சர்வதேச அரசியலில் அரசுகளுக்கிடையிலான உறவில் தாக்கம் செலுத்துமோர் கோட்பாடாக பூகோள அரசியல் காணப்படுகிறது. பூகோள அரசியல் என்ற சொற்பதமானது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. புவியின் பரப்பில் காணப்படும் அனைத்து அம்சங்களும் ஏதோ ஒரு வகையில் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றன. அவை அனைத்தையும் உள்ளடக்கியதாகவே இச் சொல் பிரயோகிக்கப்படுகிறது. அதனுடன் இப்புவியின் வடிவமானது பல மில்லியன் ஆண்டுகள் மனித உழைப்பினால் வடிவமைக்கப்பட்டுவருகிறது. அத்தகைய மனித உழைப்பினால் உருவான அனைத்தும் பகோப்பரப்புடன் இணைந்து ஏதோ ஒரு பெறுமானத்தில் அரசியலுக்கான பின்னூட்டலாக உள்ளன. அவற்றின் உள்ளார்ந்த வரலாற்று தடங்களை பூகோள அரசியல் என்ற சொல் உள்ளடக்கியுள்ளது. உலகின் பல்வேறு தரப்பினருக்கிடையிலான உறவுகள், அந்த உறவுகளின் பண்புகள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றியதாகும். பூகோள அரசியல் சர்வதேச ரீதியில் நாடுகளிடையிலான தொடர்புகள் மற்றும் அரசியல் சமூக பொருளாதார உறவுகளின் கூட்டுத் தன்மையை வலிமைப்படுத்துவதாக அமைகிறது. நாடுகளுக்கிடையிலான உறவுகளில் முதன்மை பெறும் வர்த்தகம், கலாசாரம், சுகாதாரம், மத நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் சூழலியலில் ஆகியவற்றில் பூகோள அரசியல் அதிக கவனத்தை செலுத்துகிறது.
பூகோள அரசியல், ஒரு தேசிய எல்லையை கடந்து பிராந்திய மட்டத்தை மட்டும் சராது முழு புவிக் கோளத்திலும் செல்வாக்குச் செலுத்தும் அரசியலாகக் விளங்குகிறது. சமீபத்திய தசாப்தங்களில், அரசியலின் உலகளாவிய அல்லது உலகளாவிய பரிமாணம் அதிகம் கொண்டதாக மாறியுள்ளது. வளர்ந்து வரும் பல அரசியல் பிரச்சினைகள் ஒரு ‘பூகோள’ தன்மையைப் பெற்றுள்ளன. அத்தகைய பிணக்குகளும் பூகோள ரீதியிலேயே தீர்வை பெறுவதாக மாறியுள்ளது. அதில் அத்தகைய அரசியல் நடவடிக்கைகளுக்குள் ஒரு தொடர்பும் இணைவும் நிலவுகிறது. அத்தகைய அரசியல் நலன்கள் பூகோள பரிமாணத்தை அடைந்துவிட்டன. இது சாத்தியமான உலகின் அனைத்துப் பகுதிகளையும் மற்றும் அனைத்து மக்களையும் அப்பகுதிகளில் காணப்படும் வளங்களையும் உட்படுத்தி இயங்குகிறது. மனித சமூகமானது பூகோளம் தளுவிய இயங்கு விசைகளுக்குள் செயல்பட்டுள்ளது. இது இயல்புவாதம் தாராளவாதம் நவீனத்துவம் நவதாராளவாதம் சார்பியல்வாதம் தேசியவாதம் மற்றும் உலகளாவியவாதம் போன்ற கோட்பாடுகளின் உள்ளடக்கத்தை அதிகம் பிரதிபலிகிறது. பூகோள அரசியல் (Global Politics) உலகளாவிய அரசியல் (World Politics) என்று அழைக்கப்படுவது போல் அதன் இயல்பூக்கமானது உலகமயவாக்கம் (Globalization) அல்லது பூகோளவாதம் (Globalism) எனவும் பரிமாணமடைந்துள்ளது.
(ஆதாரம்: மு.திருநாவுக்கரசு (2018) பூகோளவாதமும் புதிய தேசியவாதமும். தமிழாய்வு மையம் இலங்கை-பிரித்தானியா)