April 15, 2026
அரசியல் கட்டுரைகள்

ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியுடனான தமிழரசியல் கட்சிகளின் சந்திப்பும் தமிழர் அரசியலும்?

ஈழத்தமிழரது அரசியலில் ஐ.நாவின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுவதாக அரசியல் தலைமைகள் உரையாடுகின்றன. 26.03.2026 இல் வடக்குக்கு வருகை தந்த ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரெஞ்ச் தமிழ் தேசியக் கட்சிகளின் தரப்புகள் சந்தித்து உரையாடியுள்ளனர். உரையாடலின் முக்கிய அம்சங்கள் முழுமையாகவே இனப்பிரச்சினைக்குரியகாரணிகளையும் தென் இலங்கையின் ஆக்கிரமிப்பையும் அதிகம் முன்னிறுத்தி உரையாடப்பட்டதை கண்டுகொள்ள முடிகிறது. இக் கட்டுரை தமிழரசியல் கட்சிகளின் ஐ.நா.பிரதிநிதியுடனான சந்திப்பின் முக்கியத்துவத்தை தேடுவதாக உள்ளது.

தமிழரசியல் கட்சிகள் இரண்டு பிரதான விடயங்களை முன் வைத்திருக்கின்றனர். ஒன்று தென் இலங்கையின் ஆக்கிரமிப்பு போக்குகளை வதிவிடப் பிரதிநிதியுடன் உரையாடியுள்ளனர். இரண்டு தென்னிலங்கையில் எத்தகைய ஆட்சியும் ஈழத்தமிழருக்கு ஒருபோதும் தீர்வு வழங்கப் போவதில்லை என்பதை முதன்மைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டது விடயத்தின் உண்மையான பக்கங்களை அழகாக புரிந்து கொள்வது அவசியமானது.

முதலாவது ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் வடக்குக்கான வருகை முக்கியமான காலப் பகுதியில் நிகழ்ந்திருக்கின்றது. இலங்கை ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளுகின்ற சந்தர்ப்பத்தில் இலங்கை தீவுக்கு வருகை தந்துள்ளமை கவனத்திற்கு உரியது. ஐநா பிரதிநிதி வடக்குக்கு வருகை தந்துள்ளமை வட மாகணத்தில் அரசாங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடியுள்ளார். வடமாகணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு தமது பங்களிப்பை முதன்மைப்படுத்த தயாராக இருப்பதாக உத்திரவாதம் வழங்கியதோடு அரசாங்கத்தின் வடக்கு நோக்கி நடவடிக்கைகளை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் உரையாடியுள்ளார். தமிழ் கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிரான அல்லது அரசாங்கம் முன்வைத்து நிகழ்த்துகின்ற ஆக்கிரமிப்புகளை பட்டியலிடுகின்ற போது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகள் முதன்மைப்படுத்தி உரையாடியுள்ளனர். எதிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு பொருளாதார அபிவிருத்தி நோக்கிய வடமாகாணத்தின் நகர்வுகளை முதன்மைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டாவது ஐ.நா.வின் உலகளாவிய போக்கு என்பது அதிக பலவீனங்களை கொண்டதாக மாறிவருகிறது. ஈழத்தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை மோசமான அணுகுமுறைகளை பின்பற்றியது என்ற விமர்சனம் உண்டு. ஐ.நா. தரப்புப்பினர் அவ்வப்போது வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்வதும் அது தொடர்பில் உரையாடல்களை முன் வைப்பதும் பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்தாது கைவிடுவதும் ஒரு வழமையான அரசியலாக பார்க்கப்படுகிறது. அதனை தமிழ் தரப்பு வெளிப்படுத்தாது ஈடுபாடு காட்டுவது ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் அதற்காக தமிழர் தரப்பும் ஐ.நா.தரப்புடனோ அல்லது பிறநாடுகளின் பிரதிநிதிகளுடனோ உரையாடுவதை நிராகரிப்பதல்ல. தமது அடிப்படை பிரச்சனைகளையும் அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்களையும் முன்வைக்காமல் செயல்பட முடியாது. ஆனாலும் ஐ.நா.தூதுவரது வடக்கு விஜயம் தமிழருடைய அரசியல் தீர்வுக்கான இலக்கை நோக்கிய நகர்வாக தெரியவில்லை. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்ய முயற்சிக்கின்ற ஒன்றாகவே கண்டுகொள்ள முடிகின்றது. அதனை அரசாங்கத் தரப்புடனான உரையாடலில் தெரிந்து கொள்ள முடிகிறது.

மூன்றாவது இலங்கைத்தீவின் இனப்பிரச்சனைக்குரிய தீர்வு தமிழர்களின் பிரதான கோரிக்கையை தமிழ் அரசியல் தரப்புகள் முழுமையாக முன்வைக்க வேண்டிய அவசியப்பாடு உள்ளது. அதற்கான வரைவுகளை சமர்ப்பிக்க வேண்டிய சூழலும் ஒவ்வொரு காலப் பகுதியில் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை பட்டியலிட்ட தமிழரசியல் தரப்புக்கள் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலங்களை பண்பாட்டுமையங்களை மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகளை முழுமையாக அறிக்கை ரீதியாகவும் புள்ளிவிபரண ரீதியாகவும் வழங்க முன்வர வேண்டும். அரசியல் தீர்வே இத்தகைய நெருக்கடிகளுக்கான அடிப்படை காரணம் என்பதை முதன்மைப்படுத்தி இருக்க வேண்டிய அவசியப்பாடு தமிழ் தரப்புகளுக்கு உண்டு. அதனால் தமிழ் தரப்புகள் குறைந்தபட்சமாக ஐ.நா.வதிவிட பிரதிநிதியின் முன்னிலையில் இலங்கையின் இடதுசார் ஆட்சியாளர்கள் பற்றிய பிம்பங்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இலங்கைத்தீவின் அரசியல் ஐ.நா.சபையின் வகிபாகம் நாடுகளின் நலன்களை நிறைவு செய்வதாகவே அமைந்திருக்கின்றது. வல்லரசுகளும் ஆதிக்கசக்திகளும் அதனோடு சேர்ந்து பயணிக்கின்ற இலங்கை ஆட்சியினையும் திருப்திப்படுத்துவது அவர்களது விஜயத்தின் நோக்கமாக தெரிகின்றது. எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழர்களின் துயரங்களை கேட்கும் ஐ.நா.வின் பிரதிநிதிகள் அவற்றுக்குரிய தீர்வை முன் வைப்பதற்கு தயாராக இல்லாத சூழ்நிலை கடந்த காலம் முழுவதும் கண்டுகொள்ள முடிகிறது.

நான்காவது தமிழ் தரப்பு ஐ.நா.வின் பிரதிநிதிகளை சந்திப்பது அறிக்கைகளை தயார் செய்வதும் அவற்றைப் பற்றி உரையாடலை செய்வதும் வழமையான அம்சமாகவே உள்ளது. தமிழ் தரப்புக்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஜனநாயகவழி போராட்ட செய்முறையை வெளிப்படுத்துவதற்கு தயார் இல்லாத நிலையை கொண்டுள்ளனர். ஜனநாயகவழிப் போராட்டத்திற்கு உரிய அணுகுமுறையை முன் வைப்பதும் இத்தகைய தலைமைகள் தூதுவர்கள் வருகை தருகின்ற போது அவர்கள் முன் தீவிரமான போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதும் அவசியமானதாக காணப்படுகிறது. தூதுவர்களையும் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடுவது மட்டும் அரசியல் தீர்வுக்கான வழிமுறையாக அமையப் போவதில்லை. அதற்கான அடிப்படைகளைக் கொண்ட போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உண்டு. ஐ.நா. சபை எப்போதும் விடயங்களை கேட்கும் சபையாக மட்டுமே நகர்ந்து செல்கிறது. அது ஒரு தீர்வை வழங்கும் சபையாக தன்னை காட்டிக் கொள்ள ஒருபோதும் முயலவில்லை. வேண்டுமாயின் நாடுகளின் நலன்களுக்கு ஏற்ற வகையில் தீர்வுகளை முன்வைப்பதில் கவனம் கொள்ளுகின்ற ஒன்றாகவே ஐ.நா. சபை இருக்கின்றது.

எனவே ஐ.நா.சபையின் பிரதிநிதியுடனான தமிழரசியல் கட்சிகளின் உரையாடல் அவசியமானதும் முதன்மைப்படுத்தப்பட வேண்டியதும் ஒன்றாகும். ஆனால் அத்தகைய சந்திப்புகள் மட்டும் தீர்வுகளை தந்து விடாது என்பது தமிழ் அரசியல் தரப்பினருக்கு முன் வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கையாகும். தமிழரசியல்; கட்சிகள் ஐ.நா. பிரதிநிதிகள் மட்டும் சந்திப்பவர்கல்ல. நாடுகளின் தூதுவர்களோடும் பிற தரப்புக்களோடும் உரையாடுவது என்பது முழுமையான அரசியல் நடவடிக்கை இல்லை என்பதையும் அது எதுவும் சாத்தியமான பயனைத் தராது என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இதற்கு ஜனநாயக ரீதியான போராட்ட செய்முறைகளை முதன்மைப்படுத்துகின்றபோது மட்டுமே ஏதாவது மாற்றம் ஒன்றை ஈழத் தமிழர்கள் அடைய முடியும். அதுவே தமிழ் கட்சிகளுக்கும் முன்னே இருக்கும் பிரதான சவாலாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: யாழ் தினக்குரல்)