உலகத்தை ஆளுவதற்கான போட்டியே வல்லருசுகளுக்கிடையில் இடையறாது நிகழ்ந்து வருகின்ற அதிகாரப் போராட்டமாகும். அத்தகைய போராட்டத்தின் உச்சமான காலத்தை எதிர் கொண்டுள்ள உலக அரசியல் ஒழுங்கு மேற்காசியாவை அதிகம் முதன்மைப்படுத்துகிறது. காரணம் மேற்காசியாவின் பொருளாதார வளமும் அதன் முக்கியத்துவமும் தனித்துவமானது. அதில் அமெரிக்காவின் இருப்பானது மேற்காசியாவில் அதிகம் தங்கியிருந்தது. தற்போது அத்தகைய நிலையை சவுதியரேபியா மட்டுமல்ல ஏனைய மேற்காசிய நாடுகளும் அமெரிக்க எதிர்ப்புவாதத்தை அவ்வப்போது வெளிப்படுத்தும் தருணத்தை கண்டுகொள்ள முடிகிறது. ஈரான் அமெரிக்காவினதும் அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேலினதும் எதிரியாக விளங்கிய நிலைப்பாட்டை முழு மேற்காசிய நாடுகளுமே எடுக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் அமெரிக்காவோ ஈரானை மீளவும் அரவணைக்க தனது தந்திரோபாயமான உத்திகளை கோரிக்கையாக முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. அத்தகைய விடயம் ஒன்றினைத் தேடுவதாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரஷ்சியாவிற்கு ட்ரோன்கள் வழங்குவதை ஈரான் நிறுத்தினால் அதன் மீதான பொருளாதாரத் தடையை நீக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரான் ஆளில்லாத அதிநவீன விமானங்களை ரஷ்சியாவுக்கு விற்பனை செய்துவரும் நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு இத்தகைய வாய்ப்பொன்றை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல ட்ரோன்களுக்கான உதிரிப்பாகங்களை ரஷ்சியாவுக்கு வழங்குவதை முற்றாக ஈரான் நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இத்தகைய பேரம்பேசலுக்கான அடிப்படையையும் அதனால் ஏற்பட்டுள்ள நிலையையும் புரிந்து கொள்ளுதல் அவசியமானது.
ஜேனதன் மார்க்கஸ் எனும் போரியல் வல்லுனர் போர்க்களங்களுக்கு மிகப்பிந்திய வருகையைக் கொண்ட அதே நேரம் இராணுவ வல்லாதிக்கத்தை தீர்மானிக்கும் ஆற்றலைக் கொண்ட ஆயுதமாக ட்ரோன்கள் விளங்குகிறன என்பதை இதே பக்கத்தில் மார்ச்-05 இல் வெளியான பதிவில் முன்வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஈரான், சிரியா, துருக்கி மற்றும் சீன தயாரிப்பு ட்ரோன்களை உக்ரையின் போர்க்களத்தில் அதிகம் பயன்படுத்தும் ரஷ்சியா தனது தயாரிப்பையும் கொண்டு போரை எதிர்கொள்கிறது. ரஷ்சிய -உக்ரையின் போர் ட்ரோன்களது போராகவே மாறியுள்ளது. அமெரிக்காவின்தும் மேற்கு நாடுகளதும் நவீன ஆயுத தளபாடங்களைக் கூட தக்கவைக்க முடியாது உக்ரையின் திணறுவதற்கு ட்ரோன்களே காரரணமென்பதை அமெரிக்காவின் மேற்படி அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. அதிலும் தற்போது ஈரானின் உற்பத்தியை ரஷ்சியாவில் தயாரிப்பதற்கான உடன்பாடொன்றை இரு நாட்டுத் தலைவர்களும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்சியாவுக்கும் ஈரானுக்குமான இராணுவ உறவு பலமானதாக அமைவதோடு ஈரானின் அணுவாயுத உற்பத்திக்கான ஒத்துழைப்பினை ரஷ்சியா வழங்குவதாகவும் செய்திகள் உண்டு. ரஷ்சிய-சீன ஒத்துழைப்புடன் ஈரான் அணுவாயுதங்களை தயாரித்துவிடும் என்ற புலனாய்வுத் தகவல்களை இஸ்ரேல் வெளிப்படுத்தியுள்ளது.
இது மட்டுமன்றி ஈரான் அண்மையில் ஹைப்பசொனிக் ஏவுகணைகளையை பரிசோதித்துள்ளமை அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் மேற்காசியா இருப்பினை அதிகம் பாதித்துள்ளது. இது பற்றி அமெரிக்கத் தரப்பு சுப்பசொனிக் வகையையே ஈரான் ஹைப்பசொனிக் எனக்குறிப்பிடுவதாக தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் ஈரான் இதனை ஹைப்பசொனிக் என குறிப்பிட்டதுடன் வளிமண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பிரயோகப்படுத்தும் திறன் கொண்டது எனவும் இது ராடர்களை தவிர்க்கும் என்பதோடு எந்த பாதுகாப்பு அரணையும் தகர்க்கும் திறன் கொண்டது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தெஹரானுக்கும் வோசிங்டனுக்கும் இடையில் அதிக பதட்டம் ஏற்பட்டது. அமெரிக்கா தனது கடல்பாதுகாப்பு நிலைகளை கண்காணிக்கும் விதத்தில் உடனடியாக கடற்படைகளையும் போர்க்கப்பல்களையும் அணிவகுத்தது. ஈரானின் அச்சுறுத்தலிலிருந்து ஹமூஸ் யலசந்திப் பகுதிகளை பாதுகாக்கும் விதத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட படைகளை கொண்ட இரு போர்க்கப்பல்கள் செங்கடலை அடைந்திருந்தன. இதனை அமெரிக்க கடற்படை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹமூஸ் ஜலசந்தியை பாதுகாப்பதுடன் அமெரிக்காவின் வணிகக்கப்பல்களை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டதென போரியல் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஈரான் அமெரிக்காவின் இராணுவ பிரசன்னத்தை பலதடவை நிராகாரித்திருந்ததென்பது தெரிந்ததே. அதனால் இப்பிராந்தியம் அதிக பதட்டமான பகுதியாக மாறிவருகிறது. இத்தகைய சந்தர்ப்பத்திலேயே அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்கா எப்போதும் எதிரியை எதிர்த்து தோற்கடிக்கவே முனையும். அத்தகைய முயற்சி தோற்றுப் போனால் உடனடியாக தனது உத்தியை மாற்றிக் கொள்ளும். அத்தகைய மாறுதல் சரணடைவதல்ல. மாறாக பேரம்பேசலாகும். அதில் பல நெருக்கடியை அமெரிக்க இராணுவ உத்தியில் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக உக்ரையின் போர்க்களம் உக்ரையின் நிலப்பரப்பாக அமைந்தாலும் அது அமெரிக்க மற்றும் நேட்டோவின் போர்க்களமாகவே உள்ளது. அதன் தோல்வி என்பது அமெரிக்காவினது தோல்வியாகவே உள்ளது. அதற்கான அடிப்படை ட்ரோன்கள் என்பது ஒருபுறம் அமைய அது ஈரானுடையது மட்டுமானதல்ல. பல நாடுகளது தயாரிப்புக்களை ரஷ்சியா பயன்படுத்திவருகிறது. அப்படியாயின் ஏன் அமெரிக்கா ஈரானின் ட்ரோன்களை இலக்குவைத்து ஈரானை கையாள முனைகிறது என்பதே பிரதான குழப்பமாகும். அதனை விபரிவாக நோக்குவது அவசியம்.
ஒன்று, ஈரானின் ட்ரோன்களைவிட ஈரான்-ரஷ்சிய நட்புறவே அமெரிக்காவுக்கு நெருக்கடியாகவுள்ளது. அத்தகைய நட்புறவு அதிக இராணுவ ரீதியான மாற்றத்தை ஈரான் அடைய வழிவகுத்துள்ளது. ஈரானின் வியூகமானது தனித்து அமெரிக்கா மட்டுமல்ல. அது இஸ்ரேலையும் இலக்கு வைத்துள்ளது. அதனால் மேற்காசியாவிலுள்ள நாடுகள் அதிகம் ஈரானையும் ரஷ்சியாவையும் மையப்படுத்தி செயல்பட ஆரம்பித்துள்ளன. இதில் சீனாவும் ஒருபக்கமான பலத்தை ஈரானுக்கு கொடுத்துவருகிறது. அதனால் ஈரானை கையாளத்தவறினால் முழு மேற்காசியாவையும் அமெரிக்கா இழக்கும் நிலை தவிர்க்க முடியாததாகும். அதனை எதிர் கொள்வதே ஈரான் மீதான கரிசனையாக உள்ளது. இத்தகைய சூழலை எதிர்கொள்ள அல்லது வெற்றி கொள்ள ஈரானை வெளிப்படையாக எதிர்ப்பதால் சாத்தியமில்லை என்ற முடிபை அமெரிக்கா எடுத்துள்ளது. இதனையே ஒபாமா நிர்வாகம் அணுவாயுத உடன்பாட்டின் மூலம் எடுத்திருந்தது. அதனை கையாளத் முடியாது ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுடனான உடன்பாட்டை முறித்துக் கொண்டதன் விளைவே மீளவும் அமெரிக்காவால் ஈரானுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட வழிவகுத்தது. 1979 முதல் ஈரானுக்குள் அமெரிக்கா நுழைய எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோற்றே போவதனைக் காணக்கூடியதாக உள்ளது. அதனை கையாளவே தற்போதைய அறிவிப்பாகவுள்ளது.
இரண்டு, இது ஒரு தந்திரோபாய நகர்வே அன்றி வேறு எதுவாகவும் அமையாது. ஆனால் ட்ரோன்கள் அமெரிக்கா வழிநடாத்தும் உக்ரையின் போரில் வெற்றி கொள்ள முடியாமல் இருப்பதற்கான காரணமாக உள்ளதென்பதும் தவறான தகவலல்ல. அது ஈரானின் ட்ரோன்கள் மட்டுமானதல்ல. உலகளாவிய போரியல் வரலாற்றில் ட்ரோன்கள் புதிய இராணுவ உத்தியாகும். அதனை முன்னிறுத்திக் கொண்டு ஈரானை அமெரிக்கா பொருளாதாரத் தளர்த்துவதன் மூலம் அடைய முடியுமென கணக்குப் போடுகிறது. இதன் மூலம் ஈரானின் இராணுவ வளர்ச்சியை முடிபுக்குக் கொண்டுவர முடியுமெனவும் அதன் அணுவாயுத வளர்ச்சியை கையாண்டுவிட முடியுமெனவும் அமெரிக்கா திட்டமிடுகிறது. ஈரானின் ஹைப்பசொனிக் ஏவுகணையின் வளர்ச்சியானது அதிகமான நெருக்கடியை மேற்காசியாவில் ஏற்படுத்தக் கூடியது. மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா நிறுத்தியுள்ள போர்க்கப்பல்களும் வர்த்தக கப்பல்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் என்ற நிலையை அமெரிக்கா உணரத் தலைப்பட்டுள்ளது. இதுவே பேரம்பேசலுக்கான அடிப்படையாகும்.
எனவே மேற்காசியாவில் ஆபிரிக்கா போன்று ஒரு நெருக்கடியை அமெரிக்கா எதிர் கொண்டுள்ளது. அதனை இலாவகமாக கையாளும் நோக்கிலேயே ஈரானுக்கான சலுகை அறிவிப்பை முன்வைத்துள்ளது. எப்படியாவது தனது வல்லரது அந்தஸ்தை அமெரிக்கா தக்க வைக்க வேண்டும் என கருதிச் செயல்படுகிறது. காரணம் மேற்காசியா இழக்கப்பட்டால் அமெரிக்காவின் ஆசியாவின் இருப்புக்கு அபாயமானதாக அமைந்துவிடும். அது படிப்படியாக உலகளாவிய ஆதிக்கத்தை இழக்கும் நிலைக்கு தள்ளிவிடும் என்பதனால் அமெரிக்க நகர்வு அனைத்து தரத்திலும் நிகழ ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் பேரம்பேசலானது அதன் பலவீனத்தை எடுத்துக் காட்டுவதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். அமெரிக்காவின் வீழ்ச்சி இலகுவானதல்ல. அதனால் அது சாத்தியமற்றதெனவும் கணித்துவிட முடியாது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
