June 24, 2026
அரசியல் கட்டுரைகள்

தென் இலங்கையின் அரசியல் இருப்பு இந்துசமுத்திர அரசியலுக்கள்ளால் தக்கவைக்கப்படுகிறது?

இலங்கைத்தீவின் அரசியல் இந்துசமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருப்பதனால் முக்கியத்துவமும் தனித்துவமும் கொண்டது என்ற கருத்து பலமானதாக உள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு உலக வல்லரசுகளும் ஏனைய வலுமிக்க நாடுகளும் இலங்கைத்தீவை நோக்கி நகர்வதை கண்டு கொள்ள முடிகிறது. அதுமட்டுமன்றி அத்தகைய முக்கிய நியதியை தென்இலங்கை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதே அவசியமானது. அதிலும் அரசியல் பொருளாதார இராணுவ நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் இந்து சமுத்திர முக்கியத்துவம் தென்இலங்கை ஆட்சியாளர்களால் முதன்மைப்படுத்தப்படும். அதில் வல்லரசுகளது போட்டியும் அதற்கான தென்இலங்கையின் ஆதரவும் காணப்படும். தென்இலங்கை ஏதோ ஒரு வல்லரசை ஆதரிப்பதென்பது தர்க்க அடிப்படையில் நியாயமானதாக அமையாது. மாறாக வல்லரசை பயன்படுத்திக் கொண்டு நெருக்கடியிலிருந்து மீள்வதாக மட்டுமே அமையும். அது ஏறக்குறைய வல்லரசை அல்லது அயல் நாட்டை தனது நலனுக்குள் பயன்படுத்துவது மட்டுமல்லாது அந்த சக்தியை தனது நலனுக்குள் சிக்கவைப்பதாகும். அத்தகைய செயல்பாட்டில் ஒன்றாகவே இலங்கை-இந்திய உடன்படிக்கை காணப்படுகிறது. இக்கட்டுரையும் தென்இலங்கை ஆட்சியாளரால் மீளவும் பேசப்படும் இந்து சமுத்திரத்தை அமைதி வலயமாக பிரகடனப்படுத்துவது தொடர்பான நடைமுறையை தேடுவதாக அமையவுள்ளது.

இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரிலா(Shangri-la Dialogue) மகாநாட்டில் உரையாற்றும்(யூன்02) போது தெரிவித்துள்ளார். இதனை ஆசியாவின் பாதுகாப்பு மகாநாடாகவே கருதப்படுகிறது. அவர் அங்கு உரையாற்றும் போது இந்து சமுத்திர பிராந்தியத்தை அமைதி வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மேற்கொண்ட முயற்சிகள் பெரும் வல்லரசுகளது போட்டி மற்றும் வெளி மோதல்களை இந்து சமுத்திரத்திலிருந்து விலக்கிக் கொள்ள முயன்றதாகவும் மீளவும் அத்தகைய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிபிட்டார். கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து சுதந்திரத்தை பாதுகாப்பதில் இலங்கையின் பங்களிப்பு தனித்துவமானது எனவும் அவர் தெரிவித்தார். இது மட்டுமன்றி சாகல ரத்நாயக்கா அவுஸ்ரேலிய பாதுகாப்புச் செயலாளர் கழரெக் மொரியாட் உடனான சந்திப்பின் போது, கடல்சார் பாதுகாப்பு, மனிதக் கடத்தலைத் தடுத்தல் மற்றும் இரு நாட்டுக்குமான பாதுகாப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்துதல் தொடர்பிலும் உரையாடியுள்ளார். அவ்வாறே பாகிஸ்தானின் ஆயுதப்படைகளின் கூட்டுப்படைத் தளபதி சஹீர் ஷம்ஷத் மிர்சாவை சந்தித்த சாலக ரத்நாயக்கவுக்கு இடையிலான சந்திப்பில் இரு நாட்டுக்குமான பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேற்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பினைப் பலப்படுத்துவதென்பன உரையாடியுள்ளனர். அவ்வாறே அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைத் தளபதி ஜோன் அக்விலினோ சந்தித்த ரத்நாயக்கா இந்து சமுத்திரத்தில் வல்லரசுகளிடையே நிலவும் பிரச்சினைகள் குறித்து உரையாடியதுடன் அது குறித்து இலங்கையின் நிலைப்பாடு சார்ந்து அமெரிக்கத் தளபதிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இவை மட்டுமன்றி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிசிறியை சந்தித்த ரத்நாயக்க இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகளை கண்டறிய முயன்றதுடன் பிராந்தியப் பாதுகாப்பினை பலப்படுத்துவது தொடர்பில் உரையாடியுள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில் தென்இலங்கை உலகிலுள்ள அனைத்து வலுமிக்க மற்றும் ஏனைய இந்து சமுத்திரத்தில் செல்வாக்குச் செலுத்த முனையும் நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பினைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் இலங்கைத் தீவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை முதன்மைப்படுத்துவது, மறுபக்கத்தில் இந்து சமுத்திரத்தை பாதுகாப்பு பிராந்தியமாக மாற்றுதல் போன்ற உரையாடலை உலகளாவிய தளத்தில் ஏற்படுத்த முனைகிறது. உள்நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய முக்கியத்துவம் வேண்டப்படும் காலப்பகுதியில் தென இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புப் பற்றி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதுவே இன்று கவனம் கொள்ள வேண்டிய விடயமாகும். அவற்றை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது, தென் இலங்கையின் அரசியல் இருப்பு நெருக்கடிக்குள்ளால் நகர்வது இயல்பானதாகும். அடிப்படையில் அதிக முரண்பாடு ஏற்பட்டுள்ள போதும் தனது இருப்பினை தக்கவைக்க இந்து சமுத்திரப் பிராந்தியப் பிரச்சினையையும் முதன்மைப்படுத்த முயல்கிறது. அவ்வாறே கடந்த காலம் முழுவதும் இந்து சமுத்திரத்தை முன்னிறுத்திக் கொண்டு உள்நாட்டு அரசியலை கையாளும் திறனை தனதாக்கிக் கொண்டது. இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளும் அனைத்து சக்திகளும் இலங்கைத் தீவின் அரசியல் இருப்பு அவசியமானதென்ற நிலைப்பாட்டை கொண்டுள்ள நாடுகளாகவே உள்ளன. இதனைப் பயன்படுத்திக் கொண்ட தென்இலங்கை இந்துசமுத்திர நாடுகள் அனைத்தையும் தனது நட்புக்குள்ளும் இராஜதந்திர உரையாடலுக்குள்ளால் கட்டமைத்துள்ளது. இந்து சமுத்திரம் அவசியமெனின் தென்இலங்கையின் நட்பு அவசியமானதாக உள்ளது என்பதை அந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் போது பரஸ்பரம் இரு தரப்பினதும் நலன்கள் பாதுகாக்கப்படுகின்ற நிலை உறவினை பலப்படுத்த தேவையானதாக உள்ளது. இதில் வல்லரசுகள் மட்டுமன்றி அயல்நாடுகளும் இந்து சமுத்திர நாடுகளும் உட்படுத்தப்படுகின்றன. அதனால் இலங்கைத் தீவின் அரசியல் முழுமையான இந்து சமுத்திரத்தை ஆதிக்கம் செய்ய முனையும் நாடுகளது நட்புறவுக்குள்ளால் சாத்தியமாகிறது. இலங்கைத் தீவுக்கு தென்இலங்கை மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளையும் இந்து சமுத்திர நலனுக்குள்ளால் அங்கீகரிக்கப்படுகிறது. அத்தகைய நடவடிக்கைகள் மனித உரிமை மீறல்களாக அமைந்தாலும். உரிமை மீறல்களாக அமைந்தாலும், சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டாலும், மனிதப் படுகொலைகள் நிகழ்ந்தாலும், நில ஆக்கிரமிப்பு நிகழ்ந்தாலும், பௌத்த மதம் இலங்கைத் தீவு முழுவதும் பரவினாலும் அதனை கேள்விக்குட்படுத்தாது வல்லரசுகள் இந்து சமுத்திர நலனையே முதன்மையாக கருதும் நிலை உள்ளது. அதனால் உள்நாட்டுப் பொறிமுறையில் நிகழும் மீறல்களுக்கு எதிரான கண்டனங்களைத் தவிர வேறு எத்தகைய செய்முறையையும் அந்த நாடுகள் மேற்கொள்ள முனையாது. இதற்கு வாய்ப்பான புரிதலைத் தரக்கூடிய வகையில் இந்திய -இலங்கை உடன்பாடு காணப்படுகிறது.

இரண்டாவது, இத்தகைய அரசியலை தென்இலங்கை மேற்கொள்ளும் போதெல்லாம் ஈழத்தமிழர் தமது இருப்பினையும் எதிர்காலத்தையும் பற்றிய விழிப்பினைப் பெறுதல் வேண்டும். அத்தகைய நியதிகளுடன் தமிழ் அரசியல் தலைமைகள் இல்லை என்பது வெளிப்படையானது. சமகாலத்தில் தேசியங்களது இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது பூகோள அரசியலிலே தங்கியுள்ளது. அத்தகைய அரசியலுக்குள் தமிழ் தலைமைகள் அரசியல் செய்யாத வரை எந்தவிதமான மாற்றத்தையும் அடைய முடியாது. தென்இலங்கை அத்தகைய அரசியலை வெளிப்படையாக அரசு என்ற அந்தஸ்துடன் நிறைவேற்றிவருகிறது. அரசற்ற சமூகம் என்ற அடிப்படையில் ஈழதமிழரது அரசியல் வலிமை பெற வேண்டுமாயின் தென்இலங்கையை கடந்து பணியாற்ற வேண்டும். உலக அரசுகளுடன் கைகோர்க்க வேண்டும். அந்தந்த நாடுகளில் தூதராலயங்களை உருவாக்க வேண்டும். இதில் யூதர்களும் பலஸ்தீனர்களும் பனிப்போர்க் காலத்தில் அத்தகைய அரசியலை வெற்றிகரமாக நகர்தினார்கள். அதில் யூதர்கள் வெற்றி பெற பலஸ்தீனர்கள் தமது இருப்பை தக்கவைக்கக் கூடியளவுக்கு செயல்பட்டார்கள். தற்போது றொஹிங்யா முஸ்லீம்கள் அத்தகைய விழிப்புடன் செயல்படுகிறார்கள். ஆனால் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் உரையாற்றல் அரசியலை செய்கிறார்களே அன்றி முழுமையான தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியலை மேற்கொள்ளத் தவறுகின்றனர். இதனால் வாக்குகளைச் சேகரிக்கலாமே அன்றி தீர்வை நோக்கி நகர முடியாது. இலங்கைத் தீவுக்குள் தீர்வை எட்டுவதாக இருந்தாலும் தீவுக்கு வெளியேயிருந்து தீர்வை எட்ட வேண்டுமாக இருந்தாலும் தீவுக்கு வெளியான அரசியலால் மட்டுமே முடியும் என்பது கடந்த கால அனுபவமாக உள்ளது.

எனவே, இந்து சமுத்திர அரசியலுக்கு தென் இலங்கை தனது உள்நாட்டு இருப்பினை பாதுகாக்க முயலுகிறது. அதனூடாகவே உள்நாட்டிலுள்ள அனைத்து பொறிமுறையையும் கையாளுகிறது. 1956 ஆண்டு தனிச்சிங்களச்சட்டத்தை எப்படி இந்துசமுத்திர அரசியலுக்குள்ளால் கையாண்டதோ அதேபோன்று 13 வது சீர்திருத்தத்தையும் தென்இலங்கை கையாண்டது. அதன் பாணிக்குள்ளாலேயே முள்ளிவாய்க்காலையும் கையாண்டது. தற்போது பொருளாதார நெருக்கடியையும் இனப்பிணக்கினையும் கையாளுகிறது. இதனை ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி அரசியல் மேற்கொள்ளும் சக்திகளும் உணரவேண்டும். தவறும் பட்சத்திலே எந்த மாற்றத்தையும் அடைய முடியாத நிலை ஏற்படும்.

-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)