ஜே.பி.பி. அரசாங்கத்தின் ஆட்சியில் இலங்கைத் தமிழர் தொடர்பில் அதிக கரிசனையும் கவனமும் கொள்வது போல் உரையாடல்கள் காணப்படுகின்றன. அண்மையில் வடக்குக்கு வருகை தந்த நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்த கருத்துக்கள் அதிக முக்கியத்துவத்தை கொண்டிருந்தது. நீதி அமைச்சரின் வருகையின் போது செம்மணியின் நீதி மற்றும் இலங்கைத் தமிழர்களின் அந்தஸ்துத் தொடர்பிலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தார். 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமூலம் (Sinhala Only Act), 1972 அமுல்படுத்தப்பட்ட தரைப்படுத்தல் (Standardization Policy), பௌத்தம் அரச மதமாக்கப்பட்டமை (State Religion of Buddhism) என்பன தமிழர்களை இரண்டாம் தரப்பிரஜைகளாக அடையாளப்படுத்தியது. இக்கட்டுரையும் ஜே.வி.பி.அரசாங்கத்தின் நீதி அமைச்சர் முன்வைத்துள்ள கருத்துக்களின் யதார்த்த நிலையைத் தேடுவதாக உள்ளது.
முதலில் நீதி அமைச்சர் முன்வைத்த கருத்துக்களை அவதானிப்பது அவசியமானது. செம்மணிப் புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் எனவும் அதற்கு உரிய சகல நடவடிக்கைகளையும் நீதி அமைச்சு செய்யும் என்பதையும் வடக்கு தெற்கு என்ற பாகுபாடு இன்றி, குற்றம் செய்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்த நீதி அமைச்சர், அதற்காக விசாரணைகள் இன்றி எவரையும் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது. இராணுவத்தினர் படுகொலைகளில் ஈடுபட்டிருந்தால் அதற்கான ஆதாரங்களை முன் வைத்தால், நிச்சயமாக அரசாங்கம் இராணுவத்தினருக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுக்கும் என்றார். மேலும் கிளிநொச்சியில் நடைபெற்ற சந்திப்பில் தற்போதைய அரசாங்கத்தில், தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாகப் பார்க்கப்பட மாட்டார்கள் என நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன் யதார்த்தத்தை விளங்கிக் கொள்வது முக்கியமானது.
முதலாவது செம்மணி புதைகுழி அகழ்வின் போது நேரடியாக விஜயம் செய்த நீதி அமைச்சர் நீதி நிலைநாட்டப்படும் என்று குறிப்பிட்hர். கிரேக்க சிந்தனையாளரில் ஒருவரான கிளாகோனின் (Glaucon) கூற்றின்படி நீதி என்பது யதார்த்த நடைமுறையில் சுயநலத்திற்கான அநீதியின் ஒரு வடிவமேயாகும் (Justice itself is really a form of self – interested injustice)என்கிறார். நீதியின் அளவு என்னவெனில் எவராலும் தவறு செய்ய இயலாத நிலையில் எழக்கூடிய ஒப்பீட்டளவிலான ஒரு நிர்ணயமாகும் ( Justice has a relative value to do wrong) எனவும். நீதி என்பது ஒரு சமூக ஒப்பந்தமாக வடிவம் பெறுவதாகவும் ஒருவரை மற்றவர் ஒடுக்கிட முடியாத அளவிற்கு ஏறக்குறைய சமபலங்கொண்ட தப்பினாரிடையே நீதி உருவெடுக்கிறது என்றும் கூறுகின்ற கிளாகோன்; தாம் இளைக்கும் அநீதியினால் நன்மையைவிடவும் தமக்கு தீமை அதிகம் விளையும் என்ற நிலையில் நீதியை பின்பற்றும் சூழல் உருவாவதாக கூறுகிறார். நீதி என்பது எப்போதும் சுயநலம் வாய்ந்தாய் உள்ளதென்றும் நீதியை எவரும் மனவுவந்து மேற்கொள்வதில்லை என்றும் பிளேட்டோவின் இரு சகோhதரர்களான கிளாகோனும், அடிமண்டஸ்ம் (Adeimantus) வாதித்தனர். உண்மையில் தந்தமது வல்லமைளுக்கு பொருத்தமான வகையில் சுயநலம் கொண்ட தமது தேவைகளை நியாயப்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே நீதி என்பது நிலவுகின்றது. பலம் பொருந்திய சக்திகள் தந்தமது நலம் சார்ந்த வகையில் அநீதியை நீதி என்று வரையறுத்து முன்னிறுத்தும் போது பலம் குன்றியவர்கள் ஒப்பீட்டுரீதியான நீதியை நிலை நிறுத்துவதற்கு கிளாகோனின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டில் வழியுண்டு. அதாவது நீதியை ஒரு சமூக ஒப்பந்தம் (Social Contract) என்ற வடிவத்தில் நிலைநிறுத்தும் இடத்தில் ஓர் அநீதியான பலவானுக்கு முன்னால் சமூகத்தில் பலர் கூட்டாக திரளும் போது அந்தப் பலவான் பலவீனமான நிலைக்கு தள்ளப்படுகிறான். இந்தவகையில் சமூகக் கூட்டு, அணி சேரல்கள் என்பவற்றின் மூலம் ஒப்பீட்டு ரீதியான நீதி கிடைக்க முடிகிறது. இராணுவ வீரர்கள் கொலை குற்றங்களை மேற்கொண்டு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அதற்கான ஆதாரங்களும் விசாரணைகளும் நிறைவு பெறுகின்ற போது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அப்படியாயின் விசாரணைகளும் ஆதாரங்களும் செம்மணியில் குவிந்திருக்கும் 400 ற்க்கும் மேற்பட்ட என்பு கூடுகளும் அவற்றுடன் உறங்கி இருக்கும் சாட்சியங்களும் ஆதாரங்களாகவே காணப்படுகிறன. அத்தகைய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த காலங்களில் சில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டது சிறையில் அடைக்கப்பட்டதும் நிகழ்ந்திருக்கின்றது. ஆனால் அதே நேரம் பெரியளவிலான இராணுவத்தினர் செம்மணி படுகலையோடு சம்பந்தப்பட்ட பலர் தூதுவர்களாகவும் வேறு உயர் பணிகளிலும் அமர்த்தப்பட்டவர்களாக காணப்படுகின்றனர். அது மட்டுமின்றி செம்மணியில் அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகள் தொடர்பிலான சாட்சியங்களும் அவர்களின் உறவுகளும் பெருமளவுக்கு காணாமல் போய் இருப்பதும் கொல்லப்பட்டிருப்பதும் இறந்து போயிருப்பதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அதனை கடந்து சாட்சியங்களை வழங்க முன் வருபவர்கள் மீது இராணுவப் புலனாய்வுத் துறை பாரிய அளவில் அடக்குமுறைகளை பிரயோகிப்பதாகவும் ஆதாரங்கள் வெளியிட அஞ்சுவதாகவும் தெரியவருகிறது. இவை எல்லாவற்றையும் கடந்து இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் பற்றியும் படுகொலை செய்யப்பட்டவர்கள் பற்றியும் எந்த வித விசாரணைகளும் இதுவரையில் ஜே.வி.பி. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவும் இல்லை. அது பற்றிய உரையாடலை வெளிப்படுத்தவும் இல்லை. ஏறக்குறைய 146,679 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய ஆதாரங்களுக்குப் பின்னும் ஆதாரங்களையும் விசாரணைகளையும் நீதி அமைச்சு தேடுகிறது.
இரண்டாவது இலங்கை தீவில் தமிழ் மக்கள் இரண்டாவது தரப்பிரஜைகளாக ஜே.வி.பி. அரசாங்கம் கருதாத என நீதி அமைச்சர் தனது உரையாடலில் வெளிப்படுத்தியிருந்தார். அவ்வாறு கருதுவது இலங்கைத் தமிழருக்கு கௌரவமான அம்சமாகும். ஆனால் நடைமுறைகள் அவ்வாறு இல்லை என்பதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல அரசியல் கைதிகள் காணாமல் போனவர் தொடர்ச்சியாக கலாச்சார அம்சங்களை வெளிப்படுத்தும் இளைஞர்கள் தற்போதும் கைது செய்யப்படுவதும் விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம் என்ற நிலையில் கைதுகள் நிகழ்த்தப்படுவதும் சதாரணமானதாக உள்ளது. இவை எதனடிப்படையில் நிகழ்கின்றது என்ற கேள்வி பிரதானமானது. ஜே.வி.பி.இன் தலைவர் ரோகணவிஜயாவீரா 1970 களில்; பயங்கரவாதி என்றும் 1989 களில் அவர் கொல்லப்பட்ட போது பயங்கரவாத செயலை முதன்மைப்படுத்தினார் என்றும் கூறப்பட்டது. அதே ரோகணவிஜயவீரா தற்போது ஜே.வி.பி.க்கு மட்டுமல்ல தென்னிலங்கை மக்களுக்கு வீரராக கருதப்படுகின்றார். இது எத்தகைய அடிப்படையில் அடையாளப்படுத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளையும் அதன் தலைமையையும் சார்ந்த உரையாடல்களை நோக்குவதற்கும் ஜே.வி.பி. மற்றும் அதன் தலைமை நோக்கப்படுவதற்கும் உள்ள அடிப்படை ஏன் வேறுபடுகிறது என்பது கவனத்திற்குரியது. கதிர்காமத்து அழகி பிறேமாவதி மனம்பெரி (Premawathi Manamperi)) கொலை செய்யப்பட்ட பொலீசார் மீது ஜே.வி.பி. ஆல் நிகழ்த்தப்பட்ட பதில் படுகொலைகள் மட்டுமின்றி தென்னிலங்கையில் ஜே.வி.பி.க்கு எதிரான பொலீசார் இராணுவத்தினர் பெரிய அளவில் ஜே.வி.பி. ஆயுத குழுவினர் கொல்லப்பட்டனர். அவர்கள் எல்லோரும் சிறையில் அடைக்கப்பட்டார்களா அல்லது அரசியல் கைதிகளாக இப்போதும் காணப்படுகின்றனரா என்ற கேள்வி பிரதானமானது. இது மட்டுமின்றி தமிழரின் நிலம் ஆக்கிரமிப்பு மத நிறுவனங்கள் மீது ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்த விகாரைகளை பௌத்தத்தை கடைப்பிடிக்காத மக்கள் வாழும் பிரதேசங்களில் கட்டமைப்பது தமிழ் மக்களுக்காக விசேட ஏற்பாடுகளை மேற்கொள்வது போன்ற விடயங்கள் தமிழ் மக்கள் முதல் தர பிரஜைகளா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது. நீதியை பாரபட்சமாகவும் சட்டத்தின் ஆட்சியை முரண்பாடாகவும் கொள்ளுகின்ற அதே அரசாங்கத்தின் அடிப்படையில் இருந்து கொண்டு தமிழ் மக்கள் இரண்டாவது பிரஜைகளாக நோக்கப்படமாட்டார்கள் என்று கூறுவது எந்த அளவுக்கு நியாயமானது என்பது கவனத்திற்குரியது.
எனவே இலங்கை தமிழர்களின் வாழ்வியலையும் அவர்கள் தேசிய அடையாளத்தையும் அவர்களின் பிரதேசத்தின் மீதான சுய ஆளுகையையும் அங்கீகரிப்பதே அவர்கள் இலங்கையின் முதல் தர பிரஜைகளாக இருப்பதற்கான அடிப்படையாகும். அத்தகைய அடிப்படையை நிராகரித்துவிட்டு தமது நலனுக்கும் இருப்புக்கும் ஏற்ற வகையில் வடக்கு கிழக்கை அதில் வாழும் மக்களை அவரது கலாசாரப் பாரம்பரியங்களை மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளை நிராகரித்து விட்டு முதல் தர பிரஜைகளாக அடையாளப்படுத்த முடியாது. அவ்வாறு அடையாளப்படுத்துவது பற்றி உரையாடுவது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான வடிவமாகும். அநீதியின் பெயரில் நிகழ்த்தப்படும் நீதியும் பாரபட்சம் காட்டப்படும் அந்தஸ்த்தும் போலியானதே.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி: யாழ் தினக்குரல்)
