June 25, 2026
அரசியல் கட்டுரைகள்

நைய்கரின் இராணுவ சதிப்புரட்சியும் மேற்கு ஆபிரிக்கப் பிராந்திய அரசியலும்

பூகோள அரசியலில் ஆபிரிக்கா கண்டம் தனித்துவிடப்பட்ட நிலையை உணர்கிறது. வன்முறையும் வறுமையும் போரும் அதிகம் மேலோங்கியுள்ள பகுதியாக காணப்படுகிறது. மனித இனத்தின் தோற்றத்தில் மையப்பகுதியாக அடையாளம் காணப்படும் ஆபிரிக்கா ஐரோப்பியரால் திட்டமிட்டு அடிமைத்தனத்திற்கு உட்படுத்தப்பட்டதுடன் விசப்பரிசோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு அழிவுக்குள் தள்ளப்பட்ட நிலையை ஏற்படுத்தினர். ஐரோப்பியர் ஆபிரிக்கரின் நாகரீகத்தின் செழுமையை முழுமையாக அழித்து வெள்ளையின மேலாதிக்கத்தை நிறுவ தற்போதும் போராடிவருகின்றனர். அந்த கண்டத்து நாடுகளின் அரசியல் பொருளாதார இருப்பினை கேள்விக்குட்படுத்தி வன்முறைக்களமாக மாற்றியுள்ளனர். அதற்கான அரசியல் கலாசாரத்தை அந்த மக்களிடம் வளர்த்ததோடு ஆட்சி முறைமைகளை வன்முறை மூலம் கைப்பற்றவும் அதனை அரசியலாக்கவும் ஒத்துழைப்பு வழங்க மேற்குலகம் தவறவில்லை. அத்தகைய அணுகுமுறையின் வரிசையிலேயே மேற்கு ஆபிரிக்க நாடான நைய்கரில் (Republic of Niger) ஏற்பட்டுள்ள இராணுவ சதிப்புரட்சியை தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.

நைய்கர் குடியரசின் அரசியல் வரலாற்றில் பிராந்திய முடியாட்சிகளின் சந்ததிகள் முக்கியம் வகித்தது போல் நவீன வரலாற்றில் பிரான்ஸ்ன் குடியேற்றம் முதன்மை வகித்தது. 1960 கள் வரை பிரான்ஸ்ன் குடியரசாக விளங்கிய நையகர் 1960 களிலிருந்து தனிக்கட்சியினதும் இராணுவ ஆட்சியின் கீழும் காணப்பட்டது. 1999 ஆம் ஆண்டு பிரான்ஸ் மாதிரியிலான பாராளுமன்ற -ஜனாதிபதி (Semi-Presidential system) முறைமையிலான ஐந்தாவது குடியரசு யாப்பின் கீழ் தேர்தல் நடைபெற்றது. அதனையும் இராணுவப் புரட்சி முடிபுக்கு கொண்டுவர 2002,2004 களில் மீளவும் ஜனாதிபதிக்கான தேர்தல் நிகழ்ந்த போதும் அனைத்து ஜனநாயக அரசியல் முயற்சிகள் தோல்வியடைந்தது. இறுதியில் 2021 ஆன்டு நிகழ்ந்த தேர்தலில் முகமட் வசூம் (Mohamed Bazoum) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 26 ஜூலை 2023 அன்று இராணுவ சதி மூலம் வசூம் சிறைப்பிடிக்கப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இராணுவம் Abdourahamane Tchiani தலைமையில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

நைய்கர் குடியரசு நிலத் தொடர்ச்சியைக் கொண்ட நாடு. அதன் எல்லை நாடுகளாக வடகிழக்கில் லிபியாவையும், கிழக்கே சாட்டையும், தெற்கே நைஜிரியாவையும் தென் மேற்கே Benin and Burkina faso வையும் கொண்டுள்ளது. 25.25 மக்கள் தொகையைக் கொண்டுள்ள நைய்கார் ஒற்றையாட்சி நாடாகும். அங்கு அலுவலக மொழியாக பிரான்ஸ்ம் தேசிய மொழியாக அராபிக்கும் ஏனைய பிரதேச மொழிகளும் பாவனையிலுள்ளன. இனரீதியில் ஏறக்குறைய 53 சதவீதமானவர்கள் Hausa இனத்தவரும் Zarma மற்றும் Songhay இனத்தவர் 23சதவீதமும் ஏனைய ஏழு சிறுபான்மை இனப்பிரிவினரும் காணப்படுகின்றனர். 99 சதவீதமானவர்கள் இஸ்லாத்தை மதமாகக் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அதனைவிட மிகக் குறைந்த சதவீதத்தில் கிறிஸ்தவர்களும் காணப்படுகின்றனர்.

நைய்கர் குடியரசின் இராணுவ சதிப்புரட்சிக்கு ஆபிரிக்க கண்டத்திலும் ஏனைய பிராந்தியங்களிலிருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபிகக யூனியன் பலமாக கண்டித்ததுடன் சிறைப்பிடிக்கப்பட்ட ஜனாதிபதியை உடனடியாக நிபந்தனைகள் எதுவுமின்றி விடுதலை செய்யுமாறு இராணுவத்திடம் கோரியுள்ளது. அவ்வாறே மேற்கு ஆபிரிக்க பொருளாதார அமையம் (ECOWAS) இராணுவப் புரட்சியை கண்டித்ததுடன் எச்சரிக்கை செய்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட ஜனாதிபதி முகமட் வசூமின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது இராணுவத்தின் தவறான நடத்தை என்றும் உடனடியாக மீளவும் ஜனநாயக கட்டமைப்பின் தொழில்பாட்டை மேற்கொள்ள அனுமதிக்குமாறு பிராந்தியத்தின் ஜனநாயகத்தையும் அதன் அடிப்படைகளையும் பாதுகாக்கவும் பலப்படுத்தவும் அதிகாரத்தை ஜனநாயகத்தின் மூலம் நிலைநாட்டவும் உதவுமாறு கோரியுள்ளது.

அவ்வாறான கண்டனத்தை வெளிப்படுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அந்தோனியோ குரோற்றஸ் நைய்கர் மீதான எந்த இராணுவ சதியையும் ஏற்றுக் கெர்ளள முடியாது அனைத்து பங்கெடுப்பாளர்களும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார். மேலும் ஜனரிபதி முகமட் வாசூம்க்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துவதாகவும் உடனடியாக இராணுவ சதிப்புரட்சியை கைவிடுமாறும் ஐ.நா.கோரியுள்ளது. ஐரோப்பிய யூனியன் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அமெரிக்கா என்பன இராணுவப் புரட்சியை கண்டித்ததுடன் உடனடியாக ஜனாதிபதி முகமட் வசூமை விடுதலை செய்யுமாறு கோரியுள்ளனர். பிரான்ஸ்ன் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஜனநாயகத்தையும் ஒருமைப்பாட்டையும் அதுசார்ந்த நிறுவனங்களையும் மீளமைக்க பிரான்ஸ் இணைந்து செயல்படும் என வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க வெள்ளைமாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோக் சுலீவன் இராணுவத்தின் நடவடிக்கைக்கு பலமான கண்டனத்தை தெரிவித்ததுடன் ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்தல் மூலம் தெரிவான அரசாங்கத்தின் தொழில்பாட்டை மேற்கொள்ள அனுமதிக்குமாறு எச்சரித்துள்ளது. சிறைப்பிடிக்கப்பட்ட ஆட்சியாளர் அனைவரையும் விடுவிப்பதுடன் வன்முறையற்ற சூழலை உருவாக்க வேண்டும் எனவும் அமெரிக்க பிரஜைகள் மீதான நடவடிக்கை எதுவும் ஏற்படாத வகையில் பாதுகாக்கும் விதத்தில் தமது கண்காணிப்பு அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதே நேரம் இராணுவம் தனது இராணுவ சதிப்புரட்சியை நியாயப்படுத்த முயன்றுள்ளது. குறிப்பாக முகமட் வசூம் தலைமையிலான ஆட்சியில் எத்தகைய பொருளாதாரத் திட்டங்களும் அபிவிருத்தியை நோக்கி முன்வைக்கப்பட வில்லை எனவும் அதனால் பொருட்களது விலையேற்றமும் வறுமையும் அதிகரிஜத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. அதனைவிட ஊழல் அபாயமான நிலைக்கு ஆட்சியாளர்கள் நைய்கர் நாட்டை உருவாக்கி வருவதாகவும் அவற்றை முடிபுக்கு கொண்டுவரும் விதத்திலேயே ஆட்சி மாற்றத்தை தாம் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. இதனை கானா நாட்டில் இயங்கும் கோபிஅனான் சர்வதேச அமைதிபடையின் பயிற்சி மையத்தின் பேராசிரியர் இமானுவேல் குவிசி அனிங் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய இராணுவ சதியை நியாயப்படுத்த முடியாது. மேற்கு ஆபிரிக்கா முழுவதும் ஊழலுக்கு எதிராக தீவிர உணர்வாளர்கள் போராடி வருகின்றனர். மேற்கு ஆபிரிக்காவில் ஊழல் பெரும் யானையை அறைக்குள் வைத்திருப்பது போல் உள்ளது. அதற்காக வன்முறை மூலம் ஊழலுக்கு எதிராக போராடுவதை சாதகமான வளர்ச்சி என கூறமுடியாது எனக்குறிப்பிட்டுள்ளார்.

எதுவாயினும் பிராந்திய ரீதியில் நைய்கரின் இராணுவசதி அதிகமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உள்ளூர் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கிவரும் மேற்கு நாடுகளின் முகவர்களது நடவடிக்கைகள் அதிகரித்து;ளளதாகவும் அயல் நாடுகளில் ஆட்சியை தக்க வைக்க போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இது பிராந்திய உறுதிப்பாட்டையும் பாதுகாப்பினையும் பாதிக்கும் விடயமாக அமையவுள்ளது. மாலி இராணுவ அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை கொண்டுள்ள பிரான்ஸ்ன் நடவடிக்கைகள் நைய்கரிலும் நிகழ வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. குடியேற்ற ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட உறவினை மீளவும் பிரான்ஸ் இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தி வருவதாக தெரியவருகிறது.

ஆபிரிக்கப் பிராந்தியங்கள் முழுமையாக இராணுவமயவாக்கத்திற்குள் உட்படுகின்ற போக்கு எழுச்சியடைகிறது. ஜனநாயகத்தின் மூலமான ஆட்சி மாற்றத்தின் கட்டமைப்பும் நிறுவனங்களும் வளர்ச்சியடைய முடியாத நிலைக்குள் காணப்படுகின்றன. இராணுவத்தையே அரச கட்டுமானத்தின் முதன்மை நிறுவனமாக உருவாக்கியுள்ளன. அத்தகைய அரசியல் காலாசாரத்திற்கான கட்டமைப்புகளை தேசிய அரச உருவாக்கங்களில் ஏற்படுத்தியதுடன் அதனையே மேற்கு நாடுகளும் குடியேற்ற நாடுகளும் உக்குவிக்கின்றன. ஒரு பக்கம் பொருளாதார வறுமையும் மறுபக்கத்தில் இராணுவ சதிப்புரட்சிகளும் தேச அரச கட்டமைப்பினை சரியான திசையில் கொண்டு செல்ல முடியாது தடுக்கிறது. இந்நாடுகளை கையாளும் ஆதிக்கப் போட்டி நாடுகள் வன்முறையையும் இராணுவ மயவாக்கத்தையும் ஊக்குவிப்பதாகவே குற்றம்சாட்டப்படுகிறது. இதன் விளைவுகளையே நைய்கர் எதிர் கொண்டுள்ளது. வன்முறைக்குள்ளால் அரசுகளது தேச கட்டுமானம் நிகழும் பிராந்தியமாக மேற்கு ஆபிரிக்கா மாறியுள்ளதைக் காணமுடிகிறது. இப்பகுதியிலுள்ள நாடுகளில் அனேகமானவை பிரான்ஸ்ன் குடியேற்றத்திற்குள்ளால் அரசியல் கலாசாரத்தை கட்டமைத்தவை என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

எனவே இராணுவமும் இராணுவ ஆட்சியும் நவீன அரசியல் வரலாற்றில் இன்னுமே பிரயோகத்தில் உள்ள அதிகார செய்முறையாக உள்ளது. அதிலும் ஆபிரிக்கா முதலிடத்தில் அமைந்துள்ள கண்டமாக அமைந்துள்ளது. அதற்கான அடிப்படை அந்த நாடுகளிழலுள்ள அரசியல் கலாசாரமாகும். அதனைத் தோற்றுவித்த குடியேற்ற நாடுகளும் அதன் எச்சசொச்சங்களும் முக்கியமானவையாக உள்ளன. அது மட்டுமல்லாது தொடர்ச்சியாக மேற்கு நாடுகளுக்கும் புதிதாக எழுச்சி பெறும் சீனா இந்தியா மற்றும் ரஷ்சியா போன்ற நாடுகளது அணுகுமுறையும் போட்டியும் பிராதான விடயங்களாக உள்ளன.

-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)