அமெரிக்க டொலரின் வீழ்ச்சி பற்றிய விவாமும் உலகளாவிய பொருளாதார போட்டியும்
சர்வதேச அரசியலானது நாடுகளது நலன்களை நிறைவு செய்வதற்கான போட்டிக்களமாகும். வெளிப்படையாக அரசியல் நகர்வுகள் அடையாளப்படுத்தப்பட்டாலும் உள்ளார்ந்த ரீதியில் பொருளாதாரம் மற்றும் நாடுகளது அபிவிருத்தி அடிப்படையானதாக அமைந்திருக்கும். சர்வதேச அரசியல் அதிகாரத்திற்கானதாக அமைந்தாலும் அதன் மூலக்கூறாக பொருளாதாரமே காணப்படுகிறது. அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரத்தை நாடுகள் வல்லரசுகள் முன்னிறுத்திக் கொள்கின்றன. முன்னாள் சோவியத் யூனியனது வீழ்ச்சிக்கு பொருளாதாரத்தில் ஏற்பட்ட பலவீனமே அடிப்படைக் காரணமாகும். பொருளாதார பலமே இராணுவத்தினை கட்டிவளர்க்கும். அத்தகைய இராணுவம் பொருளாதார சுரண்டலையும் ஆதிக்கத்தையும் பாதுகாக்கும். அரசியல், பொருளாதாரம், இராணுவம், இராஜதந்திரம் மற்றும் போர்கள் ஒன்றுடன் ஒன்று பிணைப்பினைக் கொண்டவை. ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்க முடியாது. ஒன்று இன்னொன்றுக்கு உறுதுணையானது. இன்றைய உலக ஒழுங்கிலும் அத்தகைய போட்டி நாணயப் போர்களினாலும் நிலவுகிறது. இதில் ஆயுதப் போரைக் போன்றே நாடுகளுக்கிடையிலான நாணயப் போர் நிலவுகிறது. இக்கட்டுரையும் டொலருக்கு எதிராக நாணப் போர் ஒன்றின் போக்கினை தேட முயலுகிறது.
நாணயங்களுக்கிடையிலான போர் என்பது பொருளாதார ஆதிக்கத்திற்கான எழுச்சியாகவே உள்ளது. ஒரு நாட்டின் நாணயம் உலக நாணயமாக விளங்குவது உலகளாவிய பொருளாதாரத்தின் கட்டுப்பாடு அந்த நாணயத்திற்கு உரியதாகவே அமையும். அத்தகைய தனித்துவத்தை டொலர் மட்டுமே கொண்டுள்ளது. டொலரின் வரலாறு 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலப் பகுதியில் நிகழ்ந்தது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிலின் ரூஸ்வெல்ட் மார்ச் 9 1933 இல் அவசரகால வங்கி சட்டத்தைக் (Emergency Banking Act) கொண்டுவந்தார். இதன் மூலம் அமெரிக்க மக்களிடமிருந்த தங்கத்தை கபளீகரம் செய்து கொண்டு டொலர் நோட்டுக்களை வழங்கினார். இதனை ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் தங்கக் கொள்கை என்றும் தங்க கொள்வனவுத் திட்டமிடல் என்றும் அழைப்பார்கள். இது உள்நாட்டில் அமைய உலகளாவிய ரீதியில் முதலாம் உலகப் போர் தங்கத்தை பரிமாற்றம் செய்வதில் அதிக நெருக்கடியை சந்தித்ததுடன் தங்கத்திற்கு பதிலாக நாணய தாள்களை பரிமாற்றும் நிலையை உருவாக்கியது. அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம் தங்கத்தை பெற்றுக் கொண்டு நாணயத்தாள்களை டொலரில் வழங்கியது. இதனால் அமெரிக்கா அதிக தங்கத்தை கொணடுள்ள நாடாக மாறியது. போருக்கு பின்னர் அமெரிக்க நட்பு நாடுகள் தங்கள் நாணயங்களை டொலருடன் இணைத்தனர். இதனால் தங்கத்தின் தரம் குறைவடைந்து டொலர் உயரத் தொடங்கியது. இதற்கு சர்வதேச நாணய நிதியம் பிரதான காரணமாக அமைந்தது. அது தனது உலகளாவிய கையிருப்பை டொலரூடாகவே மேற்கொண்டது. இது எண்ணெய்வளப் பாவனை தொடங்கிய போது முழு ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும் டொலரூடாகவே எண்ணைக் கொள்வனவை சாத்தியப்படுத்த ஆரம்பித்தது. அதன் போது டொலர் மேலும் வலுவடையத் தொடங்கியது. இதுவே டொலரின் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பரிமாணம் ஏற்பட காரணமாகியது. தற்போது அனைத்து உலகளாவிய வர்த்தகமும் டொலர் மூலமே நிகழ்கிறது. இவ்வாறு அமெரிக்க நாணயம் உலகளாவிய வலுவுக்கு அடிப்படையில் நாணயக் கொள்கை மட்டுமல்ல அரசியல் இராணுவ இராஜதந்திர மூலோபாய உத்திகளும் காரணமாகும். இரண்டாம் உலக போருக்கு பின்னர் அமெரிக்கா முன்னெடுத்த மாஷல் திட்டம் டொலரை ஐரோப்பாவுக்குள் முழுமையாக உறுதிப்படுத்த உதவியது. ஐரோப்பிய நாடுகளை மீளக்கட்டியெழுப்புதல் என்ற அடிப்படையில் டொலர் ஐரோப்பிய நாடுகளின் உலகளாவிய நாணயமாக மாறியது.
தற்போது எழுச்சி பெற்றுவரும் உலகளாவிய ஒழுங்கும் பொருளாதார கட்டமைப்பும் அமெரிக்க டொலரை முடிபுக்கு கொண்டுவர திட்டமிடுவதாகவே உணரப்படுகிறது. காரணம் அமெரிக்காவின் வீழ்ச்சி என்பது பொருளாதார வீழ்சியிலேயே தங்கியுள்ளதாக கருதும் உலகளாவிய ஒழுங்கு டொலரை வீழ்த்துவதன் ஊடாகவே அமெரிக்கப் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு தள்ளலாம் என கணிப்பிடுகிறது. காரணம் பொருளாதாரமாக அமெரிக்கா வீழ்த்தப்பட்டால் மட்டுமே அதன் அரசியல் இராணுவ பலம் வீழும் என்ற தகவல் நியாயமானதாகவே தெரிகிறது. ஆனால் இருதய நிலக் கொள்கையை வரைந்த மைக்கிண்டர் அமெரிக்காவின் பலம் அதன் Grate spaceஇல் தங்கியுள்ளது என்றார். ஆனாலும் தற்போதும் அமெரிக்கப் பொருளாதாரமே இலக்கம் ஒன்றிலுள்ளது. இரண்டாவது நிலையில் சீனாவும் மூன்றாவது நிலையில் ஐரோப்பிய யூனியனும் காணப்படும் போது இந்தியா ஐந்தாவது நிலையிலுள்ளது. ஆனால் இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடாக விளங்குகிறது. இந்தச் சூழலில் டொலரை வீழ்த்துவதற்கான உபாயங்களை விளங்கிக் கொள்வது பொருத்தமானதாக அமையும்.
முதலாவது, பிறிக்ஸ் நாடுகளது எழுச்சி பிரதான சவாலாக அமைந்துள்ளது. அந்த நாடுகளது உலகளாவிய பொருளாதார பலம் 25 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தை பிறிக்ஸ் அமைப்பு கொண்டுள்ளது. அது பிறேசில், ரஷ்சியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்காவையும் உள்ளடக்கியது. இது மேலும் விரிவாக்கம் பெற தயாராகிவருகிறது. இவ் அமைப்பு புதிய நாணயம் ஒன்றினை அறிமுகம் செய்ய திட்டமிடுவது தெளிவாகவுள்ளது. காரணம் இன்றைய பொருளாதாரம் வர்த்தகத்திலும் சந்தைச் சக்திகளிடமே தங்கியுள்ளது. அதனால் டொலரைக் கைவிட்டு புதிய நாணயத்தை சாத்தியப்படுத்தினால் அதன் மூலம் நிகழ்த்தப்படும் வர்தகம் டொலருக்கு நெருக்கடியைத் தரும் என்ற கணிப்பீடு சரியானதாகவே தெரிகிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் பலமானது கீழைத்தேச நாடுகளிலேயே தங்கியுள்ளது என Matthew Klein தனது நூலொன்றில் குறிப்பிடுகின்றார். அவரது Trade war are Class warச (2020) என்ற நூலில் நாடுகள் குழப்பமடைந்துள்ளன எனவும் சர்வதேச வர்த்தகமும் மூலதன உருவாக்கமும் உறுதியற்ற நிலையில் உள்ளது எனக் குறிப்பிடுகிறார். இதனையே றிச்சட் வெல்ப் முதலாளித்துவம் ஆசியாவை நோக்கி நகர்வதாக விவாதிக்கின்றார். கெலினது குழப்பம் பற்றிய விவாதமும் வெல்ப்ன் புதிய பரிமாற்றமும் ஒரே கருத்தினைத் தருகிறது. அதாவது முதலாளித்துவம் தனது நிலையிலிருந்து மாற்றம் பெற்றதாக விவாதிக்கப்படவில்லை. மாறாக முதலாளியம் தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளது. அல்லது மாற்றத்திற்கான நகர்வுகள் நிலவுகிறது என்றே வெல்ப் குறிப்பிடுகிறார். இந்த சூழலிலே டொலருக்கான நெருக்கடி நிகழும் என்பது வெல்ப்ன் கருத்து. ஆனால் அனேக மேற்கு உலக ஆய்வுகள் டொலரின் வீழ்ச்சியை நிராகரிக்கின்றன. அதற்கான அடிப்படை முகாந்திரம் ஏற்படவில்லை என குறிப்பிட முயலுகின்றனர். ஆனால் பிறிக்ஸ்ன் நாணயம் வலுவான வர்தகத்தையும் சந்தையையும் சாத்தியப்படுத்த முயலும். அதனிடம் ஒரு அரசியல் போட்டியும் டொலருக்கு எதிராக உண்டு. அது அமெரிக்காவின் உலகளாவிய அரசியல-இராணுவக் கொள்கை சார்ந்தது. இதில் அமெரிக்கா தரப்பில் ஐரோப்பாவும் மறுபக்கத்தில் இந்தியாவுமே முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்திகள் என்ற உரையாடலும் வலுவானதாக அமைந்துள்ளது.
இரண்டாவது, டொலருக்கு எதிரான முழுமையான மாற்றீடு ஏற்படுவதற்கு முன்னரே இந்தியா, சீனா, ரஷ்சியா தமது நாணயத்தில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இது டொலருக்கான தோல்வி என்றே வெல்ப் குறிப்பிடுகின்றார். இந்த நாடுகள் கடந்த தசாப்தங்களில் டொலரூடாகவே வர்த்தகத்தை மேற்கொண்டிருந்தன. அதனை தற்போது டொலர் இழந்துவிட்டது என்கிறார். குறிப்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ள நாணய மோதலே அதிக பாதிப்பாக அமைய வாய்ப்புள்ளது. இதனை வெற்றி கொள்ளும் உத்தியிலேயே பிடன் நிர்வாக முனைப்புக்காட்டி வருகிறது. ஆனாலும் இந்தியாவின் உத்தி வேறுவிதமானதாக அமைந்து;ளளது. இந்தியா மென் அதிகாரத்தையும், புவிசார் அரசியலையும், புவிசார் பொருளாதாரத்தையும் சாதகமான நியதிக்குள் நகர்த்த முனைகிறது. அதனையே இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்படுத்தி வருகிறார். இது அமெரிக்காவுக்கு எதிரான அணிக்கு இலாபகரமானதாக அமைவதுடன் எதிர்காலத்தில் இந்தியாவினது எழுச்சி தவிர்க்க முடியாததாக அமையும் என்ற விவாதம் இல்லாமிலில்லை. ஆனால் சீனா இந்தியாவைவிட இருபது மடங்கு அதிகமான வளர்ச்சியை அனைத்துத் துறைகளிலும் கொண்டுள்ளது.
எனவே, டொலருக்கு எதிரான போட்டி தெளிவான வடிவத்தை பெறாத நிலையிலேயே சில தீர்மானங்கள் எடுக்கப்படுகிறது. பூகோளப் பொருளாதாரத்தில் டொலருக்கு மாற்றீடு முன்வைக்கப்படாத நிலையில் அதனைத் தோற்கடிப்பது கடினம் என்ற விவாதம் முறியடிக்கும் விதத்திலேயே புவிசார் பொருளாதாரத்தின் எழுச்சி சாத்தியமாகியுள்ளது. அது மட்டுமன்றி பூகோளமயவாக்கம் தோல்வியடைந்தள்ள நிலையில் பூகோளப் பொருளாதாரமும் முடிபை நோக்கி நகர்வதாகவே கருதப்’படுகிறது. எனவே இவை அனைத்தும் பாரிய நெருக்கடியை டொலருக்கு ஏற்படுத்தக் கூடியது. ஆனாலும் அமெரிக்காவும் அதன் கொள்கைவகுப்பாளர்களும் டொலரின் வீழ்சியை அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ வாய்ப்பில்லை என்ற கருத்து நிலவுகிறது. இத்தகைய போட்டி புதிய சக்திகளை எழுச்சியடையச் செய்யும் என்பது மட்டுமே தற்போதைய நிலையாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி: தினகரன்)
