அரசியல் கட்டுரைகள்

அரபு நாடுகளின் உறவில் புதிய சகாப்தத்தை சீனா உருவாக்குகிறதா?

மேற்கு ஆசியப் பிராந்தியம் என்றும், சர்வதேச பார்வையில் அதிக கரிசனையை கொண்டதாகும். வல்லாதிக்க போட்டியிடும் அரசுகளின் ஆதிக்கம், மேற்கு ஆசியாவில் நிலைப்பதில் முனைப்பாக உள்ளன. ஒற்றைமைய அரசியலில் அமெரிக்கா வின் வளர்ச்சிக்கு பின்னால் மேற்கு ஆசியா மீதான அமெரிக்காவின் ஆதிக்கமும் முதன்மையான காரணி யாக உள்ளது. தற்போது சர்வதேச ஆதிக்க போட்டியில் மும்முரமாக இறங்கியுள்ள சீனா, கடந்த இரண்டு தசாப்தங்களாக தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்மேற்கு பசுபிக் பகுதிகளின் செல்வாக்கு மற்றும் இலட்சியங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது.

எனினும், மேற்கு ஆசியா, சீன ராஜதந்திரத்துக்கு ஒரு அடையப்படாத இலக்காகவே இருந்து வருகிறது. ஆனால் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், டிசம்பர்- 09 அன்று சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அரபுத் தலைவர்களுடனான உச்சிமாநாட்டின் மூலம் பிராந்தியத்தில் காணப்படும் தவறான அணுகுமுறைகளை ஒதுக்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உலகளாவிய போட்டியில் மத்திய கிழக்கின் நுழைவைக் குறிப்பதாகவே சர்வதேச அரசியல் அவதானம் பெறுகின்றது. இக்கட்டுரையும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் சவுதி விஜயமும் மேற்கு ஆசிய அரசியலில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களையும் தேடுவதாகவே உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, வளைகுடா நாடுகளுடன் சீனா உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. மற்றும் அவற்றின் உட்கட்டமைப்பு ஒப்பந்தங்களில் அதிக முதலீடும் செய்து வருகிறது. இருபத்தொரு அரபு நாடுகள் சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியின் ஒரு பகுதியாக உள்ளன. பட்டி மற்றும் சாலை முன்முயற்சியின் கீழான சீன கட்டுமானத் திட்டங்களுக்கான அளவின் அடிப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. சவுதி அரேபியாவின் மெக்காவில் புதிய மெட்ரோவை நிர்மாணிக்க சீனா உதவுகிறது. சவுதி அரேபியா, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை அரபு-,சீன உச்சிமாநாட்டுக்கு அழைத்துள்ளமையானது, சீனா, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தனது காலடியை விரிவாக்குவதற்கான பலமான வாய்ப்பை வழங்குகின்றது. ஷி ஜின்பிங்கின், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வருகை, எரிசக்தி விநியோகம் மற்றும் மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் சீனச் செல்வாக்கு பற்றிய கவலைகள் ஆகியவற்றில் அமெரிக்க, சவுதி உறவுகள் நெருக்கடியான நிலையை நோக்கி நகர்கின்றது என்பது மேலும் தேடலை ஊக்குவிக்கிறது.

ஒன்று, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்துக்காக சீனா மத்திய கிழக்கை பெரிதும் சார்ந்துள்ளது. சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய்க்கான மிகப்பெரிய வாடிக்கையாளராகவும், பொதுவாக மத்திய கிழக்கு எண்ணெயை அதிக அளவில் வாங்குபவராகவும் சீனா உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவுக்கான சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சீனாவும் சவுதி அரேபியாவும் எரிசக்தி, பாதுகாப்பு ஆகியவற்றில் கூட்டாண்மையை வலுப்படுத்தியுள்ளன. மேலும், ‘ஒருவருக்கொருவர் முக்கிய நலன்களை உறுதியாக ஆதரிப்பதாக’ கூறினர். சவுதி அரேபியாவின் முதன்மையான கச்சா எண்ணெய்ச் சந்தையில் 2021இல் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 25 சதவீதத்துக்கும் அதிகமான கொள்வனவாளராக சீனா உள்ளது. இந்த ஏற்றுமதி வருவாய் சவுதி அரசாங்கத்தின் ‘சமூக பேரத்தை’ பராமரிக்க உதவுகிறது என்று மேற்காசிய திட்டத்தின் இயக்குனர் ஜான் கலாப்ரேஸ் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் விளக்கினார். அமெரிக்காவின் சர்வதேச நலன் வலுப்பெறுவதற்கு காரணமாக உள்ள டொலர் சர்வதேச நாணயமாக வளர்ச்சியடைந்ததற்கு பின்னால் சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் பிரதான காரணி என்பது யதார்த்தமானதாகும். இன்று சீனா, சவுதி அரேபியாவின் எண்ணெய் வியாபாரத்தின் பிரதான நலன்சார் பங்காளியாக பரிணமித்திருப்பது அமெரிக்காவுக்கான இராஜதந்திர நெருக்கடி என்பது தெளிவாகிறது.

இரண்டு, ஷி ஜின்பிங்கின் சவுதி விஜயமானது, வளைகுடா நாடுகளுடனான மூலோபாய சந்திப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் சவுதி மன்னர் சல்மான் ஆகியோரின் உத்தியோகபூர்வ அரசு விஜயம் டிசம்பர்- 07அன்று தொடங்கியதில் இருந்து இரு தரப்பினரும் மூலோபாய கூட்டாண்மை உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் உள்ள வழிகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக டிசம்பர்- 07 அன்று கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். சீனத் தலைவர் தனது விஜயத்தின் போது, டிசம்பர்- 07அன்று வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளுடனும், அரபு லீக் நாடுகளுடனுமான பரந்த உச்சிமாநாட்டிலும் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், “இரு உச்சி மாநாடுகளும் சீனா-, அரபு உறவுகள் மற்றும் சீன- வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உறவுகளின் வரலாற்றில் ஒரு மைல்கல் நிகழ்வுகளாக மாறவும், உறவுகளை புதிய உயரத்துக்கு கொண்டு ெசல்லவும், சவுதி அரேபியா மற்றும் அரபு நாடுகளுடன் இணைந்து பணியாற்றவும் சீனா எதிர்பார்க்கிறது” என மேற்கோளிட்டுள்ளது. குறித்த உச்சி மாநாடுகளில் ஈராக், மொராக்கோ, அல்ஜீரியா, சூடான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதமர்களுடன் கத்தாரின் அமீர், குவைத்தின் பட்டத்து இளவரசர் மற்றும் எகிப்து, துனிசியா, ஜிபூட்டி, சோமாலியா மற்றும் மொரிட்டானியாவின் அதிபர்கள் கலந்து கொண்டனர். சவுதி அரேபியாவுடனான அமெரிக்காவின் உறவுகள், சிதைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவினூடாக அரபு நாடுகளுடனான மூலோபாய உறவுகளை ஆழமாக்குவதை இந்த விஜயத்தின் நோக்கமாக ஷி ஜின்பிங் தெளிவாக வடிவமைத்துள்ளார். அதனை மையப்படுத்தியே சீன வெளியுறவு அமைச்சகமும் இச்சந்திப்பானது, “உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை” உருவாக்குவதாக தெரிவித்துள்ளது.

மூன்று, எண்ணெய் வர்த்தகம் மற்றும் மூலோபாய ரீதியிலான பிணைப்புக்களை கட்டமைக்கின்ற போதிலும், மேற்கு ஆசியாவின் பலத்த பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர தாக்குதலை அமெரிக்காவுக்கு விட்டுச் செல்வதில் சீனா இப்போது வரை திருப்தி அடைந்துள்ளது. அதே நேரத்தில் பிராந்தியத்தின் சிக்கலான அரசியல் மற்றும் உறுதியற்ற தன்மையிலான சிக்கலைத் தவிர்த்தே வருகிறது. சீனா பிராந்திய மோதல்களில் தலையிடுவதைத் தவிர்த்துள்ளதோடு, சிரியாவில் உள்நாட்டுப் போரில் இருந்து ஈரானின் அணுசக்தி அபிலாஷைகள் மற்றும் அரபு-, இஸ்ரேலிய அமைதி வரை, பிராந்தியம் எதிர்கொள்ளும் முக்கிய பாதுகாப்புப் பிரச்சினைகளில் குறைந்த முக்கிய பாத்திரத்தை ஏற்றுள்ளது. சவுதி விஜயத்திலும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அதனை தெளிவுபடுத்தியுள்ளார். கூட்டறிக்கையில், உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் அதேவேளையில், இறையாண்மை மற்றும் தலையிடாத கொள்கைகளை வலியுறுத்தி உள்ளது.

நான்கு, சவுதி அரேபியா சீனாவின் ‘ஒரே- சீனா கொள்கையை’ கடைப்பிடிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சீன மக்கள் குடியரசை, ஒரே சட்டபூர்வமான அரசாங்கமாக அங்கீகரிப்பதுடன், தாய்வான், சீனாவின் பிரதேசத்தில் பிரிக்க முடியாத பகுதியாகும் என்பதையும் சவுதி ஏற்றுக்கொண்டுள்ளது. அண்மைக்காலமாக சீனா, -தாய்வான் விவகாரம் சர்வதேச அரசியலில் பூதாகரமான சர்ச்சையாக ஏற்படுத்தி வருகிறது. தாய்வானின் சுதந்திரத்தைத் தடுக்கவும், தீவினை பிரதான நிலப்பரப்புடன் ஒருங்கிணைக்கவும் சீனா உறுதியாக உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய அரசாங்கங்கள் சீன மக்கள் குடியரசை சீனாவின் ஒரே சட்டபூர்வ அரசாங்கமாக அங்கீகரிக்கின்றன. ஆனால் அதேநேரத்தில் தாய்வானுடன் அதிகாரபூர்வமற்ற உறவுகளைப் பேணுகின்றன. இம்முரணான, அமெரிக்காவின் நிலைப்பாட்டை புறக்கணிக்கும் வகையில், சவுதி அரேபியா சீனாவுடனான நெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே சீனாவின் ஒரே சீனா கொள்கை அங்கீகார உரையாடலும், ஷி ஜின்பிங், -மன்னர் சல்மான் சந்திப்பில் முதன்மை பெற்றுள்ளது. இதையொட்டி, சீனா “சவுதி அரேபியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் எந்த நடவடிக்கைகளுக்கும் அதன் எதிர்ப்பை உறுதிப்படுத்தியது”.

ஐந்து, சீனா-சவுதி உறவு தொடர்பில் அமெரிக்க உன்னிப்பான கவனத்தை செலுத்தி வருகின்றது. குறிப்பாக, பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தும் சீனா-சவுதி உறவு பாதுகாப்பு உத்தரவாதங்களையும் பகிருமாயின், மேற்கு ஆசியாவின் அமெரிக்க இருப்பு சவாலுக்குரிய நிலைக்கு தள்ளப்படும். அட்லாண்டிக் கவுன்சிலின் மத்திய கிழக்கு திட்டத்தில் ஸ்கொக்ராஃப்ட் மத்திய கிழக்கு பாதுகாப்பு முன்முயற்சியின் இயக்குனர் ஜொனாதன் பானிகோஃப், ‘சீனாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான மேலாதிக்க உறவுகள் வர்த்தக நடவடிக்கைகளில் முன்னறிவிக்கப்பட்டவை. இருப்பினும், பல உலகளாவிய உறவுகள் மற்றும் கூட்டணிகள், இருதரப்பு மற்றும் பலதரப்பு, இந்த வழியில் தொடங்கியது. பின்னர் பாரம்பரிய பாதுகாப்பு பகுதிகள் உட்பட மற்ற பகுதிகளுக்கு விரிவடைந்தது’ என அல் ஜசீராவிற்கான நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு, சீனா சவுதி அரேபியாவின் உள்நாட்டு பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பு முயற்சிகளை ஆதரிப்பதாக CNN தெரிவித்தது. மேலும், ஆயுதமேந்திய ட்ரோன்கள் போன்ற சில முக்கிய பகுதிகளில், சீனர்கள் சவுதி அரேபியாவின் ஆயுத மேம்பாட்டிற்கு விற்பனை செய்துள்ளனர். சவுதி அரேபியாவில் அமெரிக்க தவிர்த்த இடைவெளிகளை சீனா நிரப்புகிறது. சீன-சவுதி உறவின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வாஷிங்டனுக்கு கடுமையான கவலைகள் உள்ளன. ஆயினும்கூட, சவுதி அரேபியாவின் பாதுகாப்பு உத்தரவாதமாக அமெரிக்காவை மாற்றுவதற்கு சீனா எங்கும் நெருங்கவில்லை. பெய்ஜிங் எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய முடியும் அல்லது முயற்சிக்கும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ரஷ்சியா மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய வீரராக இருந்து வருகிறது. மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு விவகாரங்களில் ரஷ்சியா வழியைப் பின்பற்றி ரஷ்சியாவிற்கு பின்நிற்பதிலேயே சீனா பெரும்பாலும் திருப்தி அடைகிறது.

எனவே, ஷி ஜின்பிங் டிசம்பர் இரண்டாம் வாரத்தின் ஆரம்பத்தில் சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் விஜயமானது, மேற்காசியா இருப்பில் அமெரிக்காவிற்கான சவாலாகவே அமைகின்றது. குறிப்பாக அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடான சவுதி அரேபியாவின் உறவினூடாக அரபு நாடுகளிடையே சீனா உறவை வளர்த்து கொள்வதென்பது அமெரிக்காவுக்கு நேரடியான சவாலாகவும் நெருக்கடியான மூலோபாய நகர்வாகவே அமைகின்றது. சவுதி அரேபியாவில் ஷி ஜின்பிங்குக்கு கிடைத்த வரவேற்பானது, சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்குக் கிடைத்த ஆரவாரத்தைக் காட்டிலும் அதிக ஆரவாரத்தை உள்ளடக்கியுள்ளது. இப்பின்னணியில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள சவாலின் வெளிப்பாடாகவே அமெரிக்க நிர்வாகம், சவுதி பிரதம மந்திரியாக இருக்கும் முகமது பின் சல்மான் அல் சவுத்தை கஷோகியின் கொலை தொடர்பான வழக்கிலிருந்து விலக்கு அளித்துள்ளது. இவ்வகையில் முதல் சீன-அரபு நாடுகளின் உச்சிமாநாட்டின் மூலம், வளைகுடா நாடுகளிடையே சீனா ஈடுபாட்டின் ஒரு புதிய கட்டம் உருவாகி வருவதையே அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்காவின் இடைவெளியை அரபு நாடுகளிடையே சீனா நிரப்பீடு செய்யும் முயற்சியாகவே ஷி ஜின்பிங்கின் சவுதிக்கான விஜயம் அமைகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)