அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க உயர்பாதுகாப்புக் குழுவின் வருகை ஒரு மென்-இராணுவ நகர்வாகக் கொள்ளலாமா?

இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளது அரசியல் தலையீட்டை அதிகரிக்கும் வாய்ப்பினை அந்த நாடுகளுக்கு வழங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளது தலையீடு இலங்கையில் என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது. அதனை கண்டு கொள்ளும் திறன் அல்லது புரிதல் தென் இலங்கை அரசியல்வாதிகளும் கிடையாது. நாடு துண்டாடப்படக்கூடாது என்ற தென் இலங்கை அரசியல்வாதிகளுக்கு கொழும்புத் துறைமுக நகரம் தென் இலங்கையிலிருந்து துண்டாடப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளும் எண்ணமே இல்லாதவர்களாக உள்ளனர். பாராளுமன்றத்தில் கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பான சட்டமூலத்திற்கான விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய விவாதத்தில் எந்த சிங்களத் தீவிர தேசியவாதியும் அதன் பிரிவினை பற்றியோ இலங்கைத் தீவின் இறைமை பற்றியோ அதனால் ஏற்படவுள்ள விளைவுகள் பற்றியோ உரையாடவில்லை. அவ்வாறான ஒரு விடயமே அண்மையில் அமெரிக்க உயர் பாதுகாப்பு தூதுக்குழுவின் இலங்கை வருகை உணர்த்தியுள்ளது.

இலங்கைத்தீவை நோக்கி அமெரிக்காவின் நகர்வுகள் அதிகரித்துள்ளது. இலங்கையை நோக்கி தொடர்ச்சியாக அமெரிக்க உயர் அதிகாரிகளது வரவும் ஆட்சி மீது செலுத்தப்படும் செல்வாக்கும் பிராந்திய அரசியல் உறுதிப்பாட்டை பலப்படுத்துதல் மற்றும் இலங்கையின் இறைமை கடல்பாதுகாப்பு என்பனவற்றுக்கான ஊக்குவிப்பு என்ற பெயரில் நிகழ்ந்து வருகிறது. இலங்கையின் இறைமையைப் பற்றிய அமெரிக்க கவலை தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் யூலி சுங் தனது டூவிட்டலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

I welcome to defense deputy assistant secretary Jed Royal to Sri Lanka. We discussed how the US is working with Sri Lanka on shared goals of promoting Sri Lanka’s  sovereignty and maritime security, enhancing stability in the region, and promoting a free and open Indo-Pacific.

அமெரிக்க பாதுகாப்புத் துணைச் செயலாளர் தலைமையில் பாதுகாப்புத் தொடர்பில் பேச்சுக்களை நடாத்தும் நோக்குடன் 20 பேர் கொண்ட அமெரிக்க தூதுக்குழு ஒன்று 14.02.2023 அன்று இலங்கைக்கு வருகை தந்திருந்தது. இரு விமானங்களில் பண்டராநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய குழுவினர் இலங்கை பாதுகாப்புத் தரப்புடனான சந்திப்பை நோக்கமாகக் கொண்டுள்ளமை கவனத்திற்குரியதாகும். இந்தக் குழுவில் இந்தோ-பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜெடிடியா றோயாலும் கலந்து கொண்டுள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். அது மட்டுமன்றி அத்தகைய குழுவில் உயர் இராணுவ மட்ட அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் பாதுகாப்பு பொறுத்து கோட்டே மற்றும் சிறிஜெயவர்த்தனபுர பாதுகாப்பு பிரதேசங்களுக்கு விஜயம் செய்ததாகவும் அங்கு பாதுகாப்பு விடயங்கள் உரையாடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தகைய துர்துக்குழவினர் இலங்கைக்கு வருகைதருவதற்கு முன்பே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் பாதுகாப்புத் தரப்பினால் அதி உயர் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டதாகவும் எந்த பரிசோதனைகளே இன்றி குறிப்பாக வருகைதந்த அமெரிக்க குழுவின் விசா கூட பரிசோதிக்கப்பட வில்லை என்பதையும் ஊடகங்கள் செய்தியாக பரிமாறியுள்ளன. மேலும் தூதுக்குழுவினர் வருகை தந்தது முதல் மீளவும் புறப்படும் வரை அவர்களது பாதுகாப்பு பலமானதாக பேணப்பட்டதுடன் அதிவேக நெடுஞ்சாலை முதல் கொழும்பு பாதைகள் மற்றும் அவர்கள் தங்கியிருந்த இடங்கள் அதிக பாதுகாப்புக்குள் இருந்ததுடன் இலங்கை பாதுகாப்பு தரப்பின் தொடர் கண்காணிப்புக்குள்ளும் இருந்ததாக தெரியவருகிறது. அவர்களது உள்ளூர் பயணங்களுக்காக தயாரான வாகனங்களுடன் வருகை தந்ததாகவும் அவை மீளவும் கொண்டு செல்லப்பட்டதாகவும் இன்னோர் செய்தியும் உரையாடப்படுகிறது. அதற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பண்டார தென்னக்கோண் திருகோணமலையில் அமெரிக்க இராணுவத்தளம் பற்றி உரையாடுவதற்காக அமெரிக்க தூதுக்குழு வருகை தரவில்லை எனவும் அத்தகைய ஊகங்கள் நிலவுவதாகவும் அவர் டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி இரு நாட்டுக்குமான பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது, இந்தோ-பசுபிக் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறுதிப்பாடு பேணுவது, அத்துடன் ரஷ;சிய-உக்ரையின் போரின் தாக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அவர் டெலிமிஜரருக்கு தெரிவித்துள்ளார். மேலும் 150 இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமெரிக்க பயிற்சி வாய்ப்புக்களை வழங்கியதுடன் இரு கப்பல்களை இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இது வழமையான சந்திப்பு எனவும் அடிக்கடி நிகழ்வதாகவும் வெளிநாட்டு தூதுவர்களும் உரையாடல்களும் காலத்திற்கு காலம் நடைபெறுவதாகவும் தென்னக்கோண் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையில் மூலோபாய நலன்களை கொண்டிருக்கின்றன. அவற்றின் பூகோள-அரசியல் போட்டியாளரான சீனாவின் செல்வாக்கு மற்றும் அனைத்து உலக வல்லரசுகளினது கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கை இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் மூலோபாய ரீதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் தென்னக்கோண் அதன் போது குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கத் துர்துக்குழுவின் வருகையின் போது இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இரு தரப்பினரும் ஒரேவிடயத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். அதாவது திருகோணமலைத் துறைமுகத்தை மையப்படுத்தி அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படும் விடயத்தை இரு தரப்பும் நிராகரித்திருந்தனர். ஆனால் இத்தகைய பாதுகாப்புடன் அதி முக்கியத்துவம் வாய்ந்த விஜயங்கள் ஏன் என்ற கேள்வி வழமையானதே. தென்னக்கோண் குறிப்பிடுவது போல் இது வழமையானதுமல்ல. வெறும் 150 பாதுகாப்புத் தரப்புக்கு பயிற்சியளிக்கவும் இரு கப்பல்களை இலங்கை கடற்படைக்கு வழங்குவதற்கானதுமல்ல என்பது புலனாகிறது. அத்தகைய விடயங்களை மேற்கொள்வதற்கே இலங்கைக்கான அமெரிக்காவுக்க தூதுவர் காணப்படுகிறார். கடந்த காலங்களில் அவரே மேற்குறிப்பிட்ட அனேகமான பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்படியாயின் விசேட தூதுக்குழுவின் வருகையின் நோக்கம் தென் இலங்கை குறிப்பிடுவது போலல்ல என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதனை விரிவாக தேடுதல் வேண்டும்.

ஒன்று, இலங்கை-அமெரிக்கத் தரப்பின் உறவு பலமான நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. உள்நாட்டு பொருளாதார நெருக்கடியால் அமெரிக்காவுக்கு பலவிட்டுக் கொடுப்புகளை தென் இலங்கை செய்ய முன்வந்துள்ளது. மிலேனிய உடன்பாட்டை நிராகரித்த கடந்த ஆட்சியாளர்கள் முன்வைத்த அதே விடயத்தை தற்போது அமெரிக்கா செயல்படுத்தியுள்ளது. அதாவது விசா இன்றி அமெரிக்க இராணுவம் வருகை தரவும் இலங்கை நிலகப்பரப்பை பயன்படுத்திக் கொள்ளவும் மிலேனிய உடன்பாடு கேரியிருந்தது. அதனையே 20 பேர் கொண்ட தூதுக்குழு தற்போது நிகழ்த்தியுள்ளது. உடன்பாடு எட்டாமலேயே அமெரிக்காவின் பாதுகாப்பு தரப்பு அத்தகைய நகர்வுகளை சாத்தியப்படுத்தியுள்ளது. இலங்கை ஆட்சியாளர்கள் எதனை குறிப்பிட்டாலும் அமெரிக்கா தனது பிராந்திய நலன் பொறுத்து அதி உச்சமான நடவடிக்கையை எடுக்க தயார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இரண்டு, இந்தோ-பசுபிக் தந்திரோபாய வலைப்பின்னலுக்குள் இலங்கையை அதன் முக்கியத்துவம் கருதி வெற்றிகரமாக கையாள அமெரிக்கா முனைகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கையில் எடுத்துள்ள அமெரிக்கா சர்வதேச நாணய நிதியத்தினூடாக இலங்கையை வழிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதுவே சீனாவின் ஒப்புதலின்றியே இலங்கைக்கு கடன் வழங்குவது பற்றி சர்வதேச நாணய நிதியத்தின் கவனத்தில் கொள்ள ஆரம்பித்துள்ளது. அதாவது அமெரிக்க பாதுகாப்புக் குழுவின் வருகை அத்தகைய நிதியத்தை சர்வதேச நாணயநிதியம் வழங்க முன்வந்திருப்பதை கவனத்தில் கொள்ளுதல் பொருத்தமானது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் அமெரிக்காவின் உலகளாவிய நலனை கட்டமைக்கு ஒரு நிதிநிறுவனமாகவே சர்வதேச நாணயநிதியம் காணப்படுகிற்து. அது ஒட்டுமொத்த மேற்கின் உபாயமாக அமைந்தாலும் அதன் முழுமையான அறுவடை அமெரிக்காவிற்கானதாகவே உள்ளது. இந்தோ-பசுபிக் வலைப்பின்னலும் சர்வதேச நாணயநிதியத்தின் நகர்வுகளும் ஒரே தளத்தில் அளவீடு செய்ய வேண்டிய விடயமாகவே உள்ளது. இது பற்றிய மேலதிக தேடலுக்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற நூலின் இரு பாகங்களையும் கற்றுக் கொள்வதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஜான் பெர்கின்ஸ்க்கு உரிய புரிதல் தனித்துவமானது.

மூன்று, சீனாவுக்கு நெருக்கடி அதிகரிக்கும் நடவடிக்கையாக அமெரிக்க பாதுகாப்புக் குழுவினது வருகை விளங்குகிறது. இதனால் இலங்கை-சீன உறவு பாதித்துவிடும் என்று விவாதிக்க முடியாது. மாறாக அமெரிக்கத் தரப்பு அவ்வாறு ஒரு சூழலை உருவாக்குவதே அவசியமாதென கருதுகிறது. இவ்வான முயற்சியால் சீனாவிடம் சென்ற பல நாடுகளை அமெரிக்கா மீட்டுள்ளதாக கருதுகிறது. ஆனால் அத்தகைய பட்டியல் அதிகமானதல்ல என்பதுவும் இலங்கை அத்தகைய நகர்வுக்கு பதிலாக பொருளாதார மீட்சிக்கான உத்தியாகவே இத்தகைய நகர்வுகளை கருதுகிறது என்பது உணரப்பட வேண்டும். தென் இலங்கை ஆட்சியாளரைப் பொறுத்தவரை அமெரிக்கா கருதுவது போல் அல்லாது அதாவது சீனாவிடமிருந்து விடுபடுவதைவிட பொருளாதார நெருக்கடியிலிருந்தும் வடக்கு கிழக்கு அரசியல் நெருக்கடியிலிருந்தும் மீழ்வதே நோக்கமாகும். அத்தகைய நலனும் அமெரிக்காவின் நலனும் ஓரிடத்தில் சந்திப்பதனால் இரு நாட்டுக்குமான உறவு பலமானதாக கட்டமைக்கப்பட முயலுகிறது. ஆனாலும் இலங்கை சீன உறவு பலமானதாகவே உள்ளது. அத்தகைய உறவை இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு போதும் பலியடமாட்டார்கள். ஆனால் அமெரிக்காவுடனும் மேற்குடனும் உறவை வைத்துக் கொள்வதிலும் தந்திரோபாயமான நகர்வுகளை மேற்கொள்வார்கள். அத்தகைய நகர்வொன்றுக்குள்ளேயே அமெரிக்க-இலங்கை உறவு அமைந்துள்ளது. இத்தகைய புரிதலின் பிரதிபலிப்பே அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகளது இராணுவ நடவடிக்கையாக தூதுக்குழுவின் விஜயம் அமைந்திருந்தது. இது ஒரு மென் இராணுவ நடவடிக்கையையே (Soft-Military Operation). அதனை இலங்கை எதிர்கொண்ட விதமும் தனித்துவமானது.

நான்கு, அமெரிக்க-இந்திய முறுகல் ரஷ்சிய-உக்ரையின் போருக்கு பின்னர் அதிகரித்துவருகிறது. அதானிக் குழுமத்திற்கு எதிரான நகர்வுகளை அடுத்து இரு நாட்டுக்குமான நெருக்கம் குறைந்து வருவதுடன் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஒன்றினை அமெரிக்க உருவாக்க விரும்புகிறது. பாரதீய ஜனதாக் கட்சியின் தோல்வியையும் காங்கிரஸ்ன் ஆட்சியையும் அமெரிக்கா கட்டமைக்கும் நகர்வுகளை மேற்கொள்ள முனைகிறது. அதன் பிரதிபலிப்பானது இலங்கைத் தீவில் இந்திய-அமெரிக்க கூட்டென்பதைவிட அமெரிக்கா தனித்து செயல்பட முனைகிறது. நேரடியாகவே அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கைத் தீவின் அரசியலை கொண்டுவர அமெரிக்கா விரும்புகிறது. அதற்கு பிரதான காரணம் இந்தியாவின் இலங்கை பொறுத்த கொள்கைகளின் தோல்விகள். அதனால் சீனாவின் கை ஓங்கியுள்ளமை. அது மட்டுமன்றி அமெரிக்க நலனுக்கு புறம்பான இந்திய நகர்வுகள். இதனால் ரஷ்சிய-சீன-இந்திய அணுகுமுறையை தோற்கடிப்பதற்காக உக்ரையின்-தைவான் போன்று இலங்கைத் தீவையும் பயன்படுத்த முயலுகிறது.

எனவே அமெரிக்க உயர் பாதுகாப்புக் குழுவின் இலங்கை விஜயம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அது பற்றிய அதிர்வுகள் நீண்ட காலத்திற்கானது. இரு நாடுகளது நலன்களுடனும் சங்கமிக்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்துசமுத்திரம் பொறுத்த கொள்கையும் பிராந்திய பாதுகாப்பும் இலங்கைத் தீவின் இறையாண்மையிலும் ஒருமைப்பாட்டிலும் கடற்பாதுகாப்பிலும் தங்கியுள்ளது என்பதை கோடிகாட்டியுள்ளது. இது ஈழத்தமிழருக்குரிய புரிதலுக்கானதாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)