இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அதிகமான அதிர்வலைகளை கடந்த அரசியல் வரலாறு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.1978 ஆம் ஆண்டு முதல் இனப் பிரச்சினைக்குரிய தீர்வு பற்றிய அரசியலையும், ஜனதா விமுர்த்தி பெரமுணாவுக்கு எதிரான வன்முறை அரசியல் அணுகுமுறையையும் தீவிர இராணுவ வாதத்தோடு அணுகியதன் விளைவுகளை நிறைவேற்றதிகாரக் கட்டமைப்பே அதிகம் கொண்டுள்ளது. அதற்கான அடிப்படை நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத அரசியல் கலாசாரமும் ஒன்றிணைந்தன் பிரதிபலிப்பே காரணமாகும். இதுவே துற்போது எழுந்துள்ள நீண்ட அரசியல்-பொருளாதாரம்-இராணுவ நெருக்கடி அடிப்படையானதாக உள்ளது. இக்கட்டுரையும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளுகின்ற தென்னிலங்கை அதிகம் வெற்றி வாய்ப்பு உறுதிப்படுத்த முடியாத பிரதான வேட்பாளர்களையும் அதற்கான ஒரு அரசியல் கொதிநிலை பிரதிபலிக்கின்றது என்பதை விளங்கிக் கொள்வதற்கான முயற்சியாகவே உள்ளது.
பிரதானமாக 2024 ஜனாதிபதி தேர்தலுக்காக 39 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் அதிக குழப்பத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசியல் சமூகம் இதற்கான லவாய்ப்பினை எப்படி வழங்குவது என்பதில் முன்பின் முரணான முடிவுகளை அவதானிக்க முடிகின்றது. 39 வேட்பாளர்களில் மூன்று பிரதான வேட்பாளர்கள் களத்தில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றனர் இத்தகைய போக்கானது இலங்கையினுடைய அரசியல் கலாச்சாரத்தை நிகழக்கூடிய அதிர்வலைகளின் பிரதிபலிப்பாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. இது பற்றிய ஆழமான தேடுதல் அவசியமானதாக உள்ளது
முதலாவது, பிரதான வேட்பாளர்கள் மூவரும் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற கருத்துக்கணிப்புக்களை அவதானிக்கும் போது பிரதான வேட்பாளர்களின் முன்னினையானது மாற்றம் பெறுவது பிரதான இயல்பூக்கமாக காணமுடிகின்றது. வாக்காளர்கள் எந்த தரப்போடு அல்லது எந்த வேட்பாளரோடு சேர்ந்து பயணிப்பது என்பது அதிக குழப்பங்களை கொண்டவர்களாக உள்ளன. காரணம் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கும் மாறி மாறி அவர்கள் வாக்களிக்கின்ற மனோநிலையை கொண்டவர்களாக தெரிகின்றது. அவ்வகை நிலை ஒரு உறுதிரயான ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தை உருவாக்கியது. இது தென் இலங்கையில் தேர்தலுக்கு பின்னான நிலையை அதிகம் குழப்பத்திற்கு உள்ளாக்க வாய்புள்ளதாகவே தெரிகிறது.
இரண்டாவது, தென்னிலங்கை வேட்பாளர்களுடைய எண்ணிக்கை கவனத்தில் கொள்ளுகின்ற போது பல வேட்பாளர்கள் பிரதான வேட்பாளர்களால் நிறுத்தப்பட்டவர் என்றும் வாக்குகளை பங்கு போடுவதற்கான செய்முறை பிரதிபலிகின்றதையும் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் பிரதான வேட்பாளருக்கான சந்தர்ப்பத்தை இன்னும் ஒருவர் தட்டிப் பறிப்பதற்கான செய்முறை ஒன்றையும் உருவாக்கியுள்ளனர் நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பது பல திருத்தங்களுக்கு பின் பலவீனமானதாக அடையாளப்படுத்தப்பட்டாலும் அது என்றுமே முடி ஆட்சிக்குரிய இயல்பையும் தனித்துவத்தையும் அதற்கான கட்டமைப்புகளையும் கொண்டு இயங்குகின்றது. 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு முழுமையாகவே நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே பாதுகாப்பதற்கும் பேணுவதற்குமான உத்திகளை அதிகம் பிரதிபலிக்கின்றது. இதனால் அத்தகைய அதிகாரத்துக்கான போட்டி என்பது இலங்கை தீவில் முடியாட்சிகான போட்டியாகவே தென்படுகின்றது. முடியை தரித்துக்கொள்ளும் ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்காக பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தென் இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அத்தகைய விமர்சனம் அவர்களது அரசியல் கலாசாரத்தையும் அரசியல் நடத்தியும் முடியின் பாரம்பரியத்தையும் பேணுவதற்கான செய்முறையாகவே தெரிகின்றது. 39 வேட்பாளர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கின்ற தென்னிலங்கை மக்கள் அந்த வேட்பாளருக்காக வழங்கப்படும் வாக்குகள் பலவீனமானதாக ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கப் போகின்றது என்ற அரசியல் உத்தியை அடையாளம் காண்பதை விட ஏதோ ஒரு வேட்பாளர் ஜனாதிபதியாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அரசியல் அமைப்பும் அரசியல் கலாசாரமும் பிரதான வேட்பாளர்களை மையப்படுத்தி காணப்படுவது என்பதே கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.
மூன்றாவது, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தென்னிலங்கையின் கருத்துக்கணிப்புகள் மூன்று பிரதான வேட்பாளர்களையும் நோக்கியதாக குவி மையப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய சூழலில் ஒவ்வொரு பிரதேசங்களும் ஒவ்வொரு நகரங்களும் கிராமங்களும் வேறு வேறுபட்ட அபிப்பிராயங்களையும் கருத்துக்களை முன்னிறுத்த முயல்கின்றன. ஆனால் நடைமுறையில் இந்த மூன்று பிரதான வேட்பாளர்களிலும் அனுராக் குமாரதுசநாயக்க எதிர் சஜித் பிரேமதாசா என்ற களம் அதீதமாக காட்சிப்படுத்தப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலவீனமானவராகவே தேர்தல் கணிப்புகளும் ஊடகங்களின் அவதானிப்புகளும் வெளிப்படுத்திவருகின்றது. ஆனால் நடைமுறையில் 30க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவளிக்கின்ற சூழலும் மூன்றில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரம்சிங்காவை முன்னிலைப்படுத்த நிலையில் இன்னொரு வகையான பிம்பத்தை தெரிவிக்கின்றனர். ஆனாலும் பிரதேசங்களும் நகரங்களும் பிரதான நகரங்களும் வேறு வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இது 50 வீதத்துக்கு மேலான வாக்குகளை பெற முடியாத சூழலை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஏற்படுத்துவதோடு சாதாரண பெரும்பான்மையூடாக அரசியலமைப்புக்கு உட்பட்ட விதத்தில் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கின்ற செய்முறை தவிர்க்க முடியாததாக 2024 தேர்தல் அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே அதிகம் தென்படுகின்றது.
நான்காவது, இலங்கை தீவின் ஜனநாயக மரபுகளை அல்லது குறைந்தபட்சமான ஜனநாயக மரபுகளை இல்லாமல் செய்வதற்கான பிரதிபலிப்புகளை அரசியலமைப்பும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி மூலம் கொண்டுள்ளது. சாதாரண பெரும்பான்மை தரும் ஜனாதிபதி என்பவர் அளவிலும் அதிகாரத்திலும் நிறைவேற்று தன்மையிலும் ஏனைய வேட்பாளர்களால் அதிகம் விமர்சிக்கப்படுவார் தீர்மானங்களை சரிவர எடுக்க முடியாதவராகவும் தென்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே நிலவுகிறது. இலங்கைத்தீவின் நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பது தீர்மானங்களை விரைவாக எடுத்தல் என்ற பரிமாணத்திலேயே முதன்மைப்படுத்தப்பட்டது. அத்தகைய செல்நொறியை நெருக்கடிக்கு உள்ளாகின்ற சூழல் தவிர்க்க முடியாததாக 2024 ஜனாதிபதி அமைவார் என்பது கவன்திற்குரியதாகும் .இது இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வற்ற நிலையையும் நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பலவீனமும் ஒன்று சேர்ந்து இலங்கைத் தீவின் ஜனநாயகத்தை மேலும் பலவீனப்படுத்துகின்ற செயல்பாட்டை பிரதிபலிக்கவுள்ளது. ஜனநாயக செய்முறை ஒவ்வொன்றுக்கும் உலகளாவிய ரீதியில் ஒரு வரையறை முதன்மைப்படுத்தப்பட்டாலும், இலங்கை தீவு அத்தகைய வரையறையில் அதீதமான பலவீனமான செய்முறைகளை வெளிப்படுத்துகின்ற விதத்தில் அரசியல் அமைப்பை கட்டமைத்துள்ளது. குறிப்பாக 50சதவீதம் எந்த வேட்பாளரும் பெற முடியாத நிலை ஏற்படுகின்ற போது தவிர்க்க முடியாது சாதாரண பெரும்பான்மையை ஜனநாயக மரபாக கொள்வதற்குரிய விதிகளை அரசியலமைப்பின் வரைந்துள்ளது. இது முழுமையாகவே அல்லது பகுதிய அளவாகவோ இலங்கை தீவு ஓர் ஜனநாயக அரசியல் செய்முறையை கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்துகின்றது. எனவே இந்த சூழல் அபாயமான ஜனநாயக மரபுகளை முற்றாகவே பலவீனப்படுத்துகின்ற ஒரு நிலையை நோக்கி இலங்கைத் தீவின் அரசியல் நகர்த்தப்படுகின்றது. இது இராணுவத்தின் அதீத எழுச்சிக்கு வழிவகுக்க வாய்ப்பினை கொடுக்க்கூடியது.
ஐந்தாவது, இலங்கைத்தீவின் அரசியல் வன்முறை அரசியல் கலாசாரத்தை கொண்டிருப்பது என்பது கடந்த கால அரசியல் வரலாறு முழுவதும் நிறுவியுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான அணுகுமுறைகள் மட்டுமின்றி முஸ்லிம்களுக்கு எதிராகவும், இடதுசாரிகளுக்கு எதிராகவும் அதன் அணுகுமுறை வன்முறை பிரதிபலிப்பாகவே அமைந்திருக்கின்றது. அவை அத்தகைய வன்முறையை அல்லது பொதுநிலையை நோக்கி மீளவும் நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை தென்னிலங்கையை கட்டமைக்க திட்டமிடுவதாக தெரிகின்றது. இத்தகைய கொதிநிலை அரசியல் ஏனைய தேசியங்கள் மீது அல்லது தேசிய இனங்களின் நகர்வுகள் மீது ஒர் அதீதமான வன்முறையை தோற்றுவிக்க வழி வகுக்கக் கூடிய புறச்சூழலை 2024 ஜனாதிபதி தேர்தல் கொண்டிருக்கிறது என்ற சந்தேகம் வலுவடைகிறது. இலங்கை தீவு மிக நீண்ட காலமாக வன்முறை அரசியல் கலாசாரத்தில் இருந்து அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுள்ளது. நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பவர் அதிகம் வன்முறை அரசியல் கலாசாரத்தின் பிரதானமானவராகவே காணப்படுகின்றார். அவரது அரசியல் கலாசாரத்துக்கான நடைமுறைகளும் கோட்பாடுகளும் அரசியல் அமைப்பில் இருந்து மேலெழ. வழி வகுத்துள்ளது. அதனால் அத்தகைய சூழல் அதிகமான குழப்பத்தை தென்னிலங்கை அரசியல் களத்தை; ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. இதில் வேட்பாளர்கள் மட்டுமின்றி தென்னிலங்கை மக்களும் அதீதமான குழப்பத்துக்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். இவ்வாறான போக்குகள் சர்வதேச சக்திகளுக்கும் பிராந்திய சக்திகளுக்கும் ஒரு வாய்ப்பான அரசியல் களத்தை தோற்றுவிக்க கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. அத்தகைய நிலையை நோக்கிய 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நகருகின்றது.
எனவே, இலங்கை தீவின் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தென்னிலங்கை அரசியல் சமூகத்தின் மத்தியில் குழப்பத்தையும் பிரதான வேட்பாளர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்கால இலங்கைத் தீவின் அரசியலை கட்டமைக்கின்ற திறன் இலங்கை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கு அன்றி பிராந்திய சர்வதேச சமூகம்களுக்கானதாக மாறுவதற்குரிய புறச்சூழலையே கொண்டிருக்கின்றது. இதன் விளைவுகளில் அடிப்படையிலேயே இலங்கை தீவின் அரசியல் கலாசாரத்தின் போக்கு வடிவமைக்கப்படவுள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
