இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை நோக்கிய அரசாங்க மட்ட நகர்வுகள் தெளிவற்ற வடிவத்தை தருகிறது. ஆட்சியாளர்கள் எதிர்கட்சி ஆளும் கட்சி என்ற வேறுபாடின்றி ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைக்க முயலுகின்றதை அவதானிக்க முடிகிறது. பாராளுமன்றநமும் நிறைவேற்று அதிகாரமும் மோதிக் கொள்ளவது போல் காணப்பட்டாலும் அடிப்படையில் அனைத்துமே ஆளும் தரப்பாகவே தெரிகிறது. மக்களது போராட்டங்களும் அத்தகைய சக்திகளால் பலவீனப்படுத்தப்படுவதும் எழுச்சிகளையும் போராட்டங்களையும் கட்சி அரசியலுக்குள் நகர்த்த முயல்வதையும் காணமுடிகிறது. இதில் சிறுபான்மைத் தேசியங்களும் அத்தகைய ஆளும் தரப்புக்குள்ளேயே இயங்க முயலுகின்றனர். இக்கட்டுரையும் பாராளுமன்றம் சீர்திருத்துவதற்காக முன்வைத்துள்ள 21 வது திருத்தச்சட்ட மூலத்தின் உள்ளடக்கத்தால் ஏற்படப் போகும் விளைவுகளைத் தேடுவதாக உள்ளது.
21 வது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கத்தில் இரண்டு பிரதான விடயங்கள் ஊடகப்பரப்பில் அதகம் உரையாடப்படுகிறது. ஒன்று ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்வதற்கதன சட்டபிரமானங்கள் பற்றியவிடயம். ஜனாதிபதி தெரிவிலிருந்து பதவி வறிதாகும் வரையான விடயங்கள் சட்டமூலத்தில் முன்வைக்கப்பட்டு;ளளது. அதாவது சம்பிருதாயபூர்வமான பெயரளவு ஜனாதிபதி பற்றிய உரையாடலாகவே தெரிகிறது. பாராளுமன்றத்தால் தேர்தெடுக்கப்படும் ஒருவரே ஜனாதிபதியாக பதவி வகிப்பதன் முக்கியத்துவத்தையே அவரது அதிகாரம் சார்ந்து உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கை மீண்டும் ஒரு பாராளுமன்ற செய்முறைக்கு உட்படும் நாடாக மாறவுள்ளமை தெரிகிறது. ஆனாலும் போர் சாமாதானத்திற்கான பிரகடனத்தை செய்பவராக ஜனாதிபதியே உள்ளமை திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஊடகப் பரப்பில் அதிகம் பேசப்படும் இரட்டைக் குடியுரிமை உடையவரது பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கம் பற்றிய விடயம் காணப்படுகின்றது. அது அதிகம் 21 வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்ற வாதம் பொதுஜனப் பெரமுனாவினால் முன்வைக்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவற்றைக் கடந்து ஆணைக்குழக்கள் பற்றிய உரையாடலே முதன்மைப்படுத்தப்பட்டுவருகிறது.
இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது ஓர் அரசியல் பொருளாதாரம் சார்ந்ததென்பது அறிவுபூர்மாக தெரிந்த விடயம். 21 வது சீர்திருத்தத்தின் உள்ளடக்கத்தை அவதானித்தால் அது வெறுமையாக அரசியல் அதிகாரம் பற்றியதாகவே உச்சரிக்கப்படுகிறது. இலங்கைத் தீவில் இன்று உள்ள நெருக்கடி பொருட்களுக்கான தட்டுப்பாடும் நாணயப் பெறுமானத்திலுள்ள சரிவுமேயாகும். நாணயப் பெறுமானத்திலுள்ள சரிவானது பொருட்களின் விலையேற்றத்தையும் இறக்குமதிக்கான நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்கான மேலதிகமான காரணங்களாக அரசாங்கங்களின் பிழையான பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல நீண்ட இனப்பிரச்சினைக்கான தீர்வற்ற செய்முறையும் இராணுவ மயமாக்கத்துடன் கூடிய ஊழலும் பிரதான காரணமாகும். ஆனால் இத்தகைய நெருக்கடிகள் எவற்றுக்கும் தீர்வு வைக்காத வரைபை சட்டவல்லுனர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்திருப்பதே வேடிக்கையானது. மக்கள் படும் துயரத்தை கையாளும் அரசியல் உத்திகளையே தற்போதைய அரசியல்வாதிகள் செயல்பாடுகள் காணப்படுகின்றது. மக்களது பிரச்சினைகளை தமது அதிகாரப் பிரச்சினையாகவும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான விடயமாகவும் கையாளும் போக்கினையே ஒவ்வொரு அரசியல் வாதிகளுதம் மேற்கொண்டுவருகின்றனர். மக்களை ஏமாளியாக்கும் அரசியலை கச்சிதமாக மேற்கொள்ளும் திறன் இலங்கைத் தீவிலுள்ள அரசியல் வாதிகளுக்கு அதீதமான உள்ளது என்பதை மீண்டும் ஒரு தடவை நிறுவியுள்ளனர். மக்கள் பொருளாதாரத் தேவையை முன்வைக்காத வரைபை வைத்துக் கொண்டு எவ்வாறு பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க முடியும் என்பதே பிரதான கேள்வியாகும். நிச்சயமாக இது அதிகார போட்டிக்கான வரைபாகவே தெரிகிறது. அதில் ஓரிடத்திலாவது உற்பத்தி சந்தைவாய்ப்பு ஏற்றுமதி இறக்குமதி சார்ந்ததோ நாணயப் பெறுமானம் சார்ந்ததாகவோ வரைபு அமைக்கப்பட வில்லை.பட்டிணிச்சாவை தவிர்க்க எத்தகைய உள்ளடக்கமும் வரைபில் இல்லை. மாறாக அதிகார போராட்டத்திற்கான உள்ளடக்கமே வரிக்குவரி முதன்மைப்படுத்தியுள்ளனர். இத்தகைய ஏமாற்றுத் தனத்தை அரசியல் என உரைக்க அரசியல்வாதிகள் முயலுகிறார்கள். அது மட்டுமன்றி இன்றைய பொருளாதாரப் பிரச்சினைக்கு மூலவேராக உள்ள இனப்பிரச்சினைசார்ந்து எத்தகைய உள்ளடக்கமும் வரைபில் காணப்படவில்லை.ஆனால் இவ்வரைபை மேற்கொண்ட அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் டொலர் மட்டும் தேவையாக உள்ளது.
இலங்கைத் தீவு அரசியல் பொருளாதார ரீதியான கொள்கைகளை உருவாக்குவதில் தோல்வி கண்டுள்ளது. அதற்கான புலமைத் தளத்தையும் கற்கைப்பாரம்பரியத்தையும் ஏற்படுத்துவதிலும் முழுமையான வளர்ச்சியை எட்ட முடியாத தேசமாக உள்ளது. இலங்கைத் தீவின் இடது சாரிகளும் வலது சாரிகளும் ஒரே விதமான் மனோநிலையைக் கொண்டவர்களாகவே உள்ளனர். அவர்களிடம் இடது வலது என்ற அணிப் பாரம்பரியம் மட்டுமே உள்ளதே அன்றி சரியான அரசியல் பொருளாதாரக் கொள்கை கிடையாது. எல்லாத் தரப்பும் அதிகாரத்திற்கான தரப்பே அன்றி மக்களுக்கான தரப்புக் கிடையாது. போலித்தனமான அரசியலுக்குள்ளும் மதவாத சிந்தனைக்குள்ளும் இனவெறித்தனமான அரசியலுக்குள்ளுமே அனைத்துத் தரப்பும் பயணிக்கின்றது. எத்தகைய அரசியல் கோட்பாட்டுக்கும் நியமத்துக்குள்ளும் உட்படாத தேசமாக உள்ளது. அரசியல் வாதிகளது ஊழலையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் கடந்த காலத்தில் நிகழ்ந்த தமிழ் மக்களுக்கு எதிரான போர்களே பாதுகாத்தன. அத்தகைய போருக்குள் மறைந்து கொண்ட அரசியல்வாதிகள் ஊழலைத் தவிர வேறு எதனையும் அவர்கள் முதன்மையாகக் கொள்ளவில்லை. அத்தகைய போர்களே இலங்கைத் தீவின் இருப்பினைப் பாதுகாத்ததே அன்றி ஆட்சியாளரது கொள்கைகளோ திட்டமிடல்களே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதனைத் சற்று விரிவாக நோக்குவது அவசியமானது.
ஒன்று, இருப்தியோரவது திருத்தச் சட்டமூலம் அரசியல் பொருளாதார அடிப்படையில் எத்தகைய பெறுமானத்தையும் கொண்டிருக்காத ஒன்றாக அமைந்துள்ளது. அத்தகைய வரைபினால் இலங்கைத் தீவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு எதனையும் ஏற்படுத்த உதவாது.அதன் உள்ளடக்கங்களில் பொருளாதார மீட்சிக்கான கட்டமைப்பே நடைமுறைக்குரிய பெறுமானங்கள் எதனையும் கொண்டிராத போது இலங்கையின் மீட்சி சாத்தியமாகாது. மக்கள் மீதான பொருளாதமாச் சுமை அதிகரிப்பதற்கான சூழல் ஏற்படுமே அன்றி தீர்வு எதுவும் சாத்தியமாகாது.
இரண்டு, ஒற்றையாட்சிக் கட்டமைப்பை கடந்து இருபத்தியோரவது வரைபு எதனையும் கொண்டிருக்கவில்லை. இனரீதியான முரண்பாட்டுக்கு தீர்வு வைக்காத எந்த அரசியலமைப்பும் இலங்கைத் தீவுக்கான சுபீட்சத்தை சாத்தியப்படுத்தாது. இது நாணயப் பெறுமானத்தில் மாற்றத்தையோ டொலரின் வருகையையோ உத்தரவாதப்படுத்தாது. மறுபக்கத்தில் உள்நாட்டு உற்பத்தியில் தமிழ் மக்களது பங்களிப்பு பலவீனமாகவே அமையும். வடக்கு கிழக்கில் இராணுவ கட்டமைப்பு விருத்தியும் அதற்கான அரசியல் செய்முறையுமே தொடரும். அதனால் எத்கைய மாறுதலுக்கும் வழியமைக்காது. ஒட்டுமொத்தத்தில் இலங்கைத் தீவு மீளவும் நெருக்கடித் தீவாக மாறும்.
மூன்று, இருபத்தியோராவது சீர்திருத்தம் அரசியல்வாதிகளதும் போலி அரசியலினது இருப்பு பாதுகாப்பதற்கானதாக அமையவுள்ளது. அதிலும் தற்போதைய பாராளுமன்றமும் அதன் அதிகாரக் கட்டமைப்பும் ஜனாதிபதியினதும் குடும்ப அரசியலதும் இருப்பும் பாதுகாப்பதற்கான நகர்வாவே தெரிகிறது.அது மட்டுமல்லாது அத்தகைய தரப்பின் கடந்த கால ஊழல்களை பாதுகாக்கும் செய்முறையாகவே உள்ளது.
நான்கு, 21 வது வரைபில் இல்லாத விடங்களைப் பற்றிய அதிக விவாதங்களை ஊடகப்பரப்பில் அரசியல் வாதிகள் ஏற்படுத்திவருகின்றனர். இதுவும் இத்தகைய வரைபை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தியாகவே தெரிகிறது. அதிகம் நடைமுறைச்சாத்தியமற்றவற்றை உரையாடுவதன் மூலம் சாத்தியமானவற்றை மறுதலிக்க அரசியல் வாதிகள் முயலுகின்றனர். அதில் ஒன்றாகவே இரட்டைக் குடியுரிமை விவகாரம் அமைந்துள்ளது. இதன் விளைவுகளாகவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நான்கு பிரதான விடயங்களை புதிதாக முன்வைத்துள்ளது. அது பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படடுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது நாணயசபை உறுப்பினர்களது நியமனம்,முக்கிய இராஜதந்திரிகளும் செயலாளர்களும் பிரதமர் மற்றும் அமைச்சவையின் அனுமதியுடன் நியமித்தல், ஜனாதிபதியின் பொது மன்னிப்புகள் அரசியலமைப்பு பேரவையின் சிபார்சினால் ஏற்படுத்தப்படுதல், நிதியைக் கையாளும் தரப்பிடம் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறுதல் அமைதல் வேண்டும் என தெரிவித்துள்ளது.
எனவே இருபத்தியோராவது அரசியலமைப்பு சீர்திருத்தம் அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்திருத்தாததென்றாகவே உள்ளது. அது அரசியல்வாதிகளது பாதுகாப்பையும் நலனையும் உத்தரவாதப்படுத்துவதாக உள்ளதே அன்றி மக்களது நலனுக்குரியாதாக அமையவில்லை. தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு தீர்வை எட்டாத வரையும் இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார நெருக்கடி தீர்வு சாத்தியமாகாது. வேண்டுமாயின் தற்காலிக தீர்வுகளுக்கு செல்லலாமே அன்றி நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த முடியாது. உலகவரலாற்றில் நெருக்கடியான போதே தீர்வுகளும் சாதகமான முடிபுகளும் எட்டப்பட்டுள்ளது. அத்தகைய அனுபவத்தை இலங்கைத் தீவின் அரசியல்வாதிகள் முன்னெடுக்க முயலுதல் வேண்டும்.
-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
