அரசியல் கட்டுரைகள்

இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியும் வல்லரசுகளது அரசியல் போட்டியும்

இலங்கை அரசியலின் சமகாலம் பிராந்திய, சர்வதேச சக்திகளின் தலையீடு அதிகரித்துள்ள காலப்பகுதியாக காணப்படுகிறது. 2009 போரின் முடிபும், 2022 ராஜபக்ஷக்களின் ஆட்சி பறிப்பும் அத்தகைய சக்திகளின் அரசியல் நகர்வாகவே தெரிகிறது. இரண்டு தரப்பினது வீழ்ச்சிக்கும் பின்னால் இந்து சமுத்திர அரசியல் அடிப்படையாகவே அமைந்துள்ளது. இந்து சமுத்திரத்தில் வலுவான தேசிய இனமாக ஈழத்தமிழர் அடையாளப்படுத்தப்பட்டாலும் அவர்களது இருப்பு ஒரு நூற்றாண்டு தோல்வியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கை கடந்து ஒரு வலுவான தேசிய இனமாக வாழ்ந்த ஈழத்தமிழர் வடக்கிலும் கிழக்கிலும் சில பகுதிகளுக்குள் தற்போது சுருக்கப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர் படிப்பயாக நிலத்தை இழந்து வரும் மக்கள் கூட்டமாக மாறிவருகின்றனர். நிலமே ஒரு மக்கள் கூட்டத்தின் தேசிய இருப்பின் அடையாளமாகும். இந்து சமுத்திர அரசியலுக்குள் ஈழத்தமிழரது இருப்பு கரைந்து போவதென்பது தனித்து ஈழத்தமிழருக்கு மட்டும் அபாயமானதல்ல. அது முழு இந்தியாவுக்கும் ஆபத்தானதாக அமைய வாய்ப்புள்ளது. அதனை நோக்கியே இந்து சமுத்திர அரசியல் நகர்கிறது. ஈழத்தமிழர் முழுமையாக தோற்கடிக்கப்படுவார்களாயின் இலங்கைத் தீவு பிற வல்லரசுகளது இருப்பின் மையமாகும். அது இந்து சமுத்திரத்தின் மீதான பிற சக்திகளது ஆதிக்கத்தை மட்டுமல்ல இந்தியத் துணைக்கண்டத்தையோ துண்டுகளாக ஆக்க வழிவகுக்கும். இக்கட்டுரையும் இந்து சமுத்திர அரசியலில் மீண்டும் அரங்கேறியுள்ள ஈழத்தமிழரது அரசியல் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடலில் மத்தியஸ்தராக மறைமுகமாக இயங்கும் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் தற்போதைய காலநிலைக்கான ஜனாதிபதி ஆலோசகரான எரிக் சொல்ஹெய்ம்ன் பங்கினைத் தேடுவதாக அமையவுள்ளது.

இலங்கைத்தீவு தற்போது இந்தியா, சீனா, மற்றும் அமெரிக்கா உட்பட்ட குவாட் நாடுகளது ஆடுகளமாக உள்ளது. அத்தகைய ஆடுகளத்தின் மைய இலக்கு இந்து சமுத்திரம் மீதான போட்டியாகவே தெரிகிறது. இதில் எரிக் சொல்ஹெய்ம் 2001 இல் தரையிறக்கம் செய்யப்பட்டது போல் தற்போது தரையிறக்கம் செய்யப்பட்டதாகவே தெரிகிறது. இலங்கைத் தீவின் அரசியலை தீர்மானிக்கும் திறன் மேற்குலகத்திற்கா சீனாவுக்கா என்ற போட்டியின் பிரதிமையாகவே எரிக் சொல்ஹெய்ம்ன் நகர்வு அமைந்துள்ளது. அதற்கான ஆதாரங்களை தேடுவது அவசியமானது.

முதலாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்த போது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்தையும் மேற்கொள்வேன் என எரிக் சொல்ஹெய்ம் உறுதியளித்தார். எரிக்சொல்ஹெய்ம் இலங்கைக்கான கடந்த வருகையின் போது ( ஒக்டோபர் 10-13 வரை) இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிக்கு மத்தியஸ்தம் வகிக்கப் போவதாக தெரிவித்திருந்தார். அதே நேரம் அவரது பார்வையில் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு சமஷ்டி என்பதை நோர்வேயிலுள்ள தமிழர் தரப்புக்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் உண்டு. அத்தகைய தமிழர் தரப்புக்களின் சமஷ்டி பற்றிய வாதங்களை முன்னிறுத்தப்பட வாய்ப்பு அதிகமுள்ளதாகவே அத்தகைய புலம்பெயர்ந்த தரப்புக்கள் கருதுகின்றன. தற்போதுள்ள ஈழத்தமிழரது அரசியல் வறுமைக்கு பின்னாலுள்ள சூழலை உருவாக்குவதில் நோர்வேக்கும் அதன் சமாதானத் துர்துவருக்கும் பற்குண்டு என்பதை மறுக்க முடியாது. முள்ளிவாய்க்கால் வரையும் ஈழத்தமிழர் விரட்டப்படுவதற்கும் அதன் அழிவுகளுக்கும் ஏதோவொரு அடிப்படையில் நோர்வேக்கும் அதன் நட்பு சக்திகளுக்கும் பங்கிருந்தது என்பதை மறுக்க முடியாது. விடுதலைப் புலிகளின் காலத்தில் முன்வைக்காத உறுதிமொழி எதனையும் தற்போது எரிக் சொல்ஹெய்ம் முன்வைக்கவில்லை என்பதை தமிழ் தரப்பு உணர வேண்டியது அவசியமானது. பேச்சுவார்ததை எவ்வளவு எச்சரிக்கையானதோ அதேயளவுக்கு எரிக் சொல்ஹெய்ம் எச்சரிக்கைக்குரியவராகவே உள்ளார். எனவே அவரது உறுதிமொழிகள் மீது எச்சரிக்கையாக இருத்தல் வேண்டுமே அன்றி நம்பிக்கை கொள்வது எந்தவிதத்திலும் பொருத்தமானதல்ல.

இரண்டாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிக்கு நேரடி மத்தியஸ்தராக வருகைதராது ஏன் மறைமுகமான மத்தியஸ்தராக ஈடுபாடு காட்டுகின்றார். அதிலும் சர்வதேச காலநிலை ஆலோசகராக ஜனாதிபதியின் நியமனமாக வந்துள்ள எரிக் சொல்ஹெய்ம் ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துள்ளார். ஏன் உறுதிமொழிகளை வழங்குகின்றார் என்பதே பிரதான கேள்வியாகும். அவ்வாறாயின் எரிக் சொல்ஹெய்ம் ஏதோவொரு நோக்கத்துடன் நகர்ந்துள்ளார். இலங்கைத் தீவினது இருப்பு மேற்குலகத்தினது கட்டுப்பாட்டுக்குள் அமைவதன் மூலம் மேற்கு இந்து சமுத்திரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியுமென்பதை கோடிகாட்ட முடியும். ஏற்கனவே ஸ்கன்டிநேவிய நாடுகள் மீதான அணுகுமுறையை முன்னிறுத்திக் கொண்டு மத்தியஸ்தராக இயங்கியவர் எரிக் சொல்ஹெய்ம். தற்போது அத்தகைய பெரும் செயலும் ஈழத்தமிழரால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகியுள்ள நிலையிலேயே இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகராக வருகை தந்துள்ளார். அப்போது விடுதலைப் புலிகள் பயன்படுத்தப்பட்டது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்தப்படப் போவதாகவே தெரிகிறது. மாறாக இதனை அடையாளம் கண்டு கொண்டு தமிழ் தரப்பு நகருமாயின் எரிக் சொல்ஹெய்ம்ன் முயற்சியை ஈழத்தழருக்கு சாதகமானதாகவும் வாய்ப்பானதாகவும் மாற்றிக் கொள்ள முடியும். காரணம் ஈழத்தமிழரது நிலமும் இருப்பும் மேற்குக்கும் இந்தியாவுக்கும் அவசியமாக தெரிகிறது. சீனா தென் இலங்கையை தமது செல்வாக்குக்குள் கொண்டுவந்த பிற்பாடு வடக்குக்கு கிழக்காவது மேற்குலகிடமும் இந்தியாவிடமும் இருப்பது அவசியமானது. அதுவே இரு தரப்பினது சமநிலையை தீர்மானிக்கும் அரசியலாக அமையும். அதற்காக குவாட் நாடுகள் தென் இலங்கையை கைவிட்டுவிட்டதாவோ ஈழத்தமிழருக்கு முழுமையான ஆதரவு சக்திகளாக இயங்கப் போகின்றன என்று அர்த்தமாகாது. மாறாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதே அதனடிப்படையாகும்.

மூன்றாவது, எதிர்கட்சித் தலைவரை சந்தித்த போது புதுப்பிக்கத்தக்க புரட்சியில் இலங்கைக்கான வாய்ப்புக்கள் குறித்து தாம் சஜித் பிறேமதாஸாவுடன் விவாதித்ததாக சமூக வலைத்தளத்தில் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். அரகலய போராட்டத்தின் போது மேற்குலகத்தின் நிதியீட்டங்களும் ஆலோசனைகளும் இருந்ததாக அப்போது ராஜபக்ஷ தரப்பு குற்றம்சாட்டியது. அதனடிப்படையில் அவதானித்தால் அத்தகைய போராட்டமே இன்றைய அரசியல் சூழலை சாத்தியப்படுத்தியது. அதன் மூலம் இலங்கைத் தீவில் மையங்கொண்டுள்ள சீனாவின் ஆதரவாளர்களை கலைத்துவிட்டு மேற்க்கின் விசுவாசிகளை ஆட்சியில் நிறுத்த முடிந்தது. அத்தகைய ஆட்சியின் இருப்பு மட்டுமே மேற்குலகம் அல்லது குவாட் அமைப்பின் நலன்களைப் பாதுகாக்க முடியுமென மேற்கு கருதுகிறது. அதற்காகவே ஜனாதிபதி தேர்தல் பற்றிய உரையாடல்களும் அதற்கான ஆதரவுத் தளம் பற்றிய வாய்புக்களை முதன்மைப்படுத்துவதும் நிகழ்வுகள் அரங்கேறிவருகிறது. தமிழ் மக்களது வாக்குகளை முழுமையாக கைப்பற்றுவதற்கான நகர்வுகள் ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் தமிழர்களது பொருளாதார திறன்களை பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சிகள் காணப்படுகிறது. இதற்கு அமைவாகவே தமிழர் விடயங்கள் கையாளப்படுகிறது.

நான்காவது, எரிக்சொல்ஹெய்ம் தான் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை எனவும் தமிழ் தரப்பினை சந்தித்த போதும் எதிர்கட்சியினரை சந்திதர்த போதும் சுற்றுச்சூழல் சார்ந்து பேசியதாகவுலும்’ குறிப்பிடுகின்றார். ஆனால் அதற்கான தகவல் எதுவும் வெளியாகாத போது தமிழ் அரசியல் தலைமைகள் தற்போது சுற்றுச்சூழலில் கவனம் கொண்டுள்ளார்கள் என்ற செய்தி தமிழ் மக்களுக்கு தெரியாதுள்ளது என்பது கவலைக்கிடமானதாக அமைந்துள்ளது. மலையக முற்போக்கு முன்னணியின் தலைமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் எதிர்கட்சித் தலைமையும் சுற்றுச் சூழலில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பது தற்போதைய இலங்கைத்தீவின் அரசியலின் துயரமென்றாகவே உள்ளது. இத்தகையள உண்மையை வெளிப்படுத்தியதற்கு எரிக்சொல்ஹெய்ம்க்கு இலங்கைத் தீவு மக்கள் பாராட்டுத் தெரிவிப்பார்களா என்பது சந்தேகமே. இப்படி ஏமாற்றுவதை விட அவர் வேறு ஏதாவது செயலை வெளிவுபடுத்தியிருக்க முடியும்.

எனவே, எரிக்சொல்ஹெய்ம்ன் நகர்வு முழுவதும் ஈழத்தமிழரது அரசியலை முன்நிறுத்திக் கொண்டு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முடிபுக்குக் கொண்டுவருவதற்கான அணுகுமுறையாகவே தெரிகிறது. ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவை மக்களால் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஆக்குவதுடன் அடுத்துவரும் ஆடட்சிக்காலப்பகுதிக்கு இலங்கைத் தீவில் மேற்குலக நட்பு சக்தியைப் பலப்படுத்துவதே பிரதான நகர்வாகக் தெரிகிறது. அதற்காக பயன்படுத்தப்படும் தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் விளங்குகின்ற துயரம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இத்தகைய பின்னணிக்குள்ளேயே ஈழத்தமிழரது அரசியல் தீர்வுக்கான உரையாடலின் தனித்துவம் முக்கியத்துவம் பெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அது ஈழத்தமிழரது அரசியலுக்கான தீர்வாக இல்லாது இந்து சமுத்திரத்திற்கான வல்லரசுகளது போட்டிக்கான களமாகவே தெரிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)