ஈழத்தமிழரின் இனப்பிரச்சனைக்கான தீர்வு 2009 க்கு பின்னர் உரையாடப்படாத ஒன்றாகவே காணப்பட்டது. அகிம்சைப் போராட்டமும் ஆயுதப்போராட்டமும் முடிபடைந்த நிலையில் கடந்த 16 வருடங்களாக ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகள் மௌனமாக ஏமாற்றுத் தனங்களுக்கு ஈழத்தமிழரை பலியிட்ட சூழலே காணப்பட்டது. தென்னிலங்கை எந்த தீர்வையும் வழங்காத நிலையும் சர்வதேச வல்லரசுகளும் பிராந்திய அரசுகளும் தீர்வை நோக்கி முன்ன நகர முடியாத நலன்களுக்கு உட்பட்டு இருக்கின்ற போக்கும் காணப்பட்டிருந்தது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பிற்பாடு முதல் தடவையாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ் தேசியப்; பேரவை தமிழகத்தை நோக்கி ஈழத்தமிழர் கோரிக்கையுடன் நகர்ந்துள்ளது. இதனை மிக நீண்ட காலமாகவே மேற்கொள்ள வேண்டிய தமிழரசியல் தலைமைகள் தற்போது முன்னெடுத்திருப்பது அரசியல் ரீதியில் குறிப்பிடத்தக்க விடயமாகவே தெரிகின்றது. இக்கட்டுரையும் தமிழ் தேசியப் பேரவையின் தமிழகம் நோக்கிய அரசியல் நகர்வு ஏற்படுத்தக்கூடிய முக்கியத்துவத்தை தேடுவதாக அமைந்துள்ளது.
18.12.2025 தமிழ் தேசியப் பேரவையினர் ஈழத்தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை தமிழ்நாட்டு முதலமைச்சரை சந்தித்து முன்வைத்ததுடன் உரையாடல் ஒன்றினைத் தொடக்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைமை ஏனைய தமிழக கட்சிகளின் தலைமைகளோடு உரையாடல் ஒன்றுக்கான திட்டமிடல்களை மேற்கொண்டு வருகின்றனர். விடுதலைப்புலிகளின் இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்கு பின்னர் ஓர் அரசியல் நகர்வு முதல் முதலாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான அடிப்படைகளையும் அதன் விளைவுகளையும் பரிசீலிக்க வேண்டிய தேவைப்பாடு அவசியமானது.
முதலாவது இலங்கையின் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினை என்பது தேசிய இனப் பிரச்சினையாகும். உலகளாவிய அரசறிவியலில் தேசிய இனப்பிரச்சினை என்பது சர்வதேச அரசியல் பிரச்சினையாகும். அது சர்வதேச அரசியல் பிரச்சினை என்பதால் பிரச்சினைக்குரிய தீர்வுகளும் சர்வதேச மட்டத்தில் அணுகப்பட வேண்டியது ஒன்றாகும். அவ்வகை அணுகலுக்கான திறவுகோல் ஈழத்தமிழருக்கு தமிழகம் என்பதை மறுக்க முடியாது. இது தொடர்பில் வரலாற்று ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு 2006 ஆம் ஆண்டு சென்னை திறவுகோல் என்ற தலைப்பில் ஊடகங்களுக்கு ஆழமான ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆயுதப்போராட்டத்தின் மிகப் பிரதான வகிபங்கை தமிழகம் வழங்கியிருந்தது. தமிழகமே இந்தியா சார்ந்த கொள்கையில் மாற்றத்தைச் செய்யக்கூடிய திரட்சி பெற்ற மக்களைக் கொண்ட அரசியல் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றது என்பது மறுக்க முடியாது. ஆயுதப் போராட்டத்தின் முடிபினை சரி செய்வதற்குரிய மக்கள் திரள் அரசியல் தமிழகத்துக்கே உண்டு என்பதை காலதாமதமாக தமிழ் அரசியல் தலைமைகள் உணர்ந்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அத்தகைய உணர்வை அடைந்திருக்கின்றது என்பது முக்கியமான அரசியலாகும். கடந்த காலங்களில் இந்தியாவையும் இந்தியா சார்ந்து கருத்து சொல்பவர்களையும் அதிகமாக விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்தியாவை நோக்கி ஈழத்தமிழருடைய தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வையும் சமஸ்டிக்குரிய கோரிக்கையும் மீனவர் பிரச்சினை தொடர்பான அம்சங்களையும் தமிழகம் முதலமைச்சரோடு எதிர்க்கட்சியினரோடும் இதர கட்சிகளோடும் அமைப்புகளோடும் உரையாடி வருகின்றமை முக்கியமானதாகவே தெரிகிறது. இது ஒரு ஆரோக்கியமான அரசியல் பயணமாகவே கருதப்பட வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் மௌனிப்பிற்கு பின்னர் ஆரோக்கியமான அரசியலை ஈழத்தமிழர்கள் தமிழகத்தை நோக்கி நகர்த்தியுள்ளனர். தமிழகமே ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தில் பின் தளமாகவும் இருதய நிலமாகவும் காணப்பட்டது. ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்திய அனைத்து ஆயுதப் போராட்ட தலைமைகளும் தமிழகத்தை விட்டு வெளியேறிய பின்னரே படுகொலை செய்யப்பட்டனர். அவ்வாறே சிறிபெரும்புதூரில் ராஜீவ்;காந்தியின் படுகொலை நிகழ்ந்த பின்னர் ஈழத்தமிழர் அரசியல் தனி நாட்டுக்கோரிய ஆயுதப் போராட்டம் என்பன படிப்படியாக வலுவிழந்தது. இந்த சூழலில் மிக நீண்ட காலமாக ஈழத்தமிழர்கள் எந்தவித பலமும் இன்றி அழித்தொழிக்கப்பட்டதோடு தொடர்ச்சியாக இருப்புக்கான அடிப்படைகளை இழக்கும் நிலையிலேயே காணப்படுகின்றனர். இதிலிருந்து மீட்;சி பெறுவதற்கான திறவுகோலை தமிழகம் நோக்கி தமிழ் தேசியப் பேரவை திறந்து வைத்துள்ளது. இது ஒரு அடிப்படையான அரசியல் தேவைப்பாடு உடைய நகர்வாகவே காணப்படுகின்றது. இதனை பாதுகாப்பதுவும் முன்கொண்டு செல்வதுவும் ஈழத்தமிழரது அசறிவியலில் தங்கியுள்ளது.
இரண்டாவது ஈழத்தமிழரின் அடிப்படை கோரிக்கைகள் இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ஆம் திருத்தச் சட்டமூலம் சார்ந்த முன் வைக்கப்பட்ட போதும் அது ஒற்றையாட்சிக்குள் அகப்பட்டிருந்தது. அதனால் அதன் அதிகார பகிர்வுக்கான சரத்துக்களும் முக்கிய அம்சங்களும் ஒற்றையாட்சியின் நிறைவேற்ற அதிகாரத்திற்குள் அழித்தொழிக்கப்பட்டது. சமஷ்டி என்பது பிரிந்து செல்வதற்கான வழிமுறை என்ற பலவீனமான உரையாடல் ஒரு பக்கம் இருக்கின்ற போது இலங்கை தீவின் அரசியல் 13 ஆவது திருத்தத்திற்கான வாய்ப்பும் அதிகாரமும் இன்றிய அடிப்படையில் உள்ளூராட்சிமன்ற அதிகாரத்திற்குள் தேசிய இனப்பிரச்சினையை முடக்கும் நிர்ப்பந்தத்துக்குள் ஈழத்தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை தீர்த்துக் கொள்கின்ற வழிமுறையே இப்போது கவனத்தில் கொள்ள வேண்டியதாகவுள்ளது. ஈழத்தமிழர்கள் தனி நாட்டு கோரிக்கைகாக போராடிய போதும் அதற்கான அடிப்படை ஏதுமற்ற இனமாக மாறியுள்ளனர். புலத்தில் படிப்படியாக நிலமற்ற உரிமையாற்ற வாழ்விடங்களை இழக்கின்ற துயரத்தோடு காணப்படுகின்றனர். அத்தகைய நெருக்கடிக்கு பின்னால் ஒற்றை ஆட்சி செய்முறையே அடிப்படையானதாக தெரிகின்றது. புதிய அரசியல் யாப்பிலும் அத்தகைய ஒற்றையாட்சி அதிகார வடிவமொன்றை முழுமைப்படுத்தி விட்டால் இலகுவில் இலங்கை தீவில் இருந்து ஈழத்தமிழர் என்றொரு தேசிய இனத்தை இல்லாமல் செய்துவிட முடியும் என்ற எண்ணப்பாங்கோடு தென்னிலங்கை நகர்கிறது. தென் இலங்கை இந்திய உதவிகளைப் பெற்றுக் கொண்டு ஈழத்தமிழர்களை அழிப்பதில் வெற்றி கண்டு வருகிறது. ஜே.வி.பி.அரசாங்கமும் கடந்த கால அரசாங்கங்களை விட மேலும் தீவிரமான அணுகுமுறை ஒன்றுக்குள் பிரவேசிக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழர்கள் கோரிக்கை சாத்தியமோ இல்லையோ அதுவல்ல பிரச்சினை. தற்போதைய ஆக்கிரமிப்பையும் தேசிய இன அடையாளத்தை அழிக்கும் நடைமுறையையும் தடுத்து நிறுத்துவது அவசியமானது. எதார்த்தத்தை கைவிட்டு கற்பனைகளிலும் 2009 களுக்கு முன்னர் இருந்த வலிமை உடன் இருப்பதாகவும் கருதிக் கொண்டு தேசிய அடையாளத்தை இழக்கின்ற ஒரு துயரத்தை விட ஈழத்தமிழரது இருப்பையும் நிலத்தையும் அதில் வாழ்வதற்கான பண்பாட்டையும் பாதுகாப்பதற்கான வழிமுறையை பேணுவதற்கான புறச்சூழலை உருவாக்குவது அவசியமானது. மீனவர் சார்ந்த எழுந்திருக்கின்ற மோதல் என்பது தமிழகத்திலிருந்து ஈழத்தமிழர்களை அந்நியப்படுத்துவதற்கான அரசியல் உத்தி என்பதை அடையாளம் காண முடிகின்றது. மீனவர்களின் வாழ்வும் இருப்பும் கேள்விக்குள்ளாக்கப்படும் துயரம் முடிபுக்கு அரசாங்கம் ஒருபோதும் கொண்டுவராது என்பதையும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். அதனை கையாளுவதற்காகவே தமிழர் பேரவை நகர்ந்து உள்ளது. அதன் சந்திப்புக்களும் அது முன் வைத்திருக்கின்ற கோரிக்கைகளும் சார்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பால் ஓர் அரசியல் ரீதியில் முன்னெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. தமிழகத்தின் திரட்சி என்பது ஈழத்தமிழர்களின் இருப்பை பாதுகாக்க கூடியது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு புதுடெல்லி எவ்வாறு வளைந்து கொடுத்ததோ அதேபோன்று ஒரு சூழலை தமிழகம் மூலம் புதுடில்லியில் சாத்தியப்படுத்த முடியும். புதுடில்லி சாத்தியப்படுமாக இருந்தால் உலகத்தின் பார்வையை திசைதிருப்ப முடியும். இந்திய பொருளாதார நலன்களோடும் வாய்ப்புகளோடும் பிணைக்கப்பட்டு இருக்கும் சர்வதேச நாடுகள் அத்தகைய கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாததாகும். இஸ்ரேல் அமெரிக்காவுக்கூடாக உலகத்தை அணுகுவது போல் ஈழத்தமிழர் தமிழகத்திற்கூடாக இந்தியாவையும் இந்தியாவுக்கூடாக உலகத்தையும் அணுக முடியும்.
எனவே ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமை தமிழகம் நோக்கி எடுத்து வைத்திருக்கும் அடி என்பது முதல் அடியாகவே கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் பேரழிவுக்கு உதவும் அமெரிக்காவின் இராணுவ சரக்கு விமானங்களை நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்ட சூழலில், சீனா மக்கள் காங்கிரஸ்ன் துணைத் தலைவர் கொழும்புக்கு விஜயம் செய்த பின்னர் இந்தியா நோக்கி ஈழத்தமிழ் அரசியல் தலைமை நகர்ந்து இருப்பது என்பது இராஜதந்திர உத்தியாகவே தென்படுகிறது. இது பொருத்தப்பாடுடைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற அரசியலாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழர் தேசியப் பேரவை முன்வைத்த கோரிக்கைக்கு எத்தகைய பதில் கிடைக்கும் என்பது ஈழத்தமிழர்களுக்கு நன்கு தெரியும். இங்கு கோரிக்கையல்ல முக்கியம் அதற்கான அரசியல் நகர்வே பிரதானமானது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
