அரசியல் கட்டுரைகள்

ஈரானின் அணுவிஞ்ஞானியின் படுகொலை உலக இராணுவத் தொழில் நுட்பத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளதா?

ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல் உத்திகள் போரியல் முறைமையை புதிய வரைபுக்குள் கொண்டு செல்கின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஈரானின் இராணுவ மற்றும் அணுவாயுத வல்லமையை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மீண்டும் ஒரு முழு நீள போருக்கு வழிவகுக்கும் என்ற எண்ணத்தை ஏற்படத்தியுள்ளது. ஆனால் அத்தகைய தாக்குதல்கள் ஈரானின் எதிரி நாடுகளால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றதே அன்றி ஈரானால் எத்தகைய பதில் தாக்குதலும் சம அழிவைத் தருமளவில் எதிரிகளுக்கு எதிராக மேற்கொள்ள முடியாததை அவதானிக்க முடிகிறது. இக்கட்டுரையும் கடந்த 27.11.2020 அன்று ஈரானின் அணுவிஞ்ஞானியும் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டு பிடிப்புக்கான அமைப்பின் தலைவருமான மொஹ்சென் பக்ரிசாதே (Mohsen Fakhrizadeh) படுகொலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஏற்பட்டுவரும் அரசியலை தேடவுள்ளது.

ஈரானிய அணுவிஞ்ஞானியின் படுகொலை பொறுத்து முன்னுக்கு பின் முரண்பாடான தகவல்கள் வெளியாகிவருகின்றன. முதலில் வெளியான தகவலின் படி 12 பேர் கொண்ட குழுவினர் இந்தப் படுகொலையை முன்னெடுத்தனர் என்றும் வெளிநாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் புலனாய்வுத் துறையினர் வழங்கிய அதியுச்சமான ஆயுதப் பயிற்சியின் விளைவாக 12 பேர் கொண்ட குழுவனர் ஈரானின் தலைநகரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அப்ஸார்ட் நகரில் காத்திருந்து தாக்குதல் நடத்தியதாகவும் 50 பேர் இக்கொலைக்கு வேண்டிய அவசியமான வினியோக நடவடிக்கையினை மேற்கொண்டதாகவும் ஈரானிய செய்திச்சேவை ஈரான் பாதுகாப்பு தகவல்களை ஆதாரமாகக் கொண்டு தகவல்களை வெளியிட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பிப்பதற்கு முன்னர் மின்சாரத்தை துண்டித்ததுடன் தயார் நிலையிலிருந்த நான்கு பேர் அடங்கிய அணியினர் தாக்குதலை தொடங்கியதாகவும் இறுதியில் குண்டு பொருத்தப்பட்ட நிசான் வகை வாகனம் வெடித்துச் சிதறியதாகவும் தெரியவருகிறது.

ஆனால் பிந்திய ஈரானிய பாதுகாப்பு தகவலின் படி செயற்கைக்கோளின் வழிகாட்டல் மூலம் பல மைல்களுக்கப்பால் இருந்து தாக்குதல் நிகழ்ந்ததாகவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடனே அணுவிஞ்ஞானி கொல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது. இது போரியியல் புதுயுகத்திற்கான திறவுகோலாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இராணுவத்தினது முக்கிய புள்ளிகளை விமானம் மூலம் தொலைவிலிருந்தே இலக்குவைக்க முயும் என்ற யுகத்தை மாற்றியுள்ளது. ஈரானியக் களம். அதிலும் ஈரானிய இராணுவத் தளாதி சுலைமானி மீதான தாக்குதலும் தற்போதைய தாக்குதலும் அத்தகைய தொழில் நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது. இதன் மூலம் ஈரானின் வலுவான பாதுகாப்புக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டுள்ளது. தாக்குதலாளிகள் எவரும் தாக்குதல் பகுதியிலின்றி தொலைவிலிருந்து இயக்கப்படும் இயந்திரத் தொழில்நுட்பத்தின் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிசான் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரத் துப்பாக்கியே அணுவிஞ்ஞானியின் குண்டுதுழைக்காத வாகனத்தை நோக்கி தாக்குதல் நடாத்தியதாகவும் அப்போது வாகனத்தை விட்டு கீழ் இறங்கிய போதே விஞ்ஞானி மீது நான்கு குண்டுகள் பாய்ந்ததாகவும் ஈரானிய பாதுகாப்பு உயர் சபையின் செயலாளர் அலி ஷம்கானி தெரிவித்துள்ளார். எதுவாயினும் ஈரானின் அணுவிஞ்ஞானியின் படு கொலை பாரிய நெருக்கடியை ஈரானுக்கு ஏறிபடுத்தியுள்ளது.

இத்தகைய துணிகரமான படுகொலையை இஸ்ரேலும் அதன் நட்பு நாடான அமெரிக்காவுமே மேற்கொண்டுள்ளன என்றும் இது இஸ்ரேலின் பயங்கரவாதம் எனவும் ஈரானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அது மட்டுமன்றி இது ஒரு சர்வதேச மட்டத்திலான ஆக்கிரமிப்பு எனவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமட் ஜெவாட் ஷரீப் தெரிவித்துள்ளார்.இத்தாக்குதலை கண்டித்த ஈரானிய ஆட்சியாளர்கள் பதிலுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்போவதாகவும் பழிவாங்கல் நிகழும் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் படுகொலைக்குப் பின்னரும் இவ்வாறு எச்சரிக்கை மேற்கொண்ட ஈரானிய ஆட்சியாளர்கள் அதற்கு நிகரான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது கவனத்திற்குரியதாகும். ஆனால் இந்த தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் ஈரானின் அணு உடன்பாட்டிற்கு புதிய ஆரம்பம் ஒன்றினை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இரு நாட்டுக்குமான இராஜதந்திய உறவுகள் மீள ஆரம்பிக்கப்படும் என பைடன் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறு அமைய மறுபக்கத்தில் ஈரானிய பாராளுமன்றம் அணுவாயுத பரிசோதனைக்கான ஒப்புதலை கோருவதுடன் இரண்டுமாத கால அவகாசத்தை கொடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தித் தளங்களை ஆய்வு செய்வதை நிறுத்தவும் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும் கோரியதுடன் இவற்றை மேற்கொள்ள தவறுமாயின் ஈரானுடன் மேற்கு நாடுகள் மேற்கொண்ட அணு உடன்படிக்கையில் நிர்னயிக்கப்பட்ட எல்லையை தாண்டி யுரேனிய செறிவூட்டலை மேற்கொள்ளப்போவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமெரிக்க புதிய நிர்வாகத்திடமும் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக அனைத்து பொருளாதாரத்தடையையும் நீக்கினால் அணுவாயுத உடன்பாட்டுக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளது. எனவே அணுவிஞ்ஞானியின் படுகொலை மேற்காசியப்பிராந்திய அரசியலில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.

ஒன்று, ஈரானின் அணுகுமுறையில் ஏற்பட்டுவரும் மாற்றம் அதன் பலவீனத்தை அடையாளப்படுத்துவதாக அமைந்தாலும் அணுவாயுதத்திற்கான முயற்சி பலமான அரசியலை ஏற்படுத்தக் கூடியதாக தெரிகிறது. ஈரானைப் பொறுத்தவரை அதன் அணுவாயுதமே பிரதான இலக்காக உள்ளது. 2025இல் கலாவதியாகும் ஈரானுடனான அணுவாயுத உடன்பாட்டினை ஜோ பைடன் புதுப்பிக்க முயலுகிறார். அதற்கு இணங்க பல நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளமை அதன் இலக்கு அணுவாயுதமாகவே தெரிகிறது. மேற்காசிய அரசியலில் ஈரானின் அணுவாயும் நிரந்தரமான அரசியல் கொதிநிலையை தரக்கூடியதாக அமையவுள்ளது தெரிகிறது. ஈரான் அணுவாயுதத்திற்காக என்னும் எத்தனை தலைவர்களை பலிகொடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு, இஸ்ரேலை ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் ஜோ பைடனின் ஆட்சிக்காக ஈரான் காத்திருப்பதன் மூலம் அதன் பலவீனம் தெரிகிறது. அக்காலப்பகுதி முழுவதும் இலக்கு வைக்கப்படவும் அதிக வாய்ப்புள்ளது. அவ்வகை உத்தியில் இஸ்ரேல் சளைக்காத நாடு என்பதை 1947களுக்கு பின்பு பலதடவை நிறுவியுள்ளது. இஸ்ரேலைக் கட்டுபட்படுத்தும் பலம் ஈரானிடமோ அல்லது மேற்காசிய நாடுகளிடமோ இல்லாதுள்ளமை தெரிவாக ஈரானின் நகர்வில் தெரிகிறது. 2018 முதல் ஈரானின் அணுவிஞ்ஞானியை இஸ்ரேல் இலக்கு வைத்திருந்தது என்பது தற்போதுதான் ஈரானுக்கு தெரியவந்துள்ளது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு பின்பு கூட அத்தகைய கொலைகளை தடுக்க முடியாதுள்ளமை ஈரானின் பாதுகாப்பு மற்றும் அதன் தொழில்நுட்பப் பலவீனமாகவே காட்டுகிறது.

மூன்று, ஈரானின் தகவலின் படி 12 பேர் கொண்ட குழு தாக்குதலுக்கு தயாராக இருந்தமையானது அதுவும் தெகிரானிலிருந்து 50 கி.மீ.தொலைவில் என்பதுவும் ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்பின் பலவீனத்தைக் காட்டுகிறது. அது மட்டுமல்ல குண்டு துழைக்காத மூன்று தொடரூந்துகள் நகர்ந்த போது அணுவிஞ்ஞானியின் காரை இலக்குவைத்தமையானது ஈரானிய இராணுவக் கட்டமைப்புக்குள்ளேயே பலவீனம் காணப்படுகிறது என்பது தெளிவாகிறது.

நான்கு, இஸ்ரேலிய-அமெரிக்க கூட்டின் இலக்கு அணுவாயுதத்தைக் கடந்து இராணுவ தலைமைகளையும் அணுவிஞ்ஞானிகளையும் நோக்கியதாக அமையும் போது ஒரு செய்தி வெளிவருகிறது. அதாவது ஈரானின் அணுவாயுதத்தை தடுக்கும் வலிமை குறைந்துவிட்டதென்பதாகும். ஏறக்குறைய அணுவாயுதம் தயாரிக்கப்படும் நிலையம் மீதே இதுவரையான காப்பகுதியில் இஸ்ரேலின் இலக்கு காணப்பட்டது. தற்போது அது மாறியுள்ளதென்பது பரிசோதனைக் களத்தை அடைய முடியாத நிலை ஒன்றுக்குள் ஈரான் பரிசோதனையை மேற்கொள்வதாகவே புரிய வேண்டியுள்ளது. இது இஸ்ரேலிய-அமெரிக்க் தரப்புக்களின் பலவீனமாகவே தெரிகிறது. ஈரானியர் குறிப்பிடுவது போல் இஸ்ரேலின் செயல் ஒரு பயங்கரவாததச் செயலாகவே தெரிகிறது.

ஐந்து, இஸ்ரேல்-அமெரிக்க கூட்டின் நடவடிக்கைகளால் உலகம் அதிக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதாவது இவ்வகையான படுகொலைகள் மேற்குலகின் சட்டதிட்டத்திற்கும் வரைபுகளுக்கும் முற்றிலும் விரேதமானவையே. மேற்குலகத்தின் வாதங்கள் அனைத்தையும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தகர்த்துக் கொண்டு செல்வதைக் காணமுடிகிறது. இதனால் ஏற்படப் போகும் விளைவுகள் அனைத்தும் மேற்குலகத்தையே பாதிப்புக்குள் தள்ளும். இது மேற்கின் முகமூடியை கிளித்துள்ளதாக தெரிகிறது. இதனை முதலீடாக்கி ஈரான் செயல்படுமாயின் அதிக விளைவுகளை ஏற்படுத்தும் திறனுடையதாக மாறும்.

ஆறு, மேற்காசிய அரசியலில் தற்போது ரஷ்சியா சீனா அதிக முக்கியத்துவம் பெற்ற நாடுகளாக காணப்படுகின்றன. இதன் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நகர்வுகளை அமெரிக்காவின் புதிய நிர்வாகம் மேற்கொள்ள களம் கிடைத்துள்ளது. இது துருக்கியின் போக்கில் தென்படத் தொடங்கியுள்ளது.

ஏழு, தொழிநுட்பத்திற்கான போர் ஒன்றினை ஈரான் மீதான நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சுலைமானி படுகொலையிலும் தற்போதைய தாக்குதலிலும் செயற்கைக்கோள் தொழில்நுற்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டமையானது அதிக மாற்றத்தை தரவல்லதாக அமையவுள்ளது. மேற்காசியா மட்டுமல்ல உலக போர்களே இனி தொழிநுட்பப் போர்களாகவே அமைய வாய்ப்புள்ளது.

எனவே ஈரானிய அணுவிஞ்ஞானியின் படுகொலை மேற்காசிய அரசியலில் மட்டுமல்ல முழு உலக இராணுவ அரசியலில் மாற்றங்களை தரக்கூடியதாக அமையவுள்ளது. இது வெளிப்படையாக ஈரானைப் பாதித்தாலும் மறுபக்கத்தல் ஈரானின் அரசியல் பொருளாதார இராணுவ இருப்பினை பாதுகாக்கும் வாய்ப்பொன்றை உருவாக்கியுள்ளது.

-கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: உரிமை மின்னிதழ்)