அரசறிவியலில் சில கோட்பாடுகள் நிலையான வடிவத்தை தருபவையாக அமைந்துவிடுகின்றன. அந்த வகையில் யதார்த்தவாதம் கி.மு.4 ஆம் நூற்றாண்டு முதல் இன்றுவரை அரசறிவியலோடும் அதன் மறுவடிவமான அதிகாரத்தோடும் பின்னிப் பிணைக்கப்பட்டதாக உள்ளது. இத்தகைய பலக்கோட்பாடு அல்லது இராணுவவாதக் கோட்பாடு ஆயுத தளபாடங்களது திறனாலும் அதன் கட்டமைப்புக்களாலும் உருவாக்கப்படுகிறது. உலகப் போர்களில் மட்டுமல்லாது போர்களை தடுப்பதும், உலக அமைதியைப் பேணுவதும் உலகளாவிய அதிகாரச் சமநிலையை கட்டமைப்பதும் யதார்த்தவாதக் கோட்பாட்டுக்கே உரித்துடையதென அக்கோட்பாட்டைக் கட்டமைத்தவர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வரிசையில் ரஷ்ய-, உக்ரைன் போர் யதார்த்தவாதத்தின் பிந்திய வளர்ச்சியைக் கொண்ட போராக காணப்படுகிறது. இக்கட்டுரையும் ரஷ்ய-உக்ரைன் போரில் தொழில்நுட்ப ரீதியில் போரைத் தீர்மானிக்கும் ட்ரோன்கள் பற்றிய தேடலாக அமையவுள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்களங்களில் அறிமுகமான ட்ரோன்கள் தற்போது போர்களை தீர்மானிக்கும் பலம் பொருந்திய ஆயுதமாக மாறிவருகிறது. ஜேனதன் மார்க்கஸ் எனும் போரியல் வல்லுனர் குறிப்பிடுவது போல் போர்களில் மிகப்பிந்திய வருகையை கொண்ட ஆனால் இராணுவ வல்லாதிக்கத்தை தீர்மானிக்கும் ஆற்றலை உடையதாக ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லாத விமானங்கள் கொண்டுள்ளன என்கிறார். முழு இராணுவ வரலாற்றிலும் ஒரு தனியான ஆயுதம் போரியல் முறைமையயை தோற்றுவித்துள்ளது. இரண்டாம் உலகப் போரில் போர்களை டாங்கிகளே தீர்மான சக்தியாக அமைந்திருந்தன. ஆனால் ஆப்கானிஸ்தான், ஈராக் போர்களில் Unmanned Arial Vehicle (UAV) புதிய வடிவத்தை ஏற்படுத்தியது. உலகளாவிய தொழில் நுட்பத்தில் அறிமுகமாகி தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளாலும், ஆயுதக் குழுக்களாலும், தீவிரவாத அமைப்புக்களாலும் ட்ரோன் எனும் போரியல் ஆயுதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனிமனிதர்களை இலக்கு வைப்பதற்கும் பயங்கரவாத அமைப்புகளை அழிப்பதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் ட்ரோன்கள் சிரியா, துருக்கி, இஸ்ரேல் மற்றும் ரஷ்ய, -உக்ரைன் போரியல் களங்களில் நேரடியான விளைவுகளை ஏற்படுத்துவது போல் அதற்கு வெளியேயும் அதிக தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. சாமுவல் வென்டிற் குறிப்பிடுவது போல் ஒரு போரின் புலனாய்வுத் தகவல்களை மையப்படுத்திய தாக்குதல்களது திட்டமிடலும் நகர்வுகளும் ட்ரோன்களால் தீர்மானிக்கப்படும் இலத்திரனியல் போர்களாக தற்போதைய போர்க்களங்கள் மாற்றியுள்ளன என்கிறார். உலகளாவிய ரீதியில் உயர்ரகத்தைக் கொண்ட 10 ட்ரோன்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதில் Predator மிகத் தரம்வாய்ந்ததாக இனங்காணப்பட்டுள்ளது. உலகளாவிய தரம்வாய்ந்த ட்ரோன்களை அமெரிக்க புலனாய்வுத் துறையும் அதன் இராணுவமும் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. Rq-170 Sentinel ட்ரோன்களாகும்.
ஓராண்டை பூர்த்தி செய்துள்ள ரஷ்ய-, உக்ரைன் போர் துருக்கிய மற்றும் ஈரானிய தயாரிப்பு ட்ரோன்களின் தாக்குதலால் உக்ரைன் அதிக அழிவுகளை எதிர்கொண்டிருந்தது. ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது திணறிய உக்ரைன் அத்தகைய தாக்குதலை முறியடிக்கும் உத்தியோடு ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. தற்போது ட்ரோன்களே உக்ரைன் போர்களங்களை மட்டுமல்ல அதற்கு வெளியேயான தாக்குதலாகவும் மாறியுள்ளது. அதாவது ரஷ்யாவின் நகரப்பகுதிகளையும் பிரதேசங்களையும் ட்ரோன்கள் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. இவை அனைத்தும் போரை தீவிரப்படுத்துவது மட்டுமல்லாது பாரிய போராகவும் இரு நாட்டுக்குமான போர் பிராந்திய அளவில் மாறக் கூடியதாகவும் காணப்படுகிறது. ட்ரோன்களது பிரயோகம் தனிமனித சக்திகளை அழிக்கும் திறன்கொண்டதென்பது ஈரானிய இராணுவ தளபதி சுலைமானியின் படுகொலையில் கண்டுகொள்ள முடிந்தது. அத்தகைய நகர்வுகள் ரஷ்ய-, உக்ரைனிய தலைமைகள் மீதும் இராணுவ தளபதிகள் மீதும் சாத்தியப்படுத்த வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
ரஷ்யாவின் தலைநகரமான மொஸ்கோவிலிருந்து 100 கி.மீ. அப்பால் அமைந்துள்ள குபஸ்ரோபா என்ற பகுதியில் உள்ள மிகப் பெரும் எண்ணை நிறுவனமாகிய காஸ்ப்ரோம் கம்பனியின் எரிபொருள் மையத்திற்கு அருகில் உக்ரைன் தயாரிப்பு ட்ரோன் வீழ்ந்து நொருங்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. யு.ஜே.-22 எயார்போண் ரகத்தைச் சேர்ந்த ட்ரோன்கள் எனவும் உக்ரைனின் யு.கோ.ஆர்.ஜெட் நிறுவனத்தின் தயாரிப்பெனவும் குற்றம் சாட்டியுள்ளது ரஷ்யா. இதே நேரம் ரஷ்யாவின் தென்பகுதியில் இருவேறு இடங்களில் உக்ரையினது ட்ரோன்கள் பறந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது. இதனைவிட கடந்த 28.02.2023 அன்று ரஷ்யாவின் தெற்குப் பிராந்தியமான பெல்கிரேட் பகுதிக்குள் இரவு வேளை புகுந்த உக்ரைனின் மூன்று ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் வாகனங்கள் கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து 01.03.2023 அன்று மேற்குப் பிராந்தியமான பிரியான்ஸ் பகுதிக்குள் நுழைந்த உக்ரைன் ட்ரோனை பாதுகாப்பு தரப்பு சுட்டுவீழ்த்தியுள்ளதாக பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் போகோமாஸ் தெரிவித்துள்ளார். அதே போல் அடிகியா, கிரஸ்னொடார் பகுதியில் பறந்த ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக தெரியவருகிறது.
இதே நேரம் ரஷ்யாவின் நெருக்கமான நட்பு நாடான பெலாரஸில் ரஷ்யாவுக்கு சொந்தமான ஏ-50 ரக உளவு கண்காணிப்பு விமானம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டதாக பெலாரஸ் ஆட்சிக்கு எதிரான போராட்ட அமைப்பான பைபோல் அறிவித்துள்ளது. அதனை நாடுகடந்த பெலாரஸ் எதிர்க்கட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இது பற்றிய செய்திகள் எதுவும் அரச தரப்பால் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தாக்குதலை நடத்திய பைபோல் அமைப்பு ட்ரோன் மூலமே தாக்குதல் நிகழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது. பெலாரஸ் தலைநகரான மின்ஸ்கில் பகுதியிருந்து 12 கி.மீ. அருகில் அமைந்துள்ள மச்சுலிச்சி வான்படைத்தளத்திலேயே இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது. இது உக்ரைன் போரில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கண்காணிப்பை மேற்கொண்ட விமானம் எனவும் அதன் ராடார் சாதனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பெலாரஸ் எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர். எனவே இத்தகைய ட்ரோன் நகர்வுகள் ரஷ்ய,- உக்ரைன் போரை வேறு வடிவத்துக்குள் உட்படுத்தப் போகிறதா என்பதே தற்போதைய பிரதான கேள்வியாகும்.
முதலாவது, உக்ரைன் − ரஷ்யப் போரின் புதிய பரிமாணம் தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது. ரஷ்ய, உக்ரைன் எல்லைகளை நோக்கி அமைந்த போர் எவ்வாறு உக்ரைன் தலைநகரையும் அதன் வளங்களையும் இலக்கு வைத்ததோ அவ்வாறே ரஷ்யாவின் தலைநகரையும் அதன் வளங்களையும் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அது போரை உக்ரைனிலிருந்து ரஷ்யாவுக்குள் மாற்றுவதாகவே அமைய வாய்ப்புள்ளது. இது ரஷ்ய தலைமை உட்பட இராணுவ ஆளுமைகளை இலக்கு வைக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
இரண்டாவது, உக்ரைன் ட்ரோன்களின் தாக்குதல் இலக்கு தவறியிருந்தாலும் தாக்குதல் ரஷ்யாவின் பொருளாதாரமான எரிவாயு மற்றும் பெற்றோலியம் மீதுதான் என்பது தெளிவாகவே புலப்படுகிறது. அதாவது ரஷ்யாவின் எரிபொருள் மற்றும் பெற்றோலிய ஏற்றுமதி தடையும் ஐரோப்பிய நாடுகளதும் அமெரிக்காவினதும் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைக்குப் பின்னரும் ரஷ்யாவின் பலம் பெற்றோலியப் பொருட்களாகவே உள்ளது. அதனால் அதனை அழிப்பது என்பது மேற்குலகத்திற்கு அவசியமானதாக தெரிகிறது. அதனை நோக்கியே உக்ரைனது ட்ரோன்கள் தொழில்பட ஆரம்பித்துள்ளன.
மூன்றாவது, உக்ரைனது ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவை அதிக பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள் உள்ளாக்கியுள்ளது. இதற்கான பதில் நகர்வுகள் ரஷ்யாவின் பாதுகாப்பினை பலப்படுத்துவதுடன் உக்ரைன் மீதான தாக்குதல் ஆபத்தானதாக மாறவும் வாய்ப்புள்ளது. அதாவது அணுவாயுதங்களின் குறைந்த பட்ச பாவனைக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்க கூடியதாக தெரிகிறது. அதற்கான எச்சரிக்கைகள் ரஷ்யாவால் முன்வைக்கப்பட்டு வருகிறது. மறுபக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனுடனான எல்லைப் பாதுகாப்பினை பலப்படுத்துமாறும் கண்காணிப்பினை அதிகரிக்குமாறும் பாதுகாப்பு அதிகாரிகளை பணித்துள்ளார். அது மட்டுமன்றி ரஷ்யாவின் இன்னோர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான சென் பீட்டர்பேக்கின் வான் பரப்பு 27.02.2023 அன்று சில மணிநேரம் மூடப்பட்டது. காரணம் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்றினை பாதுகாப்புத் தரப்பு அவதானித்தது தான் என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதனுடன் ரஷ்யப் படைகள் வான்பாதுகாப்பு ஒத்திகையையும் மேற்கொண்டுள்ளன.
எனவே தொழில்நுட்ப ரீதியில் உக்ரைன், ரஷ்யப் போர் புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய இலத்திரனியல் போர் மாதிரியானது அதிக விளைவைத் தரக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. தற்போது எழுந்துள்ள ட்ரோன் போர் அனைத்து நாடுகளாலும் கவனத்திற்குரியதாக மாறவுள்ளது. ஏற்கெனவே அமெரிக்க, ரஷ்ய, துருக்கிய, ஈரானிய ட்ரோன்கள் அதிக திறன் கொண்டவையாக கணிக்கப்பட்டாலும் சீனாவினது ட்ரோன் பற்றிய உரையாடல் அதிக முக்கியத்துவம் கொண்டதாக அமைய வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. அதனை ரஷ்யா பயன்படுத்த முனையும் எனவும் ரஷ்யாவின் காலநிலைக்குரிய தயாரிப்புக்கள் எதிர்த்தரப்புக்கு அவசியம் எனவும் தெரியவருகிறது. ஏற்கனவே ஈரான், துருக்கியிடம் ரஷ்யா ட்ரோன்களை கொள்வனது செய்ததுடன் சீனாவிடமும் தற்போது ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்ய தயாராகியுள்ளது என்ற நிலையில் போர்க்களம் ட்ரோன்களால் களமாடப்படப் போகிறது. உலகம் அணுவாயுதங்களை காவிச் செல்லும் ட்ரோன்களை விரைவில் தயாரிக்கும் என்ற எதிர்பார்க்கையே அதிகம் வளர்ந்துள்ளது. ஏற்கெனவே ஏவுகணைகளை காவும் ட்ரோன்களை ரஷ்யா கொண்டுள்ளதாக செய்திகள் உண்டு. அமெரிக்காவும் அதனைக் கொண்டுள்ளதாகவும் சுலைமானியின் படுகொலைக்கு பின்னால் அத்தகைய தொழிநுட்பமே பயன்படுத்தப்பட்டதாகவும் அது இஸ்ரேலியத் தயாரிப்பு எனவும் தகவல் உண்டு. எதுவாயினும் ட்ரோன்களால் உலகப் போர்க்களங்கள் ஆக்கிரமிக்கப்படப் போகிறதென்பதே தற்போதைய போரியல் வளர்ச்சியாகவுள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
