இலங்கைத்தீவு பொறுத்து இந்தியாவின் கொள்கை வகுப்பு தெளிவாக இல்லாதுள்ளது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக நிலவுகிறது. முன்பின் முரண்பாடாக கொள்கை வகுப்பு மட்டுமன்றி பல்வேறு தரப்புக்கள் இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்புக்களையும் தனித்தனியே கையாள முனைவதனையும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுடன் இந்தியாவின் அணுகுமுறைமை முற்றிலும் வேறுபட்டது. இந்திய புலனாய்வுத் துறையும், வெளியுறவுத்துறையும், இராஜதந்திரத்துறையும் கூட்டான இந்தியக் கொள்கைக்காகவன்றி தனித்தனியான நகர்வுகளை முதன்மைப்படுத்த முயலுகின்றன. இதனால் ஓரே கொள்கைக்குள் இயங்க முடியாத போக்கு மட்டுமன்றி எதனையும் குழப்பத்திற்கு உள்ளாக்கும் நிலையே அதிகம் காணப்படுகிறது. ஈழத்தமிழர் மத்தியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுதப்போராட்ட அமைப்புக்கள் தோன்றிவளர்ச்சியடைந்தது அழிவுக்குள்ளானது போல் மிதவாத அரசியலும் காணப்படுகிறது. இதனை ஊக்குவிப்பதில் இந்தியா கரிசனை கொள்கிறதா என்ற கேள்வி யதார்தமானதே. அதே நேரம் இந்தியாவை மீறி ஈழத்தமிழர் தமது இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்ற வாதமும் வலுவானதாகவே உள்ளது. ஆனால் தென் இலங்கையோ இந்தியாவை கையாண்டு கொண்டு 2500 வருடகால அரசியல் பொருளாதார சமூக-பண்பாட்டு இருப்பினை பாதுகாத்துவருகிறது என்ற தகவலையும் புரிந்து கொள்வது அவசியமானதாகிறது. இந்தியாவை கையாளுதல் என்பது தென் இலங்கைக்கு சில காலப்பகுதியில் பகை முரண்பாட்டையும் சில காலங்களில் சரணடையும் அரசியலையும் கொண்டதாக அமைந்துள்ளது. இக்கட்டுரை ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியாவின் முரண்பட்ட அணுகுமுறையின் யதார்த்தத்தை தேடுவதாக அமையவுள்ளது.
இந்தியாவிலும் இலங்கையிலும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை பயன்படுத்தி பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலைப்புலிகளை மீள உருவாக்கம் செய்வதற்கு ஆயுதங்களை வாங்குவதாக அவர்கள் திட்டமிட்டுள்ளதாக மூன்று இந்தியர்கள் உட்பட 13 பேர் மீது இந்திய தேசியப்புலனாய்வுப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது. இவர்கள் மீது பல்வேறு இந்திய தண்டனைச்சட்டக்கோவைகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் மூன்று ஈழத்தமிழரும், ஒரு முஸ்லீமும், ஏனையவர்கள் அனைவரும் சிங்கள பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அது மட்டுமன்றி அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொண்ட வருமானத்தின் ஆடம்பர வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர்களிடம் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பல ஆவணங்கள் பெரும்தொகையிலான பணம் மற்றும் தங்கப்பாளங்களும் கைப்பற்றப்பட்டதாக இந்திய தேசியப்புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் (2023) விடுதலைப்புலிகளின் தலைமை இன்னுமே உயிருடன் இருப்பதாகவும் ஆயுதப் போராட்டம் மீள ஆரம்பிக்கப் போவதாகவும் இந்திய அளவில் அறியப்பட்டவரும் தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவளிக்கும் முக்கிய தலைவரில் ஒருவுருமான நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பத்திரிகைகளுக்கு செய்தி வெளியிட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. இது தொடர்பில் அதிக வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால் ஈழத்தமிழரிடம் உள்ள பிரதான கேள்வி நெடுமாறன் வெளியிட்ட தகவல் சார்ந்து எந்த நடவடிக்கையையும் இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல இந்தியப் புலனாய்வுத்துறை அது தொடர்பின் அறிக்கையையோ, இந்திய தண்டனைச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நகர்வையோ மேற்கொள்ளவில்லை என்பதாகும்.
மேற்குறிப்பிட்ட இரு குறிப்புக்களும் அதிக முரண்பாட்டைத் தருவதாகவே தெரிகிறது. இத்தகைய முரண்பாட்டுக்கான அடிப்படைகளை புரிந்து கொள்வது அவசியமானது.
ஒன்று, விடுதலைப் புலிகளை மீள உருவாக்கம் செய்யப் போவதாக கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள இளைஞர்கள் என்பது தேசிய புலனாய்வுத் துறையின் தகவல் மூலம் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. அப்படியாயின் இது ஒரு திட்டமிட்ட சதிச் செயலாக கருதவாய்பிருப்பதாக தெரிகிறது. அதாவது விடுதலைப் புலிகள் மீள உருவாக்கம் பெறப்போவதாக காட்டுவதன் மூலம் ஈழத்தமிழர் அரசியலை கையாள முடியும் என்றவாதத்திற்கு வலுச்சேர்ப்பதாக அமைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அத்தகைய நடவடிக்கைகள் இந்திய மத்திய அரசை மட்டுமல்ல பூகோள அரசியலையும் ஈழத்தமிழர் அரசியலிலிருந்து ஓரங்கட்ட முடியும் அல்லது குழப்பமடையச் செய்ய முடியும். இதனை ஒரு திட்டமிட்ட சதி அரசியல் நகர்வாகவே அளவீடு செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. ஈழத்தமிழரது அரசியல் மீதான தமிழக ஆதரவினை குழப்புவதற்கான முயற்சிகள் அமைந்திருப்பதாகவும் புரிந்து கொள்ளப்படுவது அவசியமானது.
இரண்டு, நெடுமாறனின் விடுதலைப் புலிகள் பற்றிய தகவல் இந்தியாவுக்கு அவசியமானதாக அமைந்துள்ளதாகவே தெரிகிறது. காரணம் நெடுமாறன் ஈழத்தமிழர் ஆதரவாளன் என்ற வகையிலும் மூத்த அரசியல்வாதி என்ற வகையிலும் அவரது இருப்பினை பலவீனப்படுத்த முயன்றிருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் நெடுமாறன் அவர்களது தனிப்பட்ட விருப்பினை இந்தியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். அதற்கான வாய்பு அதிகமாகவே தெரிகிறது. எதுவானாலும் அத்தகைய தகவலுக்கு பின்னர் நெடுமாறன் அவர்களது ஈழத்தமிழர் ஆதரவுத் தளத்திற்கு பாரிய விமர்சனம் எழுந்துள்ளது. இத்தகைய அரசியலை ஈழத்தமிழ் விமர்சகர்கள் அதிகம் கண்டு கொள்ளவில்லை. மாறாக நெடுமாறனை வசைபாட முயன்று நெடுமாறனை மட்டுமல்ல அவரது ஈழத்தமிழ் ஆதரவாளர்களையும் அவருக்கு பின்னாலுள்ள சக்திகள் அனைத்தையும் இழக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனையே இந்திய அதிகம் ஊக்குவிப்பதாக தெரிகிறது. இதுவே நெடுமாறன் விவகாரத்திற்கு பின்னாலுள்ள இந்திய அரசியலாக தெரிகிறது. அதாவது ஒத்துழைப்பினூடாக முரண்பாட்டையும், பகைமையையும் வளர்த்துவிடுவதில் கவனமாக உள்ளது.
மூன்று, விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் என்பது தென் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் சமவலுவான விளைவைத்தரக் கூடியது. இரு தரப்புமே ஒன்றாகவே அதனை நோக்குகின்றனர். இரு தரப்புக்குமே விடுதலைப் புலிகள் ஆபத்தானவர்கள். விடுதலைப் புலிகள் மட்டுமல்ல அவர்கள் கட்டமைத்த கொள்கைகளும் ஆபத்தானவையாவே இரு தரப்பாலும் கருதப்படுகிறது. அத்தகைய ஆபத்து மீளவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் இரு தரப்பும் தெளிவாக உள்ளனர். ஆனால் ஈழத்தமிழர் அரசியல் அபிலாசையை முடிபுக்கு கொண்டுவரக் கூடிய அரசியலும் அதுவாகவே உள்ளது. அத்தகைய விடயத்தை மீள மீள வலியுறுத்துவதன் வாயிலாக ஈழத்தமிழரது அரசியலை முடிபுக்கு கொண்டுவருவதுடன் அதனூடாக இரு தரப்பும் புதிய ஓர் அரசியல் விம்பத்தை கட்டியெழுப்ப முயலுகின்றனர். இதுவே விடுதலைப் புலிகள் தலைமை பற்றிய செய்தியும், மீள் உருவாக்கம் பற்றிய தகவலுமாகும். இதனூடாக ஈழத்தமிழரது எதிரிகள் எச்சரிக்கப்படுவார்கள், விளைவுகள் தொடர்ச்சியாக அசைபோடப்படும் நிலை வளரும். மீள் உருவாக்கம் என்பதன் விளைவினால் கருத்துருவாக்கம் நிகழ்கிறது.
நான்கு, இந்தியாவின் ஆதரவோ அணுகுமுறையோ இன்றி ஈழத்தமிழரது அரசியல் முரண்பாட்டுக்கு தீர்வு இல்லை என்பது புவிசார் அரசியல் வியாக்கியானமாகும். அதில் எந்த வேறுபாடும் கிடையாது. ஆனால் தென் இலங்கை அத்தகைய புவிசார் அரசியலுக்குள்ளேயே இந்தியாவுடன் முரண்பட்டுக் கொண்டு அரசியல் செய்கிறது என்பதே பிரதான புரிதலுக்குரியதாகும். ரணில்விக்கிரமசிங்ஹா ஜனாதிபதியாகப் பதவியேற்று ஓராண்டை அடையும் நிலையிலும் அயல்நாடான இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவில்லை. யூலை 20 திகதி விஜயம் செய்யலாம் என ஊகிக்கப்படுகிறது. தனித்து இந்தியாவுக்கான இலங்கைத் துர்துவர் மிலிந்த மொறக்கொடவும் அவரது இராஜதந்திர அணியுமே பாரிய நிதியையும் நெருக்கடிமிக்க அரசியலையும் கையாண்டுவருகிறது. இதுவே தென் இலங்கையின் இராஜதந்திரமாகவுள்ளது. புவிசார் அரசியலையும் தந்திரோபாயத்தினால் நகர்துகிற திறனை தென் இலங்கைக்கு அதன் புலமையாளர்களும் கொள்கைவகுப்பாளர்களும் கற்றுக் கொடுத்துள்ளனர். அதனை சரிவரவே அரசியல் தலைவர்கள் பின்பற்றியும் வருகின்றனர்.
ஐந்து, ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் செயலில் மட்டுமல்ல புரிதலிலும் பலவீனமாகவே காணப்படுகிறார்கள். 13 ஆம் சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கடிதம் எழுதுவதில் கவனம் கொள்வதுடன் இலங்கையின் ஜனாதிபதிக்கு புதுடில்லியில் வைத்து இந்தியப்பிரதமர் மூலம் இனப்பிரச்சினையை தீர்க்குமாறு அழுத்தம் கொடுக்கப் போவதாக உரையாடுகின்றனர். இரு நாட்டுக்குமான உறவை முழுமையாக விளங்கிக் கொள்ளாததன் விளைவான உரையாடலாகவே தெரிகிறது. இந்தியாவின் தேசிய நலனுக்கு இலங்கைத் தீவு அவசியமானது என்பது மட்டுமே முதன்மையானது. பாகிஸ்தானின் போர்க் கப்பலான பி.என்.எஸ் என அழைக்கப்படும் திப்பு சுல்தான 18 யூன் கொழும்புத் துறைமுகத்திற்குள் நுழைந்து 21 திகதி பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளது. யூன் 19 இந்தியக் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலான வாகீர் இலங்கைக்கு வருகைதந்துள்ளது. இது யூன் 22 வரை இலங்கையில் தரித்திருக்கும். இதனை பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் பார்வையிடலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2014 இல் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு விஜயம் செய்த போது அதிக அதிருப்தியை வெளிப்படுத்திய இந்தியா தற்போதுவரை பாகிஸ்தானின் போர்க்கப்பல் பற்றி எத்தகைய அரசியல் முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை என்பதே கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும்.
எனவே இந்தியாவின் அணுகுமுறை குழப்பமாகவும் முரண்பட்டதாகவும் அமைந்துள்ளது என்பது பொதுவான குற்றச்சாட்டாக இருந்தாலும் அதன் மூலம் இந்தியா இலங்கைத்தீவின் அரசியலை கையாளுவதாகவே தெரிகிறது. ஒரு திட்டமிடல் அரசியலில் தோல்வியடைந்தால் இன்னோர் திட்டமிடலுக்குள்ளால் வெற்றி பெறும் உத்தியை இந்தியா கொண்டுள்ளது. ஆயுதப் போராட்டம் முதல் தற்கால அரசியல் வரை ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறை இந்திய நலன் சார்ந்ததாகவே உள்ளது. அதனை புரிந்து கொள்ளாது இந்தியாவை குற்றம்சாட்டுவதோ அல்லது இந்தியா தீர்வைதர வேண்டும் என அரசியல் செய்வதோ பொருத்தமற்ற உரையாடலாகும். புவிசார் அரசியலை இராஜதந்திரத்தினூடாக பிரயோகப்படுத்தும் நகர்வுகள் சாத்தியமற்ற நிலைவரை ஈழத்தமிழரது அரசியல் பூச்சியத்திலேயே அமைந்திருக்கும். இந்தியா குழப்பகரமான அரசியலை கொண்டிருப்பது போல் அமைந்திருந்தாலும் குழப்பகரத்துக்குள்ளால் ஓர் அரசியல் வியூகத்தை நலன்சார்ந்து பிரயோகித்து இலக்கை அடைந்து கொண்டுவருகிறது. ஆயுதப் போராட்டத்தின் தோற்றத்திற்கும் அதன் அழிவுக்கும் தற்போதைய நிலைக்கும் இந்தியாவின் அணுகுமுறை பிரதான காரணமாகும். இலங்கைத்தீவின் அரசியல் இந்திய நலன்சார்ந்தது. அதில் தென் இலங்கை தனது உத்திகளாலும் தந்திரங்களாலும் பாதுகாப்பாக நகர்ந்து செல்கிறது. இது எதனையும் பிரயோகமாகக் கொண்டிராத ஈழத்தமிழர் தொடர்ச்சியாக மாற்றமின்றி அழிவையே விளைவாக அனுபவிப்பவராக உள்ளனர்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
