இலங்கை-இந்திய அரசியல் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்திவருகிறது. தற்போது இலங்கைத் தீவு இந்திய ஆட்சியாளர்களது களமாடும் தீவாக மாறியுள்ளது. அதுவே இலங்கையின் புவிசார் அரசியலாகும்.இந்தியாவின் இருப்பும் பாதுகாப்பும் இலங்கைத் தீவைவும் சார்ந்தது என்பதை விளங்கிக் கொள்வது அவசியமானது. இலங்கைத் தீவினது சீனாவின் பிரசன்னத்தை எதிர்த்து பெரும் நெருக்கடியை எதிர் கொண்ட இந்தியாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்ததாகவே தெரிகிறது. இலங்கைத் தீவு இந்தியா சார்பு நிலைக்குள் அகப்பட்டதென்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இலாபகரமானது என்பதில் மாற்றுநுக் கருத்திற்கு இடம்கிடையாது. காரணம் இலங்கைத் தீவு இந்தியாவுக்கு எதிரானதாக செயல்பட்டாலும் இந்தியாவுக்கு கட்டுப்பட்டே இயங்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாதது. ஈழத்தமிழரது அரசியலை இந்தியாவை அணைப்பதன் மூலமே கையாள முடியுமென இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள் கடந்த எழுபது வருடமாக பிரயோகித்து வருகின்றனர். இக்கட்டுரையும் கடந்த இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரது அணுகுமுறைகள் மூலம் விளங்கிக் கொள்ள வேண்டிய விடயங்களை தேடுவதாக அமையவுள்ளது.
இலங்கையில் நடபெற்ற பிம்ஸ்டெக் (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக 27.03.2022 வருகை தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் பல தரப்பினரை சந்தித்து உரையாடியதுடன் அவரது உடல்மொழியும் நகர்வுகளும் தமது தேசத்தில் செயல்படுவது போல் அமைந்திருந்தது. அது மட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மூன்று தீவுகளிலும் காற்றாலை மூலமும் சூரிய சக்தி மூலமும் கலப்பு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான உடன்படிக்கையில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கைச்சாட்டுக் கொண்டனர். இதனை சீனாவிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதற்கான வர்த்தகமானியும் வெளியாகியிருந்தமையும் கவனத்திற்குரியதாகும். ஆனால் அத்தகைய செயலை அதிகம் எதிர்த்த இந்தியாவிடமே மீண்டும் தீவுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீளவும் ஏதும் கைமாறும் நகர்வு நிகழாது இந்தியா பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். இவற்றைவிட இரு நாட்டுக்குமிடையில் இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்பாடு, காலிமாவட்டத்திலுள்ள பிரத்தியோக கல்வி நடவடிக்கைக்கான புரிந்துணர்வு உடன்பாடு, வெளிநாட்டு சேவைக்கான உடன்பாடு இராஜதந்திர பயிற்சி நிலையம் போன்ற பொருளாதாரம் கடல்பாதுகாப்பு வர்த்தக விடயங்களில் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அதே நேரம் தமிழ் தரப்பினை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் புதிய அரசியலமைப்பில் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருங்கள் எனத் தெரிவித்தார். அவ்வாறே 160 கோடி செலவில் இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தினை ஜெய்சங்கர் இலங்கைப்பிரதமருடன் இணைந்து திறந்து வைத்துள்ளார்.
இவ்வாறு பிம்ஸ்டெக் மகாநாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் இரு நாட்டுக்குமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடங்களை முதன்மைப்படுத்தி உடன்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் அல்லாத வங்காளவிரிகுடா நாடுகளை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட பிம்ஸ்டொக் அமைப்பானது தற்போது இலங்கையின் தலைமைத்துவத்துக்குள் உட்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் இந்தியாவும் அதனை எதிர்பார்த்து செயல்படும் இலங்கையும் அதிக மாற்றங்களை நோக்கி நகர்கின்றதைக் காணமுடிகிறது. அதனை விரிவாக நேக்குவது அவசியமானது.
முதலாவது சீனாவின் இலங்கைத் தீவு மீதான நெருக்கத்தை வெற்றி கொள்ளும் விதத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதாவது பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கை ஏற்கனவே 2.5 பில்லியன் கடன் மற்றும் உதவிகளைப் பெற்றுக் கொண்ட நிலையில் மீளவும் இந்தியாவிடம் 1 பில்லியன் அ.டொ . கோரியுள்ளது. அதனை இந்தியா வழங்க தயாராகவே உள்ளது. இதன் மூலம் இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைகிறதைக் காணமுடிகிறது. அதாவது யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகளை இந்தியா தனதாக்கியமை இந்தியாவின் பாதுகாப்புக்கான நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொண்டு;ள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் அத்தகைய தீவுகள் உட்படுவது இந்தியாவின் தெற்குப் பகுதியும் ஆபத்தானதாக மாறும் நிலை காணப்பட்டது. ஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளதால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பிருந்தது. அவ்வாறே பொருளாதார மற்றும் உள்நாட்டுக் கட்டமைப்புக்களை உருவாக்குவதில் சீனாவுக்கு நிகராக இந்தியா மாறிவருகிறது.
இரண்டாவது இந்து சமுத்திரம் பொறுத்து அதிக நகர்வுகளை மேற்கொண்டுள்ள இந்தியா தற்போது இலங்கையுடன் கடல்பாதுகாப்பு உடன்பாடுகளை செய்துள்ளது. அதாவது இந்துசமுத்திரம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து மீட்கவேண்டிய நிலையை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அதற்கான நகர்வாகவே மாலைதீவையும் இலங்கையையும் முதன்மைப்படுத்தி அதிக கடல்பாதுகாப்பு உடன்பாடுகளை எட்டிவருகிறது. உக்ரையின் போருக்கு பின்னரான இந்திய சீனா கையாளுகையின் ஒரு அங்கமாகவே இலங்கை மீதான இந்தியாவின் நகர்வும் இந்துசமுத்திர கடல் சார்ந்த நகர்வும் காணப்படுகிறது. அதே நேரம் இலங்கை பாரிய பொருளாதார குலைவுக்கு தள்ளப்பட்டுள்ளமையும் இந்தியாவுக்கு இலாபகரமானதாக அமைந்துள்ளது.
மூன்றாவது இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இலங்கையை ஆதிக்கம் செய்ய இந்தியா முயலுகிறது. அதாவது இந்திய வெளியுறவு அமைச்சர் எரிபொருள் நிலையத்திற்கு சென்று நிலமையை விசாரித்ததன் அரசியல் இலங்கைத் தீவ இந்தியாவுக்கானது என்பதை உணர்த்துவதாகவே தெரிகிறது. ஆனால் இலங்கை ஆட்சியாளர்களும் தந்திரத்தின் உச்சளவைப் பிரயோகப்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் நகர்வுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வது போல் காட்டிக் கொள்ளும் உரை மொழியும் உடல் மொழியும் இலங்கை ஆட்சியாளர்களது நடவடிக்கையில் வெளிப்படும் செய்தியாகும். அதிலும் ஜனாதிபதி பிரதமர் வெளியுறவு அமைச்சர் மூவருமே மிகச்சிறந்த உத்தியுடன் காணப்படுகின்றனர். அதில் தனிப்பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட கட்சியின் தலைவர் முக்கிய பாத்திரம் வகிப்பதாக ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன.. ஏறக்குறை தற்போதைய அரசாங்கத்தின் ஆலோசகராக அவ்வுறுப்பினரே விளங்குகிறார். அவரது எண்ணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது எனவும் ஈழத்தமிழரும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டுவிடக் கூடாது என்ற இரு உத்திகளுடன் நகர்வதாக தெரிகிறது.
நான்காவது ஈழத்மிழர் அரசியல் பங்காளிகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்த எச்சரிக்கை இரு புரிதலை தந்துள்ளது. அதாவது புதிய அரசியலமைப்பு ஏற்படுமாயின் அதில் 13 வது திருத்தம் முடிபுக்கு வந்துவிடும் என்ற எச்சரிக்கை ஒன்றாகவே தெரிகிறது. அதனால் இந்தியாவுக்கும் ஈழத்தமிழருக்கும் எத்தகைய பாதிப்பு நிகழப் போகிறது என்பதையே அவரது எச்சரிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதில் அதிகம் பாதிப்படையப் போகும் இந்தியா என்பதை அவரது எச்சரிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது. அவ்வாறே இலங்கை அரசாங்கத்தின் போக்கு எவ்வாறு இந்தியா அளவிட்டுள்ளது என்பதையும் தமிழ் தரப்புக்கு உணர்த்தியுள்ளார். தமிழ் தரப்பு தற்போது இந்தியாவுடனும் இல்லை என்பதை அத்தகைய செய்தி உணர்த்துகிறது. அதாவது இலங்கையின் நகர்வை இந்தியாவுக்கு தெரியப்படுத்த வேண்டிய தமிழ் தரப்புக்கு இந்தியா விளக்கமளிக்கும் துரதிஸ்டம் ஏற்பட்டு;ள்ளது. தமிழ் தரப்பினர் தமது தனிப்பட்ட நலனுக்கே இந்தியாவை அணுகுவதாக தூதரகங்களில் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதாவது இந்தியா அழைத்த போது போகவில்லை. எதிர்கட்சியாக இருந்த போது இந்தியாவுக்கு பயணிக்கவில்லை. இந்தியாவின் நலன்களை இலங்கையில் ஏற்படுத்த உதவவில்லை. என பலகுற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதனாலேயே இந்தியா தென் இலங்கை ஆட்சியாளருடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட முனைகிறது. இந்தியாவுக்கு இலங்கைத் தீவு முக்கியமானது. அதனை எப்படியாவது கையாளுதல் வேண்டும். தமிழ் தரப்பின் அரசியல் உத்தியற்றது மட்டுமல்ல எதிர் துருவங்களாக செயல்படுகின்றன. அத்துடன் ஒரு தரப்பு திட்டமிட அதனை இன்னோர் தமிழ் தரப்பு தோற்கடிப்பதும் மரபாக உள்ளது. இன்னோர் பிரிவினர் இலங்கை ஆட்சியின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கொண்டு அனைத்து வாய்ப்புக்களையும் தகர்கிறார்கள். அதுவே தற்போது நிகழ்கிறது.
ஐந்தாவது ஆறு தமிழ் கட்சிகளது கோரிக்கையும் நகர்வும் ஜெய்சங்கர் வருகையுடன் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு;ள்ளதைக் காணமுடிகிறது. இந்தியா அத்தகைய தரப்புடன் உரையாடாதது தொடர்பில் அதிக கவனம் கொள்வது அவசியமானது. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் இந்திய வெளியுறவு அமைச்சர் உரையாடியமை அத்தகைய குழப்பத்தை தந்துள்ளது.
எனவே, இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கை வருகை அதிக வாய்ப்புக்களை இந்தியாவுக்கும் இலங்கை ஆட்சியாளருக்கும் தந்துள்ளது. இலங்கை தமிழரது விவகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உரையாடியதன் மூலம் இலங்கை ஆட்சியாளர்கள் கையாண்டுள்ளனர். அதனை வரவேற்ற இந்திய வெளியுறவு அமைச்சர் தொடர்வதற்கான கோரிக்கையை இரு தரப்பிடமும் முன்வைத்துள்ளார். அதனை ஜனாதிபதியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுள்ளது. இது மீளவும் இலங்கைத் தரப்பின் நெருக்கடிகால முகாமையாகவே தெரிகிறது. எனவே தமிழ் மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு முடிபுக்கு வருவது தெளிவாகவே தெரிகிறது. அதாவது இலங்கை தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி ஈழத் தமிழருக்கு ஏதும் வாய்ப்பினை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்துடன் பயணிக்கும் வாசகர்களே அதற்கான வாய்ப்பு ஜெய்சங்கரின் வருகையுடன் முடிபுக்கு வந்துள்ளது. அதற்கு உதவும் இந்தியாவும் தமிழர் தரப்பும் நெருக்கடியை இலங்கை வெற்றி கொள்ள வாய்பளித்துள்ளன. அதாவது சீனாவை அகற்றி இந்தியாவை இலங்கை ஆட்சியுடன் இணைத்ததன் மூலம் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெரு;ககடியும் ஒரே நேரத்தில் முடிபுக்கு வருகிறது. அதனால் சீனா இலங்கைத் தீவை கைவிடும் என்றே இலங்கையின் வெளிவிவகாரம் சீனாவை நிராகரிக்கும் என்றே கணக்குப் போடாதீர்கள். இது நெருக்கடிகால முகாமை மட்டுமே.அதன் பின்னர் ஆட்டம் வேறானது. அப்போது தமிழ் தரப்பு மட்டுமல்ல இந்தியத் தரப்பும் ஏமாற்றிவிட்டார்கள் என அறிக்கைவிடும் நிலை ஏற்படும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
