இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையாடல் கடந்த எழுபது வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹா 10.11.2022 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது 75வது சுதந்திர தினத்திற்கு முன்பு தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு என அதிரடி அறிவிப்பொன்றை முன்வைத்தார். தீபாவளிக்கு தீர்வு, புதுவருடத்திற்கு தீர்வு என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரையும் விஞ்சுமளவுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு அமைந்துள்ளது. தீர்வுகள் முன்வைக்கப்படும் போது அவற்றை கொழுத்தியவர்கள், பாதயாத்திரை மேற்கொண்டவர்கள், பிராந்திய சர்வதேச மட்டத்தில் சதிவலைகளைப் பின்னியவர்கள் தற்போது தமிழ் தரப்பின் ஒற்றுமை பற்றி ஓலமிடுகிறார்கள். அவர்களது ஒன்றுமையின்மையே இனப்பிரச்சினைக்கும் இரத்த ஆறு ஓடியதற்கும் காரணம் என்பதை மறைத்துவிட்டு மீண்டும் ஒரு சதிவலைக்கு தயாராகிறார்களா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி தென் இலங்கையின் உத்தியையும் தமிழ் அரசியல்வாதிகளினது கோமாளித்தனத்தையும் தேடுவதாக அமையவுள்ளது.
இலங்கைத்தீவின் அரசியல் பொருளாதார நெருக்கடியால் எழுந்துள்ள சூழலை எதிர்கொள்வதில் தென் இலங்கை விழித்துக் கொண்டுள்ளது. அதாவது பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியித்திடமும் ஐரோப்பிய நாடுகளிடமும் உதவியை இலங்கை ஆட்சியாளர்கள் கோரும் போது தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையாடலும் முதன்மைப்படுத்தப்படுகிறதைக் காணமுடிகிறது. குறிப்பாக கனடா, பிரித்தானியா மற்றும் அவ்வப்போது அமெரிக்காவும் தமிழர் பிரச்சினை பற்றிய கருத்துக்களை முதன்மைப்படுத்த முயலுகிறன. மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு தீர்வு சாத்தியமாகும் போதே முதலீடுகளை சாத்தியப்படும் என வாதித்து வருகின்றனர்.
மறுபக்கத்தில் இலங்கைத் தீவில் தற்போது ஏற்பட்டுள்ள ஜனாதிபதி தலைமையிலான ஆட்சியானது மேற்குலகத்திற்கு அவசியமானதாக அமைந்துள்ளதால் மேற்குலகத்தை திருப்திப்படுத்திக் கொண்டு அரைகுறைத் தீர்வை தமிழர் மீது திணித்துவிடுவது இலகுவானதென தென் இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். அதாவது மேற்கிலிருந்து எழும் தமிழருக்கு ஆதரவான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தென் இலங்கை தான் விரும்பும் தீர்வை ஒற்றையாட்சி வரைபுக்குள் திணித்துவிடலாம் என்ற உத்தியை வகுத்துள்ளது. மேற்குலகத்திற்கு தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எட்டப்படுகிறதோ இல்லையோ ஆனால் ஏதோ ஒரு தீர்வு அமைந்துவிடுவதன் மூலம் மேற்குலகத்தின் நலன் பாதுகாக்கப்பட்டால் போதுமானது. அத்தகைய நலனானது சீனாவின் இலங்கை மீதான இருப்பும் இந்துசமுத்திரம் மீதான ஆதிக்கமும் முடிபுக்கு வரவேண்டும். அதற்கு தென் இலங்கை மேற்குக்கு ஒத்துழைப்பு செய்யுமாயின் அதற்காக எந்த எல்லைக்கும் மேற்குலகம் போகத்தயாராக உள்ளது. இதனையே தென் இலங்கை மதிப்பீட செய்து கொண்டு தீர்வைப் பற்றிய உரையாடலை ஆரம்பித்துள்ளது. 2002 ஆண்டு புரிந்துணர்வு உடன்பாடும் அதன்பின்னரான அரசியலும் அத்தகைய நியமத்துக்குள்ளேயே இயங்கியது. ஆனால் அதனை 2005 இல் மகிந்த ராஜபக்ஷ சீனாவுடன் கூட்டுவைத்துக் கொண்டு தகர்த்தார்.
அதே நேரம் தென் இலங்கை இந்தியாவுடனான உறவினை நெருக்கடிக்குள் வைத்துக் கொண்டு மேற்குடன் தமிழருக்கான தீர்வை கையாண்டுவிடலாம் என கணக்குப் போட்டுள்ளது.அதாவது ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கும் இந்தியாவுக்குமான உறவு விரிசலடைந்துள்ளதாகவும் இரு நாட்டுக்குமான இராஜீக உறவு பாதிப்படைந்துள்ளதாகவும் இதே பகுதியில் உரையாடப்பட்டுள்ளது. அத்தகைய சூழலையும் தென் இலங்கை தனக்கு சாதகமாக்கியுள்ளது. இந்தியாவை உட்புகுத்தாமல் தனித்து மேற்குலகத்துடன் தமிழர் பிரச்சினையை கையாள முனைவது தென் இலங்கைக்கு சாதகமானதாக அமைய வாய்ப்புள்ளது. இந்தியா நுழையுமாயின் தனது நலனில் அதிகம் கவனம் கொள்வதுடன் அயலக புவிசார் அரசியல் நாடு என்பதனால் தமிழர் விடயத்தை இந்தியாவுக்கு ஏற்ப கையாள முனையும் என தென்இலங்கை கருதுகிறது. இதே ஒரு சூழலையே புரிந்துணர்வு உடன்பாட்டின் போதும் ரணில் விக்கிரமசிங்ஹா அரசாங்கம் 2002 இல் முன்னிறுத்தியது. புலிகளையும் மேற்குலகத்தையும் ஒற்றிணைத்துக் கொண்டதன் மூலம் புலிகளுக்கும் இந்தியாவுக்குமான உறவை பகைப்புலத்திற்குள் நகர்த்தியது. அதே நேரம் தென் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவை பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்தியது. அவ்வாறே தற்போதைய சூழலிலும் விரிசலடைந்துள்ள ரணில்-மோடி உறவை மிலிந்த மொறகொட சரிசெய்ய முயன்று வருகிறார்.
அப்போது புலிகளுக்கும் -இந்தியாவுக்குமான உறவு முறிவடைந்தது போல் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்குமான உறவு உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்துடனான நெருக்கமான உறவு இந்தியாவுடனான கூட்டமைப்பின் நட்பை முறித்ததாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. 2013 யூன்க்கு பின்னர் இந்தியா அழைத்தும் கூட்டமைப்பு புதுடில்லிக்கு செல்லவில்லை என்பது இந்திய-கூட்டமைப்பு உறவின் போக்கை உணரமுடிகிறது. இது தான் கூட்டமைப்பின் இராஜதந்திரம் என அதன் மூளைகள் பீச்சியடித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு பூச்சுற்றுகிறார்கள். ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்குமான உறவை தகர்ப்பதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இலங்கை -இந்திய ஒப்பந்தம் மூலம் எப்படி வெற்றி கண்டாரே அவ்வாறே தற்போதைய ஜனாதிபதியும் புரிந்துணர்வு உடன்படிக்கைக் காலத்திலும் நல்லாட்சிக் காலத்திலும் இயங்கியது போல் தற்போதைய ஆட்சியிலும் செயல்படுகின்றார் என்ற விமர்சனம் நியாயமானதாகவே தெரிகிறது. அதாவது தென் இலங்கை இந்தியாவையும் கூட்டமைப்பையும் முரண்பாடுடைய சக்திகளாக ஆக்குவதில் கவனம் கொண்டு வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் ஈழத்தமிழரையும் புதுடில்லியையும் நிரந்தர பகையாளர்களாக மாற்றுவதில் தென் இலங்கை தந்திரோபாயமாக நகர்கிறது.
இதில் தமிழ் அரசியல் கட்சிகளது கோமாளித்தனம் எப்படி அரங்கேறியுள்ளது என்பதை புரிந்து கொள்வது அவசியமானது.
முதலாவது, ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பை கோரிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு. 16.11.2022 ஐ.நா. அரசியல் பிரிவினரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் மேற்கொள்ளப்டபட்ட சந்திப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் நிகழ்ந்த சந்திப்பில் தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைக்கும் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் ஐ.நா சபையின் பங்களிப்பு மிகவும் காத்திரமாக இருக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு கோரியுள்ளது. வெளித்தோற்றத்தில் இது ஒரு நல்ல முயற்சியாகவே தோன்றுகிறது. முள்ளிவாய்க்கால் போரின் போதும் அதனை அடுத்த ஜெனீவா அமர்வுகளிலும் ஈழத்தமிரது அரசியலை கையாண்டவிதத்தில் முக்கியமானதாக தோன்றலாம். ஆனால் போரின் போது பார்வையாளராகவும் கடந்த ஒரு தசாப்தமாக மேற்குலகத்தின் நலன்களுக்காக ஈழத்தமிழர் அரசியல் நகர்த்தப்படுவதையும் கூட்டமைப்பு கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அத்தகைய புரிதலுடன் ஐ.நா.பிரதிநிதித்துவத்தை நிலைப்படுத்துவது அல்லது அதனை மட்டும் முதன்மைப்படுத்துவது சரியானதா என்ற கேள்வி அவசியமானதாக உள்ளது.
இரண்டாவது, இரு தரப்பும் அழைத்தால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிக்கு மத்தியஸ்தம் வகிக்க தயார் என இந்தியாவுக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் ஜேக்கப் பிரைடன்லண்ட் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நோர்வேயின் முன்னாள் சமாதானத் துர்துவர் எரிக் சொல்கெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டதுடன் இனப்பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தமை நினைவு கொள்ளத் தக்கது. ஏறக்குறைய ஈழத்தமிழரது ஆயுதப் போராட்டத்தை முடிபுக்கு கொண்டுவர சமாதானத்தின் மூலம் ஒரு போரை தயார் செய்து அதில் உலகம் வெற்றிகண்டதில் நோர்வேக்கும் ஏனைய ஸ்கண்டினேவிய நாடுகளுக்கும் பங்கிருந்ததை மறுக்க முடியாது. போர் தொடங்கும் தறுவாயில் வன்னியிலிருந்து ஐ.நா.வின் மௌனமான வெளியேற்றமும் நோர்வோயின் சமாதானமான தந்திரோபாயமும் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த படுகொலைகள் அனைத்திற்கும் வழிவகுத்திருந்தன. போர் முடிந்து ஒரு தசாப்தம் கடந்த நிலையிலும் தீர்வுக்கு மத்தியஸ்தம் செய்யப்போவதாக எல்லாத்தரப்பும் கோருவது வேடிக்கையாகவே தெரிகிறது. அதாவது அப்போது தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதல்ல அத்தரப்புகளது நோக்கம் புலிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்தொழிப்பதே அவசியமாக இருந்தது. அதனையே பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திலும் நோர்வேயும் அதன் சமாதான தூதுவர் எரிக் சொல்கெய்மும் செயல்படுத்தி மேற்குலகத்தின் நலன்களை நிறைவேற்றியிருந்தனர். அத்தகைய களம் ஒன்று மீளவும் திறக்கப்படுகிறது போன்று தெரிகிறது. இலங்கையின் ஜனாதிபதி-நோர்வே-ஐ.நா.சபை இவற்றுக்கு பின்னால் அமெரிக்கா, பிரிட்டன்,ஜப்பான் போன்ற நாடுகளது அணிவகுப்பும் அமைந்துள்ளது. இத்தகைய தரப்புக்களது அரசியல் நகர்வுகள் எதனையும் புரிந்து கொள்ளாது கூட்டமைப்பு செயல்படுவது போல் அதன் அழைப்புக்களும் உரையாடல்களும் காணப்படுகிறது.
மூன்றாவது, இந்தியாவை இத்தகைய உரையாடலிலிருந்து விலகிக் கொள்ள தற்போதைய தென் இலங்கை ஆட்சியாளர்கள் ஆர்வமாக உள்ளனர். அதனை கூட்டமைப்பும் ஆமாப் போட்டு நிறைவேற்றிவருகிறது. ஏனைய தமிழ் தரப்புக்கள் மௌனம் சாதிப்பதும் இது ஒரு அரசியல் நாடகம் என்று தமிழ் மக்களுக்கு தெரிப்பதுடன் தமது அரசியல் முடிந்துவிட்டதென செயல்படுகின்ற போக்கினையும் காணக்கூடியதாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் கிழக்கினை தனித்துவிடுவதும் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிட்டிருப்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இதில் இந்தியாவின் மௌனம் கலைக்கப்பட்டிருக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கோ அல்லது தமிழ் தரப்புக்கோ உரிய விடயம். அவ்வாறே இந்தியாவின் மௌனத்திற்கு பின்னாலுள்ள அரசியலையும் புரிந்து கொள்வது அவசியமானது.இந்தியாவோ மேற்குலகமோ ஐ.நா.சபையோ தென் இலங்கையை மீறி தீர்வுக்காக தமிழ்மக்கள் பக்கம் நின்று உழைக்கப் போவதில்லை என்பது கடந்த கால அனுபவமாகும். தமிழ் மக்களுடன் நிற்க வேண்டிய தமிழ் மக்களது தரப்புக்களே தமிழ் மக்களை ஏமாற்றும் தென் இலங்கையின் நக்ர்வுக்கு ஒத்துழைத்துவருகின்றமை தமிழ் மக்களால் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வை 75வது சுதந்திர தினத்திற்குள் சாத்தியப்படுத்துவது வினோதமான உரையாடலாகவே தெரிகிறது. ஆட்சியை தக்கவைப்பதற்கான நகர்வாகவே தெரிகிறது. அதற்கு ஏற்ப தயாரிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் இத்கைய அரசியல் களங்களை கையாள வேண்டியது அவசியமானது. அதனைவிடுத்து இது ஒரு நாடகம் என கூறிவிட்டு வேடிக்கை பார்பதுவும் அதில் தென் இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்குள் பயணிப்பதும் தமிழ் தேசியத்தின் பணியாகாது. தேர்தல் கால தேசியவாதிகளாக வலம்வரும் தரப்புக்களிடமிருந்து எதனையும் தமிழ் மக்கள் பெறமுடியாது என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணமாக அமைய வாய்புகிடைத்துள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
