நூல் குறிப்பு
நூல் தலைப்பு: சர்வதேச அரசியல்: சில பார்வைகள்
நூலாசிரியர்: கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்
முதற் பதிப்பு: 2010
பதிப்பாளர்: சதபூ. பத்மசீலன்
வெளியீடு : சேமமடு பொத்தகாலை | கொழும்பு -11.
அச்சிடல்: சேமமடு பதிப்பகம்| கொழும்பு -11.
மின்நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தை அழுத்தவும் (Click செய்யவும்):
ஆசிரியர் உரை
அரசியல் என்ற அம்சம் ஒவ்வொரு நாட்டின் அரசியல் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ளது. உலகில் எந்த அரசும் தனியனாகவோ, அல்லது தனித்துவமாகவோ செயல்பட முடியாத இயங்கியலுக்குள் வாழ்கின்றன. ஆனால் இன்றுமே “அரசு” என்ற அமைப்புக்குள் அகப்பட்ட விதத்தில் இயங்கும் அரசியல் தன்மையை சர்வதேச அரசியலில் காணமுடிகிறது. சர்வதேச அரசியல் கோட்பாட்டினை உருக்கிய காலம் முதல் மாறுதலுக்குரிய அம்சமாக செயல்பட்டுவரும் அரசுகளும் அவற்றின் தொழில்பாடுகளும் தனித்துவமிக்க ஒழுங்கை பேணுகின்றன. சர்வதேச அரசியல் என்ற சொற்பிரயோகத்தில் உள்ள வலிமை சற்று தணிந்து உலக அரசியல் என்ற முக்கியத்துவம் எல்லாக் கோட்பாட்டு ஆய்வுகளாலும் ஆய்வாளர்களாலும் சுட்டப்படுகிறது. ஆனால் அவ்வகை சொல்லாடலின் பிரயோகம் தமிழில் மிக அரிதாகவே பிரயோகிக்கப்படுகின்றது. உலகத்தின் போக்கினை அளவீடு செய்வதும் அதற்கேற்ப கொள்கை வகுப்பதும் அரசியல் மட்டத்திற்குட்பட்ட விடயம் மாத்திரமன்று அது சாதாரண பிரஜையின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்ததொன்றாக உலக அரசியல் மாறிவிட்டது. இதனால் எல்லா பிரஜைகளும் உலக அரசியலை தெரிந்தும், விளங்கியும் அதற்கு ஏற்ப மாற்றங்களை முன்வைப்பதும் தவிர்க்க முடியாதது.
“அதிகாரம்” உலக மட்டத்தில் அரசுகளை மையப்படுத்தியதாக கொள்ளப்படும் நிலை காணப்படுகிறது. அதிகாரமே உலக அரசியலில் பிரதான இலக்காக உள்ளது. அவ்வகை அதிகாரங்கள் நிலையற்றவை என்ற பொதுப்போக்கினை அரசுகளுக்குள் மாற்றிக்கொள்ளும் பொதுப்போக்காக இனங்காணமுடியும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் வலுமிக்கதாக அமைந்திருந்த “அரசியல் அதிகாரம்” இன்னோர் காலத்தில் பிற அரசு ஒன்றிடம் கைமாற்றப்படும். அப்படியான உலகப்போக்கினை கண்டுவந்த சூழல் தற்போது மேலும் ஒரு புதிய மாறுதலை எட்டியுள்ளது. அவ்வகை மாறுதலை இனங்காண்பது மட்டுமன்றி அதற்கான இயங்கியல் விதிமுறை எவ்வாறு செயல்படுகின்றதென்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறான அடையாளத்தை உணர்ந்து. “காற்புள்ளி” ஒன்றில் “இலங்கை ஆட்சி பரப்பு” மையவாத தன்மையை எடுத்துள்ளது. அதனை புரியவைக்க முயலும் இந்நூலில் அதன் போக்கு எவ்வகை நெருக்கடியையும் மாற்றங்களையும், தரும் என்பதை புறவயமாக உணரவைக்க முயலுகிறது.
பனிப்போர் முடித்த உலக ஒழுங்கு ஒரு தசாப்தகாலம் நிலைத்திருக்கவில்லை 1989-2001 வரையான காலம் அமெரிக்க மேலாதிக்க காலமாக அமைந்திருந்தது. இது செப்ரெம்பர் தாக்குதலுக்கு பின்பு கரடுமுரடான பாதைக்குள் வேகமாக நகர்ந்தது. அதன் எல்லை அதிக காலம் நீடிக்கவில்லை. அக்காலத்தில் அமெரிக்கா நெருக்கடியை எதிர்கொண்டாலும் சாதனைகளை நிகழ்த்தியது. துணிகரப் பொருளா தாரத்தையும், அரசியல் தந்திரத்தையும் பயன்படுத்தி உலக ஒழுங்கில் தனது பங்கினை நிலைநிறுத்தியது. இது 2008ஆம் ஆண்டுடன் செப்ரெம்பர் 15 முதல் மேலும் ஒரு மாறுதல் காலத்தினை ஏற்படுத்தியது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நிதிநெருக்கடி உலகப் பொருளாதார நெருக்கடியாக பரிமாணம் எடுக்கத்தொடங்கியது. இதன் விளைவாக உலகப் பொருளாதார மந்தம் படிப்படியாக அரசியல் ஒழுங்கில் புதிய சக்திகளின் வரவுக்கு வித்திட்டது.
அரசியல் எப்போதும் பல்துறைசார் பரிமாணமிக்கதொரு கற்கையாகும். அரசியலின் வெளிப்பாடு பொருளாதாரம் சார்ந்தும், புவியியல் சார்ந்தும், சமூகவியல் சார்ந்தும், மொழி, பண்பாடு, வரலாறு, தொல்லியல், தத்துவவியல் என பல்வேறு துறைசார்ந்து பரிமாணமெடுக்கும் ஓர் அம்சமாகும். இதில் எல்லாப் பரிமாணங்களின் வீச்சு எல்லையின் வேகத்தை வெளிப்படையாகக் காட்டும் விதத்தில் உடனடியாகவும், நேரடியாகவும் பொருளாதாரம் இடம்பிடிக்கின்றது. ஒருவகையில் அரசியல் பொருளாதாரம்சார் உலக மேலெழுகை தவிர்க்க முடியாததொன்றாகும். இது உலக அரசியலில் பரிமாணமிக்க ஓர் அம்சமாக பல நூற்றாண்டுகள் வரலாற்று ரீதியில் அவதானிக்க முடிந்தது. இவ்வகை அரசியல் பொருளாதாரப் போக்கினை நிர்ணயிப்பதில் புவிசார் அரசியலுக்குப் பாரிய பங்குண்டு. எந்த அரசும் தனது அரசியல் ரீதியான அங்கீகாரத்தினையும் இறையாண்மையையும் நிர்ணயிக்கவல்ல பலம் புவிசார் தளத்திலேயே தங்கியுள்ளதென்பதை உணர்ந்துள்ளன. இன்றைய உலக அரசியல் போக்கினை வடிவமைப்பதில் புவிசார் ஒழுங்குகளுக்கு பிராந்திய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் தனித்துவமான அங்கீகாரம் காணப்படுகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டே பொருளாதார விருத்திக்கான அடிப்படைகளும், இராணுவ ஒத்துழைப்புகளும் கலாச்சாரப் பாய்ச்சல்களும் நிகழ்ந்து வருகிறது. இதன் எல்லைக்குள் உலகம் இயங்கி வருகின்றது. இது உலகத்தின் இயங்கியலால் ஏற்படுத்தப்பட்ட வாய்ப்பாகும். இயற்கையின் அமைப்பு சார்ந்து மாற்றம் நிகழுமே அன்றி வேறு எந்த அடிப்படையிலும் புவிசார் தன்மையில் மாற்றம் நிகழ்வது கடினமானது. இதற்குள் அரசுகளும் இறைமை படைத்த அரசுகளும் மட்டும் அகப்படுபவையாக கொள்ளாது தேசிய இனங்களும் தேசிய இனவிடுதலைப் போராட்டங்களும் சாத்தியப்படுவனவாக உள்ளன. புவிசார் அரசியல் அரசுகளின் (Geo – Political State) நலன்களில் ஏற்படும் இலாப நட்டங்கள் அந்தந்த பிராந்திய அரசியல் வடிவத்தினை புதிய பரிமாணத்திற்கு இட்டுச்செல்லும்.
2008 செப்ரெம்பருக்கு பின்பு ஏற்கனவே வளர்ந்திருந்த சீனாவும், இந்தியாவும் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு போட்டியாக களமிறங்கியுள்ளன. இதில் இந்தியாவை விட அதிக படிகளைத் தாண்டி முன்னணியில் சீனா உள்ளது. சீனாவின் பொருளாதாரப் பாய்ச்சல் அதன் அரசியல் பலத்தினை நிர்ணயிக்கும் வலிமையைக் கொண்டுள்ளது. அவ்வகை வலிமையை சீனா உடனடியாக கொண்டிருக்காதுவிட்டாலும் எதிர்காலத்தில் மிகவிரைவாக சாத்தியப்படுத்தி விடும் அதற்குள் மீழௌ வேண்டிய அமெரிக்க ஐரோப்பிய பொருளாதாரம் சிக்கலுக்குள் சிக்கியுள்ளது. அமெரிக்கா தனித்து வெளியே வரும் வாய்ப்புக் காணப்பட்டாலும் ஐரோப்பிய குடும்பத்தோடு கொண்டிருக்கும் நெருக்கத்தினால் வேகமாக வெளியே வரமுடியாத நிலைக்குள் தத்தளிக்கின்றது. ஆசியாவின் நூற்றாண்டென கூறப்படும் 21ம் நூற்றாண்டில் முதலொரு தசாப்தத்தில் சீனா இந்தியா என்பன வளர்ச்சிப்பாதையில் செல்கின்றன. இவற்றைப் போன்று பிரேசில், தென்னாபிரிக்கா என்பனவும் இந்தியா சீனாவுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுவதுடன் பொருளாதார பாய்ச்சல் கிழக்கு நாடுகளின் ஆட்சிப் பொறுப்பில் மையம் கொண்டுள்ளதை காண முடிகின்றது. 2008-2009 ஆண்டிலுருவாகிய அனைத்து சர்வதேச விடயங்களும் மேற்கு-கிழக்கு இழுபறித் தன்மையையே படம்பிடித்து காட்டியது. குறிப்பாக உலக வர்த்தக மாநாடு (WTO), வளர்ச்சியடைந்த நாடுகளின் மாநாடு (G20), காலநிலை பற்றிய மாநாடு (Capatacom Conference 2009), மனித உரிமை மீறல் தொடர்பாண ஐதா மாநாடு (Human Rights 2009) என்பனவற்றில் மேற்குக் கிழக்கு இழுபறி வளர்ந்து வருகிறது. குறிப்பாக WTOவில் பொருளாதார உற்பத்தி தொடர்பாக எழுந்த மோதல் விவசாயப் பொருட்களுக்கான முக்கியத்துவத்தைக் கொண்ட கிழக்கு தேசநாடுகளால் முன்வைக்கப்பட்டது. உற்பத்தியின் அடிப்படையில் வர்த்தகம், சந்தைப் பரிமாணம் அமைவது பற்றி அதிகம் பேசப்பட்டது. G8க்கு பதிலாக G20 உருவாக்க வேண்டிய நிலை மேற்குலகத்திற்கு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வளர்ந்த நாடுகள் என்ற மேற்குலகின் ஆதிக்கம் தகர்ந்து போனதுடன் கிழக்குடன் கூட்டுச்சேர்வதன் மூலம் தமது பொருளாதார நெருக்கடியை பங்குபோடலாம் என்ற குறுகிய கணக்கினை வரைந்து கொண்டன. இவ்வாறு காலநிலை தொடர்பாக நடந்து முடிந்த கொப்பன்கேயன் மாநாட்டிலும் சீனா – அமெரிக்கா இழுபறி வெளிப்படையாகத் தெரிந்ததுடன் இந்தியா சார்ந்த கிழக்கு நாடுகள் மேற்குலகின் காபன் (Co2) வெளியேற்றத்திற்கு எதிராக காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டன. இறுதியில் அம்மாநாடு முழுமையான வெற்றி எதனையும் எட்டாது முடிவுக்கு வந்திருந்தது. இவ்வாறே இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுத் தொடர்பாக மேற்கு நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக கிழக்கு நாடுகள் அணி சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் இந்தியாவும், செயலில் சீனாவுமாக அவ்வகை குற்றச்சாட்டிலிருந்து இலங்கையை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டமை கிழக்கு அரசியலின் கட்டமைப்பைக் காட்டுகின்றது. மேலும் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் மேற்கு கிழக்கு முறுகலும் இழுபறியும் இரண்டு பிரதான வேட்பாளர்கள் சார்ந்திருந்தது. எனவே ஒருதெளிவும் அவதானமும் புதிய ஒரு வடிவத்தின் பிரமாணத்தை காட்ட ஆரம்பித்துள்ளது. அதற்கான உலக அரசியல் போக்கின் வடிவம் “கிழக்கில் அரசியல்” என்ற சொல்லாடலுக்குள் அகப்படுத்த முடியுமாக உள்ளது. இதிலுள்ள அசௌகரிய அரசியலையும் இனங்காணத் தவறக்கூடாது. அத்தகைய கிழக்கு அரசியலுக்கு எதிரும் புதிருமாக இந்தியா -சீனா காணப்படுதல் அதிஷ்டவசமான அரசியல் விம்பங்களை எதிர்கால நோக்கில் தோற்றுவிக்க முடியும். ஆனாலும் எழுச்சி காலம் முடிவுறாத இந்தியாவின் விட்டுக் கொடுப்பு அரசியல் சீனாவின் போக்கை நிதானப்படுத்த உதவுவதுடன் சீன-அமெரிக்க போட்டி முதன்மை அடைந்துள்ளமையும் மோதலை தவிர்க்க உதவும் காரணிகளாக அமையலாம். அது இந்தியாவின் அரசியல் தலைமையைப் பொறுத்து அமையும் விடயமாக விளங்கும். எதுவாயினும் உலக அரசியலின் இயங்குதிறன் ஆசியாவிற்குள் தென்படுவதுடன் “இலங்கை” அதில் முக்கியத்துவம் பெறும் நாடாக அமைந்துள்ளது. இலங்கையின் அரசியல் தலைமைக்கு ஏற்படும் மாற்றங்கள் எதுவாயினும் அது சீனா – இந்தியா – அமெரிக்கா என்ற முத்திசைப்பரிமாணத்திற்கு இடையிலான அரசியலாகவே அமையும். இதில் வெற்றிபெறும் அணி என்பது எதுவாக இருந்தாலும் மறுமுனையில் தோல்வி அடையும் நாடுகள் இரண்டும் இலங்கை விடயத்தில் ஒன்றாகப் பயணிக்க முயல்வது தவிர்க்க முடியாதது. இது ஆரோக்கியமான இலங்கையை உருவாக்க ஒத்துழைக்குமா என்ற கேள்வியையே முதன்மைப்படுத்துகிறது.
எனவே, இந்நூலின் பரப்பெல்லை இறைமைக்கும் உலகயவாக்கத்திற்கும் இடையிலான முற்றுப்புள்ளியைக் காட்டுவதுடன் பொருள்சார் உலகத்தில் புவிசார் அரசியலின் முக்கியத்துவத்தின் உணர்வு எவ்வகைத் தாக்கத்தை ஏற்படுத்துமென்பதைக் காட்ட முயல்கிறது. விடுதலையற்ற அடிமை வாழ்வின் அரசியல் ஆதிக்கம் தேசிய பொருளாதாரத்தை குலைத்து தேசிய அரசியலினதும், தேசிய பாதுகாப்பினதும் வலிமைகளை வெளிப்படுத்தியுள்ளது. அத்தகைய தேசிய பாதுகாப்பின் வலிமை உத்தரவாதப்படுத்தும் அடக்குமுறையையும், மக்கள் எதிர்ப்பு அரசியலையும் ஆக்கிரமிப்பு சார்ந்து அடக்க உதவப்போகிறதென்பதை காட்ட இந்நூல் முயன்றுள்ளது.
இந்நூலை மிகக்குறுகிய காலத்தில் தயாரித்து வாசகர்கள் மற்றும் மாணவர் மத்தியில் முன்வைக்கிறேன். இதனை உருவாக்க உதவிய “தினக்குரல்” (யாழ்-கொழும்பு) ஆசிரியர்களுக்கும், அதன் பணியாளர்களுக்கும் மற்றும் முகாமையாளர்களுக்கும் நன்றிகள். இதைவிட எனது மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும். என்னோடு எப்போதும் உழைக்கும் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நான் எனது எண்ணங்களை வெளிப்படையாக வெளியுலகிற்கு சொல்ல முயலும் முதல்வாசிப்பாக இந்நூலை முன் வைக்கிறேன். கடந்த காலத்தில் என்னால் எழுதவும், எழுதியவற்றை வெளியிட முடியாமையாலும் சிறைப்பட்டுப்போன எனது கருத்துக்கள் ஓரளவு இந்நூலில் தெறிப்படைந்துள்ளது. புலமையாளர்களை புலமையாளராக பார்க்க முடியாத சமூகத்தினை கிரேக்க காலத்திலிருந்து இன்றுவரை அவதானிக்கின்றேன். சோக்கிரட்டீஸிற்கு நிகழ்ந்த கொடுமை போன்ற நிகழ்வுகள் இன்னுமே முடிவிற்கு வரவில்லை. எப்போது அவ்வகைப் போலியும் பொய்மையும் ஏமாற்றுத்தனமும் முடிவிற்கு வருகின்றதோ அன்றே ஆரோக்கியமான கருத்துக்கள் எமது சமூகத்தில் வெளிவரும். என்னையும் அவ்வகைக் கொடுமைக்குள் தள்ளி அவமானப்படுத்தி புலமைசார் பணியிலிருந்து அகற்றலாமென ஒரு சிலர் ஆசைப்பட்டனர். அதற்கு உதவியாக சமூகத்தில் முதன்மை வகிப்பவர்களாக தம்மைக் கூறிக்கொள்பவர்கள் உடந்தையாக இருந்தனர். இவர்களுக்கெல்லாம் சமகாலம் பதில் சொல்ல ஆரம்பித்துள்ளது. காலத்திற்கு எல்லோரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
கே.ரீ. கணேசலிங்கம்