June 28, 2026
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்காவின் பலவீனம் ஈரானுடனான இராஜதந்திர உரையாடலிலும் வெளிப்படுகிறதா?

ஈரான் அமெரிக்க முதல் கட்ட பேச்சு வார்த்தை நிறைவு பெற்ற நிலையில் அதிக மாற்றங்களை மேற்காசியா மட்டுமல்ல உலகமே எதிர்கொண்டு வருகிறது. உலகளாவிய ரீதியில் பெற்றோலியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்ததுடன் ஏனைய பொருளாதாரத்திற்குமான இருப்பு சதகமானதாக மாறிவருகிறது. அமெரிக்கா தனது இயலாமையின் வெளிப்பாடுகளை மறைப்பதற்கு ஊடகப் பரப்பை அதிகம் பயன்படுத்திக்கொண்டாலும் நடைமுறையில் ஈரானின் இராஜந்திர அணுகுமுறை வலுவான வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஈரானின் பொருளாதாரத்தை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சாத்தியப்படுத்த உதவும் என்பது உணரப்படுகிறது. ஆனாலும் மீண்டும் ஒரு போர்க்களத்தை அமெரிக்கா ஈரான் மீது திறந்துள்ளது. இக்கட்டுரையும் ஈரான் அமெரிக்க பேச்சுவார்த்தையின் நகர்வுகளை மதிப்பீடு செய்ய முயலுகிறது.

முதலில் ஈரான் அமெரிக்கப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் பற்றி கவனத்தில் கொள்வது அவசியமானது. குறிப்பாக ஹமூர்ஸ் நீரிணை உலக நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்படுதல் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. அவ்வாறே செறிவூட்டப்படும் யுரேனியத்தை மட்டப்படுத்தவும் அதன் மேற்பார்வைக்கு சர்வதேச அணுசக்தி ஆணையகத்தை பயன்படுத்த வேண்டும் என்பதும் பிரதான அம்சமாக இருந்தது. ஈரான் தரப்பில் முடங்கி இருக்கும் தமது சொத்துக்களை விடுவிக்கவும் உலகளாவிய ரீதியில் ஈரானுக்கு விதிக்கப்பட்ட பெற்றோலிய ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதும் ஈரானின் மீள்கட்டுமானத்துக்கான நிதியினை வழங்குவதும் முக்கியமான கோரிக்கையாக இருந்தது. இவற்றின் முக்கியத்துவத்தை அவதானிப்பது அவசியம்.

முதலாவது அமெரிக்காவின் கோரிக்கைகள் ஈரானால் அங்கீகரிக்கப்பட்டது என்பதை விட கையாளப்பட்டதென்று குறிப்பிட முடியும். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைவிட முடியாது என்ற ஈரானிய ஜனாதிபதின் அறிவிப்பு முக்கியமான செய்தியாகவே தெரிகின்றது. பதிலுக்கு ஹமூர்ஸ் நீரிணை திறக்கப்படுதல் முக்கியமான தேவையாக அமெரிக்காவுக்கு காணப்பட்டது. அதனால் அமெரிக்கா அதிகம் பேச்சுவார்த்தைகளில் முதன்மைப்படுத்திய விடயமாக ஹர்மூஸ் நீரிணை திறத்தல் என்பதாக இருந்தது. அதனை ஈரான் ஒப்புக் கொள்கின்ற போது உலகம் மட்டுமல்ல ஈரானும் தமது பெற்றோலியத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை அடைந்து கொண்டது. உலகம் முழுவதும் ஈரானின் பெற்றோலிய ஏற்றுமதி செய்யப்படுகின்ற ஒரு நிலையை சாத்தியப்படுத்தியது. அது மட்டுமன்றி ஓமானையும் ஈரான் ஹமூர்ஸ் விடயத்தில் தன்னுடன் சேர்த்துக் கொண்டது. ஓமான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம். ஓமான் வெளியுறவு அமைச்சர் பத்ர் பின் ஹமத் அல் புசைதி (Badr bin Hamad Al Busaidi)மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi )ஆகியோர், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்களை அடைவதை பற்றிய கூட்டு ஒத்துழைப்புக்கான ஒரு வழிமுறை குறித்து புரிந்துணர்வை எட்டினர் எனக் குறிப்பிட்டுள்ளது. ஹார்மூஸ் நீரிணை வழியாக புதிய கப்பல் வழித்தடம் அமைப்பதை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை நிராகரித்துள்ளதுடன், அதனைப் பயன்படுத்தும் எந்தவொரு கப்பலும் ஆபத்தில் சிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்ல வேண்டிய கப்பல்கள் மற்றும் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்திற்காக, அமெரிக்கா ஒரு மாற்று வழித்தடத்தை நிர்ணயிக்க முயற்சிப்பதன் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாக ஈரான் நம்புகிறது, ஒப்பீட்டு ரீதியில் அமெரிக்காவை விட ஈரான் தனது பெற்றோலிய ஏற்றுமதியையும் பொருளாதார தடையையும் போருக்கு பின்னர் வெற்றிகரமானதாக கையாண்டுள்ளதாகவே தெரிகிறது.

இரண்டாவது ஈரான் கோரியது போன்று சர்வதேச மட்டத்தில் முடக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை அமெரிக்கா விடுவிப்பதற்கு அனுமதிக்கும் நிலையை எட்டியுள்ளது. ஆனால் அமெரிக்கத் தரப்பானது சொத்துக்களை Escrow முறையின் படி பேணப்படும் என விவாதிக்கிறது. Escrow என்பது ஒரு சட்ட முறைமை மட்டுமன்றி நிதி ஏற்பாடாகும், இதில் ஓர் ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை நடுநிலையான மூன்றாம் தரப்பினரிடம் பணம், சொத்து அல்லது ஆவணங்களைத் தற்காலிகமாக வைத்திருக்கும் செய்முறையாகும். இது பெரிய பரிவர்த்தனைகளில் வாங்குபவர்கள் மற்றும் வழங்குபவருக்கு உள்ள அபாயத்தைக் குறைப்பதாகும்.. இது தொடர்பில் இரு தரப்பிற்கும் இடையில் முரண்பாடு நிலவினாலும் பேச்சுவார்த்தையில் ஈரான் நகர்த்தும் உத்தியைக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. ஈரானின் வெளியுறவு அமைச்சக பேச்சாளர் இஸ்மாயில் பாகாஜி ஹமானே (Esmaeil Baghaei Hamaneh) 23.06.2026 இல் தெரிவித்த போது ஈரானை அமெரிக்க உணவுப் பொருட்களை மட்டுமே வாங்க கட்டாயப்படுத்தும் வகையில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றும் விடுவிக்கப்படும் சொத்துகள் முழுமையான சுதந்திரத்துடன் ஈரானால் பயன்படுத்தப்படும் என்றும், நாட்டின் தேவைக்கேற்ப நிதியை பயன்படுத்தப்பட முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க தரப்பில் முன்வைக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் அமெரிக்க விவசாயப் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை நிராகரிப்பதாக உள்ளது. இதனால் முடக்கப்பட்ட சொத்துக்களை பயன்பாடு ஈரானுக்குட்பட்டதே அன்றி நிபந்தனைக்கு உட்பட்டதல்ல. பஹ்ரைனின் மனாமா நகரில் நடைபெற்ற சந்திப்பின்போது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC ) நாடுகளுடன் ஈரானுக்கான புனரமைப்பு நிதி குறித்து விவாதிக்கப்படவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளமை கவனத்திற்குரியது.

மூன்றாவது ஈரானைப் பொறுத்தவரை போரை கையாண்டது போல் இராஜதந்திர உரையாடலையும் கையாளுவதில் கணிசமான இலக்கை எட்டி இருக்கின்றது. ஹாமூர்ஸ் மையப்படுத்தி பேச்சுக்களை நகர்த்தும் ஈரான் தனக்கு ஏற்பட்ட இழப்புகளையும் அதற்கான பதிலையும் மிகத் தெளிவாகவே அமெரிக்காவுக்கு முன்வைத்து வருகிறது. போரை தொடங்கிய அமெரிக்காவே போருக்கான அழிவுகளை நிவர்த்தி செய்வதும் அமெரிக்காவின் பொறுப்பு என்பதை ஈரான் தெளிவாகவே உலகத்துக்கு உணர்த்தி உள்ளது. இதனால் ஈரானின் இராஜதந்திர செயல்முறை என்பது உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் அனுபவமாக மாறி இருக்கின்றது. ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான பேச்சுவார்த்தை குழு அறிவார்ந்த ரீதியாக அமெரிக்க தூதுக்குழுவை எதிர்கொள்வது மட்டுமின்றி உலகளாவிய ரீதியில் நாடுகளையும் நாடுகளின் தலைவர்களையும் கையாளுவதில் வெற்றிகண்டு வருகிறது. குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் ஜீ-7 மகாநாட்டுக்கு பின் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சிகரமான செய்திகள் அமெரிக்கா ஐரோப்ப பிரிநிலையை சாத்தியப்படுத்தியுள்ளது. தவிர்க்க முடியாமல் அமெரிக்கா ஈரானுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தை உலக நாடுகள் மத்தியில் ஈரான் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது.

நான்காவது ஈரானின் இராஜதந்திர உரையாடலின் ஈடுபடுபவர்கள் அறிவியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முதிர்ச்சி பெற்றிருப்பது கண்டு கொள்ள முடிகிறது. ஈரானின் பாரம்பரிய மரபுகளுக்குள்ளால் கட்டி வளர்க்கப்பட்ட தலைவர்களாக காணப்படுகின்றனர். இதே நேரம் அமெரிக்கப் பேச்சாளர்கள் உப ஜனாதிபதி உட்பட அதன் பங்கெடுப்பாளர்கள் வர்த்தகர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் மட்டுமே அடையாளப் படுத்தப்படுவதோடு அமெரிக்கா பற்றியோ ஈரான் பற்றியோ அல்லது உலகம் பற்றிய தகவல்களையோ முழுமையாக கொண்டவர்களாக தென்படவில்லை. இராஜதந்திர உரையாடல் என்பது அறிவியல் சார்ந்த ஒன்று. அதை அறிவியல் பக்கங்களை நிரப்புவதில் அதிக பங்குண்டு. ஆனால் இராஜதந்திர உரையாடலில் பலவீனமுடையவர்களாகவே அமெரிக்கத் தரப்புகளின் வெளிப்பாடு காணப்படுகிறது.

ஐந்தாவது அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கம் கேள்விக்கு உட்படுத்தப்படும் சூழலில் ஈரானுக்கான வெற்றியையும் வாய்ப்புகளையும் சாதகமாக்கி உள்ளது. அதுவே ஈரானின் எழுச்சிகரமான நகர்வுக்கு அடிப்படை காரணமாகும். அமெரிக்க ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளில் வெளிப்படுத்தப்படும் பலவீனங்கள் இராணுவ ரீதியான பலவீனங்கள் இராஜதந்திர ரீதியான பலவீனங்கள் என எல்லா அம்சங்களிலும் அமெரிக்கா ஒரு நெருக்கடி மிக்க சூழலுக்குள் ஆக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்க செனற்சபையும் போரை நிராகரித்துள்ளது. இதுவே அமெரிக்க தோல்விக்கு பின்னால் இருக்கும் அல்லது நெருக்கடிக்கு பின்னால் இருக்கும் அடிப்படைக் காரணங்களாகும். இதனாலேயே அமெரிக்கா மீளவும் போரை தொடக்கியுள்ளதாக தெரிகிறது. ஹார்மூஸ் நீரிணைக்கு அருகே பனாமாக் கொடியுடன் பயணித்த வர்த்தகக் கப்பல் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா இரண்டாவது நாளாக ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தி, சிரிக் நகரம், பந்தர்-இ லெங்கே மற்றும் கெஸ்ம் தீவு ஆகிய பகுதிகளைத் தாக்கியுள்ளது பதிலுக்கு ஈரானும் தாக்குதலை நிகழ்த்திவருகிறது. இஸ்ரேல் அமெரிக்கா ஈரானுடனான போருக்கு திரும்ப வேண்டும் என திட்டமிட்டது. இஸ்ரேலின் இலக்கு தெளிவாகியுள்ளதாகவே உணரப்படுகிறது.

எனவே போருக்கு பிந்திய சூழலில் இராஜதந்திர உரையாடல் அரங்கிலும் அமெரிக்காவின் பலவீனம் உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் உணர்ச்சிவசப்பட்டு அமெரிக்கா ஈரான் மீது மீளவும் தாக்குதலைத் நிகழ்த்துகிறது. அமெரிக்க ஏற்கனவே ஈரான் மீது ஒரு போரை தொடுத்து அதன் விளைவாக பாரிய நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுள்ளது அமெரிக்கா. இஸ்ரேலின் எதிர்ப்புணர்வும் ஐரோப்பாவின் வெளிநடப்பும் அமெரிக்காவின் பலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மேற்காசியாவில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் இராஜதந்திர நெருக்கடி அதன் வீழ்ச்சிக்கான பாதையாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி: தினகரன்)