அரசியல் கட்டுரைகள்

ரஷ்சியாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ-பொருளாதா போர் உத்தி திணறுகிறதா?

ரஷ்சியா-உக்ரையின் போர் உலகளாவிய அரசியல் பொருளாதார இராணுவ போக்கினை மட்டுமல்லாது அதன் கட்டமைப்பக்களையும் மாற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறது. புதிய நட்புக்களும் எழுச்சிகளும் வலுவடைய பொருளாதார இயங்குவிசையும் மாற்றத்திற்கு உள்ளாகிறது. அதே நேரம் உக்ரையினது போர் உத்திகள் ரஷ்சியாவின் எல்லைகளுக்குள் நகரத் தொடங்கியுள்ளது. அது பற்றிய செய்திகளை ரஷ்சியாவே முதன்மைப்படுத்தி வருகிறது. கிரம்ளின் மீதான தாக்குதல் முயற்சி இராணுவ பிரிவுகள் மீதான தாக்குதல் நகர்வு என பலவிடயங்களில் அமெரிக்கா உக்ரையினுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளதாக ரஷ்சியா குற்றம்சாட்டிய போதும் அமெரிக்கா மறுத்துவருகிறது. மேற்குலக நாடுகளின் நவீன ஆயுததளபாடங்களுடன் உக்ரையின் படைகள் நகர்வதாக கூறினாலும் பாரிய மாற்றத்தினை இராணுவ எல்லைகளில் ஏற்படுத்தவில்லை. இக்கட்டுரையும் போருக்கான ரஷ்சியாவின் பிந்திய நடவடிக்கைகளை தேடுவதாக உள்ளது.

ரஷ்சியாவுக்கு இயல்பாகவே நட்பு நாடுகளும் அணிகளும் உண்டு எனக்குறிப்பிடும் ரஷ்சிய பாதுகாப்பு கவுண்சிலின் பிரதி தலைவரான திமுத்தி மொடோவ் ஆசியான், ஆசியான் பிளஸ் என்பன ரஷ்சியாவின் நட்பு அணி எனகிறார். நேட்டோவினது திட்டமிட்ட விஸ்தரிப்பே ஆசிய-பசுபிக் பிராந்தியம் நோக்கிய நகர்வென்றும் அதன் அங்கமாகவே ஆக்காஸ், குவாட் போன்ற அமைப்புக்களது நடவடிக்கை எனவும் குறிப்பிடுகின்றார். அதாவது மேற்கு நாடுகளது விஸ்தரிப்புக் கொள்கையே குவாட் போன்ற அமைப்புக்களது வருகை எனக்குறிப்பிடுகின்றார் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மோடோவ். ஏற்கனவே ஓபெக் பிளஸ் கட்டமைப்பையும் ஓபெக்கையும் செல்வாக்குக்குள் உட்படுத்திய ரஷ்சியா தற்போது ஆசியானுடனான பொருளாதார உறவை விரிவாக்கத் திட்டமிடுகிறது. ஆசிய-பசுபிக் மீதான மேற்குலகத்தின் ஆதிக்கத்தை முடிபுக்குக் கொண்டுவர முயலும் சீனாவுடன் கைகோர்த்துள்ள ரஷ்சியா அமெரிக்காவையும் அதன் நலன்களையும் ஆசியப் பிராந்தியத்திற்குள் தோற்கடிக்க திட்டமிடுகிறது.

ரஷ்சியாவின் அண்மைய நகர்வுகளில் பிரதானமானதாக அமைந்திருப்பது சீனாவுடனான நெருக்கமாகும். 24.05.2023 அன்று சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்சியப் பிரதமர் மைக்கல் மிஷிஸ்டின் இரு நாட்டுக்குமான வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார். அத்துடன் விளையாட்டு மற்றும் பொருளாதார முதலீடு பற்றிய உடன்பாடுகளிலும் இரு நாட்டுப் பிரதமர்களும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ரஷ்சியாவை நோக்கி அதிகரிக்கு சந்தர்ப்பத்தில் ரஷ்சியப் பிரதமரது சீன விஜயம் நிகழ்ந்துள்ளது. சீனாவுக்கு மேற்குலம் அதிக எச்சரிக்கையை மேற்கொண்ட போதும் சீன-ரஷ்சிய உறவு வலுவானதாக மாறிவருவதுடன் பொருளாதார மற்றும் இராணுவ விடயங்களில் இரு நாட்டுக்குமான நெருக்கம் அதிகரித்து வருகிறது.

ஆட்டிக் கடலை அண்டிய பகுதிகளில் ரஷ்சியாவின் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்களது நடமாட்டம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்சியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதியை அண்டி ஆபத்து நேரலாம் என ரஷ்சியாவின் பாதுகாப்பு தரப்பு கருதுவதாகவும் ரஷ்சியா மீது தாக்குதல் நிகழ்த்துவதற்கான நிலை மேற்குலக நாடுகளால் அதிகரித்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் தனது அணுவாயுதக் கப்பல்களை ஆட்டிக் கடற்பகுதியில் அதிகரித்துள்ளதுடன் நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. இதன் மூலம் ரஷ்சியாவின் நிலப்பரப்பை நோக்கி இராணு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என ரஷ்சியா கருதுவதுடன் அதனை மேற்கு நாடுகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

உக்ரையினின் கிழக்குப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்படும் நடவடிக்கையை உக்ரையின் ஆரம்பித்துள்ளது. ரஷ்சியாவின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் டொனெட்ஸ்க் பகுதியிலிருந்து மக்களை உக்ரையின் வெளியேற்றி வருகிறது. இது இப்பகுதி ரஷ்சியாவின் தாக்குதலுக்கு மட்டுமல்லாது ஆக்கிரமிப்புக்குள்ளும் அகப்படப் போகிறதென்ற நிலையையே காட்டுகிறது. இது தொடர்பில் மேற்கு ஊடகங்கள் அதிகம் மௌனம்சாதிப்பதாகவே தெரியவருகிறது. ரஷ்சிய இராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் கீவ் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. ரஷ்சியாவின் ஏவுகணைத் தாக்குதலால் மேற்குலகத்தின் ஆயுததளபாடங்கள் தாக்குப்பிடிக்க முடியாது உக்ரையின் இராணுவம் திணறுவதாக தெரியவருகிறது. களமுனை இருதரப்புக்கும் ஆபத்தானதாக அமைந்துள்ள போதும் ரஷ்சியாவின் கை ஓங்கியுள்ளதாகவே தெரியவருகிறது. ஆனால் மேற்குலகத்தைப் பொறுத்தவரை ரஷ்சியா மீதான போரை தீவிரப்படுத்த முனைகிறது. வெளிப்படையாக அமெரிக்கா உக்ரையின்-ரஷ்சியப் போரை நிகழ்த்துகிறது. இப் போரினல் ஈடுபட்டுள்ள இரு தரப்பினதும் பிந்திய நிலையை புரிந்து கொள்வது அவசியமானது.

ஒன்று, அமெரிக்கா இப் போரை கிரம்ளின் நோக்கி கொண்டு செல்ல முனைகிறது. காரணம் போர் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை மேற்குலகத்திற்கு கொடுக்கத் தவறியுள்ளது. குறிப்பாக ரஷ்சியாவின் பொருளாதாரம் முழுமையாக சரிவடைந்துவிடும் என எதிர்பார்த்த அமெரிக்காவுக்கு அத்தகைய இலக்கு முழுமையாக தோல்விகண்டுள்ளதாகவே அமெரிக்க பொருளியல் பேராசிரியர் வோல்ப் குறிப்பிடுகின்றார். அமெரிக்கா அவ்வாறு எடுத்த முடிபு தவறானது எனவும் அவர் அமெரிக்காவையும் அதன் முதலாளித்துவ அணுகுமுறையையும் விமர்சனம் செய்கிறார். அதனால் அமெரிக்கா தற்போது போரை ரஷ்சியாவின் பிரதான நிலத்தை நோக்கி நகர்தும் நடவடிக்கையில் தயாராகிக் கொண்டு வருகிறது. அதற்காக புதிய நாசிகளது எழுச்சி பற்றியும் ரஷ்சியாவுக்குள் ஜனாதிபதி புடினுக்கு எதிரான இராணுவ அணி உருவாகியுள்ளதாகவும் செய்திகளை பிரச்சார நோக்கில் மேற்கொண்டு வருகிறது. ரஷ்சியாவுக்குள் அமெரிக்கா மற்றும் உக்ரையின் கூட்டுத்த தாக்குதல்களை புடினுக்கு எதிரான அணி நிகழ்த்துவதாக கூறிக் கொள்ள முயலுகிறது. அது ரஷ்சிய மக்களையும் ஆட்சியாளரையும் முரண்பாடடையச் செய்வதுடன் ரஷ்சிய இராணுவத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறது. அதனை ஒரு வகை பிரச்சார உத்தியாகக் கொண்டு அமெரிக்காவும் மேற்கு நாடுகள் செயல்படுகின்றன. புதிதாக நாசிப்படைகளது எழுச்சி பற்றி ஆரம்பத்தில் ரஷ்சியர்கள் முதன்மைப்படுத்தியது போல் இரண்டாம் உலக வெற்றி விழாவிலும் புடின் உக்ரையின் மீதான போரை நியாயப்படுத்த பயன்படுத்திக் கொண்டார். அதனை அமெரிக்காவும் தற்போது பயன்படுத்துவதாக பிபிசி செயட்திச் சேவை குறிப்பிடுகிறது. அதாவது ரஷ்சியாவுக்குள் நாசிகளது எழுச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா குறிப்பிடுவது ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் அதனால் உக்ரையின் மீதான போரை ரஷ்சிய தனது மக்களிடம் புடின் எடுத்துச் செல்ல இலகுவான வழியாக உள்ளதென பிபிசி மேலும் குறிப்பிடுகிறது. ஆனால் உக்ரையின் நிலப்பரப்பில் பொருமளவுக்கு ரஷ்சியாவுக்கு எதிரான போரை அமெரிக்க உட்பட்ட மேற்கு நாடுகளது விசேட இராணுவ அணியே நிகழ்த்துவதாகவும் அத்தகைய தரப்பில் நாசிகள் அணியொன்று கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உண்டு. அதாவது இரு தரப்பாகவும் ரஷ்சியாவுக்கு எதிரான இராணுவ பிரிவுகள் காணப்படுகின்றன. மேற்குலக நாடுகளது இராணுவ அணிகளை விசேட தாக்குதல் அணியாக மேற்கு கட்டமைத்து ரஷ்சியாவுக்கு எதிராக போரை நிகழ்த்துகிறது. அத்தகைய அணியிடமே ஆயுததளபாடங்கள் மேற்கு வழங்குவதாகவும் முன்னரங்குகளில் விசேட அணிகள் தாக்குதல் நிகழ்த்துவதாகவும் தகவல் உண்டு. அவ்வாறே நாசிப்படைகளது அணியொன்றின் உருவாக்கத்தை உக்ரையின் இராணுவப் பிரிவிலிருந்து கட்டமைத்து தாக்குதல் அணியாக உக்ரையின் நகர்த்துவதாக தெரியவருகிறது. ஏறக்குறைய மேற்கு நாடுகளின் விசேட தாக்குதல் அணி, உக்ரையின் இராணுவம் மற்றும் நாசிப்படையணி என மூன்று வலுவான தரப்பு களத்தில் போர் புரிவதாக தெரியவருகிறது. இதற்கு பதிலளிக்கும் ரஷ்சியாவும் முன்னரங்குகளில் போரிடுவதற்கு விசேட படைப்பிரிவொன்றை நிறுத்தியுள்ளது. அதன் நகர்வுகளிளையும் குழப்பும் விதத்தில் அமெரிக்கா அதிக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அத்தகைய பிரிவுக்கு போதிய ஆயுததளபாடங்களை ரஷ்சிய இராணுவம் வழங்குவதில்லை எனவும் போதியளவு வினியோகம் இல்லை எனவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. முழுமையாக அவதானிக்கும் போது ஆளில்லாத விமானங்களது தாக்குதல் ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் தினியான அல்லது விசேட படைப்பிரிவுகளான விசேட படைப்பிவுகள் உக்ரையின்-ரஷ்சியப் போரை நகர்த்துகின்றன. அது மட்டுமன்றி இருதரப்பினது தாக்குதலிலும் ரஷ்சியத் தரப்பின் ஏவுகணைத் தாக்குதல்கள் போரின் வடிவத்தை நிர்ணயிப்பதாக தெரிகிறது.

இரண்டு, உக்ரையஜின் ஜனாதிபதி ஜெலன்கியின் உலகளாவிய பிரச்சாரம் ரஷ்சியாவை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதற்கான நகர்வாகவே தெரிகிறது. குறிப்பாக ஜி-7 நாடுகளில் ரஷ்சியாவுக்கு எதிரான போரை மேற்கொள்ள ஆயுதங்களையும் நிதியையும் வழங்க கோருகின்ற செய்முறையை காணப்படுகிறது. மறுபக்கத்தில் அரபு மகாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் ரஷ்சியாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது. ஒபெக், ஒபெக் பிளஸ் மற்றும் அரபு நாடுகளுடனான ரஷ்சியாவின் பொருளாதார உறவு அதனை பாதுகாப்பதாகவே மேற்கு நாடுகள் கருதுகின்றன. எனவே இதனை தோற்கடித்தால் ரஷ்சியாவை போரில் வெல்ல முடியுமென அமெரிக்கா கருதுகிறது. ஆனால் இதற்கு எதிர்வினையாற்றும் ரஷ்சியா தனது எண்ணையை இந்தியாவுக்கூடாக மேற்குக்கு ஏற்றுமதி செய்து வருகிறதென்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏறக்குறைய 2.5 மில்லியன் பீப்பாய்களை இந்திய ஒரு நாளுக்கு ஏற்றுமதி செய்வதாக தகவல்கள் உண்டு. குறிப்பாக உக்ரையின்-ரஷ்சிய போருக்கு பின்னர் இத்தகைய அதிகரிப்பு நிலவுவதாகவும் இதில் கணிசமானவற்றை ஐரோப்பிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்வதாகவும் தெரியவருகிறது.

எனவே ரஷ்சியா மீதான இராணுவ பொருளாதார நகர்வுகள் பெரும் நெருக்கடிக்குள்ளே காணப்படுகிறது. ஆனால் உக்ரையின்-ரஷ்சியப் போரினால் ஐரோப்பாவும் உலகமும் அதிக குழப்பத்திற்குள் அகப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட்ட மேக்கினது உத்திகள் ரஷ்சியா பொறுத்து முழுமையான வெற்றியை எட்ட முடியாதுள்ளது. முதலாளித்துவத்தின் இடமாற்றம் வேகமாக நகர்ச்சி பெறுகிறது. முதலாளித்துவம் சில தீர்மானங்களை எடுக்கு நிலையையே உலகம் எதிர்கொள்கிறது. உக்ரையின்-ரஷ்சியப் போரின் விளைவே முதலாளித்துவத்தின் புதிய திசையாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)