சர்வதேச அரசியல் இயங்கவியலான புவிசார் அரசியல் கோட்பாடாகிய இருதயநில கோட்பாட்டின் மையமான ரஷ்சியாவின் அரசியல் நிகழ்வுகள் உலக அரசியலில் நுணுக்கமான கவனத்தை பெறுகின்றது. ரஷ்சியா-உக்ரைன் போர்க்களமும் அதனை மையப்படுத்தி ரஷ்சியாவுக்கு எதிராக கட்டமைக்கப்படும் அணி சேர்க்கைகள் மற்றும் ரஷ்சியா தனது ஆதரவுத்தளத்தை நிரூபிப்பதற்கான முயற்சிகளும் சமகால சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் தேடலாக காணப்படுகின்றது. குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியான இந்தியாவின் ரஷ்சியா மற்றும் அமெரிக்கா தொடர்பிலான அரசியல் உறவுகள் அதிக வாதப்பிரதிவாகங்களை சர்வதேச அரசியலில் உருவாக்கியுள்ளது. ஜூன்(2023) நடுப்பகுதியில் அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூலை(2023) முதல் வாரத்தில் ரஷ்சியா மற்றும் சீனா கூட்டாகிய சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இணையவழியில் கலந்து கொண்டுள்ளார். இக்கட்டுரை 2023ஆம் ஆண்டுக்கான சங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆறு யூரேசிய நாடுகளின் தலைவர்கள் ஜூலை-04அன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக இணையவழியில் சந்தித்தனர். கிழக்கு ஆசியாவிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரையிலான மேற்கத்திய கூட்டணிகளை எதிர்கொள்ள ரஷ்யா மற்றும் சீனாவால் நிறுவப்பட்ட பாதுகாப்புக் குழுவாகவே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கம் அமைகின்றது. 2017-இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உறுப்புரிமையை பெற்றதுடன், இவ்ஆண்டு ஈரான் புதிய அங்கத்துவத்தினை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. குழு இதுவரை பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல், பருவநிலை மாற்றம், மற்றும் 2021 இல் தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு ஆப்கானிஸ்தானின் நிலைமை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 2023ஆம் ஆண்டுக்கான உச்சிமாநாடு இந்தியாவால் நடத்தப்பட்டது. இவ்மாநாடானது, முக்கிய உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ள பல முரண்பட்ட முன்னுரிமைகள் மற்றும் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் குறைத்து மதிப்பிடும் அதே வேளையில், மேற்கத்திய ஆதிக்கத்தை எதிர்கொள்ள பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதான அரசுகளான சீனா, ரஷ்சியா மற்றும் இந்தியா ஆகியன உலக ஒழுங்கின் மறுசீரமைப்புக்கான போட்டியில் முன்னிலையான அரசுகளாகும். குறிப்பாக ஒற்றைமைய அரசியல் உலக ஒழுங்கின் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு சவாலான அரசுகள் என்ற வகையில், இவ்அரசுகளின் செயற்பாடுகள் சர்வதேச அரசியல் கவனத்தை ஈர்க்கின்றது. இந்நிலையில், ஜூலை-04 இடம்பெற்ற மெய்நிகர் உச்சிமாநாட்டில் மூன்று பெரிய பெரிய சக்திகளின் தலைவர்கள் ஒன்றுகூடியமையானது புதிய மாறுதல்களுக்கான சமிக்ஞைகளை வழங்குகின்றதா என்ற தேடலை சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. எனினும் மெய்நிகர் கூட்டம், அவர்களின் கூட்டு தோற்றத்தால் குறிக்கப்பட்ட ஒற்றுமைக்கு அப்பால், ஒவ்வொருவரும் தனது சொந்த, வெவ்வேறு நோக்கத்தில் கவனம் செலுத்தியதாகவே பெருவாரியான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. இதனை நுணுக்கமாக நோக்குதல் அவசியமாகிறது.
ஒன்று, 2023ஆம் ஆண்டுக்கான ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளமையானது, இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை வெளிப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய மூலோபாய செயற்பாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றது. குறிப்பாக, மேற்கத்தேய ஆதிக்கத்திற்கு எதிரான எண்ணங்களுக்குள் கட்டமைக்கப்பட்ட ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2023ஆம் ஆண்டு உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்கும் அதேவேளை மேற்கக்தேய ஆதிக்கத்தை பாதுகாக்கும் எண்ணங்களோடு கட்டமைக்கப்பட்ட குழு-20இன் 2023ஆம் ஆண்டுக்கான தலைமையையும் இந்தியாவே வழங்குகின்றது. இது இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவத்தின் வெளிப்பாடே ஆகும். இந்தியா தனது மூலோபாய முக்கியத்துவத்தை முரண்பாட்டுக்குள் சிதைக்காது தெளிவான இராஜதந்திர பொறிமுறையுடன் நகர்த்தி வருகின்றது. இந்தியாவை பொறுத்தவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆடம்பரமான அரசுப் பயணத்தால் மோடி கௌரவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு அமெரிக்காவின் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான பிரதான எதிர்ச்சக்திகளான ரஷ்சியா ஜனாதிபதி புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருடன் மெய்நிகர் கூட்டத்தில் ஒன்றுகூடியுள்ளார். ரஷ்சியாவுடனான இந்தியாவின் உறவு பனிப்போர் முழுவதும் வலுவாக இருந்தது. இது ரஷ்சியாவின் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுத ஏற்றுமதியை சார்ந்தது. இந்தியா 60 சதவீத பாதுகாப்பு வன்பொருளுக்கு மாஸ்கோவை நம்பியுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவை ஆக்ரோஷமாக நேசித்துள்ளன. அவை சீனாவின் வளர்ந்து வரும் அபிலாஷைகளுக்கு எதிர் எடையாகக் கருதுகின்றன. செப்டம்பரில் 20 முன்னணி பொருளாதாரங்களின் குழு உச்சிமாநாட்டை இந்தியா நடத்தும் நிலையில், மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுடன் அதன் உறவுகளை சமநிலைப்படுத்துவதே மன்றத்தில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய முன்னுரிமையாகும். மத்திய ஆசியாவுடன் மிகவும் ஆழமாக ஈடுபட புது டெல்லிக்கு இது ஒரு தளமாக அமைகின்றது. சுயுNனு கார்ப்பரேஷனின் இந்தோ-பசிபிக் ஆய்வாளரான டெரெக் கிராஸ்மேன் ‘இந்த வகையான வெளியுறவுக் கொள்கையில் இந்தியா மகிமைப்படுத்துகிறது.’ எனக்குறிப்பிட்டுள்ளார். 2017இல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைந்த சீனாவின் மிகப்பெரிய வளர்ந்து வரும் மூலோபாய போட்டியாளரான இந்தியா, மேற்கத்திய நாடுகளுடனான அதன் உறவுகளையும் சீனா மற்றும் ரஷ்சியாவுடனான அதன் உறவுகளையும் சமநிலைப்படுத்துவதற்கான ஒரு வழியாகவே மன்றத்தை கருதுகிறது.
இரண்டு, மேற்குலகம் தன்னைத் தனிமைப்படுத்தத் தவறிவிட்டதாகக் வெளிப்படுத்த முயலும் மாஸ்கோவிற்கு ஷங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு முன்னெப்போதையும் விட முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த குழுவில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு மத்திய ஆசிய நாடுகள் காணப்படுகின்றது. இது மத்திய ஆசிய பிராந்தியத்தில் ரஷ்சியாவின் செல்வாக்கு ஆழமாக உள்ளமையை உறுதி செய்கின்றது. மேலும், 2017இல் உறுப்புரிமை பெற்ற தென்னாசிய அரசுகளான பாகிஸ்தான், இந்தியா மற்றும் 2023இல் உறுப்புரிமையை பெற்றுள்ள மேற்காசிய அரசாகிய ஈரான் என பரந்த ஆசிய ஒத்துழைப்பு வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை அடையாளப்படுத்துகிறது. வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் குகல்மேன் ‘இந்த ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு உண்மையில் உலக அளவில் புடின் வலிமை மற்றும் நம்பகத்தன்மையை முன்னிறுத்த வேண்டிய சில வாய்ப்புகளில் ஒன்றாகும்’ எனத்தெரிவித்துள்ளார். ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் எதுவும் ரஷ்சியாவிற்கு எதிரான ஐநா தீர்மானங்களிற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. ரஷ்சியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய சீனா ஒரு தூதரை அனுப்பியுள்ளது. மேலும் மோதலுக்கு அமைதியான தீர்வுக்கு இந்தியா பலமுறை அழைப்பு விடுத்துள்ளது. இப்பின்னணியில் உக்ரேனில் ரஷ்யாவின் போரை மையமாகக் கொண்ட பெரும்பாலான உரையாடல்களை தலைவர்கள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. மாறாக போரின் காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் உர விநியோகம் குறைந்து வருவதைப் பற்றி இந்தியா மற்றவர்களை எச்சரித்தது. மேலும் குறித்த மாநாடு, உலகளாவிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளின் வரம்பற்ற விரிவாக்கத்தை எதிர்த்ததுடன் நேட்டோ விரிவாக்கம் மற்றும் உக்ரைனின் மேற்கத்திய ஆதரவைக் குறித்தது. மேலும், ரஷ்சியாவின் துணை இராணுவ வாக்னர் குழுவின் ஜூன் கிளர்ச்சிக்குப் பிறகு புடினின் முதல் பலதரப்பு உச்சிமாநாடு இந்த சந்திப்பு ஆகும். இந்நிலையில் உள்நாட்டில் அவரது தலைமை பலவீனமடைந்துள்ளது என்ற பொதுக் கருத்துக்களை எதிர்கொள்ள இதைப் பயன்படுத்தினார். ஆயுதமேந்திய கிளர்ச்சி ரஷ்சியாவைத் தாக்கிய பின்னர், ஒரு அரிய சர்வதேச குழுவின் ஒரு பகுதியாக, அவரது ரஷ்சியா இன்னும் ஆதரவைப் பெறுகிறது.
மூன்று ,சீனாவின் உயர்மட்ட தலைவரான ஜி ஜின்பிங்கிற்கு, இந்த உச்சிமாநாடு அமெரிக்காவை தாக்கும் மற்றொரு வாய்ப்பாக இருந்தது. வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான பிராந்திய ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பிரதான நிலை பெற்றது. இதன் பெருகிய நலன் அமெரிக்காவுடன் வர்த்தகப்போரில் ஈடுபடும் சீன நலன் சார்ந்ததாகவே அமைந்தது. மேலும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள வெளிநாட்டு வர்த்தகத்தை நடத்துவதற்கு அமெரிக்க டொலருக்குப் பதிலாக உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதை சீனாவும் ரஷ்சியாவும் ஊக்குவித்தன. இந்த மெய்நிகர் சந்திப்பு, அமெரிக்காவிடமிருந்து சீனாவின் செல்வாக்கைப் பறிக்கும் இலக்கை முன்னேற்றுவதற்கான வாய்ப்பை சீனாவுக்கு வழங்கியது. சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உலகளாவிய நிர்வாகத்தை மேம்படுத்த மற்றும் சீன பாணி நவீனமயமாக்கலை ஊக்குவிக்க ஒரு வழி’ என்று கூறினார். மேலும் ஒன்பது உறுப்பு நாடுகளில் ஆறு நாடுகள் பெய்ஜிங்கின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியை (டீசுஐ) பிராந்திய உள்கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த ஒரு உறுதியான முறையாக ஊக்குவித்தன. இந்த சீன முதலீடுகள், ‘பிராந்தியத்தில் இணைப்பு, ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழுமைக்கான மாற்று சக்தியாக இருக்கலாம்’ என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறினார். எனினும் இதில் இந்தியா அதிக முரண்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது. சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியை இந்தியா தொடர்ந்து எதிர்த்தது. ஏனெனில் அது சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதி வழியாக இயங்குகின்றது என்ற குற்றச்சாட்மை இந்தியா முன்வைத்தது.
எனவே, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகள் கூட்டாக ஒரே பக்கத்தில் இல்லை என்பது 2023ஆம் ஆண்டுக்கான ஷங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் முடிவுகள் தெளிவுபடுத்துகிறது. பிரதான அரசுகள் தத்தமது முரணான தேசிய நலனை ஈடேற்றும் களமாகவே உச்சி மாநாட்டை நகர்த்தியுள்ளார்கள். அமைப்பு அதன் உறுப்பினர்களிடையே பலவீனமான அமைதியை எதிர்கொள்கிறது. இருப்பினும், கூட்டணியின் சக்தி நிச்சயமாக வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு, உச்சிமாநாடு ஈரானை வரவேற்றுள்ளதுடன், 2024 இல் பெலாரஸ் சேர வழி வகுத்துள்ளது. மத்திய ஆசியாவை மையப்படுத்தி நிர்மாணிக்ப்பட்ட ஷங்காய்-5, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பாக ஆசியாவை நோக்கி பரந்து விரியும் அதேவேளை ஆசியா பிராந்தியத்தின் உள்ளக மோதல் எனும் இயல்பால் வலுவான அரசியலை வெளிப்படுத்த இயலாத அமைப்பாக தொடர்கின்றமையையே தொடர்ச்சியாக உறுதி செய்கின்றது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
