அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தீவில் அமெரிக்க-சீனப் போட்டியும் சனல்-4 காட்சியின் அரசியலும்?

இலங்கை அரசியல் மீளவும் ஒரு கொதிநிலைக்குள் அகப்பட்டுள்ளதாகதே தெரிகிறது. சனல்-4இன் இரண்டாவது காட்சியானது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் பற்றிய உரையாடலை வெளிக்கொண்டு வந்துள்ளதாகவே உணரப்படுகிறது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நிகழ்ந்த போதும் அதற்கான விசாரணைகளின் நிகழ்ந்த போது இத்தகைய உரையாடல் மேலெழுந்தது. ஆனால் அப்போதிருந்த ஆட்சியாளர்கள் அதற்கான நியாயாதிக்கத்தை பலவீனப்படுத்தியதுடன் சுதந்திரமான விசாரணைகளை சாத்தியப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் பிராந்திய மற்றும் சர்வதேச தலையீடு ஏற்பட வழிவகுத்துள்ளது. இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உள்நாட்டு பொறிமுறைக்கு உட்பட்ட விசாரணை சாத்தியப்படுத்தும் சூழ்நிலை இல்லாததனால் சர்வதேச விசாரணை அவசியம் என்பதை கோரியுள்ளார். இது இலங்கைத் தீவுக்குள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் விசாரணைக்கான நியாயப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது. இக்கட்டுரை உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சனல் – 04 தற்போது ஏன் அதிகமாக முதன்மைப்படுத்தப்படுகிறது என்பதை தேடுவதாக உள்ளது.

தற்போது வெளியான சனல்-4 இன் (Sri Lanka’s Easter Bombings: Dispatches) தகவல்கள் இலங்கைப்பரப்பில் உரையாடப்பட்ட விடயங்களாகவே உள்ள போதும், புதிய தகவல்கள் இல்லாமலில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக இத்தாக்குதலை நிகழ்த்துவதற்கான திட்டமிடலாளர்கள் பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் குறித்த அரசியல் தலைமைகளின் செயலாளர் ஆஸாத் மௌலானா மூலமாகவும் புலனாய்வு அதிகாரிகள் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கான திட்டமிடலில் புலனாய்வு அதிகாரி சுரேஸ் சலேபற்றிய தகவல்கள் அதிகமாக ஆசாத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் நாட்டை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்வதற்காகவே இந்தக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டன என்ற கருகோளின் அடிப்படையில் சனல்-4 காணொளி வெளியாகியுள்ளது. அதன் உள்ளடக்கங்களில் தாஜ் சமுத்ரா ஹோட்டலின் தாக்குதல்தாரி அதனைத் தவிர்க்க முயற்சித்ததாக தெரியவருகிறது. தாஜ் சமுத்ரா இந்தியர்களுக்கானது என்றும் இதனாலேயே அதன் மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டதாக ஊடகங்களில் அதிக செய்திகள் பகிரப்படுகிறது. அவ்வாறாயின் தற்போதைய உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுவது சரியானதா என்ற கேள்வி நியாயமானதே. ஆனால் தாக்குதலுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியப் புலனாய்வுத் துறை தாக்குதல் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களுக்கு எச்சரித்திருந்தமை கவனத்திற்குரியதாகும். அவ்வாறே தற்போது மீண்டும் ஓர் இனக்கலவரம் ஏற்படப் போவதாக இந்தியப் புலனாய்வுத் துறை எச்சரித்திருப்பது தாக்குதல் நிகழப் போகிறதென்பது ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா? அல்லது உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலில் இந்தியா தொடர்புபட்டது போல் மீளவும் நிகழப்போகும் இனக்கலவரத்திற்கும் இந்தியத் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் நியாயமானதாவே தெரிகிறது. இதனை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் வடக்குக்கு விஜயம் செய்த போது சில தரப்புக்களுடன் உரையாடும் நிலையில் இது தொடர்பில் கேட்டறிந்து கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்படியாயின் மதக்கலவரத்தை இந்தியா தூண்ட முயலுகிறது என்ற கேள்வியை புறந்தள்ளிவிட முடியுமா? கடந்த காலத்தில் வடக்கு கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் நிகழ்ந்த தாக்குதலுடன் மட்டுமல்லாது தமிழ் மிதவாத மற்றும் தீவிரவாத அரசியல் தலைவர்களது படுகொலையுடன் அத்தகைய கேள்விகள் எழுப்பப்டுவது தவறானதாக இருக்குமா என்பது முக்கியமான செய்தியாகும். அது தொடர்பில் 2009 போர் முடிந்த பிற்பாடு ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்கள் அத்தகைய உரையாடலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் தற்போது எழுந்துள்ள சனல்-4 காட்சிகள் இலங்கையின் அரசியல்வாதிகளை மட்டுமல்ல இந்தியப் புலனாய்வுப் பிரிவினரையும் கேள்வி எழுப்பியுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எதுவாயினும் இலங்கையின் அரசியலுடன் இந்தியா ஒன்றிணைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

தற்போது சனல்-4 ஏன் அவசரமாக வெளியாகியுள்ளது என்ற கேள்வி தவிர்க்க முடியாததது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது, இலங்கைத் தீவின் அரசியலில் பொதுஜனப் பெரமுன(மொட்டுக்) கட்சி மீள் எழுச்சிக்கான நகர்வுகளை அண்மைய வாரங்களில் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. அதன் உறுப்பினர்களது அண்மைய சந்திப்பும் உரையாடலும் ஊடகப்பரப்பில் அதன் பிரச்சாரமும் அதிக முக்கியத்துவம் பொருந்தியதாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மிலிந்த மொறகொட ராஜபக்ஷாக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். ஏறக்குறைய அடுத்துவரவிருக்கும் எந்த தேர்தலாக அமைந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றிபெற மொட்டுக்கட்சி தயாராகிவிட்டது என்பதை அனைத்துத் தரப்பும் உணரக் கூடியதாக அமைந்திருந்தது. மொட்டுக்கட்சி ஆட்சி அமைத்தால் இலங்கைத் தீவை சீனா ஆட்சி செய்வதாகவே அமையும் என்ற புரிதலுடன் அமெரிக்காவும் அதன் மேற்கு நட்பு நாடுகளும் கருதுகின்றன. தற்போது இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்திற்குள் நகரும் இலங்கைத் தீவு சீனா பக்கம் சாய்ந்துவிடும் என்ற கருத்துடனே மேற்குலகம் இயங்குகிறது. அதற்கான முன்னாயத்தங்களை சீனாவும் ராஜபக்ஷாக்களும் அண்மைய காலங்களில் மேற்கொண்டுவருகின்றனர். அதனுடன் தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் ஆட்சியை முடிபுக்குக் கொண்டுவரும் உபாயத்தையும் ராஜபக்ஷாக்கள் மேற்கொள்வதாக உணரப்படுகிறது. அதாவது மேற்குலகத்தின் நட்புச்சக்தியான ஜனாதிபதியை மீளவும் மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டத்தை தகர்க்கும் விதத்தில் ராஜபக்ஷாக்கள் செயல்படுவதை அமெரிக்கப் புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனால் மீளவும் எழுச்சி அடைய முயலும் ராஜபக்ஷாக்களையும் அவர்களது முகத்திரையையும் கிளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே சனல்-4 காட்சிகள் மீளவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இரண்டாவது, இதில் இந்தியா தொடர்பில் உள்ள முரண்பாட்டையும் அமெரிக்கத் தூதுவர் வடக்கில் வெளிப்படுத்தியுள்ளமை கவனத்திற்குரியதாகும். இந்தியா சீனா பக்கமா இல்லையா என்பதைவிட சீனாவுடன் ஒத்துழைப்பது அவசியமானதென இந்தியா உணர்வதாகவே தெரிகிறது. அதனை அமெரிக்கா விளங்கிக் கொண்டுள்ளது என்பதுடன் அதற்காக இலங்கைத் தீவை சீனாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்பதை அமெரிக்கா கருதுகிறது. காரணம் இலங்கைத் தீவு இழக்கப்படுமாயின் இந்துசமுத்திரம் அமெரிக்க நலன்களிலிருந்து கைமாறும் நிலை ஏற்படும். இவ்வாறு அமெரிக்கா கருதும் நிலையானது ரணில்விக்கிரமசிங்ஹாவால் பாதுகாக்கப்பமா என்ற கேள்வி தவிர்க்க முடியாததது. ரணில் மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியான பின்னர் சீனா பக்கம் சாயமாட்டார் என்பதற்கு அமெரிக்காவிடம் எத்தகைய உபாயமுண்டு என்பது தெரியாது. பிரதமராக ரணில் ஆட்சியிலிருக்கும் போதே சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சியில் இலங்கை கையெழுத்திட்டது என்பதை மறுக்க முடியாது. அது மட்டுமல்ல இலங்கைத் தீவின் புவிசார் அரசியல் நியதியும் இந்தியாவுக்கு எதிரான கொள்கையைக் கொண்ட சக்திகளுடன் கைகோர்ப்பதே வழமையான அரசியலாக உள்ளது. தற்போது இந்தியாவை எதிர்க்கும் நாடுகளில் அமெரிக்காவைவிட சீனாவே முதன்மையானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது அமெரிக்காவின் நிலை இந்தியாவுக்கானதாகவே அமையும்.

மூன்று, ரணில்விக்கிரமசிங்ஹாவின் ஆட்சியை பாதுகாப்பது. இதுவே சீனாவையும் இந்தியாவையும் கையாளும் என அமெரிக்கா கருதுகிறது. வெளிப்படையாக இந்திய நட்பு அமெரிக்காவுக்கு தேவையாக அமைந்தாலும் உள்ளார்ந்த ரீதியில் இந்தியாவின் போக்கினை அமெரிக்கா எதிர்நிலையிலிருந்தே அணுகுகிறது. அதனால் இலங்கைத் தீவை இழப்பது ஒரே சந்தர்ப்பத்தில் இரு பெரும் ஆசிய சக்திகளால் இந்து சமுத்திரம் கைப்பற்றப்படும் நிலை ஏற்படும் என்பதேயாகும். அதனை தடுக்க இலங்கையின் ஆட்சி அமெரிக்காவுக்கு சாதகமானதாக அமைந்தால் அதன் மூலமாக இந்து சமுத்திரத்தை தக்க வைப்பதுடன் இந்திய மற்றும் சீனாவை கையாளலாம் எனவும் அமெரிக்கா கருதுகிறது. தற்போதைய இலங்கைத் தீவின் அரசியலுக்கு ராஜபக்ஷாக்கள் எவ்வளவு பங்கு அளித்தார்களோ அதேயளவுக்கு அமெரிக்காவும் பதில் நகர்வை மேற்கொண்டுள்ளது. சனல்-4 இன் வருகை இந்தியாவையும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. அதிலும் இந்தியப் புலனாய்வுத் துறை மீதான நெருக்கடி அதிகமானதோடு இந்தியாவின் நிலை பற்றிய மதிப்பீடும் மாறியுள்ளது. அதுமட்டுமல்ல இந்தியாவை ராஜபக்ஷாகட்களுடன் தொடர்புபடுத்தி கணிக்கப்படுத் நிலையை அமெரிக்கா அதிகம் ஏற்படுத்த முயன்றுள்ளது. அதனை சனல்-4 அதிகமாகக் கொண்டுள்ளது.

எனவே, சனல்-4 காட்சிகள் உள்நாட்டுச் சக்திரகளை மட்டும் கையாளும் நோக்குடன் வெளியாகவில்லை. அது பிராந்திய சக்திகளையும் சர்வதேச சக்திகளது நலன்களையும் மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய, சீனா, அமெரிக்கா என்ற அணிகளுக்கு இடையிலான மோதலை வெளிக்காட்டுவதுடன் அமெரிக்க நட்பு சக்திகளது தேர்தல் வெற்றியையும் சனல்04 உறுதிப்படுத்த முயன்றுள்ளது. இதனால் ராஜபக்ஷாக்களது அரசியல் எதிர்காலம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதுடன் ரணில் ஆட்சியைப் பாதுகாக்கும் தரப்பாக ராஜபக்ஷாக்கள் தொடர வேண்டும் என்ற விரும்பும் எச்சரிக்கையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது மறைமுகமாக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதனை முன்னெடுத்துச் செல்லும் தமிழ் தலைவர்கள் அவசியமாவதுடன் புலம்பெயர்ந்த தரப்பும் இதில் அதிகமான கவனத்தைக் கொண்டு செயல்படுவது தேவையாகத் தெரிகிறது. கடந்த காலத்தில் தமிழர் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கும் போது சிங்கள ஆட்சியாளரும் தலைவர்களும் அதனை நிராகரித்திருந்தார்கள். தற்போது சிங்களத் தலைவர்களே அத்தகைய கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள் தற்போது தமிழ் தலைவர்கள் அதனை ஊக்குவிக்க வேண்டும். அக்கோரிக்கைக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். அதுவே எதிர்காலத்தில் தமிழ் மீதான படுகொலையையும் சர்வதேச மட்டத்தில் விசாரணைக்கு உட்படுத்த உதவும். எஸ் டபிள்யூ ஆர்.டி. பண்டாரநாயக்கா சமஷ்டியை முன்வைத்த போது தமிழ் தலைவர்கள் ஒற்றையாட்சிக்குள் இயங்க முற்பட்ட அனுபவத்தை கருத்தில் கொள்வது பொருத்தமானது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)