இலங்கை-இந்திய உறவு சீனாவின் அணுகுமுறையால் நெருக்கடிக்குள் நகர்வதாக தெரிகிறது. அதனை சரிசெய்ய இலங்கைக்னகான இந்தியத் தூதுவர் மிலிந்த மொறகொட அதிக பிரயத்தனத்தை மேற்கொள்வதையும் இந்தியாவுக்கும் திருகோணமலைக்கும் இடையிலான எரிவாயு குழாய்த்திட்டத்தை பற்றிய உரையாடலை ஆரம்பித்துள்ளதையும் காணமுடிகிறது. இந்தியாவை அதீதமாக கையாள முடியுமென கணக்கிட்ட தென் இலங்கை அரசியல்வாதிகளுக்கு அதிக நெருக்கடியை சீனா தந்துள்ளதாகவே தெரிகிறது. சீனாவின் இறுக்கமான போக்கும் அதன் அணுகுமுறைகளும் இலங்கை-இந்திய உறவை பாதிப்பதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் இலங்கை-இந்திய உறவில் சீனாவின் நடவடிக்கைகள் பற்றிய தேடலாகவே அமையவுள்ளது.
முதலாவது இலங்கைக்கான சீனாத் தூதுவர் ஷிவென் ஹொங் ஊடகங்களுக்கு எழுதிய கட்டுரையில் தெரிவித்த விடயத்தை நோக்குவது அவசியமானது. அதாவது சில நாடுகள் அருகில் அல்லது தொலைவில் இருக்கலாம். பல்வேறு அடிப்படையற்ற காரணங்களை முன்வைத்து இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மிதித்து, அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருகின்றன. இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம், மற்றும் ஒருமைப்பாட்டை மீறப்படுவதை சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக் கொள்ளாது. சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கும் என்றார். இதற்கு பதிலளித்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால்பால்கே சீனத்தூதுவரின் கருத்துக்களை நாங்கள் கவனித்துள்ளோம். அவரது அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறுவது தனிப்பட்ட பண்பாக இருக்கலாம் அல்லது ஒரு பெரிய தேசம் என்ற மனப்பாண்மையாக இருக்கலாம் என்றார். அவர் மேலும் தெரிவிக்கும் போது, இலங்கைக்கு இப்போது தேவை ஆதரவுதான். மற்றொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யும் தேவையற்ற சர்ச்சைகள் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது, சீனாவின் யுவாங்வாங்-05 உளவுக்கப்பல் இலங்கைக்கு வருகை தந்ததனால் இலங்கை-இந்திய உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியதென இலங்கைக்கான இந்திய தூதுவர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான இவ்வாறான நம்பிக்கையீனங்கள் தவிர்க்கப்படவேண்டுமௌ அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் சீன உளவுக்கப்பலை அநுமதித்த கொழும்பின் முடிவு புதுடில்லிக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் இலங்கையும் இந்தியாவும் கடல்சார் பாதுகாப்பு நெருக்கடியை எவ்வாறு கையாள்தல் என்பது பற்றி ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடுத்த கட்டமாகவே இந்தியாவுக்கும் திருகோணமலை துறைமுகத்துக்கும் இடையே எரிசக்திக்குழாய் அமைக்கும் திட்டமொன்றை மிலிந்த மொறகொட வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை மண்ணையோ அல்லது கடல் பிராந்தியத்தையோ இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக பயன்படுத்தப்படுவதை இலங்கை அனுமதிக்காது என்றும் 1983ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்பு இலங்கை இந்த உறுதிமொழியை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களாக ஒவ்வொரு நெருக்கடியிலும் இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இந்தியா இல்லை என்றால் இலங்கை கடுமையான பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 380கோடி டொலர் மதிப்பிலான உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கி உள்ளது. எனினும் இலங்கைக்கு கடினமான காலம் முடிவடையவில்லை எனத்தெரிவித்துள்ளார்.
மூன்றாவது, இதேநேரம் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் என்பவர் சீனா ஒரு பெரும் விளையாட்டுக்குரிய துருப்பு சீட்டாக இலங்கையை பயன்படுத்துகிறது. கடந்த வருடங்களில் சீனாவினால் பின்பற்றுப்பட்டு வந்த கொள்கைகளே இலங்கையின் முக்கிய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும். இத்தகைய சூழ்நிலையில் இலங்கை மீது கரிசணை கொண்டது போலும் இலங்கையின் பாதுகாப்பில் அக்கறையுடையது போலும் சீனா செயற்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் நீண்டகாலமாக இலங்கையுடள் இந்தியா நல்லுறவை பேணி வருகிறது. இது எதிர்காலத்தில் தொடரும் என்பதை இந்தியா அயல்நாடுகளை கையாள்வதில் சீனா போன்று அல்லாது வேறுமுறையான அணுகுமுறைகளை கொண்டுள்ளோம் என சரண் தெரிவித்துள்ளார்.
நான்காவது, இதேநேரம் சீனாவின் உளவுக்கப்பலான யுவாங்வாங்-05 இலங்கையின் தென்கிழக்கு பகுதியான இந்து சமுத்திரத்தில் 400மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவம் அப்பகுதியிலிரந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய உளவுத்தகவலை ஆதாரமாக கொண்டு இத்தகவலை வெளியிட்ட இந்துஸ்தான் பத்திரிகை சீனக்கப்பலின் நடவடிக்கை இந்தியாவுக்கு தொடர்ச்சியாக நெருக்கடியாக உள்ளது என்றும் இதுவோர் அபாயமான இந்து சமுத்திர பயணம் என்றும் தெரிவித்துள்ளது. 2020களுக்கு பின்னர் 51க்கும் மேற்பட்ட வேறுபட்ட நாடுகளின் கப்பற்கள் இந்து சமுத்திரத்தின் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாவும், இதில் இந்தியாவும் அதன் நட்பு நாடுகளும் 3-5இந்கு இடைப்பட்ட கப்பல்களே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது. அதுமட்டுமன்றி இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய நாடுகளையும் வற்றின் பொருளாதார வலயங்களையும்(200 கடல் மைல்), அதன் வனங்களையும் இலக்கு வைத்தது என்றும் இந்தியாவின் வங்காளா விரிகுடாவை நோக்கிய ஏவுகணை நடவடிக்கைகளையும் கையாளும் உத்திகளோடு சீனாவின் நகர்வதாக தெரிய வருகிறது.
ஐந்தாவது, இந்திய-சீன இராஜதந்திர நெருக்கடியின் மத்தியில் சீன தூதுவருடைய யாழ்ப்பாண வருகை அதிக முக்கியத்துவம் பெற்றதாக மாறி உள்ளது. அவரது வருகை வடக்கு-கிழக்கில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தியதோடு இந்தியாவுடனான இலங்கையின் இராஜதந்திர நெருக்கடி மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக அவரது வருகை பல்வேறுபட்ட நலத்திட்டங்களை முன்வைப்பதாகவும், பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்களும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்துடன் உடன்படிக்கையொன்று மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் ஜெனிவா அரங்கு பொறுத்து சீன தூதுவரின் உரையாடலின் அதிருப்தியினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சீனத்தூதுவருக்கு எதிரான அறிக்கையை வெளியிட்டதோடு ஊடகப்பரப்பில் சீனத்தூதுவருக்கு எதிரான பிரச்சாரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டது. இதனால் வடக்கு-கிழக்குக்கான விஜயத்தை ஒத்திவைத்துள்ள சீனத்தூதுவர் அதிக இராஜதந்திர ரீதியிலான முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளார்.
இவ்வாறு, சீனா-இலங்கை-இந்திய தளத்தில் இராஜதந்திர செய்முறையில் ஏற்பட்டுள்ள முறுகல் இலங்கை தொடர்பில் ஏற்படவுள்ள நெருக்கடிகளையும் இந்திய-சீன மோதலின் விளைவுகளையும் அவதானிப்பது அவசியமாகும்.
சீனா இலங்கை மீதான பிடியை மேலும் பலப்படுத்த திட்டமிடுகின்றது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99வருட குத்தகைக்கு பெற்றுக்கொண்டமை இலங்கை மீதான இருப்பு மட்டுமன்றி இந்து சமுத்திரம் மீதான செல்வாக்கையும் இந்தியாவுக்கு எதிரான நகர்வுகளையும் சாத்தியப்படுத்த வழிவகுத்துள்ளது. இதனை நீடிப்பது மட்;டுமன்றி இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு மேலும் இலங்கையின் இதர துறைமுகங்களையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களையும் கையகப்படுத்த திட்டமிடுகிறது. அதுமட்டுமன்றி வடக்கு-கிழக்கு நோக்கிய சீனாவின் பிரவேசம் என்பது வடக்கு-கிழக்கில் உள்ள துறைமுகங்களை விருத்தி செய்கின்ற நோக்கோடு தனது செல்வாக்கை கட்டியெழுப்பவும் அதன்மூலம் இந்தியாவுக்கொரு நெருக்கடியை உருவாக்கவும் முனைகிறது. இந்தியாவை இலங்கைத்தீவிலிருந்து விலகி இருக்க வைக்கும் செய்முறைகளை முன்னகர்த்த திட்டமிடும் சீனா வடக்கு-கிழக்கிலிருந்து இந்தியாவை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியுமென கருதுகின்றது. அவ்வாறு நகர்த்தப்படுகின்ற போது வங்காளா விரிகுடா இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பிரதான நீர்நிலை மையம் சீன செல்வாக்குக்கிற்குள் உட்படுத்தவும் வடக்கு-கிழக்குக்கும் தமிழகத்துக்குமான உறவை அதன்வழி துண்டிக்கவும் சீனா முயலுகிறது. கடந்த வருடம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போது தமிழ் மீனவர்களுக்கு பாரிய பொருளாதார உதவிகளை வழங்கி இருந்தமையும், இந்திய மீனவர்கள் தொடர்பான தமிழ் மீனவர்களின் குற்றச்சாட்டுக்களை கேட்டறிந்தமையும், பாம்பன் பாளத்தை அண்டிய பிரதேசத்தில் இலங்கைக்கு சொந்தமான மண்திட்டுக்களை பார்வையிட்டமையும், காங்கேசன்துறை-பருத்தித்துறை துறைமுகங்களை பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்திய-இலங்கை உறவில் சீனாவின் எல்லையற்ற தலையீடுகள் அதிகரிப்பதோடு இலங்கையின் இறைமை சார்ந்தும் தேசிய ஒருமைப்பாடு சார்ந்தும் இலங்கையை விட சீனா அதிக கரிசணை கொள்கிறத. காரணம் இந்தியாவின் எல்லையற்ற தலையீடுகளினால் சீனா இலங்கை தீவில் கட்டமைத்த நலன்கள் சிதைந்து போய்விடுமென சீனா அச்சமடைகிறது.
புவிசார் அரசியல் ரீதியிலும் இன-மத-மொழி பண்பாட்டு அடிப்படையிலும் இந்திய-இலங்கை உறவு வலுவானதாகவே காணப்பட்டது. ஆனால் நலன்சார்ந்தே இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு எதிரான கொள்கையை கொண்ட நாடுகளோடு நெருக்கமான உறவை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவை கையாண்டு வந்தனர். தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல பௌத்த மத பீடங்களும் புத்திஜீவிகளும் இராணுவமும் இந்தியாவுக்கு எதிரான மனநிலையோடு செயற்படுகின்ற போக்கினை கடந்த வரலாறு முழுவதும் கண்டுகொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. தற்போது கூட இலங்கைக்கான இந்திய தூதுவர் மிலிந்த மொறகொட இலங்கையின் பொருளாதார நெருக்கடி முற்றுப்பெறவில்லை என்பதற்காகவே இந்தியாவோடு புரிந்துணர்வான உறவை கட்டமைக்க வேண்டுமென உரையாடியுள்ளார். புதுடில்லியை மையப்படுத்தி தனது செய்தியை வெளிப்படுத்துகின்ற போது சென்னைக்கு இரு தடவை முதலமைச்சரை சந்திக்க வருகை தந்த போதும் திருகோணமலை-இந்திய எரிவாயு குழாய் திட்டத்தை வகுக்கும் பொதும் நெருக்கடியிலிரந்து விடுவபடுவதற்கான ஒத்துழைப்பையே விரும்புவதாக தெரிகிறது. இலங்கையின் வெளியுறவில் இந்தியவே முதலிடமென குறிப்பிட்ட முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே சீனக்கப்பலை வரவேற்பதில் முதன்மையானவராக காணப்பட்டார். சீனாவுடனான உறவை அதிகம் முதன்மைப்படுத்தும் வெளிவிவகார செயலாளராக அவர் விளங்கியிருந்தார்.
எனவே, இலங்கை-இந்திய உறவு சீனாவினால் நெருக்கடிமிக்க சூழலை எதிர்கொள்வதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. சீனா இலங்கைத்தீவை சூடான் போன்று இலகுவில் கைவிட்டுவிடாது. அவ்வாறே இந்து சமுத்திரத்தின் மத்தியில் உள்ள இலங்கைத்தீவை இந்தியாவிடமிருந்து பிரிப்பதுவும் கையாளுவதிலும் அதிக கரிசணையுள்ள செயற்பாட்டை சீனா எதிர்காலத்தில் முன்னெடுக்க வாய்ப்புக்கள் உண்டு. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் பலவீனமும் இராணுவரீதியிலான மெருதுவான வளர்ச்சியும் சீனாவை எதிர்கொள்வதில் அதிக சவால்களை ஏற்படுத்தக்கூடியது. இந்தியாவும் ரஷ்சியாவும் சீனாவும் ஒரே களத்தில் பயணிக்க முயலும் பொது இலங்கைத்தீவை அனைத்து சக்திகளும் கையாளுவதற்கான வாய்ப்பும் எதிர்காலத்தில் ஏற்பட கூடியதாக அமையும்.
-பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
