சர்வதேச உலக ஒழுங்கு மீளமைக்கப்படுவதற்கான நிலைமாறுகாலத்தை நோக்கி பயணிக்கின்றது. சீனாவும் அமெரிக்காவும் மோதிக்கொண்டாலும் உலகின் முதல் வல்லரசு என்ற போட்டி முடிவாகாத சூழலுக்குள் உலக இருப்பு காணப்படுகின்றது. இதற்குள் சீனா-, ரஷ்யா ஒருபுறமும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மறுபுறமாகவும் உலக ஒழுங்குக்கான போட்டி கொவிட் தொற்றுக்கு பின்னரான காலப்பகுதியில் தீவிரமடைந்து வருகிறது. இத்தகைய நிலைக்குள் சீனா ஆதரவு நாடுகள் மீது அமெரிக்காவும் அமெரிக்கா ஆதரவு நாடுகள் மீது சீனாவும் மாறி மாறி அணி மோதல் நிகழ்கின்றது. இதனை அடிப்படையாக கொண்டு மேற்காசியா நாடான ஈரான் மீது அமெரிக்காவின் நடவடிக்கையும் அதனை எதிர்கொள்ள ஈரான் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் செயற்படும் போக்கொன்றினையும் காண முடிகிறது. இக்கட்டுரையும் 29.11.2021அன்று அவுஸ்திரேலியாவின் தலைநகரான வியன்னாவில் வல்லரசுகளுக்கும் ஈரானுக்குமான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளமையையும் அதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் தேடுவதாகவும் அமைய உள்ளது.
வியன்னாவில் 2015இல் வல்லரசுகளோடு ஈரான் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக உலக வல்லரசுகளுக்கும் அந்நாட்டுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நிகழ்ந்துள்ளது. குறிப்பாக 2015இல் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் மின் உற்பத்தி உட்பட்ட ஆக்கபூர்வமான தேவைகளுக்கு யுரேனியத்தை ஈரான் செறிவூட்ட முடியுமென அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரம் யுரேனியத்தின் இருப்பையும் அதன் செறிவூட்டல் அளவையும் அவ்உடன்படிக்கையில் நிபந்தனையாக வல்லரசுகள் ஈரான் மீது விதித்திருந்தது. இக்காலப்பகுதியில் அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ட்ரம்ப் வல்லரசுகளுக்கும் ஈரானுக்குமிடையிலான ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதாக கூறி அவ்வுடன்பாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். அதுமட்டுமன்றி ஒருதலைப்பட்சமாக ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். பதிலுக்கு ஈரானும் ஒப்பந்த விதிமுறைகளை மீறி யுரேனிய செறிவூட்டலை அதிகரித்தது. இதன்பின்னர் நீண்ட இழுபறிக்கு இவ்உடன்படிக்கை வழிவகுத்தது. அமெரிக்கா அல்லாத ஏனைய வல்லரசுகள் ரஷ்யாவின் முன்முயற்சியில் கடந்த ஜூன் மாதம் வியன்னாவில் சந்திப்பை மேற்கொண்டது. அதன்பின்னர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் ஈரானுடனான அணு உடன்படிக்கையில் இணைவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனை அடுத்து ஏனைய வல்லரசுகள் ஒப்பந்தத்தின் விதிகளை மீள அமுல்படுத்துவதற்கான உத்திகளோடு ஈரானுடனான பேச்சுவார்த்தையை முதன்மைப்படுத்த தொடங்கின. முதற்கட்ட வியன்னா உரையாடலில் அமெரிக்க தரப்பு மறைமுகமாக தன்னுடைய பங்களிப்பையும் வழங்கி இருந்தது. இப்பேச்சுவார்த்தையின் நீட்சி ஈரானின் புதிய ஜனாதிபதியான இப்ராஹிம் ரைஸி பதவியேற்ற பின்னர் அவரது தீவிர போக்கு காரணமாக நெருக்கடிக்கு உள்ளானது. இந்நிலையிலேயே ரஷ்யாவின் முன்முயற்சியினால் பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளது. இப்பேச்சுவார்த்தையில் அமெரிக்கா விலகிய போதும் ஏனைய நாடுகள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளன. இப்பேச்சுவார்தை குறித்து இஸ்ரேலிய பிரதமர் நப்டாலி பென்னட் தெரிவிக்கும் போது, அணுசக்தி ஒப்பந்தத்தில் எதனையும் ஈரான் மேற்கொள்ளாத போது பொருளாதார தடையை நீக்குமாறு கோருவது நியாயமாகாது. ஈரானின் மிரட்டலுக்கு உலக வல்லரசுகள் பணிந்து விடக்கூடாது. அவ்வாறு குறிப்பிட்ட போதும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மாறான நகர்வுகளை மேற்கொண்டு அணுவாயுதம் தயாரிக்கக்கூடிய வல்லமையை நோக்கி நெருங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கின்றது. எனவே இவ்விடயத்தை ஆழமாக உரையாடுவது அவசியமானது.
முதலாவது, ஈரானின் நோக்கு நிலையில் இப்பேச்சுவார்த்தை அவசியமான இராஜதந்திர நெறிமுறையாக காணப்படுகிறது. அதாவது அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நீடிக்கும் சூழலில் அணுவாயுதத்தின் செறிவூட்டலை ஈரான் அதிகரிக்கின்ற சூழலிலும் இவ்வகை உரையாடல்கள் ஈரானுக்கு அவசியமானதாகும். காரணம், ஈரான் தனது யுரேனிய செறிவூட்டலை உலக நாடுகள் மத்தியில் நியாயப்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. அதுமட்டுமன்றி அமெரிக்கா விதித்த பொருளாதார தடைக்கு பின்னால் தனது யுரேனிய செறிவூட்டலின் அதிகரிப்பு நியாயமானது என்றும் பொருளாதார தடையை நீக்குகின்ற போது யுரேனிய செறிவூட்டலை கைவிட தயாராக இருப்பதாகவும் வல்லரசு நாடுகளுக்கும் மற்றும் உலக நாடுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டிய தேவை ஈரானுக்கு உண்டு. ஈரானின் புதிய ஜனாதிபதி ரைஸி தீவிர போக்குடையவர் மட்டுமன்றி தீவிர அமெரிக்க எதிர்ப்புவாதியாகவும் காணப்படுகிறார். டொனால்ட் டரம்ப் காலத்தில் ஈரானின் இராணுவத் தளபதி, ஈரானின் அணு விஞ்ஞானி போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு பின்னால் அமெரிக்காவின் கரங்கள் உள்ளமையை ஈரான் உணர்ந்துள்ளது. எனவே தான் ஈரானின் மதத்தலைவர்கள் அமெரிக்கா எதிர்ப்புவாதியான ரைஸியை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளனர். 1979ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஈரானிய கலாசாரப்புரட்சி முதல் அமெரிக்க எதிர்ப்புவாதத்தினால் எழுச்சி பெற்றிருக்கின்ற நாடாக ஈரான் காணப்படுகின்றது. ஈரானை தோற்கடிக்க அமெரிக்கா பலமுனைகளில் போராடி வருகிறது. ஆனால் ஈரானின் பலம் அமெரிக்க எதிர்ப்பு வாதிகளான சீனா மற்றும் ரஷ்யாவினால் பாதுகாக்கப்படுகிறது.
இரண்டாவது, வியன்னா சந்திப்பிற்கு பின்னால் ரஷ்யாவும் அதன் மேற்காசிய நலன்களும் பிரதான அம்சமாக காணப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த போது சிரியாவிற்குள் நுழைந்த ரஷ்யா சிரியாவை தன்வசப்படுத்தியதோடு மேற்காசிய அரசியலுக்குள் தனது பிரவேசத்தை பலப்படுத்திக்கொண்டது. ஈரானோடும் நெருக்கமான உறவை வைத்துக்கொள்ளும் ரஷ்யா பாதுகாப்பு சபை வரை ஈரானை பாதுகாத்து வருகிறது. வல்லரசுகளுக்கும் ஈரானுக்குமான அணு உடன்பாட்டிலும் ரஷ்யா மற்றும் ஈரானின் அணுகுமுறை ஈரானை பாதுகாப்பதாக மட்டுமன்றி அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளை ஈரான் மீது படையெடுப்பை மேற்கொள்ளாது தடுப்பதிலும் கரிசனை கொண்டு செயற்படுகிறது. ரஷ்யாவோடு இஸ்ரேல் பலகட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போதும் இஸ்ரேலுடன் ரஷ்யா ஒத்துழைப்பதற்கு தயாராக இல்லாத நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. அத்தகைய ரஷ்யா, ஈரான் மேற்கு நாடுகளுக்கிடையிலான அணுவாயுத பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்கியதோடு அவ்வகை பேச்சுக்கள் ஆரோக்கியமாக பயணிப்பதற்கு வழிவகுத்தும் வருகிறது. இதுமட்டுமன்றி பைடனுடனான புடினின் முதலாவது சந்திப்பு நிகழ்ந்த போது முன்வைக்கப்பட்ட அமெரிக்காவின் கோரிக்கையை இரண்டாவது சந்திப்புக்கு முன் நிறைவேற்றுவதில் புடின் கரிசனை கொண்டு செயற்படுகிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. அதாவது பைடன் மற்றும் -புடின் ஜெனிவாவில் சந்தித்த போது ஈரானுடனான அணுவாயுத பேச்சுக்கள் பற்றி இரு தலைவர்களும் உரையாடி இருந்தனர். அத்தகைய உரையாடல்களின் வெளிப்பாடுகளை புடின் நிகழ்த்தியதோடு உலக விவகாரங்களில் ரஷ்யாவின் பங்களிப்புக்களை முதன்மைப்படுத்த வேண்டிய சூழலையும் பதிவு செய்துள்ளார்.
மூன்றாவது, அமெரிக்காவின் நோக்கு நிலையில் இஸ்ரேலின் எச்சரிக்கையை கருத்திற்கொண்டே இரண்டாவது வியன்னா உரையாடலிலிருந்து விலகி இருந்தது. குவாட்-02 என அழைக்கப்படும் இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம் என்ற கூட்டின் பலத்தையும் இஸ்ரேல்-, ஈரான் முரண்பாட்டின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் நகர்வு அமைந்திருந்தது. அமெரிக்காவை பொறுத்தவரை பொருளாதார தடையை தொடர்ச்சியாக பேணுவதோடு ஈரான் யுரேனிய செறிவூட்டலை முற்றாகவே இடைநிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தி வருகிறது. ஈரானும் அமெரிக்காவும் பரஸ்பரம் பொருளாதார தடைக்குள்ளும் யுரேனிய செறிவூட்டலுக்குள்ளும் மோதிக்கொண்டு பயணிக்கின்ற போது ஈரான் பக்கமே வாய்ப்பான சூழலொன்று காணப்படுகிறது. இஸ்ரேல்- அமெரிக்க கூட்டின் தாக்குதல் ஈரானிய அணு செறிவூட்டலை நெருக்கடிக்கு உள்ளாக்கிய போதும் உலக வல்லரசுகளின் அங்கீகாரத்தோடு அத்தகைய செறிவூட்டலுக்கான வாய்ப்பை ஈரான் பயன்படுத்தி முன்னகர்ந்து வருகிறது. டொனால்ட் ட்ரம்பின் தவறான அணுகுமுறை ஈரானுக்கு மட்டுமல்ல ரஷ்யாவுக்கும் வாய்ப்பான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்ரேல் பல தடவை ஈரானின் யுரேனிய செறிவூட்டலை அழித்திருந்தாலும் அதற்கான நகர்வுகளை ஈரான் தொடர்ச்சியாக பின்பற்றி வருகின்றது. எனவே, இத்தகைய சூழ்நிலை ஈரானின் அணு வலுவை பலப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே தெரிகின்றது.
இதேநேரம், ஐக்கிய நாடு சபையின் செயலாளர் அந்தோனியோ குட்ரெஸ் வெளியிட்ட அறிக்கை ஈரானுடனான அணுவாயுத உரையாடலை உலகம் எவ்வாறு அணுக விரும்புகின்றது என்பதை கோடிட்டு காட்டுவதாக அமைகிறது. அதாவது அணுவாயுதங்களோ பேரழிவு ஆயுதங்களோ இல்லாத பிராந்தியமாக மத்திய கிழக்கை உறுதி செய்யுமாறு ஐ.நா பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். அதனடிப்படையில் 1972இல் இஸ்ரேல் தன்னுடைய அணுவாயுதத்தை அரபிக்கடலில் பரிசோதித்ததாகவும் இதுவரை அதுதொடர்பில் எத்தகைய தகவலையும் வெளியிடாது இருப்பது பற்றியும் மத்திய கிழக்கு அணுவாயுதமில்லாத அமைதிப்பிராந்தியமாக ஆக்க முயலும் சக்திகளிடம் எழுப்பப்பட வேண்டிய கேள்வியாக உள்ளது. அவ்வாறாயின் ஐ.நா. பொதுச்செயலாளர் ஈரான் அணுவாயுதம் தொடர்பான எண்ணத்தை இஸ்ரேலின் அணுவாயுதத்தோடு ஒப்பீடு செய்ய மறுக்கிறார் என்பதையும் அதன் விளைவுகளையும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
எனவே, ஈரானின் வல்லரசுகளிடையேயான அணுவாயுத உடன்பாடு தொடர்பான உரையாடல் பரஸ்பரம் இருதரப்புக்கான இராஜதந்திர செய்முறையாகவே காணப்படுகிறது. இதில் அமெரிக்கா வெளியே இருக்கும் வரை ஈரானும் ரஷ்யாவும் கூட்டான பயணத்தை நகர்த்துவதோடு வல்லரசுகளின் ஒப்புதலை பெறுவதில் ஈரான் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமுண்டு இஸ்ரேலின் எச்சரிக்கையும் அமெரிக்கா விலகி இருக்கும் நடைமுறையும் ஒரே மாதிரியான விளைவை தரக்கூடியது. இதன் அதிக பாதிப்பு அமெரிக்காவிற்கு உரியதாகவே வளர்ந்து செல்கிறது.
-பேராசிரியர் கேரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
