இலங்கைத்தீவின் அரசியல் பொருளாதார நெருக்கடி தீர்வற்ற நீட்சியை கொண்டு இயங்குகின்றது. உள்நாட்டில் அரசியல்போட்டி அத்தகைய அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாத சூழலை உருவாக்கியது போன்று புவிசார் அரசியல் போட்டியும் பூகோள அரசியல் போட்டியும் அத்தகைய தீர்வற்ற சூழலுக்குள் நகர்த்துகின்றது. சீனாவின் அதிஉயர் இராணுவ தொழில்நுட்பத்தை கொண்ட யுவான்வாங்-05 எனும் கப்பலானது இலங்கைத்தீவீன் அரசியலை சர்வதேச அரசியல் நியமத்துமுக்குள் அதிதீவிரமாக நகர்த்தி வருகின்றது. இக்கட்டுரையும் சீனக்கப்பலை அடுத்து இலங்கைத்தீவை மையப்படுத்தி ஏற்பட்டிருக்கும் உலக நாடுகளின் போர்க்கப்பல்களின் அரசியலை விளங்கிக்கொள்ள முயலுகிறது.
முதலாவது, சீனா செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான்வாங்-05 தனது ஹம்பாந்தோட்டை நோக்கிய பயணத்தை இந்தியாவின் எதிர்ப்பையும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையையும் நிராகரித்து செயற்படும் போக்கினை அவதானிக்க முடிகின்றது. சீனாவின் இத்தகைய நகர்வு சமுத்திரங்கள் நோக்கிய சுதந்திரமான பயணத்தை நியாயப்படுத்தும் விதத்திலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99வருட குத்தகை என்ற அடிப்படையிலும் செயற்படுவதை காண முடிகிறது. இந்தியாவின் எதிர்ப்பும் கரிசணையும் காலந்தாழ்த்தியதாகவே மதிப்பிடப்படுகின்றது. இலங்கைத்தீவை பொறுத்தவரை சீனாவுடனான உறவை சுமுகமாக பேண விரும்புவதாகவும் தொடர்ச்சியாக சீனா-இலங்கை உறவு பராமரிக்கப்பட வேண்டுமெனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அதேநேரம் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.இ.குணசிங்க குறிப்பிடும் போது இலங்கை-சீன உறவு பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் இரு நாட்டுக்குமான முரண்பாட்டை இரு நாட்டு தலைவர்களும் உரையாடுவதனாலேயே தீர்த்தக்கொள்ள வேண்டுமே தவிர இன்னொரு நாட்டின் தலையீட்டை அங்கீகரிக்க கூடாது எனக்குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி இலங்கையின் புதிய ஜனாதிபதி சீனா கப்பல் வருகை தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் அண்மைக்காலத்தில் முன்வைக்கப்படாமை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். எனவே இலங்கையின் இடதுசாரிகள், வலதுசாரிகள், ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் என்ற வேறுபாடின்றி இலங்கை-சீனா நட்புறவு அவசியமானது எனக்கருதுகின்றனர். அதற்கு பின்னாலுள்ள வலுவான காரணங்களில் ஒன்றாக இலங்கையின் இந்திய எதிர்ப்புவாதத்தை கொண்டத என்று வரையறுக்க முடியும். ஈழத்தமிழ் புலமையாளர்களும் இந்திய-மேற்கு ஆய்வாளர்களும் 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை-சீனா உறவின் இராணுவ பரிமாணாத்தை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். அப்போதெல்லாம் இந்தியா சீனாவின் நகர்வை பொருளாதார வர்த்தக பெறுமானத்தோடு மட்டுப்படுத்திக்கொண்டது. அதன் விளைவுகளையே இந்தியத்தரப்பு தற்போது எதிர்கொள்கின்றது. தற்போதைய சூழலிலும் சீனக்கப்பல் வருகை தொடர்பான அதிருப்தியை ஊடகத்தரப்பும் புலமையாளர்களும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு இந்திய கொள்கைவகுப்பாளர்களும் இராஜதந்திரிகளும் கவனம் கொள்ளவில்லையென்பது அவதானத்திற்குரிய விடயமாகும். சீனக்கப்பல் ஹம்பாந்தோட்டையில் தரித்து நிற்கும் நிலை இந்திய இராணுவத்தொழில்நுட்பத்தையும், இராணுவ வல்லமையையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கண்டறிவதற்கு போதுமானதாக அமையும். சினக்கப்பலின் தரித்து நிற்கும் காலம் இந்திய இராணுவத்தின் வலுவை அளவீடு செய்ய போதுமானது என்பதை சீனக்கப்பலின் தொழில்நுட்பம் உணர்த்தி இருக்கின்றது. 25ஆயிரம் தொன்னை இடையாகக்கொண்ட இக்கப்பலானது 2007களுக்கு பின்னர் கட்டப்பட்டதுடன் 400பணியாளர்களை கொண்டுள்ளது. இது தனது தரித்திருக்கு பிரதேசத்திலிருந்து 750கி.மீ பரப்பளவை கண்காணிக்கக்கூடியது என்ற தகவலையும் உளவு பார்த்தல் ஆய்வுகளை மேற்கொள்ளலென இரு பரிமாணங்களை கொண்ட கப்பலாகவும் காண முடிகின்நது. இதன் வருகை மேற்கு நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கும் இந்து சமுத்திர தளங்களிளுள்ள இராணுவ கப்பல்களையும் கண்காணிக்கும் திறன் கொண்டதெனவும் அறிய முடிகின்றது. அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு நிதி உதவி செய்யும் மேற்கு கொடையார் நாடுகளும் சீனா எதிர்ப்பினூடாக இலங்கைத்தீவை கையாள முற்படுவது தவிக்க முடியாத செயலாகவும் அமைள வாளப்புள்ளது. இலங்கைத்தீவை கைவிடுவது என்பதற்கு அப்பால் இலங்கைத்தீவின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வாய்ப்புள்ளது. இன்னொரு வகையின் கூறின் இலங்கைத்தீவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் சர்வதேச சக்திகளின் பங்கீட்டுக்கு உட்பட வாய்ப்புண்டு. இது இலங்கைத்தீவின் புவிசார் அரசியல் இருப்பின் பங்களிப்பை கொண்ட இந்தியாவுக்கும் பொருத்தப்பாடுடையதாகும். குறைந்தபட்சம் இந்தியா வடக்கு-கிழக்கு பகுதியையாவது பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இலங்கைத்தீவை முற்றாக இந்தியா இழப்பதென்பது அதன் பாதுகாப்பை இழப்பதற்கு ஒப்பானது. எனவே இந்தியாவின் கரிசணை குறைந்தபட்ச தெரிவுகளையாவது நிறைவேற்றுவதாக அமைய வேண்டும். இலங்கைத்தீவின் இழப்பென்பது இந்தியாவுக்கு இந்து சமுத்திரத்தின் இழப்பாகவே அமையும்.
இரண்டாவது, சீனக்கப்பலின் வருகையை ஒட்டி பிராந்தியத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளை கடந்து பாகிஸ்தானின் போர்க்கப்பலானது தைமோர் கொழும்புதுறைமுகத்திற்கு வருகை தந்திருந்தது. 080.08.2022அன்று இந்திய-பாகிஸ்தான் கடல் எல்லையை கடந்து கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் சீனாவில் கட்டப்பட்டு PNளு தைமோர் என்ற போர்க்கப்பல் ஷஹ்காய் நகரில் புறப்பட்டு கராச்சி துறைமுகத்தை நோக்கி செல்லும் பயணத்தில் நல்லெண்ண நோக்க நிலையில் கொழும்பு துறைமுகத்தை தரித்துள்ளது. இப்போர்க்கப்பல் கம்போடியா, மலேசியா போன்ற நாடுகளுடனான கடற்படை பயிற்சிகளை முடித்துக்கொண்டு பாகிஸ்தானை நோக்கி பயணிக்கின்றது. பாகிஸ்தானின் ஏவுகணை போர்க்கப்பலான தைமோர் இலங்கையின் அழைப்பின் பேரிலே கொழும்புதுறைமுகத்திற்கு வருகை தந்ததாகவும் சீனாவின் யுவாங்வாங்-05 ஹம்பாந்தோட்டையில் தரித்து நிற்கும் காலம் வரை பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்குமென தகவல்கள் உறுதிப்படுத்துகின்றது. இதன்வருகை இந்தியாவை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளதோடு பாகிஸ்தான்-இலங்கை-சீனா உறவானது, வலுவானதென்பதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள பாகிஷ்தான் துறைமுகமான குவாடர் மற்றும் ஹம்பாந்தோட்டை சீன குத்தகைக்குரிய துறைமுகங்களென்பதுவும் அவை சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியென்பதுவும் விளங்கிக்கொள்ள வேண்டிய விடயமாகும். பாகிஷ்தான்-இலங்கை-சீனா என்ற அணியின் ஒத்துழைப்பினால் இந்தியா சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சீனக்கப்பலின் வருகையை முன்கூட்டியே தெரியப்படுத்தியதோடு அதற்கானதொரு பாதுகாப்பு வலயத்தை கட்டமைப்பதில் பாகிஷ்தானின் போர்க்கப்பலான தைமோருக்கு வலுவுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே, இலங்கைத்தீவு போர்க்கப்பல்களின் இராஜதந்திரத்திற்கூடாக சுற்றி வளைக்கப்பட்டிருப்பது என்பதுவும், அதன்மூலம் இந்துசமுத்திரம் சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ளது என்பதுவும் தைமோர் விஜயம் உறுதி செய்கின்றது.
மூன்றாவது, சீன-பாகிஷ்தானிய போர்க்கப்பல்களின் நகர்வுக்கு பின்னர் அமெரிக்க போர்க்கப்பலின் வருகை சென்னையின் புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கப்பல் கட்டுமாண தளத்தில் அமெரிக்காவின் கடற்படை போர்க்கப்பலான சார்ள்ஸ் ட்ரூ வருகை தந்துள்ளது. இக்கப்பலின் வுருகை பழுதுபார்த்தல் பணிக்கானதென குறிப்பிட்டாலும் அமெரிக்காவின் கடற்படை கப்பல் என்ற அடிப்படையிலும் அதுவோர் போர்க்கப்பல் அடிப்படையிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததென போரியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏறக்குறைய சீனக்கப்பல் இலங்கையில் தரித்திருக்கும் காலத்தில் இக்கப்பல் சென்னையை அண்டிய துறைமுகத்தில் தரித்திருக்குமெனவும் சர்வதேச கப்பல் கட்டுமாண சீரமைப்பு பணியில் இது ஈடுபடுமெனவும் நவீன கடல்சார் தொழில்நுட்பத்தை கொண்டு இந்திய கப்பல் கட்டும் தளத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுமென்றும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதுபற்றி இந்திய பாதுகாப்பு துறையின் செயலாளர் அஜய்குமார் குறிப்பிடும் போது அமெரிக்க கடற்படை கப்பலான சார்ள்ஸ் ட்ரூவின் வருகை இந்தியாவின் கடற்பாதுகாப்பை வலுப்படுத்துகிறதெனவும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான கடற்படை மற்றும் கப்பல் கட்டுமானத்துக்கான தொழில்நுட்பத்துக்கான உறவு வலுப்படுத்தப்படுகின்றதெனவும் இக்காலப்பகுதியில் அமெரிக்க கப்பலின் வருகை பிராந்தியரீதியில் முக்கியமானதெனவும் குறிப்பிடப்படுகின்றது. எனவே, அமெரிக்க கப்பலின் வருகை சீனாவுக்கும் ஹம்பாந்தோட்டையில் சீனா தரித்திருக்கும் ஆய்வியல் கப்பலுக்கும் மாற்றீடான நகர்வாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்தோ-பசுபிக் பாதுகாப்பு என்ற ரீதியில் சீனாவின் நகர்வு குவாட் நாடுகளின் இருப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்தியாவின் பாதுகாப்புபக்காக உருவாக்கப்பட்ட 42 கப்பல்களில் 40 கப்பல்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதெனவும் இதன்மூலம் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு வலுப்படுத்துவதற்கு அதன் தொழில்நுட்பத்தை சீரமைக்கின்ற நோக்கு நிலையும் அமெரிக்க கடற்படை கப்பலும் நகர்ந்துள்ளதென கருத முடிகிறது.
எனவே, இந்து சமுத்திரமும் இலங்கை தீவும் கடல்சார்ந்து முக்கியத்துவம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவின் இருப்பென்பது இந்து சமத்திரத்தின் அலைகளில் தங்கியுள்ளதென வரலாற்றாசிரியர் பணிக்கர் குறிப்பிட்டதை நினைவு கொள்ளுதல் அவசியமாகும். இந்து சமுத்திரத்தின் பிடியை சீனா வலுப்படுத்துவதென்பது இந்தியாவின் உபாயங்களும் உத்திகளும் நெருக்கடிக்குள்ளாகும் என்பதையே காட்டுகின்றது. இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களும் அவர்களின் அரசியல் பொருளாதார கொள்கைகளும் வலுவற்று போகின்ற பொது பிராந்திய சர்வதேச நாடுகளின் மற்றும் நிதிநிறுவனங்களின் கொள்கைகளுக்கு அகப்படவேண்டிய தேவை தவிர்க்க முடியாமல் இலங்கைத்தீவுக்கு ஏற்பட்டுள்ளது. சீனக்கப்பலின் வருகை ஈழத்தமிழர்களின் அரசியலில் முனைப்பான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையப்போகின்றது. சீனா வர்த்தகரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலுவடைந்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் இராணுவரீதியிலான விஷ்தரிப்பை நோக்கி நகர ஆரம்பித்தள்ளது. இது இலங்கைத்தீவையும் தைவான் தீவையும் ஒரே திசையில் நகர்த்த அல்லது பதிலீட்டு நகர்வை மேற்கொள்வதற்கான நகர்வாகவே தென்படுகின்றது. இலங்கைத்தீவை நோக்கிய சர்வதேசத்தின பார்வை திசைதிருப்பப்படுகின்ற போது தைவான் விவகாரத்தை இலகுபடுத்தி கொள்ளவும் தைவான்-சீனா உறவு போன்றே இலங்கை-இந்திய உறவை கருதும் உலகத்தின் முன் சீனா தனது கடலாதிக்கத்தை இந்தோ-பசுபிக் சமுத்திரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள விளைகின்றது. சீனா எவ்வாறு தைவானை சுற்றி வளைத்துள்ளதோ அவ்வாறே இலங்கையையும் போர்க்கப்பல்கள் தனது அரசியல் நலனை அடைவதற்கான சுற்றிவளைப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை இந்தியா எதிர்கொள்ளுமா அல்லது கடந்து செல்லுமா என்பதே பிரதான கேள்வியாக உள்ளது. ஏறக்குறைய இந்தியாவின் அணுகுமுறைகள் கடந்து செல்ல துணிவதாகவே தெரிகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
