணப்படுகிறது. அதனை முறியடிக்கும் விதத்திலே மதுரோவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பொருளாதார ரீதியான அணுகுமுறைகளை மேற்கொண்டு தோற்றுப் போன அமெரிக்கா இராணுவ ரீதியான நகர்வுகளுக்கு திட்டமிடுகின்றது கடல் படை தரைப்படை போன்றவற்றை பிராந்தியத்தில் தரையிறக்கியதோடு தனது பாரிய போர் கப்பல்களையும் அதற்குரிய கட்டளைகளையும் தொடர்ச்சியாக வழங்கும் ஒருவராக ட்ரம்ப் காணப்படுகின்றனர்.
இரண்டாவது குறிப்பாக தென் அமெரிக்கா நாடுகளில் இடதுசாரி சிந்தனையினுடைய தோல்வி வலதுசாரி எழுச்சிக்கான வாய்ப்புகளை பனிப் போருக்கு பின்னான-பின்பின்னான காலப்பகுதியில் முதன்மைபடுத்தி இருந்தது. ஐரோப்பிய இனப்படர்ச்சியும் மற்றும் சுதேச மக்களுக்கும் இடையிலான கலப்பின உருவாக்கங்கள் அத்தகைய இடது-வலது பாரம்பரியத்தை கட்டமைத்திருந்தது. ஆனால் அத்தகைய சூழல் படிப்படியாக இடதுசாரி அரசியல் முறைமை வீழ்ச்சிக்கு தள்ளி வலதுசாரி அரசியல் முறைமையினுடைய எழுச்சி சாத்தியப்பட்டது. அத்தகைய எழுச்சி சுவிசேஷ கிறிஸ்தவத்தின் பரவல் பிரதான இடத்தை வகித்திருந்தது. ஆனாலும் அத்தகைய சுவிசேஷ மதப் பரம்பலின் வலதுசாரி தனித்துவம் வன்முறைகளையும் போதைப்பொருள் பாவனைக் கலாச்சார சிதைவுகளையும் பாலின மோதல்களையும் கருக்கலைப்பு சார்ந்த அடிப்படையான நியமங்களையும் தீவிரப்படுத்தி இருந்தது. ஏறக்குறைய தென் அமெரிக்கா முழுவதும் கடந்த ஒரு தசாப்தங்களாக உலகளாவிய போதைப்பொருள் உற்பத்தியில் மூன்று மடங்கை ஏற்படுத்தி இருந்தது. அமெரிக்கா குறிப்பிடுவது போல் கோகையின் ஏற்றுமதியில் பிரதான பிராந்தியமாக தென் அமெரிக்கா காணப்படுகிறது என்ற வாதமும் நிராகரிக்க முடியாது ஒன்றாக தெரிகின்றது. இதனை தடுக்கின்ற நோக்கத்திலேயே அமெரிக்க ஜனாதிபதி வெனிசுலாம் மீதான நகர்வுகளை குறிப்பிட முயலுகின்றார். ஆனால் வலதுசாரி ஆட்சி முறையும் அதீதமான நெருக்குவாரங்கள் அந்த மக்கள் மீண்டும் இடதுசாரி அரசியலை நோக்கி அல்லது ஆட்சி முறைகளை நோக்கி தம்மை கட்டமைக்க திட்டமிடுகின்ற போது அதனை தோற்கடிப்பதற்கான போர்ப்பதற்றமாகவே அமெரிக்க நகர்வு தெரிகிறது. தென் அமெரிக்கா கண்டம் மரபுகளாலும் கலாச்சாரத்தாலும் கட்டமைக்கப்பட்டிருந்த ஒரு சூழல் என்பதை வலதுசாரி ஆட்சி முறைகள் முடிவுக்கு கொண்டு வந்தன. இதனை மீள்மைப்பதற்கான இடதுசாரி பாரம்பரியங்கள் தமது ஆதிக்கத்தை மீள கட்டமைக்க முயற்சிக்கின்ற போது போருக்கான நகர்வுகளை எதிர் நோக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன.
மூன்றாவது இடதுசாரிகளும் வலதுசாரிகளும் மோதிக் கொள்கின்ற சூழலொன்றை தென்அமெரிக்கா மிக நீண்ட காலமாக எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக வெனிசுலா போன்ற இடதுசாரி நாடுகளில் பொருளாதாரக் கொள்கைகள் புதிய தலைமுறையினருக்கு நெருக்கடியை உள்ளாக்கி இருக்கின்றது. அவ்வாறே ஹய்ட்டி, நிகரக்குவா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் வெளியேறுவதும் சிலி, கொலம்பியா, பெரு போன்ற நாடுகளில் வலதுசாரி தலைவர்களின் சுரண்டலும் அடக்குமுறையும் அந்த நாடுகளின் பொருளாதார இருப்புகளை பலவீனப்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டில் புதிய தலைமுறை நாட்டை விட்டு வெளியேறுவதும் அடிப்படைப் பிரச்சினையாகக் காணப்படுகிறது. வலதுசாரி ஆட்சி முறைகளுக்கும் இடதுசாரி ஆட்சி முறைகளுக்கும் எதிரான திட்டமிடல்களை மேற்கொள்வதும் மரபார்ந்த அரசியல் மோதலாக மாறி இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவின் வலதுசாரி அரசியல் தலைவர்கள் பனிப்போர் காலத்தில் சர்வாதிகார அணுகுமுறைகளை தீவிரமாக பின்பற்றி இருந்தனர். அதனை நியாயப்படுத்துவதற்கு அவர்கள் முன்வைத்த பிரதான வாதம் கம்யூனிசத்தை முறியடிப்பது என்பதாக அமைந்திருந்தது. சிலி, பொலிவியா கொத்தமாலா போன்ற நாடுகளில் எழுச்சி பெற்ற சர்வாதிகாரிகள் பாரிய அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் தேசத்தில் ஏற்படுத்தி இருந்தனர். இதனால் அந்த மக்கள் நிலவும் வலதுசாரி ஆட்சி முறை மீதான அச்சத்தையும் குழப்பத்தையும் கொண்டிருக்கின்றனர்.
நான்காவது பசுபிக் மற்றும் கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட சௌத்தெர்ன் ஸ்பியர் (Operation Southern Spear) தாக்குதல் உத்தியானது வெனுசுலாவை முடக்குவதற்கானதாகவே தெரிகிறது. இருபதிற்கு மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு 80இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது ட்ரம்பினுடைய வெனுசுலாவுக்கு எதிராக அதிகபட்ச பொருளாதார தடைகளையும் ஆட்சி மாற்றத்திற்கான அழுத்தங்களையும் அமெரிக்கா மேற்கொள்வதாகவே தெரிகிறது. வெனிசுலா ட்ரம்ப்ன் அதிகார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருகப்பது பிராந்திய ரீதியில் இடதுசாரி அரசியலுக்கு எதிரானதாகவே உள்ளது. வெனிசுலா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான வான்வெளிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டதுடன் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களின் போக்குவரத்து உரிமமும் வெனிசுலாவினால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வெனிசுலாவை சவாலுக்குள் தள்ளியள்ளது.
எனவே அமெரிக்கா –வெனிசுலாக்கும் இடையிலான மோதலானது பிராந்திய ரீதியானதாகவும் இடதுசாரிக்கு எதிரானதாகவுமே புரிந்து கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது. வெனிசுலாவின் வளமும் அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவமும் அமெரிக்காவின் ஆதிக்க கொள்கைகளில் தாக்குதலுக்கு வழிவகுத்ததாகத் தெரிகிறது. அமெரிக்காவின் வெனிசுலா மீதான தாக்குதல் உத்தியானது சீனா மற்றும் ரஷ்சியாவின் அணுகுமுறைகளுக்கு தடைபோடுவதாகவும் காணப்படுகிறது. இது ஒரு பிராந்தியப் போட்டியின் அரசியலாகவே தெரிகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
