அரசியல் கட்டுரைகள்

ரஷ்சியா-உக்ரையினுக்கிடையே அணுவாயுதப் போர் சாத்தியமானதா?

ரஷ்சியா -உக்ரையின் போர் அதிக அரசியல் பொருளாதார இராணுவ தொழிநுட்ப போராக மாறியுள்ளது. அத்தகைய உத்திகளுக்குள் மேற்குலக – கிழக்குலக ஏகாதிபத்திய மோதலின் மையநிலமாகவும் காணப்படுகிறது. உக்ரையினை இரு தரப்பினது போர்களின் திருப்பு முனையமாக மாறுவதற்கான கருநிலையை தோற்றுவித்துள்ளது. இதுவரையும் உள்ளார்ந்த ரீதியில் அரசியல் பொருளாதார இராணுவ தளத்தில் மோதிய சக்திகள் தற்போது உலகளாவிய ரீதியில் மோதுவதென்பது ஒரு பிரகடனத்தை நோக்கிய நகர்வுக்கான அடிப்படையாக உக்ரையின்-ரஷ்சியப் போர் காணப்படுகிறது. அதாவது உலகளாவிய ஆதிக்கத்தின் நியமங்களை உருவாக்கும் விதத்தில் அத்தகைய பிரகடனம் தெளிவாக இரு தரப்பினதும் வெளித் தோற்றத்தை அடையாளப்படுத்த முனைகிறது. அமெரிக்க தலைமையிலான நேட்டோ சார்ந்த மேற்கு அணியும் சீனா ரஷ்சிய இந்திய தரப்பிலான கிழக்கு அணியும் உக்ரையின் போரை உலகளாவிய ஆதிக்கத்திற்கான போராக கருதுகின்றன. அதோ நேரம் இப்போர் அணுவாயுதப் போராக மாறுவற்கான வாய்ப்பினை உருவாக்குமா என்ற குழப்பத்தை பற்றிய தேடலாக இக்கட்டுரை அமையவுள்ளது.

முதலாவது, ரஷ்சிய -உக்ரையின் போர் பற்றிய தகவல்கள் அனைத்தும் மேற்கு ஊடகத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்தே வெளிவருகிறது. மேற்குலகம் ஒரு ஊடகப் போரை நிகழ்த்துகின்றது. அதில் உண்மைச் செய்திகளை கடந்து திரிபுகளும் பொய்யான தகவல்களும் அதிகம் காணப்படுகிறது. அதனையே உலகம் பரிமாறிக் கொள்கிறது. அதாவது ரஷ்சியாவுக்கும் ரஷ்சிய ஜனாதிபதி புடினுக்கும் எதிராக பிரச்சாரப் போரை மேற்குலகம் கட்டமைத்துவருகிறது. புடினை அடேல் கிட்லருக்கு சமமானவராகவும் ரஷ்சிய போர் சர்வாதிகாரத்திற்கான போர் எனவும் பிரச்சாரப்படுத்திவருகிறது. அத்தகைய ரஷ்சிய தோற்கடிப்புவாத செய்திகளை உலகம் முழுவதும் பரிமாறிக் கொள்வதுடன் அதனை மையப்படுத்தியே அதிக கருத்தியல்களும் எண்ணங்களும் உருவாக்கப்படுகிறது. உக்ரையின் படைகளையும் அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியையும் தியாகத்தினது உச்சமாகவும் வீரமும் தலைமையும் கொண்டவர்களாகக் காட்டப்படுகின்றன. ஆனால் இந்தப் போரே தலைமையின் பலவீனத்தாலும் அத்தலைமை மேற்குலகத்தோடான அடிவருடித்தனத்தின் விளைவாகவுமே ஏற்பட்டதென்ற விமர்சனம் தவிர்க்க முடியாததது. உக்ரையின் ஜனாதிபதி மக்களுடன் செயல்படும் தலைவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லாது விட்டாலும் அதன் விளைவு மேற்குக்கு சேவைசெய்வதாகவே தெரிகிறது. புடின் சர்வாதிகாரியாகவும் ஜெலன்ஸ்கி வீரனாகவும் மேற்கு ஊடகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. புவிசார் அரசியலை புரிந்து கொள்ளாத கொள்கைவகுப்பின் விளைவையே இப்போருக்கான எடுகோளாக கொள்ள முடியும். இரண்டாம் உலக போரின் போது அதிக தியாகங்களை செய்த மக்கள் என்ற பெருமை உக்ரேனியர்களுகப்கும் உண்டு. அதில் ஒரு தர்க்கமும் நியாயமும் காணப்பட்டது. தற்போது அத்தகைய நியாயங்களை மேற்குக்கு சாமரைவீசுவதற்கு பிரயோகப்படுத்தும் சிரிப்பு நடிகரை மேற்குலகம் கொண்டாடுகிறதைப் பார்க்கும் போது அரசியலின் நியாயங்களின் அர்த்தங்கள் காணாமல் போகும் உலகத்தையே காணமுடிகிறது. இதனைவிட அதிகமான கொடுமைகளை 2009 ஈழத்தமிழர்கள் அனுபவித்தார்கள். அப்போது உலகம் அணிதிரண்டு அழித்ததைக் காணமுடிந்தது. ஈழத்தமிழருக்கு எதிராக ரஷ;சியர்களும் உக்ரேனியர்களும் ஆயுதங்களையும் விமானங்களையும் மட்டுமல்ல விமானத் தாக்குதல்ளையும் துல்லியமாக மேற்கொண்டு அழிப்பினை சாத்தியப்படுத்தினார்கள். ஆனால் தற்போது மேற்குலகத்தின் நெருக்கமான நட்பு நாடான உக்ரையினுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டதுடன் மேற்குலகம் அணிதிரண்டு ஆயுதங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு பாதுகாத்துவருகிறது. ரஷ்சியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் அதற்கான முக்கியத்துவத்தையும் வழங்கும் விதத்தில் செனற் சபையைக் கூட்டி உரையாடியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி. அமெரிக்காவின் போர்வெறிக்குள் ஆப்கான் ஈராக் சிரியா அனைத்து நாடுகளின் இறைமை மட்டுமல்ல ஆட்சியாளரையும் ஈவிரக்கமின்றி கொன்றொழித்தததை உலகம் மறந்துவிட்டதாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர். மேற்கின் உலகளாவிய ஆதிக்கம் பறிபோகிறதென்பதை தடுப்பதே அமெரிக்கர்களின் தற்போதைய உத்தியாகும். அதற்கு உதவும் உக்ரையினுக்கு ஆயுதங்கள் மேற்கினால் பரிசளிக்கப்படுகிறது. அனைத்து ஆயுதங்களும் உக்ரையினையும் ரஷ்சியாவையும் அழிவுக்கே கொண்டு செல்லும் அதில் மேற்கு தனது எழுச்சியை நிலைநிறுத்திக் கொள்ளலாம் எனக்கணக்குப் போட்டுள்ளது.

இரண்டாவது, இத்தகைய நிலையில் தான் மேற்குலகம் ரஷ்சியா அணுவாயுதத்தை போரில் பயன்படுத்தப் போவதாக குற்றம் சாட்டிவருவதுடன் அதனை ரஷ;சியாவுக்கு எதிரான பிரச்சாரமாகவும் மேற்கொண்டு வருகிறது. ரஷ்சிய ஜனாதிபதி அணுவாயுதத்தை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் போரில் பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் அதற்கான கட்டளை பிறப்பிப்பது தான் எஞ்சியுள்ள விடயம் எனவும் மேற்குலக ஊடகங்கள் வெளிப்படுத்திவருகின்றன. உலகில் அதிக அணுவாயுதங்களை கொண்டுள்ள நாடுகளின் படட்டியலில் ரஷ்சியா முதலிடத்திலுள்ள. அணுவாயுதத் தாக்குதல் என்பது இரண்டாம் உலக போர் அனுபவத்தையே அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது. ஜப்பான் மீதான தாக்குதல் விளைவுகள் என்னுமே மோசமானதாக பார்க்ப்படுகிறது. ஆனால் சீனா மற்றும் ரஷ்சியாவினது குற்றச்சாட்டுகள் வேறுவிதமானதாக அமைந்துள்ளன. அமெரிக்கா உக்ரையினுக்கு அணுவாயுதங்களை வழங்கப் போவதாகவும் உக்ரையின் அணுவாயுதங்களை அமெரிக்காவிடம் கோரியதாகவும் அக்குற்றச்சாட்டு அமைந்திருந்தது. எதுவாயினும் இரு தரப்பும் அணுவாயுதத்தை பிரயோகிப்பது பற்றிய உரையாடல் சாதரணமாகவே அமைந்துள்ளது. ஆனால் மேற்குலகம் குறிப்பிடுவது போல் அத்தகைய அணுவாயுதத்தை ரஷ;சியா பாவிக்க முயலுமா என்ற கேள்வி இயல்பானது.

ஒன்று, உக்ரையின் ரஷ்சியாவின் எல்லை நாடு ஏறக்குறைய இரு நாட்டுக்குமான தரைத்தொடர்பு பிரிக்க முடியாததாக உள்ளது. ஏறக்குறை 400 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள நாடுகளாக உள்ளன. அது மட்டுமல்ல ரஷ்சியாவின் எல்லையிலிருந்து 300 கி.மீ. தூரத்தில் உக்ரையினின் தலைநகரமான கீவ் அமைந்துள்ளது. அவ்வகைச் சூழலுக்குள் ரஷ்சியா அணுவாயுதத் தாக்குதலை மேற்கொள்வதென்பது ரஷ்சியாவையும் அதன் வளங்களையும் அழிப்பதற்கு சமமானது. அதுமட்டுமல்ல ஈரோசியாவின் நிலப்பரப்பிலுள்ள அனைத்து நாடுகளது வழங்களும் உயிர்களும் அழிவுநிலையை சந்திக்க நேரும் என்பதில் எத்தகைய கருத்து வேறுபாடும் கிடையாது. அவ்வகையான செயல் ஒனட்றுக்கான நடவடிக்கையை முன்னாள் கே.ஜி.பி.இன் தலைவர் செயல்படுத்துவாரா என்ற இயல்பான கேள்வியைக்கூட மேற்கு ஊடக்ங்கள் கருத்தில் கொள்ளாத அபத்தம் நிலவுகிறது.

இரண்டு, உக்ரையினிலுள்ள மக்களில் ஏறக்குறைய 17.3 சதவீதத்தினர் உக்ரையினுக்குள் வாழ்கின்றனர். அதாவது 83 லட்சம் ரஷ்சியர்கள் உக்ரையினுக்குள் வாழ்வதோடு பிற கலப்பினங்களாகவும் ரஷ்சியர்கள் வாழ்கின்றனர். இவ்வகைச் சூழலில் ரஷ்சியா அணுவாயுதத் தாக்குதல் ஒன்றினை மேற்கொள்ளுமாக இருந்தால் அது ரஷ்சியர்கள் மீதான தாக்குதலாகவே அமையும். அவ்வாறான செயலை ரஷ்சிய ஜனாதிபதி மேற்கொள்வாரா என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியதென்றாகும். மேற்கைப் பொறுத்தவரை அவ்வாறு இருந்தும் ரஷ்சிய ஜனாதிபதி தாக்குதலை மேற்கொள்வார் எனக்கூறுவதன் நோக்கம் புடினை ஒரு கொடுமையான சர்வாதிகாரியாக காட்டவேண்டும் என்பதே நோக்கமாகும். கிட்லரை எப்படி சர்வாதிகாரியாக வடிவமைத்ததோ முதலாளித்துவம் அவ்வாறே புடினையும் சர்வாதிகாரியாக காட்டுவதில் முனைப்புக் கொண்டு செயல்படுகிறது. நேட்டோ ஐரோப்பிய யூனியன் மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்து அமைப்புக்களையும் ரஷ்சியாவுக்கும் ரஷ்சியர்களுக்கும் எதிராக தூண்டிவிட்டு ரஷ்சியாவை அபாயமான அரசாக காட்டுவதில் மேற்குலகம் கரிசனை கொண்டுள்ளது.

மூன்று ரஷ்சியாவின் போர் உத்தியில் இறுதியிலும் இறுதியாக அணுவாயுதத்தை தெரிவு செய்யுமா என்பது சந்தேகத்திற்கே உரியதாகும். அத்தகைய தெரிவு ரஷ்சியாவை மடடுமல்ல முழு உலகத்தையும் நெருக்கடிக்கு தள்ளும் என்பதை போர் தொடங்கிய காலத்திலிருந்து புடின் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது. அதனால் அத்தகைய தெரிவை தவிர்க்கவே ரஷ்சியா முயலும். வேண்டுமாயின் நேட்டோவின் நகர்வை கட்டுப்படுத்துவதற்கான எச்சரிக்கையாக அமையுமே அன்றி அது முடிவாக அமைய வாய்ப்பு மிக அரிதானதே.

எனவே, மேற்குலகத்தின் பிரச்சாரம் சதாம் உiஷனையும் கடாபியையும் அழித்தது போன்ற ஒரு நகர்வை செய்யமுடியுமா என திட்டமிடுகின்றன. அத்தகைய சூழல் எழாது விட்டாலும் ரஷ்சியாவை உலக அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதற்கான அணுகுமுறையை மேற்குலகம் ஏற்படுத்த முனைகிறது. ரஷ்சியாவை அதன் பிராந்தியத்திற்குள்ளேயே தோற்கடிப்பதென்பதே மேற்கின் பிரதான உத்தியாகும். ஐரோப்பாவின் இயலாமையும் அமெரிக்க செல்வாக்கின் சரிவும் தற்போதைய சூழலுக்கு பிரதான காரணமாக வாதிட்டாலும் ரஷ்சியாவின் எழுச்சியை உக்ரையின் விடயத்துடன் முடிபுக்கு கொண்டுவர மேற்குலகம் திட்டமிடுகிறது. இதனால் சீனாவை தனிமைப்படுத்துவதுடன் ரஷ்சியாவின் ஆதரவில் காணப்படும் வடகொரியா ஈரான் சிரியா போன்ற நாடுகளையும் இலகுவில் கையாள முடியுமென மேற்குலகம் கணக்குப் போடுகிறது. ஆனால் சீனா இந்தியாவினது ஆதரவு ரஷ்சியாவுக்கு அமைந்திருப்பதுடன் வடகொரியா பெலாரஸ் போன்ற நாடுகள் ரஷ்சியாவை ஆதரிப்பதுவும் மேற்கின் உபாயத்தின் முழுமை சாத்தியமாவது கடினமானதாகும். ஆனால் ரஷ்சியாவின் பொருளாதாரத்தை மேற்கு தோற்கடிப்பதில் வெற்றி காணுவதற்கான வாய்ப்பு அதிகமுண்டு.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)