அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தீவு மீதான இந்தியாவின் நகர்வு நிரந்தரமான வெற்றியைக் கொடுக்குமா?

கடந்த இரு மாதங்களுக்கு மேலாக இலங்கை – இந்திய இராஜீக உறவில் நிலவிய விரிசல் சுமூகமாக மாறுகிறதா என்ற கேள்வி நியாயமானதாகவே உள்ளது. குறிப்பாக இலங்கையின் அரசியலில் சனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இத்தகைய முறுகல் இரு நாட்டுக்கும் இடையில் நிலவி வந்தது. அதற்கு அடிப்படைக் காரணமாக சீன தொழில்நுட்பக் கப்பலான யுவான்வாங் – 5 கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்த பின்னர் அத்தகைய முறுகல் தீவிரமடைந்தது. இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவும் அத்தகைய நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியது. சீன – இலங்கை உறவு பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதனை கவனத்தில் கொண்ட இந்தியா இலங்கையை தனது செல்வாக்குக்குள் கொண்டுவர அதிக இராஜீக அழுத்தங்களைப் பிரயோகித்தது. அதனை வெளிப்படையாகக் கண்டுகொள்ளக் கூடியதாகவே கொழும்பின் திணரல் தெரிந்தது. ஆனால் அத்தகைய சூழலை தற்போது கொழும்பு மாற்றிக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் அத்தகைய மாற்றத்தையும், அதற்கான அடிப்படைகளையும் தேடுவதாக உள்ளது.
முதலாவது, 33 மாதகால இடைவெளிக்குப் பின்னர் யாழ்ப்பாண – சென்னை விமான சேவை 12.12.2022 அன்று ஆரம்பமாகியது. விமான சேவையின் தொடக்கம் அதிக இழுபறியை அடுத்து தொடங்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் – பாண்டிச்சேரிக்கும் இடையில் படகுச் சேவையையும் விரைவில் ஆரம்பிக்கப் போவதாக இந்தியத் துணைத்தூதுவர் ராஜேஸ் நட்ராஜ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டிருந்தார். அதனை அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா உறுதிப்படுத்தியிருந்தார். இதே நேரம் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவிக்கும் போது, இரு நாட்டு மக்களிடையேயும் பாரம்பரிய உறவுகள் வலுப்படுத்துவதோடு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறைகள் மேம்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது, இந்திய கடற்படைத் தளபதி ஆர்.ஹரிகுமார் நான்கு நாள் விஜயமாக 13.12.2022 அன்று கொழும்பை வந்தடைந்தார். இலங்கையின் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகெதென்னவின் அழைப்பின் பெயரில் வருகை தந்த இந்தியக் கடற்படைத் தளபதியை இலங்கையின் கடற்படைத்தளபதி வரவேற்றார். அவர் திருகோணமலை கடல்சார் பயிற்சி நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வதுடன், இலங்கையின் பாதுகாப்பு மையங்களுக்கு விஜயம் செய்வார் எனவும் தெரிய வருகிறது. இலங்கை – இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்றாவது, தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமான திருகேதீச்சரத்தை மீட்டதன் மூலம் இலங்கையில் இந்தியா மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காசியில் நிகழ்ந்த விழாவொன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் எமது கலாசாரத்தையும், மரபுரிமையையும் பாதுகாப்பதோடு இவ்வாறு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும், ஒத்துழைப்பை வழங்குவதற்காகவும் வெளியுறவுத் துறை அமைச்சில் ஒரு தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்றார். இவ்வாறே அண்மையில் திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் தொடர்பில் எழுந்த சர்சையையும் இந்திய தூதுவரது விஜயம் கையாண்டிருந்தமை கவனத்திற்குரியதாகும். இது ஏறக்குறைய சீனாவின் மென் அதிகார வெளியுறவுக் கொள்ளையில் கட்டமைக்கப்படும் கென்பூசியஸ் ஒழுங்கமைப்பு போன்றதாகவே தெரிகிறது. உலகளாவிய ரீதியில் சீனா 300 இற்கு மேற்பட்ட கலாசார மையங்களை (2015) அமைத்து தனது மரபுகளையும், கலாசாரத்தையும் பரப்பி வருகிறது என்பது கவனத்திற்குரியதாகும்.
நான்காவது, இந்தியக் கடற்படையின் போர்க் கப்பலான ஐ.என்.எஸ். சாயத்ரி மூன்று நாள் உத்தியோகபூர்வமான விஜயமாக 14.12.2022 அன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கைக் கடற்படையினால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.இருநாட்டுக் கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை வளர்க்கும் வகையில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கையின் மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்பரப்பில் கடற்படை கூட்டுப் பயிற்சியையும் இரு நாட்டுக் கடற்படையும் மேற்கொள்ளும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மேற்குறித்த நகர்வுகள் அனைத்தும் அதன் இலங்கைத் தீவு மீதான அணுகுமுறையை படம்பிடித்துக் காட்டுகிறது. வெளிப்படையாகக் கூறுவதாயின் இலங்கை சீன உறவை அடிப்படையாகக் கொண்டு இந்தியா இலங்கை மீதான செல்வாக்கினை பலப்படுத்தியுள்ளது. சனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தடுத்துக் கொண்டு இந்தியாவின் கணிசமான அடைவை எட்டியுள்ளதாகவே தெரிகிறது. இதனால் இந்தியா ஆரோக்கியமான நகர்வொன்றை இலங்கைத்தீவில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த பலாலி சர்வதேச விமானச் சேவையானது இந்தியாவின் வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறையின் விருத்திக்கான நடவடிக்கையாக அமைந்தாலும், தமிழர் வாழும் பகுதியுடனான உறவு பலப்படுத்தியுள்ளதுடன், சீனாவின் வடக்கு மீதான நகர்வுகளைக் கண்காணிப்புக்கான களமாக விமான சேவை அமையவுள்ளமை கவனத்திற்குரியதாகும். அதாவது இந்தியாவின் அவதானிப்பும், தொடர்ச்சியான நடமாட்டமும் வடக்கை நோக்கி அமைய வாய்ப்புள்ளது. இந்தியா தனது தென்பகுதி இராணுவ மற்றும் தொழில்நுட்ப தளங்களைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பாக வடக்கு மீதான நகர்வு ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. சீன – இந்திய எல்லை முரண்பாடு கூர்மையடையும் போது இந்தியாவின் தென்பகுதி இந்தியாவின் செல்வாக்குப் பகுதியாக அமைவது அவசியமானதாகவே உள்ளது. அதற்கு அமைவான நகர்வுகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
தென் இலங்கையிலும், வடக்கு கிழக்கிலும் இந்தியா தனது கடற்படை நகர்வையும், விமான சேவையின் நகர்வையும் அதிகரித்துள்ளது. இவை அனைத்துமே சீனாவின் இலங்கைத் தீவின் மீதான கவனத்தை கையாளும் உத்தியாகவே உள்ளது. சீனக்கப்பல் வருகையை அடுத்து ஏற்பட்ட சூழலை வெற்றிகரமாக இந்தியா கையாளுவதாகவே கருதுகிறது. அதற்கான அணுகுமுறையை இந்தியத் தூதுவர்களது உரைகளிலும், வெளிப்படுத்தும் செய்திகளிலும் உணரக் கூடியதாக அமைந்துள்ளது. காசியில் நிகழ்ந்த பாரதியார் விழாவில் கலந்த கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சரது செய்தி திருகேதீச்சரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டிலும், இலங்கைத் தீவுடனான இந்தியாவின் அரசியல் உறவின் முக்கியத்துவத்தையே அடையாளப்படுத்துகிறது. பாரதீய ஜனதாக் கட்சியின் இந்து தத்துவ அரசியல் பரிமாணத்தை இலங்கைத் தீவில் வெளிப்படுத்தினாலும் அதன் நகர்வு அனைத்துமே இந்தியாவின் பாதுகாப்புச் சார்ந்த கட்டுமானத்தையே கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது. மென் அதிகாரத்தின் அங்கமான மதமும், மத நிறுவனங்களினால் உருவாக்கப்படும் மதப்பண்பாட்டு அடையாளங்களும் இந்திய ஆட்சியாளர்களால் இலங்கைத் தீவின் செல்வாக்கை அதிகரித்துள்ளது. அது இந்து தத்துவத்தின் அடிப்படை என்பதை விட இந்தியப் பாதுகாப்பின் அடிப்படையெனக் கருதுவது சாதகமானதாகவே தெரிகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாகவே வெளித்தோற்றம் தெரிகிறது. ஆனால் அது முழுமையானதாக அமைந்துள்ளதா என்ற கேள்வி பிரதானமானது.
ஆனால் இந்தியாவின் இத்தகைய நகர்வை தென் இலங்கை ஆட்சியாளர்கள் முழுமையாக ஏற்றுள்ளார்கள் என்று கருத முடியாதுள்ளது. காரணம் தற்போது ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் அழுத்தத்திற்கு பணிந்துள்ளதாகவே தெரிகிறது. பலாலி விமான சேவை முழு இலங்கைத் தீவுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ள பொருளாதார வாய்ப்புக்களையும், இந்தியாவின் அழுத்தங்களையும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் வெற்றிகரமாக முகங்கொடுக்க முயன்றுள்ளதாகவே தெரிகிறது. இது தென் இலங்கையின் தற்காலிக விட்டுக் கொடுப்பாகவே தெரிகிறது. இவ்வாறு பல விட்டுக் கொடுப்புக்களை செய்து நிரந்தரமான வெற்றிகளை எட்டியவர்கள் தென் இலங்கை ஆட்சியாளர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 1987 இல் ஏற்பட்ட நெருக்கடி போன்றதல்லாது விட்டாலும் தற்போதைய நெருக்கடி. அதற்கு சமமானதே. அது கடும்போக்கினால் கையாளப்பட்டது. இது மென்போக்கினால் கையாளப்பட்டது. அதனைவிட இது தென் இலங்கையால் இன்னோர் அடி மேல்சென்று கையாளப்படுகிறது. அது அமெரிக்க பிரசன்னத்தைத் தடுப்பதற்கானது. இது சீனாவின் செல்வாக்கை தடுப்பதற்கானது. அது உடன்பாட்டினால் சரி செய்யப்பட்டது. இது ஒத்துழைப்பினால் சரி செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவும், இதன் விளைவும் ஒரே தன்மையை நோக்கி நகரவே வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிகிறது.
ஆனால் இதில் இந்தியாவும் சரி, தென் இலங்கையும் சரி தமது தரப்பு தோற்றுவிடக் கூடாதென்பதில் கவனம் கொண்டு செயற்படுகின்றன. அதே நேரம் தென் இலங்கை இந்தியாவின் விடயத்தை கையாண்டது போல்’ தமிழர் தேசிய இனப்பிரச்சினையையும் கையில் எடுத்துள்ளது. ஒன்றால் இன்னொன்றை தென் இலங்கை கையாள முனைகிறதாகவே தெரிகிறது. அதற்கான உத்திகள் வரையப்பட்டுள்ளதுடன் எதிர்கால பெரும்பான்மை தேசிய எழுச்சிக்கு இவை இரண்டையும் உரமாக்க முயல்வதாகவே தெரிகிறது. அதற்கு வாய்ப்புக் கொடுக்காத சூழலை நோக்கி நகர தென் இலங்கை ஆட்சியால் முடியுமா என்பது பிரதான கேள்வியாகும். அதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படாது கையாளப்படுவதே அவசியமானது.
எனவே இந்தியாவின் வெற்றிகரமான நகர்வு தென் இலங்கை ஆட்சியாளர்களால் எதிர்கொள்ளப்படும் சூழல் ஏற்படும். சீனாவுடனான நட்புறவை முதன்மையாகக் கொண்டே இந்தியாவுக்கான அழைப்புக்களும், ஒத்திகைகளும் நிகழ்கிறது. சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுவதையும், நெருக்கமான நட்புறவை வெளிப்படுத்துவதிலும் கரிசனை காட்டிக் கொண்டு செயற்படுகிறது. இதில் மீளவும் இந்தியா ஏமாற்றமடையப் போகிறதா அல்லது வெற்றிகரமாக தனது நிலையை தக்கவைக்கப் போகிறதா என்பதே தற்போதைய கேள்வியாகும். நரேந்திர மோடி அரசாங்கம் கொவிட் தடுப்பூசி வழங்கிய போதும், பாரியளவான நிதி தென் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவிய போதும், அடுத்து வந்த தென் இலங்கையின் நகர்வு இந்தியாவுக்கு பெரும் தோல்வியையே ஏற்படுத்தியது. அதனைத்தான் மீளவும் இந்தியா எதிர் கொள்ளுமா என்ற சந்தேகம் நியாயமானதாகவே தெரிகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)