அரசியல் கட்டுரைகள்

ஜோர்ஜியாவின் மக்கள் போராட்டமும் மேற்குலகத்தின் நலன்களும்!

உலகளாவிய அரசியலில் முன்னாள் சோவியத் குடியரசுகளின் மீதான கவனம் மேற்கு நாடுகளால் முக்கியத்துவப்படுத்தப்பட்டுவருகிறதென்பது தெளிவாகத் தெரிகிறது. சோவியத் குடியரசுகள் மட்டுமல்லாது கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தும் நகர்வுகளை அந்நாடுகள் மேற்கொண்டுவருகின்றன. ரஷ்யாவை மீளவும் எழுச்சிபெறாது தடுக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கையையே அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து அமுல்படுத்திவருகிறது. தற்போதைய ரஷ்யா வரலாற்றுக்காலம் முதல் பேரரசாகவும் அதற்கான புவிசார் பலத்துடனும் இயங்கிவருகிறது. ஆரம்பத்தில் ரஷ்யப் பேரரசாகவும் பின்னர் சோவியத் யூனியனாகவும் விளங்கிய ரஷ்யா மீளவும் அதற்கான எண்ணத்தோடு இயங்குவதாகவும் மீளவும் பேரரசாக எழுச்சிபெறுகின்ற நோக்குடன் செயல்படுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டிவருகிறது. அவ்வாறான குற்றச்சாட்டுக்குள்ளே அமெரிக்காவும் கிழக்கு ஐரோப்பாவை தனது பேரரசுவாதத்திற்குள் உட்படுத்த முனைவதாகவும் கிழக்கு ஐரோப்பாவை நோக்கிய நேட்டோவின் விஸ்தரிப்பு மேற்குமயவாக்கம் எனவும் ரஷ்யா குற்றம்சாட்டிவருகிறது. இவ்வாறு பரஸ்பர குற்றச்சாட்டுக்குள் அகப்பட்டுள்ள இப்பிராந்திய நாடுகளில் ஒன்றான ஜோர்ஜியா, அதிக மக்கள் போராட்டத்தின் மூலம் குழப்பத்தை எதிர்கொண்டுவருகிறது. இக்கட்டுரையும் ஜோர்ஜிய அரசியலில் நிகழ்ந்துவரும் மக்கள் போராட்டத்தின் அடிப்படை களைத் தேடுவதாக அமையவுள்ளது.

நடந்துமுடிந்த வாரத்தில் ஜோர்ஜியாவின் ஆளும்தரப்பு வெளிநாட்டு முகவர் தொடர்பில் சட்டமூலம் ஒன்றினை முன்வைக்கும் நோக்குடன் செயல்பட்டது. ஏற்கனவே இதே வகையான சட்டத்தை ரஷ்யா வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தது. அதே மரபைக் கொண்டு வரைபொன்றினை ஜோர்ஜியாவும் முன்வைக்க முயன்றது. ஆனால் ஜோர்ஜியாவின் ஆளும் தரப்பின் நடவடிக்கைக்கு எதிராக பலமான மக்கள் போராட்டம் எழுச்சி பெற்றதால் அத்தகைய சட்டமூலத்திற்கான நகர்வுகளை ஜோர்ஜிய அரசாங்கம் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 10.03.2023 அன்று வெளிநாட்டு முகவர் தொடர்பில் முன்வைக்கவிருந்த சட்டமூலத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இத்தகைய செயல்பாடு மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கொள்ளப்படுகிறது. ஆனால் அத்தகைய அறிவிப்பினை ஜோர்ஜிய ஜனாதிபதி அமெரிக்காவின் தலைநகர் வோஷிங்டனிலிருந்து கொண்டு வெளியிட்டுள்ளார் என்பதே கவனத்திற்குரியதாகும்.

சட்டமூலத்தின் உள்ளடக்கம் அனைத்தும் வெளிநாட்டுத் தலையீட்டை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதனைக் கையாளும் உத்தியாகவே தெரிகிறது. அதாவது வெளிநாடுகளிலிருந்து நிதிஉதவிகளை பெறுகின்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், அவைசார்ந்த அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அனைவரும் அரசிடம் பதிவு செய்தலை கட்டாயப்படுத்துவதாக அமைந்திருந்தது. இதன்வாயிலாக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அடையாளம் காணுவதுடன் அவற்றை தடுத்து நிறுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அத்தகைய அனைத்து நடவடிக்கைக்கும் எதிரான சட்ட நகர்வுகளை மேற்கொள்வதே பிரதான நோக்கமாக உள்ளது. ஏறக்குறைய இத்தகைய நிதி உதவியாக ஜோர்ஜியாவுக்குள் 20 சதவீதம் கொண்டுவரப்படுகிறது. இத்தகைய நிதி பாரிய குழப்பத்தை நாட்டுக்குள் ஏற்படுத்துவதாகவும் அதனை கண்காணிப்பதே சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அரசாங்கத் தரப்பு தெரிவிக்கின்றது. ஆனால் இத்தகைய சட்டதை வைத்துக் கொண்டு அரசாங்கம் ஆளும்தரப்புக்கு எதிரான செயற்பாடுகளை முறியடிக்க சதிவேலைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அதனையே ரஷ்ய அரசாங்கம் இதே மாதிரியான சட்டமூலத்தின் வாயிலாக நிகழ்த்துவதாகவும் குற்றம்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இத்தகைய சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை உள்நாட்டில் மட்டுமல்ல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஐரோப்பிய யூனியனது வெளியுறவு தலைமை பணிப்பாளர் ஜோசப் பொறில், ஜோர்ஜியாவின் சட்டமூலம் ஐரோப்பிய யூனியனது விழுமியங்களுக்கும் தரத்திற்கும் முற்றிலும் பொருத்தபாடற்றது என்று குறிப்பிட்டதுடன் அரசாங்கத்தின் நடவடிக்கையை எச்சரித்துள்ளார். மேலும் ஐரோப்பிய யூனியனில் இணைய முயலும் ஜோர்ஜியாவுக்கு அதீத நெருக்கடியான தருணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத் துறையின் பேச்சாளர் நட் பிறிஸ் குறிப்பிடும் போது வரைபாகவுள்ள சட்டமூலத்தை உடனடியாக கைவிட வேண்டும். தலைநகரில் நிகழும் மக்களது போராட்டம் ஜோர்ஜிய மக்கள் தமது அபிலாசையான உரிமையை பெறுவதற்கான நடவடிக்கையாக உள்ளது என்றார். இதே நேரம் ஜோர்ஜிய மக்களது போராட்டத்தை ஆதரிக்கும் ஜோர்ஜிய ஜனாதிபதி சாலோம் சோராபிச்சிவிலி அமெரிக்க தலைநகரிலிருந்து குறிப்பிடும் போது இச்சட்டமூலத்தை எப்படியாவது நான் தடுத்து நிறுத்துவேன். மக்களே நீங்கள் ஜோர்ஜியாவின் சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கிறீர்கள். ஜோர்ஜியாவின் எதிர்காலம் ஐரோப்பாவுக்குள் தங்கியுள்ளது. அதனை யாரும் பலவீனப்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்றார்.

இதனை ஜோர்ஜிய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என விபரித்த ஜோர்ஜியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் இந்த சட்டமூலத்திற்கு பின்னால் ஜோர்ஜிய அரசாங்கக் கட்சியான Georgian Dream Party க்குள் செல்லாக்குச் செலுத்தும் மேற்குக்கு எதிரான மக்கள் இயக்கமே வலுவான காரணமாக இருப்பதாகக் கருதுகிறது. இந்த சட்டமூலத்தின் இரு பிரிவுகளும் வெளிநாடுகளுக்கு எதிரானதாகவே உள்ளது. அதாவது ‘Transparency of Foreign Agents” “Registration of Foreign Agents” என்பன அந்நிய நாடுகளது நடவடிக்கைக்கு எதிரானதாகவே உள்ளன என அமெரிக்க தூதரகம் வாதிடுகிறது. அதே நேரம் ஜோர்ஜிய ஆளும் தரப்பு இந்த சட்டமூலத்தின் இரண்டாவது பகுதி முழுமையாக அமெரிக்கா வரைந்துள்ள வெளிநாட்டு முகவர்களுக்கான பதிவு சட்டமூலத்திற்கு ஒப்பானதாக அமைந்துள்ளது என விவாதிக்கின்றது.

எனவே ஜோர்ஜிய மக்களது போராட்டத்திற்கு பின்னாலுள்ள சக்திகளை அடையாளம் காண்பதுடன் அதற்கான நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏறக்குறைய 80 சதவீதமான ஜோர்ஜியர்கள் ஐரோப்பிய யூனியனில் ஜோர்ஜியா இணைவதனை ஆதரிக்கின்றனர். இதனை புரிந்து கொள்வது அவசியமானது.

ஒன்று, ஜோர்ஜியாவை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதில் ஐரோப்பிய நாடுகள் அதிக விருப்பினைக் கொண்டுள்ளன. அதன் மூலம் ரஷ்யாவின் புவிசார் அரசியலுக்குள் மேற்குலகம் நுழைவதற்கான வாய்ப்புக்களை பலப்படுத்துவதாக அமையும். மறுபக்கத்தில் ஜோர்ஜியாவை நேட்டோவுக்குள் இணைக்கும் முயற்சியும் ரஷ்யாவுக்கு எதிராக இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதற்கான நகர்வாக மாறுதல் அடைய திட்டமிடப்படுவதாக தெரிகிறது. அதாவது ஐரோப்பிய யூனியனும் நேட்டோவும் ஒரே திசையில் ஒரே நோக்கத்தை அடைவதற்கான செயல்பாட்டைக் கொண்டவை என்பதை விளங்கிக் கொள்வது அவசியமானது. உக்ரைனும் முதலில் ஐரோப்பிய யூனியனில் இணைவது பற்றிய உரையாடலையே மேற்குலகம் ஆரம்பித்தது. ஆனால் அதனை நேட்டோவாக மாற்றியதன் விளைவே தற்போதைய நிலைக்கான அடிப்படையாகும்.

இரண்டாவது, அவ்வகையான சட்டமூலங்கள் மீளவும் சோவியத் யூனியனது கட்டமைப்புக்கான வாய்ப்புக்களை தோற்றுவித்துவிடும் என மேற்குலகம் சந்தேகம் கொள்கிறது. அதாவது 2012ஆம் ஆண்டு ரஷ்யா இச்சட்டமூலத்தை அங்கீகரித்த பின்னர் பெலாரஸ், தஜிகிஸ்தான், அசர்பைஜான் ஆகிய சோவியத் குடியரசுகள் அவற்றை சட்டங்களாக பின்பற்றிவருகின்றன. இதன் நீட்சி ஏனைய முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் பரவ வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதனைத் தடுப்பதற்கான நகர்வாகவே ஜோர்ஜிய மக்கள் போராட்டமும் அதன் பின்னாக சட்டமூலம் விலக்கிக் கொள்ளப்பட்டதும் அமையும்.

மூன்றாவது, ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளையும் ஆட்சியையும் உருவாக்குவதே மேற்கின் இன்னோர் உத்தியாக உள்ளது. அதாவது ரஷ்ய ஜனாதிபதி புடினது உக்ரைன் போரை மட்டுப்படுத்துவதோ அல்லது தோற்கடிப்பதோ இன்னோர் போர்க்களத்தை திறப்பதன் மூலமே சாத்தியமாகும் என்பதில் அமெரிக்கா கவனம் கொள்கிறது. அதற்கான வாய்ப்பான சூழல் ஜோர்ஜியாவிடமே அதிகம் காணப்படுவதாக அமெரிக்கா கருதுகிறது. காரணம் ஜோர்ஜியாவுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்கனவே அப்காசிய மற்றும் தென்ஒசட்டீயா தொடர்பிலான முரண்பாடு உள்ளது. அதனை பலப்படுத்தி ரஷ்யாவுக்கு எதிரானதாக பயன்படுத்த அமெரிக்க முனைகிறதாகவே தெரிகிறது.

எனவே ஜோர்ஜிய மக்களின் போராட்டம் மேற்கு நாடுகளின் நலனுக்கானதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக மேற்குலகமயவாக்கத்திற்குள் பழக்கப்பட்ட ஜோர்ஜிய மக்களது எதிர்ப்புணர்வாகவே போராட்டம் காணப்படுகிறது. மீளவும் ரஷ்யாவுக்கு எதிரான போர்க்களம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் நகரும் அமெரிக்காவுக்கு ஜோர்ஜியா வாய்ப்பினைத் தருமா என்பதே தற்போதைய கேள்வியாகும். அதற்கான நகர்வுகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மூலம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)