2022இன் ஆரம்பத்தில் உலகப்போருக்கான அதிக எச்சரிக்கைகளுடன் உலகை உலுக்கிய போராக ரஷ்ய -உக்ரைன் போர் ஆரம்பித்தது. இதனடிப்படையில், ஆரம்பத்தில் ரஷ்ய- உக்ரைன் போர் சர்வதேச அரசியல்; பரப்பில் அதிக கொதிநிலையை ஏற்படுத்தியிருந்தது. எனிலும் இரண்டு மாதத்துக்கு மேலாக யுத்தம் நீடித்து வரும் நிலையில் அதன் செய்திவீச்சு நாளடைவில் சர்வதேச பரப்பில் பரவலாக குறைவடைந்துள்ளது. மேற்கு ஊடகங்களும் சாதாரண செய்தியாக ரஷ்ய- உக்ரைன் போரை அறிக்கையிட ஆரம்பித்துள்ளது. இதன் பின்னனணியில் ரஷ்யாவின் ஆதிக்கம் மேலோங்குவதும், ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுத்தளம் அமெரிக்காவிற்கு குறைவடைந்து செல்வதுமே காரணமென சர்வதேச அரசியல் ஆய்வு பரப்பில் உரையாடப்படுகிறது. இக்கட்டுரையும் ரஷ்ய -உக்ரைன் போரின் பிந்திய நிலைமைகளை தேடுவதாகவே அமைகின்றது.
ஒன்று, ரஷ்யா ஜனாதிபதி புடின் சர்வதேச தலைவர்களுடனான சந்திப்புக்களை விரைவுபடுத்துவதுடன், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர்களை நியாயப்படுத்தும் கருத்தாடல்களை முன்னிலைப்படுத்தி வருகின்றார். இதனடிப்படையிலேயே ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஏப்ரல்-24அன்று புடினை மொஸ்கோவில் சந்தித்தமை அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றது. அச்சந்திப்பு பற்றி ஐ.நா. பொதுச்செயலாளர் குறிப்பிடுகையில், மிகப்பயனுள்ள சந்திப்பாக அமைந்தது என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி உக்ரைன் போரை நிறுத்துமாறும் உக்ரைனின் பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாக்குமாறும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். உக்ரைன் மீதான தாக்குதலில் முக்கிய துறைமுக நகரமாக இரு தரப்பாலும் கருதப்படும் மரியப்போல் நகரத்தில் தங்கியிருக்கும் பொது மக்களை அமைதியான முறையில் வெளியேற்றுவதற்கு ரஷ்யா உதவும் எனவும் ஐ.நா.பொதுச் செயலாளருக்கு ரஷ்ய ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகத் தெரிகிறது. தனது இராணுவத்தை விலக்கிக் கொள்வதுடன் குறித்த காலப்பகுதியில் பொதுமக்களை வெளியேறுவதற்கு அனுமதிப்பதாக புடின் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி புடின் கொள்கையடிப்படையில் ஐ.நா சபையின் சர்வதேச செஞ்சிலுவை அமையத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதென்றும் பொதுமக்களை அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை செஞ்சிலுவைச்சங்கம் மேற்கொள்வதற்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷ்ய ஆதரவு போராளிகள் போராடி வருகின்ற நிலையில் டொன்பாஸ் பிராந்தியத்தின் பிரச்சினைக்கு முடிவு எட்டப்படாமல் எந்தவொரு பாதுகாப்பு உடன்படிக்கையிலும் கையெழுத்திட முடியாதென புடின் தெளிவாக அறிவித்துள்ளார். அதேநேரம் உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனை தருமென்றும் தாம் நம்புவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி ஐ.நா பொதுச்செயலாளருக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் ரஷ்யா உதவுமென்றும் தெரிவித்துள்ளார்.
இரண்டு, ரஷ்ய உக்ரைன் போர்க்களத்தில் ஆரம்பத்தில் உக்ரைனுக்கான ஆதரவு தளத்தில் ஒன்றுபட்டு நின்ற ஐரோப்பிய நாடுகளிடையே தற்போது அதிக விரிசல்களும் உக்ரைனுக்கான ஆதரவு தளத்திலிருந்து பின்ஒதுங்கும் நிலையும் காணப்படுகின்றது. அதாவது ஐரோப்பிய நாடுகள் தமக்கான எரிபொருள் இறக்குமதியில் அதிகம் ரஷ்யாவை சார்ந்திருப்பதனால் அதுசார்ந்து தொடர்ச்சியாக ரஷ்யாவை பகைத்துக்கொள்ள இயலாத சூழல் காணப்படுகிறது. குறிப்பாக ரஷ்யாவின் எரிபொருளில் அதிகம் தங்கியிருக்கும் ஜேர்மனி ரூபிளில் ரஷ்யாவிற்கு பெற்றோலிய இறக்குமதிக்கான நிதியை வழங்குவதற்கு தயாராகுவதாக தெரிய வருகிறது. அதே நேரம் ரஷ்ய- -உக்ரைன் போர்க்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக ஜேர்மனியே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறே ஹங்ஹேரி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் எரிசக்தி விநியோகத்தர்கள் ரஷ்யாவிடமிருந்து பெறுகின்ற பெற்றோலியத்துக்கான நிதியினை ரூபிளில் வழங்க சுவிஸ் நாட்டில் உள்ள ஹஸ்ப்ரோன் வங்கியினூடாக பரிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. இதன்மூலம், ஐரோப்பிய- ரஷ்ய உறவு புதிய திசையில் நகர்வதோடு அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கை ஐரோப்பிய பிராந்தியத்தில் முதன்மைப்படுத்தப்படுகின்றது என்பதை கோடிட்டு காட்டுவதாக தெரிகின்றது. இதேநேரம் அமெரிக்கா ரஷ்யாவிற்கு பதிலாக பெற்றோலியத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்குவதாக தெரிவித்த போதும் நடைமுறையில் அதற்கான சாத்தியப்பாடுகள் பலவீனமாக காணப்படுவதுடன் மேற்காசியாவில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் பெற்றோலிய வளத்தை தனது சுயதேவைக்காக பாதுகாக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்காவைத் தள்ளியிருப்பதாகவும் மேற்கு ஊடகங்கள் குறிப்பிடுகிறன. எனவே மேற்கு ஐரோப்பாவுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவானது, அரசியல் ரீதியிலும் பொருளாதார மேற்கட்டுமான அடிப்படைகளிலும் தங்கியிருக்கின்றது எனவும் தரைவழி தொடர்புகளால் அல்லது பொருட்கள் பரிமாற்றுவதற்கான திட்டமிடல்களால் அல்ல என்பதும் இத்தகைய புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை ரஷ்யாவின் பக்கம் வலுப்படுத்துகின்றது என்பதையும் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.
மூன்று, சமகாலத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் உரையாடல்களும் அதற்கான அணுகுமுறைகளும் ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் தீவிர போர் நகர்வுகள் உக்ரைன் மீது நிகழ்த்தப்படுகிறது. மரியப்போ துறைமுகநகரம் மட்டுமன்றி உக்ரைனின் கிழக்கு பிராந்தியம் முழுவதும் பாரிய போர் நிகழ்வதாகவும் ரஷ்யாவின் தீவிர தாக்குதலில் உக்ரைனின் சொத்துக்கள் அழிக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. இதிலிருந்து மீள்வதற்கு உக்ரைனுக்கு பல ஆண்டுகள் பிடிக்குமென்றும் பாரிய நிதி உதவி அவசியம் என்பதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றது. இப்போரின் ரஷ்சியாவின் பிரதான நோக்கமே உக்ரைனை பலவீனப்படுத்துடன் அதன் வளங்களை முற்றாக அழிப்பதாகவே காணப்படுகிறது. மரியப்போ நகரத்தை ரஷ்யா கைப்பற்றியமையால் உக்ரைனின் ஏற்றுமதி முற்றாக தகர்க்கப்பட்டுள்ளதுடன் உக்ரைனில் காணப்படும் பெற்றோலிய உற்பத்தியின் கட்டுப்பாடு ரஷ்ய படைகளிடமே காணப்படுவதாக தெரியவருகிறது. ஏறக்குறைய உக்ரைனின் ஏற்றுமதிகளும் அதற்கான பொருளாதார வாய்ப்புக்களும் முற்றாகவே அடைபட்டுள்ளதைக் காணமுடிகிறது.
நான்கு, ரஷ்ய- உக்ரைன் போர் பிரான்சில் நிகழ்ந்த ஜனாதிபதி தேர்தலில் அதிக தாக்கத்தை செலுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பாவை ஒன்றிணைப்பதும் பிரான்சின் சுதந்திரத்தை முதன்மைப்படுத்துவதும் ஐரோப்பாவினை மீளமைப்பதும் என்ற கருப்பொருளோடு எதிர்க்கட்சி வேட்பாளர் லி பென் மாத்திரமின்றி ஜனாதிபதி மக்ரோனும் அத்தகைய கருத்து நிலையை கொண்டிருந்தார். அதனால் ஜனாதிபதி தேர்தலின் இறுதி காலப்பகுதியில் உக்ரைன் -ரஷ்ய போரை தூண்டுவதில் அமெரிக்கா முன்னின்று செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியதோடு ஐரோப்பாவின் கட்டமைப்பை அமெரிக்காவுக்கு புறம்பாக மேற்கொள்ளும் உத்திகளை பிரான்சும் பிரான்ஸ் தலைமை தாங்கும் ஐரோப்பிய யூனியனும் கொண்டிருப்பது என்பது தேர்தல் காலத்தில் வெளிப்படையாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மக்ரோன் வெற்றி பெற்றாலும் இரண்டாவது அதிக வாக்குகளை பெற்ற லி பென் பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து நகர்வதாக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திலும் முடிவுகள் வெளிவந்த பிற்பாடு தன்னுடைய வாக்காளர்களோடு உரையாடும் போதும் வெளிப்படுத்தியுள்ளார். இவர் பாராளுமன்ற தேர்தலை வெற்றிக்கான களமாக தேர்ந்தெடுத்துள்ளாதாக வாக்காளர் ஒருவர் பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார். எனவே இவர் ரஷ்யா மீதும் புடின் மீதும் கொண்டுள்ள நெருக்கமும் ஐரோப்பிய மீளுருவாக்கம் பற்றிய சிந்தனையும் பிரான்சினூடாக மாற்றத்தை நோக்கி நகரக்கூடிய வாய்ப்பும் நிலவுவதாக தெரிகிறது. அவ்வகை சூழல் ஒன்று ஏற்படுமாயின் அமெரிக்கா மற்றும் பிரிட்டன்’ உறவு நிலையும் அதனூடாக கட்டியெழுப்பப்பட்ட முயற்சிக்கும் ஐரோப்பிய அமெரிக்க உறவு எதிர்நிலைக்கு தள்ளப்படும் அல்லது போட்டித்தன்மை உருவாகும்.
எனவே, விளாடிமிர் புடினது இராஜதந்திர செய்முறைகளும் போரும் பொருளாதார ரீதியிலான அணுகுமுறைகளும் தவிர்க்க முடியாது ஐரோப்பிய -ரஷ்ய உறவை சாதகமாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியதாக காணப்படுகிறது. அதேநேரம் அமெரிக்காவின் ரஷ்யா மீதான பொருளாதார தடையும் ரஷ்யாவை பலப்படுத்தம் செய்முறையாக புடினால் மாற்றப்படுகிறது. ரஷ்ய பெற்றோலியத்தில் தங்கியிருக்கும் ஐரோப்பாவை உக்ரேனிய போருக்கூடாக புடின் கையாளுவதில் வெற்றிகண்டு வருகிறார். ஆனால் அவரது போர் அணுகுமுறையானது அதிக ஆபத்துமிக்கதொன்றாகவும் தீவிரத்தன்மை மிக்கதாகவும் ஐரோப்பிய- அமெரிக்க நாடுகள் மீதான எச்சரிக்கைகளையும் அதிகம் கொண்டுள்ளது. இது ரஷ்ய ஜனாதிபதி ஆக்கிரமிப்புவாதியாக குறிப்பிட்டதையும் விட, அதீதமானவராக காணப்படுகின்றார் என்பதையே வெளிப்படுத்துகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
