சர்வதேச அரசியல் இராஜதந்திரத்தால் நிர்ணயிக்கப்படுவதாகவே தெரிகிறது. மேற்குலகமும் கிழக்குலகமும் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு நகர்வுகளை மேற்கொள்கின்றன. சர்வதேச அரசியலைக் கற்கும் மாணவர்களுக்கு அதிக அனுபவத்தினை ஏற்படுத்தும் காலமாக சமகாலப் போக்கு காணப்படுகிறது. குறிப்பாக சீனா ஜனாதிபதியின் ரஷ்யாவுக்கான மூன்று நாள் விஜயமும் ஸ்பெயின் பிரதமரது இந்திய மற்றும் உக்ரைன் விஜயமும் இராஜதந்திரமாக மட்டுமல்லாது உலக ஒழுங்கின் போக்கினை தெளிவாக கோடிட்டுக் காட்டுகிறது. நாடுகள் மத்தியில் பொருளாதார நெருக்கடி ஒருபக்கம் குழப்பத்தையும் போராட்டங்களையும் ஏற்படுத்த மறுபக்கத்தில் அரசுகளின் தலைமைகள் உலக ஆதிக்கத்தை நிறுவ முயலுகின்ற நகர்வுகளையும் காணமுடிகிறது. இக்கட்டுரை சீன ஜனாதிபதியின் மொஸ்கோ விஜயம் ஏற்படுத்தியுள்ள அரசியலைத் தேடுவதாக அமையவுள்ளது.
கடந்த 21.03.2023 அன்று ரஷ்யாவுக்கு விஜயம் செய்த ஜி ஜின்பிங் ரஷ்ய ஜனாதிபதியுடனான சந்திப்பை மொஸ்கோவிலிருந்து ஆரம்பித்தார். அவர்களது சந்திப்பு சுமுகமானதாக அமைந்தருந்ததுடன் மேற்குலகத்திற்கு எதிராக கூட்டுச்சேர விரும்பம்தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருதலைவர்களது சந்திப்பும் ஏற்படுத்தியுள்ள அரசியல் பொருளாதார இராணுவ முக்கியத்துவத்தினை புரிந்து கொள்வது அவசியமானது.
ஒன்று, மேற்கு-கிழக்கு அரசியல் என்பது ஒரு தசாப்தங்களுக்கு மேலாக நிகழ்ந்துவரும் மோதலாக உள்ளது. இது உக்ரைன்- ரஷ்ய போருக்கு பின்னர் அதிதீவிரம் பெற்றுள்ளது. ஈரோசிய கூட்டானது வலுவடைவதென்பது மேற்குக்கு ஆபத்தானதாகவே உள்ளது. அதாவது சீன -ரஷ்ய கூட்டானது புவிசார் அரசியல் அணியாகவும் அதனை மையப்படுத்திய வளர்ச்சியும் மேற்கின் நலன்களையும் இருப்பையும் அதிக குழப்பத்திற்குள் தள்ளியுள்ளதாகவே தெரிகிறது. உக்ரைன் போர் ஐரோப்பாவின் பொருளாதார சுமுகத்தன்மையை சிதைத்துள்ளது. மேற்கு ஐரோப்பா முழுவதும் ஆட்சிக்கும் ஆட்சியாளருக்கும் எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பிறகண்டங்களை சுரண்டி தமது மக்களை ஆசுவாசப்படுத்தி ஆதிக்கம் செய்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைக்க முடியாது திணறுகின்றனர். அமெரிக்க நலனுக்கும் அதிகார வெறிக்கும் அகப்பட்டுப் போன ஐரோப்பிய ஆட்சியாளர்கள் மக்களின் எழுச்சியையும் எதிர்ப்பையும் கண்டு குழம்பியுள்ளனர். சீனாவும் -ரஷ்யாவும் ஒன்றிணைவதென்பது ஐரோப்பாவை மட்டுமல்ல அமெரிக்காவையும் அதிர வைத்துள்ளது. புவிசார் அரசியல் பலமானது பொருளாதார இராணுவ பலத்தை அதிகரிக்கக் கூடியது. ரஷ்யாவின் விளிம்பு நிலமும் மையநிலமும் எப்போது அரணாக அமையுமென மைக்கிண்டர் இருதய நிலக் கோட்பாட்டை வரையறுக்கும் போதே வடிவமைத்துவிட்டார். தற்போது மையநிலப்பகுதிகள் குழப்பமடையும் போது விழிம்பு நிலங்கள் ரஷ்யாவுக்கு பாதுகாப்பு அரணாகியுள்ளன. உக்ரையின் ரஷ்யாவுக்கும்- ஐரோப்பாவுக்குமான எரிவாயு மற்றும் பெற்றோலிய குழாயை உடைத்துள்ள செய்தியை அமெரிக்காவின் சற்ரலைக்கள் உறுதிப்படுத்திய பின்னர் ரஷ்யாவுக்கும் ஆசிய நாடுகளுக்குமான நெருக்கம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுமே பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை உடைய நாடுகள் என்ற வகையிலும் உலகளாவிய நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் வலுவான நாடுகள் என்ற வகையிலும் தனித்துவமானவையே. அதிலும் மேற்குலகத்திற்கு எதிராக கூட்டுச்சேர்வதென்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியலாகும். இதில் இந்தியாவும் இணையுமாயின் மேற்கின் இருப்பு முழுமையான கேள்வியாகவே அமையும் அதனை கையாளவே, இந்தியாவுக்கு தொடர்ச்சியாக அமெரிக்கர்களும் பிரித்தானியரும் மட்டுமல்லாது தென் கொரியர்களும் ஜப்பானியர்களும் இராஜதந்திர விஜயங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்தியாவின் நகர்வு முழுமையாக மேற்குக்கானதல்ல என்பதை புரிந்து கொள்வது அவசியமானது.
இரண்டு, இரு தலைவர்களது சந்திப்பிலும் முதன்மையானது பொருளாதார ஒத்துழைப்பேயாகும். ரஷ்யா மீதான ஐரோப்பாவினதும் அமெரிக்காவினதும் பொருளாதாரத் தடைகள் சீனாவுடனான பொருளாதார உறவைப் பலப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இரு நாடுகளுக்குமிடையே பலமான புவிசார் அரசியல் இருப்பு புவிசார் பொருளாதாரத்தை சாத்தியமாக்குவதற்கான கட்டமைப்பை கொடுத்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கம் அதிக வர்த்தக உறவையும் பொருளாதார பலத்தையும் தரக்கூடியதாகவே உள்ளது. அது மட்டுமன்றி VISTRO கணக்கிலான வர்த்தகத்தை முதன்மைப்படுத்திவரும் சீனா அதிக வர்த்தக பரிமாற்றத்தை சாத்தியப்படுத்துவதாகவே அமையவுள்ளது. அமெரிக்க டொலருக்கான தேவையை முற்றாகத் தகர்க்கும் செய்முறையாகவே தெரிகிறது.இதற்கான ஆரம்ப செய்முறையை ரஷ்யாவே முன்மொழிந்திருந்ததுடன் இந்திய ரூபாயில் பெற்றோலியத்தை ஏற்றுமதி செய்ய ரஷ்யா முன்வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவின் பெற்றோலியமும் சீனாவின் வர்த்தகமும் பாரிய பொருளாதார மாற்றத்தை தரக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது.
மூன்று, இராணுவரீதியில் இரு நாட்டுக்குமான உறவு ஏற்கனவே பலமானதாக உள்ளது. குறிப்பாக உக்ரையின் போரில் சீனாவின் ஆயுததளபாடங்களின் தேவை ரஷ்யாவுக்கு அவசியமானதாகியுள்ளது. சீனாவின் ஆளில்லாத விமானங்களின் பயன்பாடு முக்கியமானதெனவும் அதி நவீனரகத்தைக் கொண்டது எனவும் தகவல்கள் உண்டு. அது மட்டுமன்றி குறுந்தூர வகை தாக்குதல் ஆயுதங்கள் சீனாவிடமிருந்தே ரஷ்யா பெற்றுக் கொண்டுள்ளதுடன் உக்ரைன் போரில் அத்தகைய ஆயுதங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது என நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.
ரஷ்ய- உக்ரைன் போரை நிறுத்துவதற்கான வரைபென்றை சீனா முன்வைத்த போதும் உக்ரைன் அதனை முற்றாகவே நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மீண்டும் சீனா போரை நிறுத்துவதற்கான அழுத்தங்களை ரஷ்யாவுக்கு கொடுக்க வேண்டும் என அமெரிக்காவின் தேசிய பாதுகப்புச் சபைபின் ஊடகப் பேச்சாளர் ஜான் கெர்பி குறிப்பிட்டுள்ளார். இருந்த போதும் இரு நாட்டுத்தலைவர்களும் உக்ரைன் போர் பற்றிய பேச்சுக்களை நடத்தியதென்ற தகவல் அமைய மறுபக்கத்தில் ரஷ்யா கைப்பற்றிய மரியப்போல் நகரத்தை ரஷ்ய ஜனாதிபதி பார்வையிட்டமையும் அதனை அடுத்து சீனாவின் ஜனாதிபதி ரஷ்யாவுக்கு வருகை தந்ததும் அதிக முக்கியத்துவத்தை போர் பற்றி குறிப்பிடுகிறது. சீன ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் உக்ரைன் போர் பற்றிய தெளிவான புரிதலுடனேயே நகர்கிறதாகவே தெரிகிறது. அதனை புரிந்து கொள்வது அவசியமானது.
நான்கு, இரு நாட்டுத்தலைவர்களது சந்திப்புக்கு அப்பால் ஈரான்- சவுதி அரேபியத் தலைவர்களது உரையாடலும் சந்திப்புக்களும் அதிக கீழைத்தேச அரசியலாக அமைந்துள்ளது. அத்தகைய சந்திப்புக்களுக்கு பின்புலத்தில் சீனாவினதும் ரஷ்யாவினதும் நகர்வே காரணமென தெரியவருகிறது. ஈரான், -சவூதி நாடுகளின் உறவானது மேற்காசியாவில் எஞ்சியிருந்த மேற்கத்தேய உறவும் நெருக்கடிக்குள்ளாகிறதாகவே தெரிகிறது. அவ்வாறே சிரியா ஜனாதிபதி அல் அசாத், ஐக்கிய அரபு குடியரசுக்கு விஜயம் செய்யவுள்ளமையும் மீண்டும் சிரியா அரபுலீக்கில் இணைய வேண்டும் எனவும் IMF கோரியுள்ளது. அதுமட்டுமன்றி ஓமான், ஈரானிய உறவும் பலமடையும் நோக்கில் இராஜதந்திர நகர்வுகள் தொடங்கியுள்ளன. ஓமான் வளைகுடாவில் ஈரான், ரஷ்யா, சீனா இணைந்து போர் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மேற்காசியா அல்லது எண்ணெய்வள நாடுகளது அண்மைய மாற்றங்கள் மேற்குலக அரசியல் நலன்களுக்கு விரோதமானதாகவே நகர்கிறது. இது பற்றிய மேற்கின் உரையாடல் தற்காலிகமான ஒற்றுமை என்றும் விரைவில் உடைந்து போகும் எனவும் கருதப்படுகின்றது. ஆனால் நிரந்தரமான எதிரி நாடுகளை ஒன்றிணைப்பதன் மூலம் மேற்குலக முகம் தெளிவாக தெரியவைக்கப்பட்டுள்ளதாகவே விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். எல்லாவற்றையும் கடந்து கீழைத்தேச நாடுகளின் இருப்பும் பொருளாதார பலமும் உணர்த்தப்பட்டதுடன் அதனூடாக ஒர் அரசியல் வடிவத்தை கட்டமைக்க சீனா, -ரஷ்ய ஆகிய இரு நாடுகளும் முயன்றுவருகின்றன.
ஐந்து, இத்தகைய கீழைத்தேச அரசியலின் இருப்பினை உடைக்கும் சக்தியாக மேற்குலகம் இந்தியாவையே கருதுகிறது. இந்தியாவின் நடுநிலைமையும், அணிசேராமையும், அகிம்சையும் கடந்த காலம் முழுவதும் உலக அரசியலை பலவீனப்படுத்தியதாக தெரிகிறது. அதேநேரம் அத்தகைய கொள்கைகளால் கீழைத்தேசம் பலவீனப்படுத்தப்பட்டதாகவே உணரப்படுகிறது. அத்தகை போக்கிலிருந்து சிலமாறுதல்கள் சமகாலத்தில் ஏற்பட்டாலும் சீனா, இந்தியா,ரஷ்ய கூட்டு பலமானதாக இல்லாதுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 1962 ஆம் ஆண்டு சீன-. இந்திய போர் போன்று மீண்டும் ஒரு போரை அமெரிக்கா ஏற்படுத்த முனைகிறது. ஆனால் அத்தயை முயற்சி முழுமைபெறாதது மட்டுமன்றி அதற்கான உந்துதலை அமெரிக்கா கைவிடவில்லை என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். ஆனால் இலங்கை விவகாரம் இந்திய-, அமெரிக்க உறவில் திருப்தியை கொடுக்காத ஒன்றாக மாறிவருகிறது.
எனவே மேற்குக்கு எதிரான கூட்டின் பலப்படுத்தல்கள் அவ்வப்போது எழுச்சி கொள்வதும் முடிவுக்கு வருவதுமாக அமைந்துள்ளதை காணமுடிந்தது. ஆனால் தற்போது எழுந்துள்ள நிலை சற்று மாறுபட்டது என்பது மட்டுமல்ல தலைமை தாங்கும் நாடுகளாக ரஷ்யாவும் சீனாவும் காணப்படுவதும், அவை முழுமையாக மேற்கு எதிர்ப்புக்குள் செல்வதும் தவிர்க்க முடியாது புதிய உலக ஒழுங்கை சாத்தியப்படுத்த வாய்ப்பு அதிகமுள்ளதாகவே தெரிகிறது. இதில் அரபுலகத்தின் நிலையைவிட இந்தியாவின் போக்கே முக்கியமானது. இந்தியாவின் புவிசார் அரசியல் புரிதல் சாத்தியமான வழிமுறையைத் தரக்கூடியதாகவே உள்ளது. அதனால் மேற்குக்கு எதிரான கூட்டு பலமானதாக மாறுவதற்கான சூழலைக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
