இலங்கை அரசியலில் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாடும் ஐக்கியமும் நீண்டகால அரசியல் நலன்களால் காணாமல் போயுள்ளது. அதனை சரிசெய்யும் நகர்வுகளைவிட முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தும் அரசியல் நிகழ்வுகளே அதிகம் அரங்கேறிவருகிறது. ஆனால் அவ்வப்போது ஒரு சில அரசியல்வாதிகள் இணக்கப்பாட்டை அடைய முயல்வதும் பின்னர் அரசியல் இலாபத்திற்காக கைவிடுவதும் வழமையான அரசியல் நிகழ்வுகளாக பதிவாகி முடிகிறது. 1956 ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சேர்.ஜோன் கொத்தலாவல மொழிரிதீயில் தமிழும் சிங்களமும் சம அந்தஸ்த்துடையதென உரைத்துவிட்டு கொழும்புக்கு திரும்பியதும் தனிச்சிங்களச் சட்டத்தை ஐக்கிய தேசியக்கட்சியும் ஆதரிக்கின்றது என்ற முன்மொழிவை செய்ததை நினைவில் கொள்ளாமல் இருக்க முடியாதுள்ளது. ஆனாலும் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே யாழ்ப்பாணப்பலகலைக்கழக மாணவ தலைவர்களுடன் நடாத்திய உரையாடல் அமைந்துவிடக்கூடாது என்ற நோக்கில் இக்கட்டுரை சில முன்மொழிவுகளை வெளிப்படுத்த முயலுகிறது.
12.03.2023 அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் அனைத்துப பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினருக்கும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சந்திப்பொன்றும் கலந்துரையாடலும் நிறைவாக இரு தரப்பினரதும் ஊடக சந்திப்பொன்றும் நடைபெற்றது. அதன் பிரகாரம் வடக்கு-தெற்கு என இனியும் பிரிந்திருக்காது இணைந்து செயல்பட வேண்டும் என வசந்த முதலிகே தெரிவித்திருந்தமை அதிக கவனத்திற்குரியதாக அமைந்திருந்தது. அனைத்து பல்கலைக்கழக ஏற்பாட்டாளர் முதலிகே மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இந்தவிடயத்தில் தாமும் அதிக அக்கறை செலுத்துவதாகவும் மக்கள் மீது அடக்குமுறைகளையும் ஆக்கிரமிப்புகளையும் மக்கள் விரோத செயல்பாடுகளையும் ஆட்சியாளர்கள் திணித்துவருகின்றனர். இதனால் மக்கள் அதிக நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். அதற்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் போராடும் போதும் போராட்டங்களை அடக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டம் மூலம் போராட்டங்களை அடக்கிவருகின்றனர் என்று குறிப்பிட்ட வசந்த முதலிகே தொடர்டந்து கருத்து வெளியிடும் போது இன்றைய உரையாடலில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டும், சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு உள்ளிட்ட பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார். தமிழ் மக்களது அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வு காணும் வரை அனைத்து பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியம் அவர்களுக்காக போராடும் என்றும் குறிப்பிட்டார்.
இத்தகைய சந்திப்பில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் விஜயகுமார் கருத்துத் தெரிவிக்கும் போது, தமிழரது உரிமையும் உடமைகளும் காணாமல் போகின்றது. வடக்கு கிழக்கில் 200 மேற்பட்ட விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் பௌத்த மயவாக்கம் நிகழ்ந்துவருகிறது. இராணுவ அடக்கு முறையும் வடக்கு கிழக்கில் காணப்படுகிறது. இந்த நிலமைகளை தென் இலங்கைக்கு எடுத்துக் கூறும்படியும் எங்களுக்காக போராடுமாறும் அதன் பின்னர் உங்களுடன் இணைந்து போராடுவது பற்றி பரிசீலிக்க முடியுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமன்றி இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு இனவழிப்பே காரணம் என்பதை அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்திற்கு தெளிவுபடுத்தியதாகவும் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் விஜயகுமார் தெரிவித்தார்.
இத்தகைய கலந்துரையாடல்கள் அவசியமானவையாகவே உள்ளன. பல்கலைக்கழக மாணவர்களே சமூகத்தின் உருவாக்கத்திற்கும் அறிவியலின் பரப்புகைக்கும் உரித்துடையவர்கள். ஒரு நாட்டின் முதுகெலும்பாக பல்கலைக்கழகங்களும் அதன் மாணவர்களும் அவர்களது புத்திஜீவித்தனமுமே அடிப்படையாகத் திகழ்கிறது. பல்கலைக்கழகங்களை தோற்றுவித்த ஐரோப்பியரது சிந்தனையும் அதுவாகவே உள்ளது. மேலைத் தேசங்களின் அறிவியல் மறுமலர்ச்சிக்கு பல்கலைக்கழகங்களே அடிப்படை என்பது போல் கீழைத்தேசங்களில் நிகழவில்லை என்பது கசப்பான உண்மையாகும். சிலவிதிவிலக்குகள் அமைந்தாலும் கீழைத்தேசங்களின் எழுச்சிக்கு பல்கலைக்கழகங்கள் பெரியளவிலான பங்களிப்பினை ஆற்றத்தவறியுள்ளன. இலங்கைப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அரசுக்கு ஆதரவான பல்கலைகக்கழகங்களாக அடையாளப்படுத்தப்பட்டதுடன் இன உணர்வைத் தூண்டும் சிந்தனைகள் வளர்க்கப்பட்டதே அன்றி மறுமலர்ச்சிக்கான தூண்டல் எதனையும் ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. இத்தகைய நிலையிலேயே வசந்த முதலிகே தலைமையிலான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரது வருகை நோக்கப்பட வேண்டியது.
ஒன்று, தென் இலங்கை அரசியல்வாதிகள் போன்று வசந்த முதலிகேயின் உத்தரவாதங்கள் போலியான வார்த்தைகளாக அமைந்துவிடக் கூடாது. கடந்த காலங்களிலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைமைகளது வருகைகளும் உத்தரவாதங்களும் அவ்வாறானதாகவே அமைந்திருந்தன. அத்தகைய போலிவார்த்தைகளிலிருந்து விடுபட அனைத்து பல்கலைக்கழக ஒன்றிய மாணவர்கள் தயாராக வேண்டும். உண்மை நிலையை கண்டறிய வேண்டும். மாணவர்கள் மட்டுமல்ல போராசிரியர்களும் விரிவுரையாளர்களும் அத்தகைய புரிதலுக்குள் உட்படுத்தப்பட வேண்டும். தமிழ் மக்கள் 1979 ஆண்டு முதல் இராணுவச்சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள் வாழ்கின்றனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது தான் பயங்கரவாத தடைச்சட்டம் தென் இலங்கையை தாக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழர் அதற்குள் வாழ்கிறார்கள் என்பதை தென் இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு ஆட்சியாளர்களையோ ஆட்சிகளைப் பற்றியோ குறைகூறுவதைவிடுத்து அரச இயந்திரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற புரிதல் அவசியமானது. தமிழருக்கு எதிராக இழைத்த கொடுமைகளைத்தான் ஜே.வி.பி.க்கும் எதிராக 1970 களிலும் 1990 களிலும் அரச இயந்திரம் மேற்கொண்டது. 2009 களுக்கு பின்னர் மீளவும் சிங்கள் இளைஞர்களை இலக்குவைத்து செயல்பட ஆரம்பித்துள்ளது. துயரம் என்னவெனில் அடக்கு முறைக்குட்பட்ட அல்லது புரட்சிகரமானது என் கூறிக் கொண்ட ஜே.வி.பி.யினரே வடக்கு கிழக்கு எதிரான அரசியலிலும் ஆயுதப்போரிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதாகும் அதனையே இடதுசாரிகள் எனக்கூறிக் கொண்டவர்களும் செயல்படுத்தியிருந்தனர். தென் இலங்கையிலுள்ள அனைத்து புரட்சிவாதிகளும், சோஸலிஸ்டுகளும், மதவாதிகளும், தாராள-ஜனநாயகவாதிகளும் தமிழர்களுக்கு எதிரானவர்களாகவே தம்மை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழர்களுக்கான அதிகாரத்தை வழங்க மறுப்பதுடன் அவர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடனேயே செயல்படுகின்றனர். தமிழர்கள் இலங்கைத் தீவில் சிங்களவர்களுக்கு சமமானவர்களாக வாழ்வதற்கான உரிமையை மட்டுமே கோருகின்றனர். இத்தகைய கோரிக்கையை நிராகரித்தே பாரியவிலான படுகொலைகளையும் அழிவுகளையும் தமிழருக்கு எதிராக அரச இயந்திரம் நிகழ்த்தியுள்ளது. எனவே மாற்றப்பட வேண்டியது அரச இயந்திரமே அன்றி ஆட்சி முறைகளே ஆட்சியாளர்களோ இல்லை. சிங்கள-பௌத்த மேலாதிக்க அரசு மாற்றப்பட வேண்டும். அப்போதே இலங்கைத் தீவில் இனங்களுக்கிடையிலான முரண்பாடும் மோதலும் முடிபுக்குவரும். அதற்கான முதல்படியாக சிங்கள புத்திஜீவியும் பாளிமொழிப் புலமையாளரும் இலங்கையின் தொல்பொருள்துறைத் தலைவராக இருந்தவருமான கலாநிதி ஈ.டபிள்யூ. அதிகாரம் 1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொலையைக் கண்டு ‘இத்தகைய பெரும் துயரம் இனிமேல் மீண்டும் மீண்டும் நடைபெறாது இருக்க வேண்டுமென்றால் ஒரு பிரதியைக் கூட மிஞ்சவிடாது தீயிட்டுக் கொளுத்த வேண்டும்’ என்றார். அதுவே சிங்கள அரச இயந்திரமாக பாதுகாக்கப்படுகிறது.
இரண்டு, எப்போதும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர்களது செயல்பாடு காத்திரமானதாவே அமைந்திருக்கிறது. கடந்த போராட்டகாலம் முழுவதும் பல்கலைக்கழக மாணவர்களது பங்கும் செயல்பாடும் தனித்துவமானது. அரசியலுடன் கொண்டுள்ள ஈடுபாடும் கரிசனையும் அதனை சரியான கருத்தியலுடன் நகர்த்த வேண்டும் என்ற அவாவும் அவர்களிடம் காணப்படுவது வழமையான அம்சமாகும். ஆயுதப் போராட்டத்துடன் மட்டுமல்லாது அகிம்சைப் போராட்டத்திலும் சமூகத்துடனான ஈடாட்டமும் சமூகமயவாக்கமும் அவர்களுக்குரிய அறிவின் முதர்ச்சியாக அமைந்திருந்தது. அக்காலத்தில் தாம் கற்றவற்றை சமூகத்திறகுள் கொண்டு செல்வதிலும் அதன்மூலமாக நாட்டுக்கு பங்காற்றவும் உழைத்தவர்களாக காணப்பட்டனர். மருத்துவம், கலை, விஞ்ஞானம்,முகாமைத்துவம் என்ற வேறுபாடின்றி அறிவினை நோக்கியும் போராட்டம் நோக்கியும் மாணவர்கள் நகர்ந்தார்கள். அனைத்து பீடமாணவர்களும் ஒன்று சேர்ந்து பெரும் போராட்டங்களை செய்துமுடித்தவர்கள் என்ற தகமையை கொண்டவர்களாக காணப்பட்டனர். கைலாசபதி கலையரங்கமே ஒய்வின்றி உரைகளாலும் கருத்து சமர்களாலும் களமாக காட்சியளித்துக் கொண்டே இருக்கும். புலமையாளர்களும் மாணவர்களும் அறிவுச்சமரால் திளைத்துக் கொண்டிருப்பார்கள். 2009 களுக்கு பின்னர் இவற்றையெல்லாம் துலைத்துவிட்டதாகவே தெரிகிறது. மாணவர்களும் அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக மாறிவிட்டதாவும் புலம்பெயர்ந்த சமூகத்திலுள்ள சில நபர்களால் கையாளப்படுவதாகவும் பெரும் விமர்சனம் சமூகமட்டத்திலும் பல்கலைக்கழக மட்டத்திலும் காணப்படுகிறது. சில தூதரகங்களின் விருப்புக்கு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் பொது வெளியில் உண்டு. ஆனால் அவற்றை எல்லாம் பலவீனப்படுத்தும் நகர்வுகள் நிகழ்ந்து கொண்டே இருகிறது.வடக்கு கிழக்கு தாயகம் எனும் போராட்டம் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களது கூட்டு முயற்சியாக அமைந்திருந்தது. அவ்வாறே தூதுவர்களை சந்திப்பதும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுடனான உரையாடலிலும் தெளிவான வெளிப்படுத்தல்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால் இன்னும் இத்தகைய விடயங்களில் அவதானிப்பும் செயல்பாடும் அதிகரிக்க வேண்டும். அறிவுபூர்வமான ஈடுபாடும் உணர்வுக்கு முக்கியம் கொடுக்காத அறிக்கைகளை வெளியிடுவதனையும் கருத்துக்களை தெரிவிப்பிலும் கவனம் கொள்ள வேண்டும். சமூகத்துடனான உறவினை பலப்படுத்துவதுடன் ஒவ்வொரு அசைவையும் பல்கலைக்கழக சமூகம் சார்ந்தும் அறிவுபூர்மாகவும் மேற்கொள்ள முனைதல் வேண்டும். அதுவே தென் இலங்கைக்கும் உலகத்திற்குமான செய்தியாக அமையும்.
எனவே தென் இலங்கை மாணவ பிரதிநிதிகளுடான உரையாடலானது அவசியமானது. இதன் மூலம் தமிழ் மக்களது நிலையை தெளிவுபடுத்துவதுடன் அதற்கான எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கே உரியதாகும். அரசியல் கட்சிகளும் அதன் உறுப்பினர்களும் தமது நலனுக்குட்பட்ட செயல்பாடுகளோடு நகரும் போது சமூக மட்டத்திலும் மக்களுடனும் அவர்களது அபிலாசைகளை வெளிப்படுத்துவதிலும் மாணவர்கள் கவனம் கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தையும் அறிவுபூர்வமாக மேற்கொள்வதே பொருத்தமானது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் முன்னோடிகள் அறிவுபூர்வமாக போராட்டங்களை நகர்த்தியவர்கள். அதுவே தமிழர் அரசியல் பரப்புக்கு அவசியமானது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

