அரசியல் கட்டுரைகள்

இஸ்ரேல்-பலஸ்தீன போர் பதற்றமும் அமெ. வெளியுறவுச் செயலாளரது விஜயமும்

மேற்காசிய அரசியலில் இஸ்ரேலிய, -பலஸ்தீன முரண்பாடென்பது நீண்ட வரலாற்றுப் பிரச்சினையாகக் காணப்படுகிறது. பலஸ்தீன மக்களின் சுயநிர்ணயத்திற்கான போராட்டம் தீர்வற்ற சூழலை கொண்டதாகவும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களது தந்திரங்களால் அழிவுகளையும் இழப்பீடுகளையும் எதிர் கொள்ளும் இனமாகவும் மாறிவருவதையும் காணக்கூடியதாக உள்ளது. தொடர்ச்சியாக பெரும் போராட்டத்தை நடத்திய பலஸ்தீனர்கள் காஸா பகுதிக்குள் அடக்கப்பட்டிருப்பதுடன் தொடர்ச்சியாக யூத இராணுவக் கெடுபிடியினால் பாரிய அழிவுகளை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு முழுவதும் ஜெரூசலத்தில் அமைந்துள்ள பலஸ்தீன பள்ளிவாசலினால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து இரு பிரிவினருக்கும் இடையில் வன்முறை வெடித்துள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அட்டனியோ பிளிங்டன் இஸ்ரேலிய பிராந்தியத்திற்கு விஜயம் செய்துள்ளார். இக்கட்டுரையும் இஸ்ரேல்-, பலஸ்தீன முரண்பாட்டையும் அமெரிக்காவின் நகர்வையும் தேடுவதாக உள்ளது.

முதலில் இஸ்ரேலிய சிட்டி ஆப்டேவிட் பகுதியில் அமைந்துள்ள யூத வழிபாட்டுத்தலம் மீது 27.01.2023 அன்று பலஸ்தீன துப்பாக்கிதாரி தாக்குதல் நிகழ்த்தியதில் 7 யூதர்கள் கொல்லப்பட்டனர். மூன்று பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் தொழுகைக்கு தயாரான போது நிகழ்த்தப்பட்டதாக யூதப் பொலிசார் அறிவித்துள்ளனர். இந்த ஆண்டின் ஆரம்பம் முதலே இருதரப்புக்குமான பதற்றம் நிலவியது. இதில் கடந்த 26.01.2023 இஸ்ரேலியப் படைகள் பலஸ்தீன அகதிமுகாமுக்குள் தேடுதல் நடாத்திய போது 9 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து காஸாப்பகுதியிலிருந்து இஸ்ரேலியர் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதெனவும் பதிலுக்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இரு தரப்பும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாகவும் 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் எனவும் இஸ்ரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர். அதே நேரம் இன்னோர் யூத வழிபாட்டுத் தலத்தின் மீது 13 வயது பலஸ்தீன சிறுவன் தப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாகவும் அதில் இரு யூதர்கள் காயப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இத்தகைய பதற்றத்தை தணிக்கும் நோக்குடன் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் இஸ்ரேல் பலஸ்தீன தலைவர்களைச் சந்தித்துள்ளார். அவர் இருதரப்பையும் அமைதி காக்குமாறு கோரியுள்ளார். ஆனால் இருதரப்பும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதனைக் காணக்கூடியதாக உள்ளது. இஸ்ரேலிய புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பலஸ்தீனர் மீதான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இதேநேரம் அமெரிக்க வெளியுறவுச் செயலாளரது இப்பிராந்தியம் நோக்கிய விஜயத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது அவசியமானது. உலகளாவிய ரீதியில் பாரிய நெருக்கடி நிலவும் போது அமைதிகாக்கும் அமெரிக்கா இஸ்ரேல் விடயத்தில் மட்டும் அதிதீவிரம் காட்டுவதற்கான காரணமும் முக்கியத்துவமும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது.

ஒன்று, யூதர்கள் கொல்லப்படுவதை எந்தளவுக்கு இஸ்ரேல் அனுமதிக்காதுள்ளதோ அதேயளவுக்கு அமெரிக்காவும் உள்ளது. அமெரிக்க ஆட்சியாளரது இருப்பு யூதர்களது செல்வாக்கிலுள்ளதென்பதுடன் அமெரிக்க ஆட்சி மீது யூதர்களுக்கு தனித்துவமான பங்கு காணப்படுகிறது என்பதாகும். அது மட்டுமல்ல யூதர்கள் கொல்லப்படுவது மேற்காசியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஆபத்தானதாக மாறிவிடும் என்பதை உணர்ந்ததன் விளைவே அமெரிக்கா வெளியுறவுச் செயலாளரது அவசர விஜயமாகும்.

இரண்டு, அமெரிக்கா தனது நட்பு நாட்டுக்குள்ளேயோ அல்லது அணிநாடுகளின் பிராந்தியத்திற்குள்ளேயோ ஒரு போரை நிகழ்த்த விரும்பாதுள்ளது என்பதையே கொண்டுள்ளதாக தெரிகிறது. அதாவது சீனா, ரஷ்யா போன்று ஒரு போரை நிகழ்த்தவோ அல்லது நட்பு சக்திகள் போரை புரியவோ அமெரிக்கா அனுமதிக்காது என்பதையே கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது. அவ்வகையான ஒரு போரை அமெரிக்க நட்புச் சக்திகள் நிகழ்த்துமாக இருந்தால் அதன் விளைவு அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக மாறிவிடும் என்பதில் கவனம் கொண்டுள்ளது. அதற்காக போரைத் தவிர்க்கும் நகர்வை துரிதப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய தரப்பை மட்டுமல்ல பவலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸையும் சந்தித்து பிளிங்கன் உரையாடியுள்ளார்.

மூன்று, பலஸ்தீனர்கள் தொடர்ச்சியாக தாக்குதலை நிகழ்த்துவார்களாயின் யூததேசம் அதிக நெருக்கடியை எதிர் நோக்க நேரிடும் என்பதை கருத்தில் கொண்டே அமெரிக்காவின் நகர்வு அமைந்துள்ளது. பலஸ்தீனர்களது தற்கொலைத் தாக்குதல்களாயினும் துப்பாக்கித் தாக்குதலாயினும் யூதர்களது உயிரிழப்பினை அதிகரிக்கக் கூடியது. அதனால் அரபு-, இஸ்ரேலியப் பிராந்தியம் பதற்றமடைவதுடன் உலகளாவிய போக்கின் தன்மை அமெரிக்காவுக்கு நெருக்கடியாக அமைந்துவிடும். யூதர்கள் நிரந்தரமாக அமைதியற்று இருப்பதென்பது அமெரிக்காவின் அமைதிக்கும் ஆபத்தானதாகவே அமையும். அதனால் யூதர்கள் மீதான தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும். அதுவே அமெரிக்காவுக்கும் அதன் உலகளாவிய இருப்புக்கும் இலாபகரமானதாக அமையும். அதற்கான நகர்வையே அமெரிக்க முன்னெடுத்துள்ளது. யூதர்கள் அமெரிக்காவின் செல்வாக்குக்குள் இருப்பதென்பதை விட அமெரிக்கா யூதர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவே தெரிகிறது. அதற்கான சேவையையே பிளிங்கன் வெளிப்படுத்திவருகிறார்.

நான்கு, ரஷ்யா மேற்காசியாவில் சிரியா, ஈரான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளது ஆதரவுடன் பலமானதாகவே உள்ளது. அதனால் அத்தகைய பலத்தை கட்டுப்படுத்தும் உத்தியாக தொடங்கிய உக்ரைன்- ரஷ்யப் போர் சாதகமான விளைவை அமெரிக்காவுக்கும் மேற்குலகத்திற்கும் ஏற்படுத்திவருகிறது. அத்தகைய போர் வலுவான மாற்றத்தை ரஷ்யாவின் செல்வாக்குப் பிராந்தியங்களில் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அதனால் ரஷ்யாவுக்குள்ளும் அதன் பிராந்தியங்களுக்குள்ளும் பலவீனம் ஏற்படுவதுடன் அத்தகைய சூழல் உருவான பின்பு ஒரு போரை இஸ்ரேல் ஆரம்பித்தால் அதில் அமெரிக்காவின் பங்கு வேறுமாதிரியாக அமையும். அதாவது போரை ஆதரிக்கும்’ நிலையில் அமெரிக்காவின் போக்கு காணப்படும். அத்துடன் உக்ரைன் போரை முழுமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் செயல்படுகின்றன. தற்போது உக்ரையின் -ஐரோப்பிய யூனியன் மாநாடு ஒன்றினை தொடக்கியுள்ள நிலையில் போர் ஐரோப்பாவுக்குள் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியும் ரஷ்யா மீதான தடைகளையும் பற்றிய உரையாடல் பலமடைந்து வருகிறது.

உக்ரைன் போரை எதிர்கொள்வதற்கான நகர்வுகளை ஐரோப்பிய நாடுகளும் நேட்டோ அணியினரும் தீவிரப்படுத்த முயல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை பாதுகாக்கும் உத்தியிலேயே பிளிங்கனின் மேற்காசிய பயணம் அமைந்துள்ளது.

ஐந்து, ஆனால் அமெரிக்கா இஸ்ரேலின் மட்டுப்படுத்தப்பட்ட போரை ஆதரிக்கும் நாடாகவே உள்ளது. ஈரானிய இராணுவத் திறனை வளர்க்கும் நகர்வுகளை அழிப்பது மற்றும் அதன் மூலமாக திகழும் இராணுவத் தலைமைகளை கொல்வது போன்ற நிகழ்வுகளை இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா கவனமாக செயல்படுகிறது. அதேநேரம் இஸ்ரேல் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை உதறிவிட்டு செயல்படுவதையும் அமெரிக்கா அதிகம் விரும்பாத போக்கு காணப்படுகிறது. இஸ்ரேலை அமெரிக்கா இப்பிராந்தியத்தில் தலைமைதாங்க அனுமதிக்காத போக்காகவே தென்படுகிறது.

ஆறு, இஸ்ரேல் ஏற்கனவே திட்டமிட்ட படி உக்ரைன் ரஷ்யப் போரில் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில்லை என்பதை அமெரிக்கா மாற்ற முயலுகிறது. அதாவது ரஷ்யாவுக்கு எதிராக ஆயுத தளபாடங்களையும் உளவுச் செயல்பாடுகளையும் உக்ரைனுக்காக வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்த முனைகிறது. ஆனால் இஸ்ரேல் ரஷ்யா விடயத்தில் அதிக முரண்பாட்டை ஏற்படுத்தாது மேற்காசியப் பிராந்தியத்தில் செயல்பட வேண்டும் என்பதில் அக்கறையாக உள்ளது. அது இஸ்ரேலின் இருப்பையும் பாதுகாப்பையும் பாதிப்பதாக அமையும் என்பதில் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் தெளிவாக உள்ளனர். ஆனால் இஸ்ரேலிய பிரதமரது பிரான்ஸ் பயணம் மேற்கின் எதிர்பார்ப்பு வேறானது என்பதை உணர்த்துவதாகவே தெரிகிறது. இஸ்ரேலிய இராணுவ தொழில்நுட்பம் வலுவானதாகவே உள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவையும் கடந்து அதன் தொழில்நுட்ப பலம் அலாதியானது என்பதை ஈரான் இராணுவத் தளபதி மற்றும் அணு விஞ்ஞானி மீதான இரு தாக்குதல்களும் உணர்த்தியிருந்தன. எதுவானாலும் அமெரிக்கா, உக்ரைன் -இஸ்ரேல் நெருக்கத்தை சாதகமாக்கும் முயற்சியிலும்’ ஈடுபட்டுள்ளது.

எனவே மேற்காசிய அரசியலில் பலஸ்தீனர்களுக்காக அல்லது யூதர்களுக்காக இருதரப்பினரது பதற்றத்தை அமெரிக்கா கையாண்டதை விட முழு உலகத்திலும் அமெரிக்காவுக்கான வாய்ப்புக்களையும் நடைமுறையையும் கையாள முனைந்துள்ளதை காணமுடிகிறது. உக்ரைன் போர் ரஷ்யாவை முழு உலகத்திலிருந்தும் பலவீனப்படுத்தும் என்பதே அமெரிக்க உபாயமாக உள்ளது. அதனால் இஸ்ரேல் உக்ரைன் போருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த பிளிங்கன் முயலுவதாகவே தெரிகிறது. அதன் மூலம் இந்தியா, சீனாவின் பலத்தையும் முடிவுக்கு கொண்டுவராது விட்டாலும் பலவீனப்படுத்தலாம் என்ற உத்தியுடன் அமெரிக்க நகர்வுகள் காணப்படுகின்றன.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)