அரசியல் கட்டுரைகள்

இந்தியாவின் சுற்றிவளைப்புக்குள் தென் இலங்கை அரசியல் அகப்படுமா?

இலங்கை அரசியல் வரலாறு முழுவதும் இந்தியா இன்றியமையாத புவிசார் அரசியல் பெறுமானத்தைக் கொண்டுள்ளது. அதனால் இலங்கையும் இந்தியாவும் அரசியல் பொருளாதார இராணுவ ரீதியில் இயங்கும் சக்திகளாக விளங்குகின்றன. இந்தியாவின் நலனுக்குள் இலங்கையின் இருப்பும் இலங்கையின் பாதுகாப்புக்குள் இந்தியாவின் தனித்துவமும் கொண்ட அரசியல் தவிர்க்க முடியாததாகவுள்ளது. இத்தகைய புவிசார் நியதி இரு நாடுகளையும் அதன் காலாசார மரபுகளையும் நெருக்கமானதாக கட்டமைத்துள்ளது. இரு நாடுகளும் அதன் ஆட்சியாளர்களும் மக்களும் தமக்கிடையிலான உறவை புரிந்துணர்வுடன் வைத்துக் கொள்ள தவறுகின்ற போதெல்லாம் இரு நாடுகளும் முரண்பாட்டை எதிர்கொண்டிருப்பதுடன் இராஜதந்திர ரீதியில் முறுகல் நிலையை எதிர்கொள்வதைக் கண்டு கொள்ள முடிகிறது. இக்கட்டுரையானது இந்தியாவின் வெளியுறவு அமைச்சரது இலங்கை வருகையால் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையினை தேடுவதாக உள்ளது.

இலங்கையில் இந்து சமுத்திர விழிம்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான மகாநாடு (10-12 ஆம் திகதி வரை) நடைபெற்றுள்ளது. 23 நாடுகளைக் கொண்ட இவ்வமைப்பின் 23 ஆவது கூட்டத் தொடர் கொழும்பில் நிகழ்ந்துவருகிறது. அடுத்த இரு ஆண்டுகள் இலங்கையின் தலைமையில் செயல்படவுள்ள இந்து சமுத்திர விழிம்பு நாடுகளின் அரசியல் இந்திய சீனா மட்டுமல்லாது மேற்கு நாடுகளுக்கும் முக்கியமானதாக உள்ளது. இத்தகைய மகாநாட்டிற்கு வருகைதந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையுடன் மூன்று அபிவிருத்தி திட்டங்களின் உடன்பாடுகளில் கைச்சாத்திட்டதுடன் இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் பிரதானியையும் சந்தித்து உரையாடியுள்ளார். அதுமட்டுமன்றி நிகழ்நிலையில் மலையகத்தில் இந்திய கடன்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டத்தினை திறந்துவைத்துள்ளார். இந்திய அனுசரணையுடன் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் முன்முயற்சியில் இத்தகைய நடவடிக்கையை ஜெய்சங்கர் ஆரம்பித்துள்ளார். இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கும் ஒன்பது திட்டங்களை விரைவில் நிறைவு செய்வதற்கான மேலதிக நிதியினை வழங்குவதற்கான உடன்பாட்டிலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார். அதே நேரம் இந்திய வெளியுறவு அமைச்சர் 12ஆம் திகதி இந்தியா திரும்பியுள்ளதாகவும் இலங்கையில் இந்திய வெளியுறவு அமைச்சர் திட்டமிட்ட விடயங்கள் விஜயம்செய்ய தீர்மானித்த விடயங்கள் பல கைவிடப்பட்டதாகவும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்தபோதே இரு நாட்டுக்குமான இராஜதந்திர உரசல் ஏற்பட ஆரம்பித்திருந்தது. குறிப்பாக ஜெய்சங்கரை வரவேற்பதற்காக இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் சென்றிருந்தமை அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியது. இலங்கையின் உயர்கல்வி அமைச்சருடன் இலங்கைக்கான இந்தியதூதுவர் சென்றிருந்தமை வழமையான தூதரக நடவடிக்கை என்பதில் குழப்பம் கிடையாது. ஆனால் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வருகை தரும் போது அதற்கு பதிலீடான (Counterpart) இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அல்லது சமதையான பாதுகாப்பு அமைச்சாக இருத்தல் வேண்டும் என்பது இராஜதந்திர சம்பிரதாயமாகவுள்ளது. ஆனால் அதனை இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை என்பது பரவலாக அதிருப்தியை தந்துள்ளது. அவ்வாறே திருகோணமலைக்கு ஜெய்சங்கர் மேற்கொள்ளவிருந்த பயணமும் கைவிடப்பட்டமை பிரதான அரசியலாக உரையாடப்படுகிறது. இதே போன்றே இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத்சிங்ன் வருகையும் திட்டமிடப்பட்ட பின்னர் கைவிடப்பட்டமை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இலங்கையின் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் இந்திய விஜயத்திற்கு பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் இந்தியாவுக்கு அதிருப்தியானவையாகவே தெரிகிறது. ஆனால் இது போன்று பலசம்பவங்கள் இந்தியத்தரப்புக்கு ஏற்பட்டுள்ளது என்பதையும் நினைவு கொள்வது அவசியமானது. இவ்வாறு இலங்கை இந்தியாவின் பொருளாதார உதவிகளையும் பெற்றுக் கொண்டு இராஜதந்திர ரீதியில் உரசல்களையும் ஏன் முதன்மைப்படுத்துகிறது என்பது இயல்பான கேள்வியாகும். அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது, பொருளாதார உதவியை அதிகம் வழங்கிய இந்தியா இலங்கை அரசியலில் அதிகமான ஈடுபாட்டை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மலையகத்திலும் வடக்கு கிழக்கிலும் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் இன் ஈடுபாடு இலங்கையில் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. மலையகத்திலேயே அதிகமான செல்வாக்கை உருவாக்கும் விதத்தில் ஆர்.எஸ்எஸ் பிரிவுகள் இந்துத்துவ அரசியலை ஏற்படுத்திவருவதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. இவ்வாறு இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது. அதனால் இலங்கையின் உள்நாட்டு அரசியலும் பௌத்தமதத்தின் அரச இயந்திரமும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்ப்படுகிறது. இந்தியா இலங்கை மீது ஆதிக்கத்தை மேற்கொள்ளும் என்பதற்காகவே ஈழத்தமிழர் மீதான அடக்குமுறையை தென் இலங்கை மேற்கொள்வதாக வரலாற்று ஆய்வுகள் பல உறுதிப்படுத்தகின்றன. இது பற்றி மூத்த வரலாற்று ஆசிரியரும் அரசியல் ஆய்வாளருமான மு.திருநாவுக்கரசு தனது ஆய்வு நூல்கள் பலவற்றில் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் மீளவும் ஒரு அச்சம் தென் இலங்கை அரசிடமும் பௌத்த மகாசங்கங்களிடமும் ஏற்பட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பாகவே மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள மேச்சல்தரை விவகாரமும் வடக்கு கிழக்கு மீதான விகாரை அரசியலும் அமைந்துள்ளது. இத்தகைய தீவிர தேரவாத பௌத்தம் ஈழத்தமிழர் மீது இனவன்முறையை உருவாக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இது மீளவும் இந்தியாவுக்காக ஈழத்தமிழர் வன்முறைக்கு உள்ளாக்கப்படப் போகிறார்கள் என்ற சந்தேகத்தை தந்துள்ளது. அதற்கான புறச்சூழல் கட்டமைக்கப்படுவதாகவே தெரிகிறது. அது குருந்தூர் மலையில் தொடங்கி படிப்படியாக வளர்ந்து செல்கிறது. பொருளாதார நெருக்கடி ஒருபுறம் அமையும் போது மறுபக்கத்தில் தீவிர தேரவாத பௌத்தத்தின் ஈழத்தமிழர் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை நிகழ்ந்து கொண்டுவருகிறது. இரண்டுமே ஈழத்தமிழருக்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை.

இரண்டு, சீனாவின் ஆய்வுக்கப்பலான ஷியான்-6 கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை அறிவித்துள்ளது. அதனை உறுதிப்படுத்திய இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலிசப்ரி சீனாவின் உறவு இலங்கைக்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் (2022) 17 இல் சீனாவின் யுவான்-வாங்-5 உளவுக்கப்பலின் வருகையின் போதும் இந்திஜயா இலங்கையிடையே அதிக இராஜதந்திர முறுகல் நிலவியது. அப்போது இலங்கை எத்தகைய உத்தியைக் கையாண்டதோ அதே உத்தியை மீளவும் முதன்மைப்படுத்தியுள்ளது. சீனாவுக்கும் இலங்கைக்குமான நெருக்கம் இந்தியாவுடனான விரிசலை ஏற்படுத்திவருகிறது. இது பற்றிய விவாதங்கள் உரையாடல்கள் ஆய்வுகள் பல வெளியாகியும் இந்தியத் தரப்பு அவை எதனையும் கண்டு கொள்ளாத போக்கு நிலவுவதாக இந்தியத் தரப்பு மீது குற்றச்சாட்டு நிலவுகிறது. ஆனால் இந்தியாவின் அண்மைய போக்குகள் அதிக வேறுபாடான நிலைமையை நோக்கி இந்தியா நகரத்திட்டமிடுவதாகவே தெரிகிறது. குறிப்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்குமான இராஜதந்திர முரண்பாட்டுக்கான அடிப்படை மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்தியா இஸ்ரேலை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்தமை மற்றும் இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அமிர்ஷாவின் இனப்படுகொலை பற்றிய அறிவிப்பு என்பன இந்தியாவின் போக்கில் மாற்றத்தை கோடிட்டுக் காட்டுகிறது. இது இலங்கைத்தீவுக்கு எத்தகைய விளைவைத்தரப் போகிறது என்பதே முக்கியமானது. இதனால் ஈழத்தமிழரோ தென் இலங்கையோ பயனை அடையப்போகிறது என்பதே குழப்பமாகவே தெரிகிறது. இதன் நீட்சியாக இந்தியாவின் முன்முயற்சியில் இலங்கையிலுள்ள அனைத்து தூதரலாயங்களின் தூதுவர்களுடனும் ஒரு கலந்துரையாடலை இந்தியா மேற்கொள்ள திட்டமிடுவதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை உறுதிப்படுத்த முடியவில்லை.

மூன்றாவது, நாகபட்டின-காங்கேசன்துறை கப்பல் சேவை நீண்ட இழுபறிக்குள் உள்ளாவது அதிக குழப்பத்தை தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இந்தியத் தரப்பக்கும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய இழுபறிக்குள்ளேயே சொகுசு கப்பலது வருகை இலங்கைத் தீவை நோக்கி இந்தியா மேற்கொண்டது. அதன் நகர்வு முழுவதும் கொழும்பை மையப்படுத்தி அமைந்ததோடு புதுடில்லி-கொழும்பு உறவை சார்ந்ததாக அமைந்திருந்தது. சீனக்கப்பல்களது வருகையை அங்கீகரிக்கும் அமைச்சரவை நாகபட்டின-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்தை சாத்தியப்படுத்த முன்வராத நிலை காணப்படுகிறது. இதன் அரசியல் நோக்கத்தை முறியடிக்கவே இந்தியா கப்பல் போக்குவரத்தை அதிகப்படுத்துகிறது. அதாவது இந்தியா இலங்கைத் தீவை சுற்றிவளைக்க முயலுகிறதாகவே தெரிகிறது. சீனாவின் சுற்றிவளைப்பை முறியடித்து இந்தியா வெற்றி கொள்ள திட்டமிடுகிறது. அது தென் இலங்கையின் ஆட்சியையும் உள்ளடக்கியதாகவே அமையவிருக்கிறதாக உணரப்படுகிறது.

எனவே இலங்கை-இந்திய உறவு பாதிக்கப்படுவது ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல தென் இலங்கைக்கும் ஆபத்தானதே. தென் இலங்கை சீனாவையும் இந்தோ-பசுபிக் தந்திரோபாய நாடுகளையும் முன்னிறுத்திக் கொண்டு இந்தியாவை கையாளலாம் எனக் கருதுகிறது. அதன் விளைவு நீண்ட காலத்திற்கு சாத்தியமாகுமா என்பது முக்கியமானது. இவை யாவற்றையும் எதிர் கொள்ளும் திறன் இந்தியாவுக்கு அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது. இதனால் இலங்கைத் தீவில் அரசியல் வல்லரசுகளின் சுற்றிவளைப்புக்களால் நகர்த்தப்படப் போவதற்கான வாய்பு அதிகமாக உள்ளது. ஆனால் இந்தியாவே தனது புவிசார் அரசியல் பிணைப்பினால் தனித்துவமான கட்டமைப்புக்கு கொண்டுவரும் என்ற எதிர்பார்க்கை அதிகரித்துள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)