June 29, 2026
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க இராஜதந்திரிகளது இலங்கை வருகை இந்திய-இலங்கை உறவுக்கு எதிரானதா?

இலங்கை அரசியலில் இந்தியா அமெரிக்கா சீனா ஆகிய வல்லரசுகளின் பிரதான ஆடுகளமாக மாறியுள்ளதை கடந்த பல தசாப்தங்களாக காணமுடிகிறது. அவ்வாறே இலங்கையும் அத்தகைய வல்லரசுகளை தனது நலனுக்கேற்ற முறையில் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை எதிர்கொள்வதிலும் கருசனை கொண்டு இயங்குவதனைக் காணமுடிகிறது. தென் இலங்கையின் இராஜதந்திரம் ஒன்றும் தோற்றுப் போகும் யுகத்திற்கானதல்ல என ஆய்வாளர் சிவராம் ஒரு தடவை தனது பத்தியில் குறிப்பிட்டிருந்தமை நினைவுகோரத்தக்கது. அத்தகைய உபாயத்தை நோக்கியே இலங்கை பயணிக்கிறது. இக்கட்டுரையும் அமெரிக்க இராஜதந்திரிகளது இலங்கைக்கான வருகை ஏற்படுத்தியுள்ள மூலோபாயக் கொள்கையைத் தேடுவதாக அமையவுள்ளது.

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) தலைமையில் மூன்று பேர் அடங்கிய தூதுக் குழுவினர் 23 மார்ச்(2022) இல் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதில் பாதுகாப்புச் கொள்கைகளுக்கான துணைச் செயலாளர் அமன்டா ஜே டொரிமற்றும் தெற்கு மத்திய ஆசியா விவகாரத்திற்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ ஆகியோரும் அடங்குவர். அவர்களது இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருடனான சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக தமிழர் விடயங்கள் பற்றி அத்தூதுக் குழு முன்மொழிந்ததுடன் பொருளாதார நெருக்கடிக்கான வாய்ப்புக்களையும் சிவில் மற்றும் மனித உரிமைகள் பற்றிய விடயங்களையும் விவாதித்திருந்தது. ஆனால் தமிழர் விடயங்களில் கவனமும் ஜனாதிபதி முன்னெடுக்கும் விடயங்களுக்கு பாராட்டுதலும் அமெரிக்க இராஜதந்திரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றையும் அதற்குள்ளால் அமெரிக்கா நகர்த்த முனையும் விடயங்களையும் நோக்குவது அவசியமானது.

ஒன்று, விக்டோரியா தலைமையிலான இராஜதந்திரிகள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் நடாத்திய பேச்சுக்களில் மாகாண சபைக்கான தேர்தலை நிகழ்த்துமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். அவ்வாறு மாகாணசபைத் தேர்தலை வலியுறுத்தும் அளவுக்கு அமெரிக்காவின் தேவைப்பாடு எழுந்துள்ளதென்பதே கவனம் கொள்ள வேண்டியதாகும். இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவின் நிலைப்பாடு அதிகரித்து செல்கிறதை காட்டுவதாக தெரிகிறது. அவ்வாறு வலியுறுத்துவதற்கான நிலைமை இலங்கையில் உள்ளதா என்பது முதன்மையாகக் கவனம் கொள்ள வேண்டிய விடயமாகும். அதாவது பாரிய பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற இச்சூழலில் இலங்கை அரசாங்கத்தினை மாகாணசபைத் தேர்தலை நிகழ்த்த வலியுறுத்துவதன் மூலம் அதிக நெருக்கடியை அல்லது அழுத்தத்தை கொடுக்க அமெரிக்கா முனைகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. வெளித் தோற்றத்தில் பார்த்தால் அவ்வாறாகவே தெரிகிறது. உள்ளார்ந்த அர்த்தத்தில் பார்த்தால் அதனை முன்வைப்பதன் மூலம் ஈழத்தமிழர் அரசியலுக்குள்ளால் அமெரிக்காவின் நெருக்கத்தை இலங்கை ஆட்சியாளர்களுடன் ஏற்படுத்த முனைகின்றதை அவதானிக்க முடிகிறது.

இரண்டு, தமிழ் கட்சிகளுடனான ஜனாதிபதியின் சந்திப்பினை வரவேற்று பாராட்டினை அமெரிக்க இராஜதந்திரக் குழு வெளிப்படுத்தியுள்ளது. அச்சந்திப்பின் இழுத்தடிப்புகளும் காலம் தாழ்த்தல்களும் ஒருபுறம் அமைய இலங்கையிலுள்ள தமிழர் தொடர்பில் ஜனாதிபதியின் அண்மைய அறிவிப்புகளும் நகர்வுகளும் எந்த பிரதிபலிப்பையும் கண்டுகொள்ளாத பாராட்டாகவே தெரிகிறது. அதன் மூலம் உணரக்கூடிய விடயம். இதனால் இலங்கை ஆட்சியாளர்களுடன் நெருக்கமான உற்வைத் தக்கவைப்பதே தூதுக்குழுவின் இராஜதந்திரமாக தெரிகிறது. அதற்கான உடல் மொழியையும் விக்டோரியா தலைமையிலான தூதுக்குழுவிடம் அவதானிக்க முடிகிறது.

மூன்று, ஜனாதிபதியுடனான சந்திப்பில் புலம்பெயர் தரப்புக்களுடன் உரையாடுவது அவசியமானதென வலியுறுத்தியதுடன் அதற்கான ஜனாதிபதியின் பதிலையும் வரவேற்றுள்ளமை குறிப்பிட்த்தக்கதாகும். இதனூடாக பொருளாதார நெருக்கடியையும் அரசியல் நெருக்கடியையும் தீர்துக் கொள்ளலாம் என தென் இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டுள்ளதை விளங்கிக் கொள்வது அவசியமானது. புலம்பெயர்ந்தவர்களாக அதிகம் தழிழர்களே காணப்படுகின்றனர். அவர்களே இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கெதாள்ள வேண்டும் என்பதையும் அதற்கான வாய்ப்புக்களை நோக்கிய நகர்வே அமெரிக்க தூதுக் குழுவினது நடவடிக்கையாக தெரிகிறது. அதாவது இலங்கை ஆட்சியாளரையும் ஆட்சியையும் பாதுகாப்பதற்கான நகர்வாகவே அமைந்துள்ளமை புலப்படுகிறது.

இத்தகைய அமெரிக்க தூதுக்குழுவின் நகர்வு ஏன் என்பது பிரதான கேள்வியாகவே உள்ளது. எதிர்கட்சிக்ள விமர்சிப்பது போல் இத்தகைய நடவடிக்கை மீண்டும் மிலேனிய உடன்பாட்டைச் சாத்தியப்படுத்துவதற்கானதே என்பது மறுக்கமுடியாதுள்ளது. குறைந்த பட்சம் அத்தகைய உடன்பாட்டை வேறு வடிவத்தில் நிறுத்தும் நடவடிக்கையையும் அமெரிக்கா மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதற்கான தேவைப்பாடு உக்ரையின் ரஷ்சியப் போருக்கு பின்னர் அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது. அதிலும் இந்தியாவின் நகர்வை அமெரிக்கா அதிருப்தியுடனேயே கண்காணித்துவருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ.பிடன் கூறியது போல் ரஷ்சியாவை எதிர்கொள்ள இந்தியா தயங்குகிறது என்ற செய்தி அரசியல் மட்டத்தில் உரையாடப்பட்ட போதும் இந்தோ-பசுபிக் உபாயத்திற்கான அமெரிக்க செயலணி இந்திய-ரஷ்சிய புரிதலை ஏற்றுக் கொள்வதாகவும் அது குவாட் அமைப்புக்கு அதிக நெருக்கடியைத் தரவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது.அப்படியான கருத்து நிலையை அமெரிக்கா மற்றும் குவாட் நாடுகள் கொண்டிருந்தாலும் அமெரிக்க நிர்வாகத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் நடவடிக்கை அதிக நெருக்கடியை இந்தோ-பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு உபாயமான குவாட்டையும் பாதித்துள்ளது.

அதாவது சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சிக்கான பதிலீட்டை இந்தியாவை மையப்படுத்தியே அமெரிக்கா வகுத்திருந்தது. அதிலும் இந்து சமுத்திரத்தை மையப்படுத்தி இந்தியாவே முதன்மை நாடாக காணப்பட்டது. தற்போது இந்தியாவின் நகர்வு ரஷ்சியாவூடாக சீனாவை பாதுகாப்பதாக அமைந்துவிடுமா என்ற சந்தேகத்தைர அமெரிக்கத் தரப்புக்கு ஏற்படுத்தியுள்ளது. அப்படியாயின் இந்தோ-பசுபிக் உபாயமும் குவாட் கட்டமைப்பும் தகர்ந்து விடும் என்ற வாதம் நிலவ ஆரம்பித்துள்ளது.

ஆனால் அத்தகைய விடயத்திற்கு இந்தோ-பசுபிக் செயலணி இந்தியாவின் நகர்வு பொறுத்து தெளிவான பதிலளித்துள்ளது. அப்படியாயின் இந்தியாவை குவாட் அமைபட்பு மட்டுமல்ல மேற்குலகமும் கைவிடத்தயாராக இல்லை என்பதே புரிதலுக்கான செய்தியாகும். அதாவது இந்திய-ரஷ்சிய உறவை ஏற்றுக் கொள்வதனால் அமெரிக்க இந்திய உறவோ அல்லது இந்திய -மேற்கு உறவோ முடிந்து போனதல்ல. மாறாக இந்தியாவுடனான உறவினாலேயே மேற்குலகத்தின் சந்தை பாதுகாக்கப்படும். ஏற்கனவே சீனாவின் சந்தை உறுதியற்றுள்ளதால் மேற்கு இந்தியாவை இலகுவில் கைவிடுவதை முதன்மைப்படுத்தாது. ஆனால் இந்தியாவுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும். அத்தகைய நெருக்கடியை முதன்மைப்படுத்திக் கொள்வதன் மூலம் ரஷ்சிய -இந்திய நெருக்கத்தை கையாள முனையும். அதன் மூலம் இந்தியாவை தனது செல்வாக்குக்குள் கொண்டுவர முனையும் உத்தியை மேற்குலகம் எடுத்துள்ளது. அது மட்டுமன்றி அமெரிக்கக் கூட்டில் பலமாக உள்ள இஸ்ரேலின் ரஷ்சிய உறவை எப்படி மேற்கு நோக்குகிறதோ அவ்வாறே இந்தியா சார்ந்தும் மேற்கு செயல்படும் என்று கூற முடியாது. காரணம் இஸ்ரேல் தனது நலனுக்காக மேற்குலகத்தை கைவிடவும் கைபட்பிடிக்கவும் தயாராக உள்ளது. இஸ்ரேலுக்கு யூதர்களது நலனே முதன்மையானது. அதில் ரஷ்சியாவும் அமெரிக்காவும் ஒன்றாகவே இஸ்ரேல் பார்கிறது. ஆனால் அமெரிக்காவுக்குரிய நட்பு நாடாகவே எப்போதும் இஸ்ரேல் இருந்ததற்காக அமெரிகாவின் தோல்விகளை இஸ்ரேல் பொறுப்பேற்காது என்பதை பலதடவை உலகத்திற்கு உணர்த்தியுள்ளது. அதன் அண்மைய செய்தியே இஸ்ரேல்-ரஷ்சிய உறவாகும்.

இத்தகைய சூழலிலேயே அமெரிக்க இராஜதந்திரிகளது இலங்கை விஜயம் நோக்கப்பட வேண்டும். இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஒரு நகர்வாகவே இலங்கை வருகை அமைந்துள்ளது. அதாவது இலங்கையின் முக்கியத்துவம் விளங்கிக் கொண்ட மேற்குலகம் பனிப்போர்க் காலத்தில் இலங்கையை மட்டுமல்ல பாகிஸ்தான் வங்களாதேஷ் மற்றும் மாலைதீவையும் நெருக்கமாகக் கொண்டு இந்தியாவைக் கையாண்டதை கவனத்தில் கொள்வது அவசியமானது. இதற்கான வாய்ப்பினை மீளவும் அமெரிக்கா உட்பட்ட குவாட்டின் மேற்கு நாடுகள் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. இது மேலும் நீடிக்க வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் வங்களாதேஷ் போன்ற நாடுகள் சார்ந்தும் மாலைதீவு சார்ந்தும் அத்தகைய நடவடிக்கை எதிர்காலத்தில் நீடிக்க முடியும். ஏற்கனவே முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோவின் இலங்கை மாலைதீவு வருகை அத்தகைய பார்வையை ஏற்படுத்தியிருந்தது. யுருமுருளு உடன்பாட்டிலும் இந்தியாவை கைவிட்டன குவாட் நாடுகள் என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

எனவே, அமெரிக்கா எப்போதும் நீண்ட காலத்திட்டமிடலுடன் நகரும் நாடு என்பதை விளங்கிக் கொள்வது அவசியமானது. உக்ரைன்-ரஷ்சியப் போர் ஏற்படுத்தியுள்ள புதிய அணிகளும் நலன்மாற்றங்களும் மேற்குலகத்தின் உபாயங்களை புதிய திசையில் நகர்த்த தொடங்கியுள்ளது. தனித்து இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்வதுடன் இந்தியாவை நெருக்கடிக்கு உள்ளாக்குவதும் இலங்கையை ஈழத்தமிழரது அரசியல் பொறுத்து நிர்ப்பந்தங்களை உருவாக்கி அமெரிக்க நலனை பாதுகாப்பதும் விக்டோரிய தலைமையிலான குழுவின் நோக்கமாக உள்ளது. இந்து சமுத்திரத்தை தக்கவைப்பதற்கான கூட்டாக இலங்கையை இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தில் இணைத்துக் கொள்வதில் அமெரிக்கத் தரப்பு அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்வதை பாராட்டிய அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கை அரசாங்கத்தை பாராட்டுவதன் மூலம் இலங்கையை இணைப்பதில் வெற்றி கொள்ள முயலுகின்றனர்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)